என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • மாமியார் ராசிக்கு மருமகள் ராசியானது 6, 8-வது ராசியாக வந்தால் தம்பதியினரை தனி குடும்பம் வைப்பது நல்லது.
    • பெண்ணிற்கு 22வது நட்சத்திரத்தில் உள்ள ஆண் மகனை திருமணம் செய்தால் அந்த ஆணிற்கு ஆயுள் குறைந்துவிடும்.

    திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் முக்கியமான ஒன்றாகும். திருமணம் என்றாலே திருமணம் செய்ய போகும் தம்பதியினருக்கு ஜாதக பொருத்தம் பார்த்து செய்வது பாரம்பரிய வழக்கமாகும். இப்போது ஒரே ராசி நட்சத்திரத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் செய்யலாமா என்பதை முழுமையாக தெரிந்துக்கொள்ளுவோம்..

    திருமணம் என்பது கணவன் மனைவியாக அமையும் தாம்பத்தியினரின் மகிழ்ச்சியான வாழ்க்கை, குழந்தை பேறு, ஆயுள், செல்வநிலை, சுபிட்சமான எதிர்கால நிலை போன்ற எதிர்கால அம்சங்களை இருவரின் ஜாதகங்களை வைத்து அவர்களுடைய ராசி, நட்சத்திரம் கிரகங்களை வைத்து ஜோதிடர்கள் கணித்து கூறுவது வழக்கம்.

    திருமணம் செய்ய போகும் இருவருக்கும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் கொண்டவர்களுக்கு பொருத்தம் பார்க்கும் போது தம்பதியினரின் பிறந்த நட்சத்திரத்தினை வைத்து 10 பொருத்தங்கள் மற்றும் கிரகங்களை வைத்து திருமணம் முடிவு செய்யப்படுகிறது.

    திருமணம் செய்யும் ஆண் மற்றும் பெண் தம்பதியினருக்கு ஒரே நட்சத்திரம் இருந்தால் நட்சத்திர பொருத்தத்தில் 10 பொருத்தத்திற்கும் மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும் திருமணத்தில் முக்கியமான பொருத்தம் என்று சொல்லக்கூடிய மாங்கல்ய பொருத்தம் அவர்களுக்கு இருக்காது.

    அதனால் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் கொண்டவர்களுக்கு திருமணம் செய்வதை தவிர்த்து கொள்வது நல்லது.

    ஒரு ராசிக்கு ஏழரை சனி, அஷ்டம சனி வரும்பொழுது தம்பதியினர் இடையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குடும்பத்தில் அதிக கருத்து வேறுபாடுகள் தோன்ற வாய்ப்புள்ளது.

    ஒரே ராசி இருந்தால் சரி, திருமணம் ஆக போகும் பெண்ணிற்கு இருக்கும் நட்சத்திரத்திற்கு பின் உள்ள நட்சத்திரம் அந்த ஆணுக்கு இருந்தால் நன்மை அமையும். தம்பதியினருக்கு ஒரே ராசி, நட்சத்திரம் இருந்தால் ஒரே மாதிரியான ரசனைகள் தான் இருக்கும்.

    கிரகநிலைகள் மாறும்போது இருவரின் வாழ்க்கையும் மிக பாதிப்படைய செய்யும். இதனால் ஒரே ராசியாக இருந்தாலும் நட்சத்திரம் மட்டும் வேறு இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

    திருமணம் செய்ய போகும் ஆண், பெண் இருவருக்கும் பகையோனி நட்சத்திரம் இருந்தால் திருமணம் செய்யக்கூடாது. இதனை மீறி திருமணம் செய்பவர்களுக்கு வாழ்வில் எப்போதும் சண்டைகள் இருந்துகொண்டே இருக்கும்.

    பெண்ணிற்கு 7 ஆம் நட்சத்திரத்தினை சேர்ந்த ஆண் மகனை திருமணம் செய்து வைத்தால் வீட்டில் தினமும் சித்திரவதை நடக்கும். பெண்ணிற்கு 12,17-வது நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களை மணம் செய்து வைத்தால் வீட்டில் துரதஷ்டமும், தர்த்தரியம் ஏற்படும்.

