என் மலர்
அமெரிக்கா
- F-35 Lightning II போர் விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.
- F-35 ஒரே நேரத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பறக்கும் திறனுடையது
அமெரிக்காவில் விமானப்படை ஜெட் விமானம் ஒன்று பயிற்சியின்போது கீழே விழுந்து விபத்துக்களாகியுள்ளது.
நேற்று (ஜனவரி 28) மதியம் அலாஸ்காவின் ஃபேர்பேங்க்ஸ் அருகே அமைந்துள்ள எய்ல்சன் விமானப்படைத் தளத்தில் F-35 Lightning II போர் விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பயிற்சியின் போது தரையிறங்கும் சமயத்தில் விபத்து நேர்ந்ததாக எய்ல்சன் விமானப்படை அறிக்கை கூறுகிறது.
இதனால் விமானம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. விமானம் கீழே விழுவதற்கு முன் விமானி அதிலிருந்து எட்ஜெக்ட் ஆகி வெளியே வெளியேறிய குதித்ததால் பாதுகாப்பாக இருப்பதாகவும், பாசெட் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
F-35 ஒரே நேரத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பறக்கும் திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
- சிக்கி தவிப்பது கொடூரமானது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னிடம் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோரை மீட்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தால் இரண்டு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நீண்ட காலமாக சிக்கி தவித்து வருவது கொடூரமானது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
"விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களை விரைவில் வீட்டிற்கு அழைத்து வர டொனால்டு டிரம்ப் ஸ்பேஸ் எக்ஸ்-ஐ கேட்டுள்ளார். நாங்கள் அவ்வாறு செய்வோம். பைடன் இவர்களை நீண்ட காலம் தவிக்க செய்தது கொடூரமானது," என்று மஸ்க் எக்ஸ் தள பதிவில் கூறினார்.
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், அவர்கள் சிக்கி தவிக்கவில்லை, நலமுடன் இருக்கிறார்கள் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்து நாட்களில் பூமிக்க திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், அவர்கள் இன்றுவரை பூமிக்கு திரும்ப முடியாத சூழல்தான் நிலவுகிறது.
- அமெரிக்காவில் பெடரல் அரசும் மாகாண அரசும் தனித்தனியாக வருமான வரி விதிக்கின்றன.
- பெடரல் அரசின் வருமான வரியை ரத்து செய்யும் திட்டம் உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவியேற்றுக்கொண்டதில் இருந்து பல தடாலடி உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க மக்களுக்கான வருமான வரியை ரத்து செய்யும் திட்டம் தன்னிடம் இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வருமான வரிக்கு பதிலாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்த போவதாகவும் இதன் மூலம் அமெரிக்க மக்களைப் பணக்காரர்களாக ஆக்க முடியும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பெடரல் அரசும் மாகாண அரசும் தனித்தனியாக வருமான வரி விதிக்கின்றன. அவ்வகையில் பெடரல் அரசின் வருமான வரியை ரத்து செய்யும் திட்டம் உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே சமயம் மாகாண அரசுகளின் வருமான வரி குறித்து சம்பந்தப்பட்ட மாகாண அரசுகளே முடிவெடுக்கும்.
பொதுமக்களின் வருமான வரியை டிரம்ப் ரத்து செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் அதிகரித்த இறக்குமதி செலவுகள் காரணமாக அதிக வட்டி விகிதம் ஏற்படும் என்று சில பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
- கைவிலங்கிட்டு கீழ்த்தரமாக அமெரிக்கா நடத்தியுள்ளது என அந்நாடு குற்றம் சாட்டியது.
- கடந்த சில நாட்களில் 956 பேர் வரை கைது செய்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றத் தீவிரமும் கடுமையும் காட்டி வருகிறார்.
முதற்கட்டமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர். மெக்சிகோ, கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்த்தவர்கள் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த தென் அமெரிக்க நாடான கொலம்பியா, டிரம்ப்பின் 25 சதவீத ஏற்றுமதி வரி உயர்வு, விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அஞ்சி தங்கள் நாட்டு அகதிகளை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தது.
மேலும் பிரேசிலுக்கு இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அகதிகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்காமல், விமானத்தில் ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு கீழ்த்தரமாக அமெரிக்கா நடத்தியுள்ளது என அந்நாடு குற்றம் சாட்டியது.

