என் மலர்
அமெரிக்கா
- கடந்த 2017-ல் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர்.
- துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தின் அருகில்தான் பிரபல சூதாட்ட மையம் உள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் உள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்பட்ட நபரை சுட்டு வீழ்த்தினர். பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் அருகில் உள்ள விமான நிலையத்தில் சேவை பாதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் அருகில்தான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடும் சுதாட்ட மையம் உள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர், "நான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மூன்று முறை துப்பாக்கியால் சுடும் பெரிய சத்தத்தை கேட்டேன். அதன்பின் இரண்டு முறை சத்தம் கேட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் போலீசார் வந்த பிறகும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் நான் அடித்தளத்திற்கு ஓடினேன். நாங்கள் அங்கு 20 நிமிடங்களில் பதுங்கி இருந்தோம்" என்றார்.
லாஸ் வேகாஸில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது மிகப்பெரிய அளவில் துப்பாக்கிச்சூட நடைபெற்றது. இதில் 60 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட 4 இந்தியர்கள் இடம்பெற்றனர்.
- இந்தப் பட்டியலில் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடம் பிடித்துள்ளார்.
நியூயார்க்:
உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தை பிடித்து உள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லகார்ட் 2-ம் இடத்தையும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து 4 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் முக்கியமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 32-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 4 ஆண்டாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்து வரும் அவர் 5-வது முறையாக இந்த ஆண்டும் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார்.
இதைப்போல எச்.சி.எல். டெக் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா 60-வது இடத்தையும், இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 70-வது இடத்தையும் பிடித்து இருக்கின்றனர். பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார்-ஷா 76-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதில் ரோஷினி நாடார் மல்கோத்ரா, சோமா மண்டல், கிரண் மஜூம்தார்-ஷா ஆகியோர் கடந்த ஆண்டிலும் பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவின் ஹோண்டுராசில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.
- இந்த விபத்தில் குறைந்தது 12 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ஹோண்டுராசில் சுமார் 60 பேரை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
டெகுசிகல்பாவில் இருந்து சுமார் 41 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் உள்ள ஓடையில் விழுந்து பாலத்தில் மோதி விபத்தில் சிக்கியது என போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். 10 பேர் சம்பவ இடத்திலும், 2 பேர் டெகுசிகல்பாவில் உள்ள மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.
மேலும் 20-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
- குண்டு வெடித்ததில் வீடு முற்றிலும் இடிந்தது.
- வீட்டுக்குள் இருந்த நபர் உயிரிழந்தாரா? அல்லது தப்பி சென்றாரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
வாஷிங்டன்:
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் புறநகர் பகுதியான ஆர்லிங்டனில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி சத்தம் கேட்ட வீட்டுக்குள் போலீசார் நுழைந்து சோதனை நடத்த முயற்சித்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்த நபர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
திடீரென்று அந்த வீட்டில் குண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் பல அடி உயரத்துக்கு தீ பிழம்பு கிளம்பியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குண்டு வெடித்ததில் வீடு முற்றிலும் இடிந்தது. அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர். சோதனை நடத்த சென்ற போலீசார் அதிகாரிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
வீட்டுக்குள் இருந்த நபர் உயிரிழந்தாரா? அல்லது தப்பி சென்றாரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
குண்டு வெடித்த வீட்டில் இருந்த நபர், வெடி மருந்துகளை பதுக்கி வைத்து இருந்து போலீசார் வந்ததும் அதை வெடிக்க வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாக்களிப்பவர்களுக்கு பொது அறிவு இருப்பதை சோதிக்க வேண்டும் என்கிறார் விவேக்
- வாக்களிக்கும் உரிமையை கல்வியறிவுடன் கலப்பதை விமர்சகர்கள் எதிர்க்கின்றனர்
அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீதுள்ள பல்வேறு வழக்குகளில் வரப்போகும் தீர்ப்பினை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும் நிலை உள்ளது.
இதனால் குடியரசு கட்சி வேட்பாளர்களில் டிரம்பிற்கு அடுத்த நிலையில் அதிக ஆதரவு உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.
பல்வேறு நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அமெரிக்காவை சூழ்ந்துள்ள சிக்கல்கள் குறித்தும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் பேசி வரும் விவேக் ராமசாமி, முதன்முறை மற்றும் இளம் வாக்காளர்கள் குறித்து பேசிய கருத்து ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி 18 வயது நிறைவடைந்தவர்கள் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெறுகிறார்கள்.
ஆனால், விவேக் ராமசாமி முன்மொழிந்துள்ள மாற்று திட்டத்தின்படி, 18 வயதை எட்டியவர்கள் தேர்தலில் வாக்களிக்க அடிப்படை பொது அறிவிற்கான ஒரு தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் அல்லது 6 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது முதல்நிலை அவசர சேவை பணியாளர்களாக சில காலங்கள் பணியாற்றி இருக்க வேண்டும்.