    பெண்ணிற்கு 22–வது நட்சத்திரத்தில் உள்ள ஆண் மகனை திருமணம் செய்தால் அந்த ஆணிற்கு ஆயுள் குறைந்துவிடும்.

    மாமியார் ராசிக்கு மருமகள் ராசியானது 6, 8-வது ராசியாக வந்தால் தம்பதியினரை தனி குடும்பம் வைப்பது நல்லது. இதனால் பல வித பிரச்சனைகள் குறையும்.


    திருமணம் செய்ய போகும் ஆண் / பெண் இருவருக்கும் ரோகினி, திருவாதிரை, மகம், அஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி, விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான நட்சத்திரம் இருந்தது என்றால் திருமணம் முடிப்பது நல்லது.

    அஸ்வினி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூரம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம் போன்ற நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒரே நட்சத்திரங்கள் கொண்டவர்களாக இருந்தால் பரிகாரத்திற்கு பின்பு திருமணம் செய்து கொள்ளலாம்.

    திருமணம் செய்யக்கூடாத ஒரே நட்சத்திரம்:

    பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி போன்ற நட்சத்திரம் ஆண், பெண் இருவருக்கும் ஒன்றாக இருந்தால் திருமணம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.

    பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, சித்திரை, விசாகம், மகம், ஸ்வாதி போன்ற 12 நட்சத்திர தினங்களில் பணம் கொடுக்கவும், வாங்கவும் கூடாது. மீறி செய்தால் பணம் திரும்ப வராது. பணத்தினை திரும்ப செலுத்துவதில் கஷ்டம் ஏற்படும். இந்த நட்சத்திரங்களில் பிரயாணம் செய்தால் சிக்கல்கள் ஏற்படும். அடுத்து உடலில் நோய்வாய்பட்டால் குணமடைவதற்கு நீண்ட நாள் ஆகும்.

    • அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் நல்லாடை என்ற ஊரில் உள்ளது.
    • அதிதீஸ்வரர் திருக்கோவிலை வழிபாடு செய்யுங்கள். இந்தக் கோவில் பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது.

    மனிதர்களின் வாழ்க்கையே நம்பிக்கையில் தான் அமைந்துள்ளது. இந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்த பல்வேறு சாஸ்த்திரங்கள் உள்ளது. அவற்றை நம்புபவர்களுக்கு பலனளிக்கின்றது. ஒருவரது பிறக்கும் நேரத்தை வைத்து அவர்களுக்கு நட்சத்திரம் குறிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவரது வாழ்க்கையின் இதர காலகட்ட பலன்களை ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள நட்சத்திர பலன்கள் உதவுகின்றன. அந்த வகையில் 27 நட்சத்திரங்களையும், அதன் கோவில்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

    அஸ்வினி : இந்த நட்சத்திரத்தில்பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இருந்து மேலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

    பரணி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய திருத்தலம், அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் நல்லாடை என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    கார்த்திகை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில். மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சா நகரம் உள்ளது. இதன் மெயின் ரோட்டில் இருந்து பிரியும் சாலையில் அரை கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    ரோகிணி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அவசியம் வழிபட வேண்டியது, பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சாலையில் அமைந்துள்ளது.

    மிருகஷீரிஷம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆதிநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்தில் முகூந்தனூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

    திருவாதிரை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அபய வரதீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டைக்குச் சென்று, அங்கிருந்து 12 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை அடையலாம்.

    புனர்பூசம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அதிதீஸ்வரர் திருக்கோவிலை வழிபாடு செய்யுங்கள். இந்தக் கோவில் பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் 67 கிலோமீட்டர் தொலைவில் வாணியம்பாடி உள்ளது. அங்கிருந்து 3 கிலோமீட்டரில் பழைய வாணியம்பாடி இருக்கிறது.

    பூசம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், அட்சய புரீஸ்வரர் திருக் கோவில். பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கிலோமீட்டர் சென்றால் விளங்குளம் என்ற ஊர் வரும். அங்கிருந்து தெற்கே 2 கிலோ மீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளம் வந்தடையலாம்.