ஆனால் எதையும் காதில் வாங்காத அமெரிக்கா, தொடர்ந்து தங்கள் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்களைக் கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்க குடிவரவு [கஸ்டம்ஸ்] அதிகாரிகள் கடந்த சில நாட்களில் 956 பேர் வரை கைது செய்துள்ளனர்.


இந்தநிலையில்தான் உலகப் புகழ் பெற்ற பாடகி செலினா கோம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பதிவில், "என் மக்கள் அனைவரும் தாக்கப்படுகிறார்கள், குழந்தைகள் உட்பட. எனக்கு எதுவும் புரியவில்லை. இதற்கு நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. எல்லா வழிகளிலும் நான் முயற்சி செய்வேன் என்று வாக்கு கொடுக்கிறேன் " என்று தேம்பித் தேம்பி அழுதபடி வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
நேற்று அவர் வெளியிட்ட இந்த பதிவை சில மணி நேரம் கழித்து அவர் நீக்கிவிட்டார். ஆனால் அவரின் இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. தனது ஆதரவை வெளிப்படையாக கூற கூட உரிமை இல்லாத சூழல் அமெரிக்காவில் வந்துவிட்டது என பலர் கூறி வருகின்றனர்.
ஆனால் டிரம்ப் ஆதரவாளர்கள் செலினா தேம்பி அழும் வீடியோவை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முந்தைய காலங்களிலும் செலினா கோம்ஸ் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தார்.
2019 இல் புலம்பெயர்ந்தவர்களின் இன்னல்களை பற்றி பேசும் 'லிவ்விங் அண்டாக்குமெண்டட்' என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து தயாரித்தார். அமெரிக்கரான செலினா கோம்ஸ் உடைய தந்தை மெக்சிகோ நாட்டை சேர்த்தவர், தாய் இத்தாலி நாட்டின் வழி வந்தவர் ஆவார்.
- ஏர் போர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது பேசிய டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.
- அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18,000 இந்தியர்களைத் திரும்பப்பெறுவதாக இந்தியாவும் உடன்பட்டுள்ளது.
நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் வைத்து தன்னை சந்திப்பார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
நேற்று ஏர் போர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது பேசிய டிரம்ப் நேற்று காலை மோடியுடன் நீண்டநேரம் போனில் பேசியதாக தெரிவித்தார். அநேகமாகப் பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு மோடி வரப்போகிறார் என்றும் இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு நல்ல உறவு உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் தங்களது உரையாடலில் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது, இந்தோ-பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளனர்.
மோடியுடன் சட்டவிரோத குடியேற்றப் பிரச்சனை குறித்து விவாதித்ததாக டிரம்ப் குறிப்பிட்டார். சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு வந்த இந்தியக் குடியேறிகளை திரும்பப் பெறும் விஷயத்தில் பிரதமர் மோடி "சரியானதைச் செய்வார்" என்றும் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18,000 இந்தியர்களைத் திரும்பப்பெறுவதாக இந்தியாவும் உடன்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு புகலிடம் வழங்குவதாக பல்வேறு குருத்துவாராக்களில் எப்.பி.ஐ சோதனைகளை தொடங்கியள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். முன்னதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.
தங்கள் நாட்டு அகதிகளை ஏற்க கொலம்பியா முதலில் மறுத்த நிலையில் அந்நாட்டின் ஏற்றுமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி உயர்வு, அரசு அதிகாரிகள் அவர்களை சார்ந்தோர்களின் விசா ரத்து உள்ளிட்ட கெடுபிடி உத்தரவுகளை டிரம்ப் பிறப்பித்தார்.
இதனால் பணிந்த கொலம்பியா தங்கள் நாட்டவரை ஏற்பதாக தெரிவித்தது. தொடர்ந்து தனது வரி உயர்வு, விசா ரத்து உத்தரவுகளை டிரம்ப் திரும்பப்பெற்றார். அதேபோல் பிரேசில் நாடும் தங்கள் அகதிகளை திரும்பப்பெற்றுள்ள நிலையில், தங்கள் நாட்டவரை விமானத்தில் தண்ணீர் கொடுக்கால், ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே டிரம்ப் - மோடி டெலிபோன் உரையாடல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை மேலும் ஆழமாக மேற்கொள்ளுதல், நியாயமான இருதரப்பு வர்த்தக உறவை உறுதிசெய்தல் என்பது குறித்து இருதலைவர்களும் உரையாடினர் என குறிப்பிட்டுள்ளது.
- அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மாபெரும் வெற்றி பெற்றார்.
- இஸ்ரேல் பிரதமர் அதிபர் டிரம்ப்-ஐ சந்திப்பார் என்று தகவல்.
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் வைத்து தன்னை சந்திப்பார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
"இன்று காலை அவருடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது," என்று டிரம்ப் கூறினார்.
முதல் முறை அதிபராக பதவி வகித்த போது, டொனால்டு டிரம்ப் கடைசியாக இந்தியாவுக்கு தான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியும் இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது. இருவரும் கடந்த செப்டம்பர் 2019-ல் ஹூஸ்டனில் நடந்த இரண்டு வெவ்வேறு பேரணிகள் மற்றும் கடந்த பிப்ரவரி 2020-ல் அகமதாபாத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் உரையாற்றினர்.
2024 நவம்பர் மாதம் அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும் அவருடன் பேசிய முதல் மூன்று உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ஆவார்.
- வெள்ளை மாளிகை சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையில் சண்டையை ஏற்படுத்தியது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"அமெரிக்காவால் கண்காணிக்கப்படும் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் பிப்ரவரி 18, 2025 வரை தொடர்ந்து அமலில் இருக்கும்" என்று வெள்ளை மாளிகை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பிடிபட்ட லெபனான் கைதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் லெபனானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் டொனால்டு டிரம்பின் வெள்ளை மாளிகை கூறியது. இது இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இடையில் சிறிய அளவில் சண்டையை ஏற்படுத்தியது.
தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் போர்நிறுத்தம் குறித்து வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. நேற்றும் இஸ்ரேல் படைகள் 22 பேரை கொன்ற நிலையில் போர் நிறுத்தம் என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது என லெபனான் சுகாதார துறை தெரிவித்தது.
- ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தின் கீழ் இந்த திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை செயல்பட்டு வந்தது.
- மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையை இவ்விரு நாடுகளும் உறுதி செய்வதால் அவரின் நிதியில் டிரம்ப் கைவைக்கவில்லை
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். பல தடாலடி உத்தரவுகளை வெளியிட்டு வரும் டிரம்ப் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அளித்து வந்த யுஎஸ்-எய்ட் நிதி உதவியை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு போக்குதல், நோய் பாதிப்பைத்த் தடுக்க உதவுதல் உள்ளிட்டவற்றில் வளர்ச்சியில் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளுக்கு உலக வல்லரசான அமெரிக்காவின் நிதி உதவி கிடைத்து வந்தது.
யுஎஸ்-எய்ட் [USAID] என்ற சுயாதீன அமைப்பு இதற்காக உருவாக்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர்ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தின் கீழ் 2003-ல் இந்த திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய உதவிகளுக்கான நிதியை 90 நாட்களுக்கு முடக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் புதிதாக இனிமேல் ஏதும் நிதி வழங்கப்படாது என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சூடான் உள்ளிட்ட கடும் பஞ்சத்தால் வாடும் நாடுகளுக்கு உணவு வழங்குவதற்கான திட்டங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஆண்டுதோறும் அமெரிக்காவிடமிருந்து ராணுவ உதவியாக 3.3 பில்லியின் டாலர் பெறுகிறது, எகிப்து 1.3 பில்லியின் டாலர் பெறுகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையை இவ்விரு நாடுகளும் உறுதி செய்வதால் அவரின் நிதியில் டிரம்ப் கைவைக்கவில்லை என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். நிதியுதவி அளிக்கத் தடை அமலில் உள்ள 90 நாட்களுக்குப் பின் உத்தரவை நீடிப்பதா அல்லது விலக்கிக்கொள்வதா என்று முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே பிராந்திய சிக்கல்களுக்கு அமெரிக்காவைப் பெரிதும் நம்பியுள்ள உக்ரைன், தைவான் மற்றும் எஸ்டோனியா, லிதுவேனியா, லாட்வியாவை உள்ளடக்கிய பால்டிக் நாடுகளை இந்த தடை மிகவும் பாதிக்கும்.
ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஜோ பைடன் அதிக உதவிகளை அளித்து வந்த நிலையில் டிரம்ப்பின் நிதி நிறுத்தம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தற்போதைக்கு போர்க்கால உதவிகள் ஏதும் நிறுத்தப்படவில்லை, கடவுளுக்கு நன்றி என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் ஆறுதல் அடைந்துள்ளார்.
அமெரிக்காவின் இரக்கமற்ற இந்த முடிவின் விளைவு கொடூரமானதாக இருக்கும் என யுஎஸ் எய்ட் அமைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எய்ட்ஸ் நிவாரணத்திற்கான அமெரிக்க அதிபரின் அவசர நிதியுதவி திட்டமும் யுஎஸ் - எய்ட் நிதி முடக்கத்தால் பாதிக்கப்படும்.

அமெரிக்க உதவியை நிறுத்துவது, சீனா மற்றும் ரஷ்யா போன்ற போட்டியாளர்களிடம் இருந்து நிதியுதவி பெறும் நிர்பந்தத்துக்கு சர்வதேச நாடுகளை உட்படுத்தும் யுஎஸ் காங்கிரசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக சுகாதர அமைப்பில் இருந்தும் அமெரிக்கா விளங்கியுள்ளதும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதர அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறுகியில், ஒரு நாடு எவ்வளவு வளமானதாக இருக்கிறதோ அதற்கேற்ப அந்த நாடு பிறநாடுகளின் மேம்பாட்டுக்காக நிதியுதவி செலுத்தும்.
ஒரு நாட்டின் ஜிடிபியில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அந்நாடு ஒதுக்கும். மிக முக்கியத்துவம் வாய்ந்த, மிகப்பெரிய நாடான அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறிய முடிவு நல்லது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

- சிறிய இடைவெளியிலேயே கமலா ஹாரிஸை டிரம்ப் வென்றுள்ளார்.
- 2020 தேர்தலில் மோசடி செய்திருக்காவிட்டால் நான் வென்றிருப்பேன்.
கடந்த திங்கள்கிழமை அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் கடந்த 5 நாட்களில் சொன்ன பல விஷயங்கள் பொய்யானவை என்று தெரியவந்துள்ளது.
ஜனவரி 20 [திங்கள்கிழமை] அவர் பதவியேற்ற பின் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், செய்தியாளர்கள் சந்திப்புகள் பலவற்றில் ஆதரமற்ற வகையில் டிரம்ப் வாய்க்கு வந்ததை பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.
தாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதாரக் கூட்டமைப்புக் கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப், 2024 அதிபர் தேர்தலில் அவர் கமலா ஹாரிஸை விட பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றதாக தன்னைத் தானே பாராட்டிக் கொண்டார். அமெரிக்க மக்கள் தனக்கு மாபெரும் வெற்றியை வழங்கியுள்ளனர் என்று கூறினார்.

ஆனால் அசோசியேட் பிரஸ் வெளியிட்டிருக்கும் வாக்குப் பதிவு தரவுகளின்படி, டிரம்ப் பெற்ற எலெக்டோரல் வாக்குகள் 312. கமலா ஹாரிஸ் பெற்ற எலெக்டோரல் வாக்குகள் 226. அதாவது, டிரம்ப் 49.9 சதவீத வாக்குகளும், கமலா ஹாரிஸ் 48.4 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர்.
இதன்படி சிறிய இடைவெளியிலேயே கமலா ஹாரிஸை டிரம்ப் வென்றுள்ளார். இது அவர் குறிப்பிடும் மகத்தான வெற்றிக்கு முற்றிலும் முரணானது. அதே சமயத்தில் கடந்த 2020 தேர்தலில் ஜோ பைடன் 51.3% வாக்குகள் பெற்றிருந்த நிலையில் டிரம்ப் 46.8% பெற்று அதிக இடைவெளியில் தோற்றதும் கவனிக்கத்தக்கது.
அடுத்ததாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2024 தேர்தலில் தனக்கு இளைஞர்கள் அதிக வாக்கு செலுத்தியுள்ளதாக டிரம்ப் கூறினார்.
ஆனால் அசோசியேட் பிரஸ் தரவின்படி, 18 - 29 வயதுடையவர்களிடையே 4 சதவீத புள்ளிகளும் 30 - 44 வயதுடையவர்களிடையே 3 சதவீதப் புள்ளிகளும் கமலா ஹாரிஸ்க்கு கிடைத்துள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் புள்ளிகளே டிரம்புக்குக் கிடைத்துள்ளது என தெரியவருகிறது.