    ஆயில்யம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில், கடற்கடேஸ்வரர் ஆலயம். கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் சாலையில் 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிசநல்லூர். இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருந்துதேவன்குடி என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது.

    மகம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் வழிபட வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தூரத்தில் விராலிப்பட்டி விளக்கு உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    பூரம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் திருவரங்குளம் உள்ளது.

    உத்தரம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில் சென்று வழிபடுங்கள். இந்த ஆலயம் இடையாற்று மங்கலம் என்ற ஊரில் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லால்குடி சென்று, அங்கிருந்து 5 கிலோமீட்டர் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

    அஸ்தம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கிருபா கூபாரேச்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கோமல் என்ற ஊரில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் இருக்கிறது குத்தாலம். இங்கிருந்து பிரியும் சாலையில் 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    சித்திரை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோவில். மதுரையில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் கோவில் இருக்கிறது.

    சுவாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம் தாத்திரீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் சித்துக்காடு என்ற ஊரில் உள்ளது. சென்னை-பூந்தமல்லி சாலையில் தண்டுரை என்ற ஊரில் இருந்து, 8 கிலோமீட்டர் தொலைவில் சித்துக்காடு உள்ளது.

    விசாகம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம். முத்துக்குமாரசாமி திருக்கோயில். இந்த ஆலயம் திருமலைக் கோவிலில் உள்ளது. மதுரையில் இருந்து 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலயத்தை அடையலாம்.

    அனுஷம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருநின்றியூர் என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    கேட்டை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபடுங்கள். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 13 கிலோ மீட்டர் தூரத்தில் பசுபதிகோயில் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது.

    மூலம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, சிங்கீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் திருத்தலம் இருக்கிறது. பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் 22 கிலோமீட்டரில் மப்பேடு உள்ளது.

    பூராடம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கடுவெளி என்ற இடத்தில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கடுவெளி என்ற ஊர்.

    உத்திராடம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் பூங்குடி என்ற திருத்தலத்தில் உள்ளது. சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தூரத்தில் ஓக்கூர் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கிலோமீட்டர் சென்றால் பூங்குடி தலத்தை அடையலாம்.

    திருவோணம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். திருப்பாற்கடல் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. வேலூரில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் காவேரிப்பாக்கம் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம். ஆற்காடு, வாலாஜாவில் இருந்தும் பஸ்வசதி உள்ளது.

    அவிட்டம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபட வேண்டும். இந்த ஆலயம் கொருக்கை என்ற இடத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் இங்கு செல்லலாம்.

    சதயம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அக்னிபுரீஸ்வரர் ஆலயம். இது திருப்புகலூர் என்ற இடத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.

    பூரட்டாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவானேஷ்வர் திருக்கோயிலில் உள்ள இறைவனை வழிபாடு செய்யுங்கள். இந்த ஆலயம் இருப்பது ரங்கநாதபுரம் என்ற ஊர். திருவையாறில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருக்காட்டுப்பள்ளி. இங்கிருந்து அகரப்பேட்டை செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் திருத்தலம் உள்ளது.

    உத்திரட்டாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் தீயத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள ஆவுடையார் கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவன வாசல் செல்லும் சாலையில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.

    ரேவதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கயிலாயநாதர் ஆலயமாகும். திருச்சியிலிருந்து முசிறி சென்று, அங்கிருந்து 21 கிலோ மீட்டரில் உள்ள தாத்தய்யங்கார் பேட்டை செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தெப்ப உற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-22 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பிரதமை மறுநாள் விடியற்காலை 5.06 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: பூனர்பூசம் மறுநாள் விடியற்காலை 5.52 மணி வரை பிறகு பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ராமநாதபுரம் ஸ்ரீ கோண்டராம சுவாமி உற்சவம் ஆரம்பம், தோளுக்கினியானில் புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தெப்ப உற்சவம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருப்புல்லாணி ஸ்ரீ ஆதிஜெகநாதப் பெருமாள் காலை சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தெளிவு

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-ஆதாயம்

    கடகம்-பெருமை

    சிம்மம்-அன்பு

    கன்னி-ஆக்கம்

    துலாம்- அனுகூலம்

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- உவகை

    மகரம்-பணிவு

    கும்பம்-நிம்மதி

    மீனம்-போட்டி

    • முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் காட்சி அளித்தார்.
    • கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலை சுற்றி உள்ள பகுதியில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை கோவில்குளக்கரை மற்றும் காக்களூர் ஏரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனி அமாவாசையை முன்னிட்டு கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதேபோல் முத்தங்கி சேவையில் வருகிற 7-ந்தேதி வரை மூலவர் வீரராகவ பெருமாள், கன கவல்லி தாயார் காட்சியளிப்பர்.

    இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் கோவில் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள்கிறார். குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதேபோல் நாளையும் மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    • ஆனி மாதத்தில் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
    • திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை மாலை நடைபெறுகிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெ ருமாள் ஜேஷ்டா பிஷேகம் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதியும், ஸ்ரீரெங்க நாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 28-ந் தேதியும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது.

    அங்கிருந்து காலை 7.15 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் 11 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு காலை 7.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.

    பின்னர் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை மாலை நடைபெறுகிறது.

    இதேபோன்று ரெங்கநாத ர் கோவிலின் உபகோ விலான திருவானைக் காவல் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும் இன்று ஜேஷ்டாபிஷேகம் நடை பெற்றது.

    ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக் குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது.

    அங்கிருந்து காலை 8 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், 11 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல், சித்திரை வீதிகள், கீழவாசல் வழியாக கோவிலுக்கு காலை 9.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் சிங்கப்பெருமாள் சன்னதியில் மூலவர்கள் லட்சுமிநரசிம்மன், மகாலெஷ்மி தாயார், உற்சவர் லெஷ்மிநரசிம்மர் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்ட ப்பட்டன.

    பின்னர் மூலவர்கள் லட்சுமி நரசிம்மன், மகாலெஷ்மி தாயார், உற்சவர் லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. பின்னர் திருப்பாவாடை எனப்படும் பெரிய தளிகை நடைபெற்றது. 

    • ராமேசுவரத்திற்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
    • ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர்.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமேசுவரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர், வெளியூர், வட மாநிலங்களில் இருந்து வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

    அந்த வகையில் ராமேசுவரத்திற்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதனைதொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். இதன் பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அதிகளவில் பக்தர்கள் வருகையை முன்னிட்டு போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்திடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் வரிசையாக சென்று தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவபெருமான் வீற்றிருக்கும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருவண்ணாமலை.
    • பாதாள லிங்கேஸ்வரர் என்ற பெயரில் இறைவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

    சிவபெருமான் வீற்றிருக்கும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம். இந்த கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில், ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ளது பாதாள லிங்கம்.

    இங்கு 'பாதாள லிங்கேஸ்வரர்' என்ற பெயரில் இறைவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கத்தை தரிசனம் செய்ய, சில படிகள் பாதாளத்தில் இறங்கிச் சென்று வழிபட வேண்டும். இந்த சிவலிங்கத்திற்கு முன்பாக நந்தி சிலையும் இருக்கிறது.

    ஆன்மிக மற்றும் ஞானத்திற்கான தேடலுடன் திருவண்ணாமலைக்கு வந்தவர், ரமண மகரிஷி. அவருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டானபோது, இங்குள்ள பாதாள லிங்கத்தின் சன்னிதியில் சென்று வழிபட்டார். அங்கு ஒரு புற்று இருந்தது. அதற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து ஞானம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.

    மரண பயத்தை போக்கும் இந்த பாதாள லிங்கமும், கிரிவலப் பாதையின் மலைக்கு பின்புறம் அமைந்த அடி அண்ணாமலை என்ற பெயரில் அமைந்த தனி ஆலயத்தில் உள்ள சிவலிங்கமும் விசேஷமானது. இந்த இரண்டு லிங்கங்களையும் மனமுருக வழிபட்டால், மரணபயம் விலகும், மன நிறைவு உண்டாகும்.

    ஷோடச லிங்க பலன்கள்

    * புற்று மண் லிங்கம் - முக்தி கிடைக்கும்

    * ஆற்று மணல் லிங்கம் - பூமி லாபம் உண்டு

    * பச்சரிசி லிங்கம் - பொருள் பெருக்கம் ஏற்படும்

    * சந்தன லிங்கம் - இன்பங்கள் வந்துசேரும்

    * மலர்மாலை லிங்கம் - நீண்ட வாழ்நாள் அமையும்

    * அரிசி மாவு லிங்கம் - உடல் வலிமை பெறும்

    * பழம் லிங்கம் - நல்லின்ப வாழ்வு

    * தயிர் லிங்கம் - நல்ல குணம்

    * தண்ணீர் லிங்கம் - மேன்மைகள் உண்டாகும்

    * சோறு (அன்னம்) லிங்கம் - உணவு பெருக்கம்

    * முடிச்சிட்ட நாணல் (கூர்ச்சம்) - முக்தி கிடைக்கும்

    * சர்க்கரை வெல்லம் லிங்கம் - விரும்பிய இன்பம் கிடைக்கும்

    * பசுவின் சாணம் லிங்கம் - நோயற்ற வாழ்வு அமையும்

    * பசு வெண்ணெய் லிங்கம் - மனமகிழ்ச்சி பெருகும்

    * ருத்திராட்ச லிங்கம் - நல்ல அறிவு

    * திருநீற்று விபூதி லிங்கம் - ஐஸ்வரியம் வந்துசேரும்

    • செவ்வாய்க்கிழமை நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபடலாம்.
    • குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபடலாம்.

    * குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து, அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபட்டு, ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து வணங்கினால், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

    * கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.

    * ஒரு சில பெண்கள் ருதுவாவது தள்ளிப்போகும். அந்த குறைபாடு உள்ளவர்கள், ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயத்தில் தொடர்ச்சியாக 5 வியாழக்கிழமைகளில், சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து, வெள்ளி நாணயத்தை பிரசாதமமாகப் பெற்றுச் செல்கின்றனர். இந்த பரிகாரத்தால் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளும் நீங்குகிறதாம்.

    * வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, பூச நட்சத்திரம், அட்சய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து வழிபட்டால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். அதோடு மன அமைதி, வீடு, வாகன யோகம், திருமண வரம், குழந்தை வரம், தொழில் அபிவிருத்தி, உத்தியோகம் ஆகியவற்றையும் பெற்றிடலாம்.

    * மேற்குமுகமாக வீற்றருளும் கால பைரவரை, தொடர்ச்சியாக 6 தேய்பிறை அஷ்டமி அல்லது ராகு காலங்கள், அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 8 நெய் தீபம் ஏற்றி, செவ்வரளியால் அர்ச்சனை செய்து வணங்கினால், பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இனிதாக நடந்தேறும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள் அகலும்.

    * பிரம்மஹத்தி தோஷம் மற்றும் குரு சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்ரீநிதீஸ்வரருக்கு வியாழக்கிழமையில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை, ஐந்து நெய் தீபமேற்றி, ஐந்து முறை ஆலய வலம் வந்து வழிபட்டால், அந்த பாதிப்புகள் நீங்குவதுடன், பூர்வ ஜென்ம பாவங்களும் விலகும். மேலும் அவர்களின் இல்லத்தில் நிலவும் வறுமை நீங்கி, செல்வம் பெருகும்.

    • ஆலயத்தின் பின்புறம் பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் உள்ளது.
    • கணபதி, தன் கையில் பாடலிக் கொடியுடன் காட்சியளிக்கிறார்.

    இன்றைய உலகில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது, நிதிதான். பணத்தேவை இருப்பவர்களே இன்று அதிகம். சிலருக்கோ நிதியை சேகரிப்பதில் சிக்கல். பலருக்கு நிதியை பாதுகாப்பதில் சிக்கல். இதற்கெல்லாம் விடை தருபவராக இருக்கிறார், விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூரில் உள்ள ஸ்ரீநிதீஸ்வரர். இத்தல இறைவனை பிரம்மதேவரும், நிதிகளுக்கு அதிபதியான குபேரனும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.