இதேபோல பென்சில்வேனியா, ப்ளோரிடா ஆகிய மாகாணங்களில் பெற்ற வெற்றியை டிரம்ப் மிகைப்படுத்திக் கூறியுள்ளார். மேலும் 2020 தேர்தலில் மோசடி செய்திருக்காவிட்டால் நான் வென்றிருப்பேன் என டிரம்ப் தற்போது பேசியுள்ளார்.
ஆனால் இதுதொடர்பான வழக்கில் மோசடி நடைபெறவில்லை என ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. முன்னதாக தேர்தல் பிரசார சமயத்தில், சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தவர்கள் நாய் உள்ளிட்ட அமெரிக்கர்களின் செல்லப்பிராணிகளை கொன்று சாப்பிடுவதாக டிரம்ப் ஆதாரமற்ற கருத்தை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அறிவித்தார்.
- அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்றதும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதை நடைமுறைப்படுத்த அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2023-ம் ஆண்டு சுமார் 60 பில்லியன் (அந்நாட்டின் பட்ஜெட்டில் 1%) ஒதுக்கப்பட்டது.
- இந்தப் பணம் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு அல்ல
- ஆனால் மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏஐ... என்று டிரம்ப் அவர்களை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்தார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்டார்கேட் என்ற ஏ.ஐ. திட்டத்தை அறிவித்தார்.
ஓபன் ஏஐ, ஜப்பானிய நிறுவனமான SoftBank மற்றும் மைக்ரோசாஃப்டின் கிளவுட் நிறுவனமான Oracle ஆகியவற்றின் பங்களிப்பில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டமே ஸ்டார்கேட்.
ஸ்டார்கேட் திட்டம் மூலம் மேற்கூறிய நிறுவனங்கள் உதவியுடன் அமெரிக்காவில் ஏஐ உள்கட்டமைப்பு உருவாக்கத்துக்கு 500 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என்று டிரம்ப் கூறினார்.
ஆனால் எக்ஸ், ஸ்பெஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் உரிமையாளரும் டிரம்பின் கூட்டாளியுமான எலான் மஸ்க், அவர்களிடம் [அந்த நிறுவனங்களிடம்] அவ்வளவு பணம் இல்லை என்று எக்ஸ் பதவில் தெரிவித்திருந்தார். SoftBank நிறுவனம் 10 பில்லியன் வரை தரும், ஆனால் மைக்ரோசாஃப்ட், ஓபன் ஏஐ... என்று மஸ்க் அவர்களை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் CNBC செய்தி நிறுவன நேர்காணலின் போது, மஸ்க்கின் கூற்றுகளுக்கு பதிலளித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் சத்ய நாதெல்லா, என்னால் 80 பில்லியன் டாலர்கள் வரை [ஸ்டார்கேட் திட்டத்தில்]செலவழிக்க முடியும் என்று தெரிவித்தார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நம்பலாம். இந்தப் பணம் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு அல்ல, ஆனால் நிஜ உலகத்திற்காக பயனுள்ள விஷயங்களை உருவாக்குவதே என்றும் அவர் தெரிவித்தார்.
அவர்களிடம் பணம் இல்லை என எலான் மஸ்க் கருத்தை ஓபன் ஏஐ சிஇஓ சால்ம் ஆல்ட்மேனும் நிராகரித்துள்ளார். ஸ்டார்கேட் திட்டத்திற்கான ஏஐ பரிசோதனையை வேலைகள் ஏற்கனவே தாங்கள் தொடங்கிவிட்டதாகவும், அதை மஸ்க் வந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
- ராணா அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
- இந்தியாவுக்கு நாடு கடத்தப்படாமல் இருக்க ராணாவின் கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது.
வாஷிங்டன்:
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரும் கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் ராணா என்பவர், கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இதற்கிடையே ராணாவை நாடு கடத்த இந்தியா கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்தது. இதையடுத்து லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து ராணா அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் ராணாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது. இந்தியாவுக்கு நாடு கடத்தப்படாமல் இருக்க ராணாவின் கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது.
அவர் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ராணா, லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பெரு நகர தடுப்பு மையத்தில் உள்ளார்.