     தல வரலாறு

    அன்ன வாகனன் என்றழைக்கப்படும் படைப்பு கடவுளான பிரம்மதேவரும், காக்கும் கடவுளான திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று போட்டியிட்டனர். ஈசனின் அடியையும், முடியையும் காண்பர்களே வெற்றி பெறுவர் என்று கூறபட்பட்டதும், பிரம்மன் அன்னமாக மாறி, சிவபெருமானின் முடியைத் தேடியும், திருமால் வராக உருவெடுத்து ஈசனின் திருவடியைத் தேடியும் பயணித்தனர். ஒரு கட்டத்தில் ஈசனின் திருவடியை காண முடியாமல், தன் தோல்வியை ஒப்புக் கொண்டார், திருமால்.

    ஆனால் பிரம்மனோ, மகாதேவரின் முடியை கண்டு விட்டதாக பொய் சொன்னார். அதற்கு சாட்சியாக, ஈசனின் தலையில் இருந்து விழுந்து பூமி நோக்கி வந்து கொண்டிருந்த தாழம்பூவை கூட்டு சேர்த்துக் கொண்டார்.

    இதை அறிந்த ஈசன் கடும் கோபம் கொண்டு, பிரம்மனை அன்னப்பறவையாகவே இருக்கும்படி சாபம் கொடுத்தார். அந்த சாபத்திற்கு விமோசனம் தேடி பிரம்மன், அன்னப் பறவையின் தோற்றத்திலேயே பல உலகங்களுக்குச் சென்றார்.

    இறுதியில் பூலோகம் வந்து, ஒரு பொய்கையை உருவாக்கினார். பின்னர் ஒரு சிவலிங்கத்தைச் செய்து, அதற்கு தான் உருவாக்கிய தீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்து வந்து அபிஷேகித்து வழிபட்டார்.

    பல காலமாக பிரம்மன் செய்த பூஜையால் மனமுருகிய சிவபெருமான், ரிஷப வாகனத்தில் பிரம்மனுக்கு காட்சி கொடுத்து, அவரது சுய உருவை மீண்டும் கொடுத்தார். அன்னப் பறவையின் வடிவத்தில் பிரம்மன், இங்கு வழிபாடு செய்த காரணத்தால், இந்த திருத்தலத்திற்கு 'அன்னம்புத்தூர்' என்ற பெயர் வந்தது.

    ஒருமுறை இத்தலத்திற்கு வந்த குபேரன், தன்னிடம் அள்ள அள்ள குறையாத செல்வம் இருக்க வேண்டும். எக்காலத்திலும் நான் தனாதிபதியாக விளங்கிட வேண்டும் என்று கேட்டு, இத்தல இறைவனை வழிபட்டான்.

    அதன்படியே குபேரனுக்கு, அவனை விட்டு என்றும் நீங்காத நவ நிதிகளையும் இறைவன் வழங்கியதாக இத்தல மகாத்மியம் கூறுகிறது. குபேரன் வழிபட்டதால், இத்தல இறைவன் 'ஸ்ரீநிதீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    ஆலய அமைப்பு

    ஊருக்கு மேற்கே உள்ள ஏரியின் எதிரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லை. கிழக்கு நோக்கியபடி சுவாமி சன்னிதியும், தெற்கு பார்த்தவாறு அம்பாள் சன்னிதியும் உயரமான மேடை மீது அமைக்கப்பட்டுள்ளன. ஆலயம் முழுவதும் கல் கட்டிடமாக உள்ளது.

    கருவறைக்குள் கிழக்கு நோக்கியபடி ஸ்ரீநிதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். பிரம்மனும், குபேரனும் வணங்கிய ஈசனை நாமும் வணங்குகின்றோம் என்று நினைக்கும்போதே மெய் சிலிர்ப்பதை உணர முடியும்.

    ஆலய மகா மண்டபத்தில் வீற்றருளும் கணபதி, தன் கையில் பாடலிக் கொடியுடன் காட்சியளிக்கிறார். பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்ட பாட்னாவில் இருந்து, இந்த கணபதியின் சிலை கொண்டுவரப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

    தெற்கு நோக்கிய சன்னதியில் நின்ற கோலத்தில் கனக திரிபுரசுந்தரி அம்மன் அருள்பாலிக்கிறார். இந்த அன்னைக்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருக்கின்றன.

    ஆலய வளாகத்துக்குள் தென்மேற்கு மூலையில் லட்சுமி கணபதியும், வடமேற்கில் வள்ளி - தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியரும் தனித்தனியே சன்னிதி கொண்டுள்ளனர். தென்புறம் தனியாக உள்ள சன்னிதியில் மிகப் பழமை வாய்ந்த துர்க்காதேவியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக புதிய சிலையில் இருக்கிறது.

    கிழக்குப்புறத்தில் பைரவருடன், தனா ஆகர்ஷண பைரவரும் காட்சி தருகிறார். ஆலயத்தின் பின்புறம் பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் உள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சம், கொன்றை மரம் ஆகும்.

    ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஆலயத்தை, ராஜராஜ சோழன் கண்டு வியந்து பல்வேறு திருப்பணிகள் செய்ததற்கான கல்வெட்டு இங்கே காணப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிதலமடைந்து மண்மூடிப் போன இந்த ஆலயமானது, பக்தர்களின் அர்ப்பணிப்பு காரணமாக கற்கோவிலாக எழுப்பப்பட்டு, 2014-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த ஆலயமானது, தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற இடம் உள்ளது. இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, அன்னம்புத்தூர்.

    • இன்று சர்வ அமாவாசை.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆனி 21 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: அமாவாசை நாளை விடியற்காலை 5 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: திருவாதிரை நாளை விடியற்காலை 5.01 மணி வரை. பிறகு புனர்பூசம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சர்வ அமாவாசை. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளுர் தலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் தெப்போற்சவம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பெருமை

    ரிஷபம்-விவேகம்

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்- பொறுமை

    சிம்மம்-லாபம்

    கன்னி-உதவி

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-உற்சாகம்

    தனுசு- விருத்தி

    மகரம்-மேன்மை

    கும்பம்-பாராட்டு

    மீனம்-ஊக்கம்

    • ஓர் ஆண்டில் நடராஜருக்கு 6 நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்.
    • இதில் மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள் ஆகும்.

    சிதம்பரம்:

    பொதுவாக, கோவில்களில் தினமும் ஆறுகால பூஜை நடைபெறும். தேவர்களும் இதேபோல 6 கால பூஜையை நடத்துவார்கள். ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது நமக்கு ஒரு ஆண்டு. தட்சிணாயணம், உத்தராயணம் என இருவகை காலப்பிரிவுகள் அவர்களுக்கு உண்டு.

    தை முதல் ஆனி வரை (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை) உத்தராயணம்.

    ஆடி முதல் மார்கழி வரை (மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை) தட்சிணாயணம்.

    அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது நமக்கு மார்கழி. காலைப் பொழுது மாசி மாதம். மதியம் சித்திரை திருவோணம். மாலைப் பொழுது ஆனி. இரவு நேரம் ஆவணி. அர்த்தஜாமம் புரட்டாசி. இதன் பொருட்டே நடராஜ பெருமானுக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

    ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்.

    சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.

    ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் ராசசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.

    ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.

    புரட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.

    மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ராசசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.

    மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.

    இந்தக் குறிப்பிட்ட ஆறு தினங்களிலும் அபிஷேகங்கள் நடைபெறும்போது நடராஜரை கண்டு வணங்கி வழிபடுவது மிக விசேஷம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று மாத சிவராத்திரி.
    • திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-20 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி காலை 6.27 மணி வரை பிறகு சதுர்த்தசி. நாளை விடியற்காலை 4.55 மணி வரை பிறகு அமாவாசை.

    நட்சத்திரம்: மிருகசீரிஷம் நாளை விடியற்காலை 4.35 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று மாத சிவராத்திரி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-பரிவு

    கடகம்-ஜெயம்

    சிம்மம்-பக்தி

    கன்னி-கவனம்

    துலாம்- நற்செயல்

    விருச்சிகம்-சாந்தம்

    தனுசு- களிப்பு

    மகரம்-துணிவு

    கும்பம்-சுபம்

    மீனம்-வரவு

    ×