தனது இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள விவேக், வாக்களிக்க விரும்பும் இளைஞர்களுக்கு அடிப்படை பொது அறிவு அவசியம் என கூறுகிறார். தான் வென்றால் இதற்கான அரசியலமைப்பு சட்ட மாறுதல்களை கொண்டு வர உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
விவேக்கின் இந்த கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது கருப்பினத்தவர்களுக்கான வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் முயற்சி என்றும் பல்வேறு பயனற்ற மற்றும் பதில் தெரியாத கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றிற்கு பதிலளிக்க முடியாததால், வாக்குரிமை இழக்கும் அபாயம் தோன்றும் என கருத்து தெரிவிக்கும் கருப்பின பிரதிநிதிகள், கல்வியையும் வாக்களிக்கும் உரிமையையும் ஒன்றுடன் ஒன்று கலக்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, இதற்கான அரசியலமைப்பு சட்ட மாறுதலை கொண்டு வர அமெரிக்க பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிட்ட வேண்டியது அவசியம் என்றும், 4ல் 3 மாநில சட்டசபைகளிலும் இதற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் அதனால் இது நிறைவேறுவது கடினம் என்றும் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
விவேக் ராமசாமி முன்மொழிந்துள்ள மாறுதல்கள் அதிபர் தேர்தலில் அவருக்கும் அவரது குடியரசு கட்சிக்கும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில்தான் தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
- பொது சுகாதார நெருக்கடிகள் பற்றி பொய் சொல்வதில் சீன அரசு நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.
- உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கும் வரை நாம் காத்திருக்கக் கூடாது.
சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் அதிகரித்து வருதால், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் நோயாளிகளின் கூட்டம் அலை மோதுகிறது.
நிமோனியா தொற்று அதிகரித்து வருவதால் பல மாகாணங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்கா-சீனா இடையேயான பயணங்களுக்கு தடை விதிக்குமாறு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக மார்கோ ரூபியோ தலைமையிலான குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் ஜோபைனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் சீனாவில் இதுவரை அறியப்படாத சுவாச நோய் பரவி வருவதால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான பயணத்தை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பொது சுகாதார நெருக்கடிகள் பற்றி பொய் சொல்வதில் சீன அரசு நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.
கொரோனா தொற்றின்போது உண்மையை சீனா மறைத்தது. உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. அமெரிக்கர்களின் ஆரோக்கியத்தையும் நமது பொருளாதாரத்தையும், பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளனர்.
- இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் முயற்சி மேற்கொண்டன.
- ஹமாஸ் அமைப்பு உறுதிமொழிகளைப் புறக்கணித்ததாலேயே போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது என்றார் அமெரிக்க மந்திரி.
வாஷிங்டன்:
இஸ்ரேல், ஹமாஸ் இடையே மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்த அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொண்டு வந்தன.
ஆனால், ஹமாஸ் இடைக்கால போர் நிறுத்த செயல்பாட்டை மீறிவிட்டது. கூடுதலாக இஸ்ரேல் பகுதி மீது தாக்குல் நடத்தியது எனக்கூறி, இஸ்ரேல் ராணுவம் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் உறுதிமொழிகளைப் புறக்கணித்ததாலேயே போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி பிளிங்கன், இடைநிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் பொதுமக்களுக்கு தெளிவான பாதுகாப்பை ஏற்படுத்துவது மற்றும் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்துச் செல்வது அவசியம் என்பதை தெளிவு படுத்தினேன். போர் நிறுத்தம் ஏன் முடிவுக்கு வந்தது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். ஹமாசால் அது முடிவுக்கு வந்தது. ஹமாஸ் அமைப்பினர் கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டனர். போர் நிறுத்தம் முடியும் முன்பே அது ஜெருசலேமில் ஒரு கொடூரமான தாக்குதலை நடத்தி 3 பேரைக் கொன்றது. அமெரிக்கர்கள் உட்பட மற்றவர்களைக் காயப்படுத்தியது. போர் நிறுத்தம் முடிவதற்குள் அது ராக்கெட்டுகளை வீசத் தொடங்கியது. சில பிணைக்கைதிகளை விடுவிப்பதில் அது செய்த கடமைகளை மறுத்தது என தெரிவித்தார்.
- அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது.
- ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்து விசாரணை.
எட்டு பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம் இன்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜப்பானிய கடலோரக் காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது. இதில் 8 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய விவரங்கள் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கசுவோ ஓகாவா தெரிவித்தார்.
தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ககோஷிமாவுக்கு தெற்கே உள்ள யாகுஷிமா தீவில் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகே கடலோர காவல்படைக்கு ஒரு மீன்பிடி படகில் இருந்து அவசர அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்..
ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்தும் ஆனால் அந்த விமானம் இவாகுனியில் இருந்து ஒகினாவாவுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
- கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
- அடிக்கடி மற்ற பெண்களை பார்த்ததால் ஆண் நண்பர் மீது ஆத்திரம்.
காதலன் காதலியுடன் செல்லும்போது எதேச்சையாக மற்ற பெண்களை பார்ப்பது உண்டு. சிலர் வேண்டுமென்றே பார்ப்பதும் உண்டு. அந்த நேரத்தில் காதலி காதலனை பார்க்கும் ஒரு முறைப்பை நாம் சினிமா படங்களில் பார்த்திருப்போம். சில சமயங்களில் இதுபோன்ற சம்பவத்தால் அடிதடியும் நடப்பது உண்டு.
இப்படி ஆண் நண்பர் ஒருவர் மற்ற பெண்களை பார்த்ததால் ஆத்திரம் அடைந்த பெண் ஒருவர், ஆண் நண்பரின் கண்ணில் வெறிநாய்க்கடி ஊசியால் குத்திய சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் மியாமி-டேட் கவுன்ட்டியில் சந்த்ரா ஜிமினெஸ் என்ற 44 வயது பெண்மணி ஒருவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் கடந்த 8 வருடங்களாக வசித்து வருகிறார். ஆண் நண்பர் அடிக்கடி மற்ற பெண்களை பார்த்ததாக தெரிகிறது.
இதற்கிடையே தாங்கள் வளர்க்கும் நாய்க்கு ஊசி போடுவதற்காக இரண்டு நெறிநாய்க்கடி ஊசிகளை (rabies needles) ஆண் நண்பர் வீட்டில் வாங்கி வைத்துள்ள்ளார்.
மற்ற பெண்களை ஆண் நண்பர் பார்த்து வந்ததால் ஜிமினெஸ்க்கு கடுங்கோபம் வந்துள்ளது. இதனால் ஒரு ஊசியை எடுத்து ஆண் நண்பரின் கண்ணில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
காயம் அடைந்த அந்த ஆண் நண்பர் காவல்துறைக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். போலீசார் அவர்களது வீட்டிற்கு சென்று, ஆண் நண்பரை காப்பாற்றியதுடன், வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தூங்கிக் கொண்டிருந்த ஜிமினெஸை கைது செய்துள்ளனர்.
போலீசார் விசாரணையின்போது, ஆண் நண்பரின் கண்ணில் நான் ஊசியால் தாக்கவில்லை என்று குற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜிமினெஸ், ஆண் நண்பர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க வெள்ளை மாளிகை மஸ்க் பொய் சொல்வதாக கூறியது
- அனைவரின் கருத்துக்களையும் ஆராயும் பழக்கம் எனக்கு இல்லை என்றார் சுனக்
அக்டோபர் 7 அன்று துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், 50 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக பலரும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக பலரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் பிரபல சமூக கருத்து பரிமாற்றல் இணைய வலைதளமான "எக்ஸ்" செயலியில், ஒரு பயனர், "வெள்ளையர்களுக்கு எதிராக யூதர்கள் வெறுப்பை தூண்டி விடுகிறார்கள்" என கருத்து பதிவிட்டிருந்தார்.
எக்ஸ் வலைதளத்தின் தற்போதைய நிறுவனரும், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், இக்கருத்தை ஆமோதிக்கும் வகையில், "நீங்கள் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்", என பதிலளித்து பதிவிட்டிருந்தார்.
இது உலகெங்கும் உள்ள யூதர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க வெள்ளை மாளிகை எலான் மஸ்க் கூறுவதை "வடிகட்டிய பொய்" எனவும் விமர்சித்திருந்தது.
எலான் மஸ்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு வந்த தங்கள் விளம்பரங்களை குறைத்து கொள்ள தொடங்கின. இதனால் எக்ஸ் நிறுவன விளம்பர வருவாயும் குறைய தொடங்கியது. இவ்வருட இறுதிக்குள் அது பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
இங்கிலாந்தில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல முக்கிய பிரமுகர்களும், பல்லாயிரக்கணக்கானோரும் பங்கேற்ற யூத எதிர்ப்பிற்கு எதிரான பேரணி ஒன்று நடைபெற்றது.
இங்கிலாந்தில் நவம்பர் மாத தொடக்கத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த மாநாட்டில் எலான் மஸ்க் மற்றும் ரிஷி சுனக் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்பின்னணியில், தனது நிலைப்பாட்டை குறித்து ரிஷி சுனக் கருத்து தெரிவிக்க வேண்டும் என அந்நாட்டில் அவருக்கு ஊடகங்களில் அழுத்தம் தரப்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து ஒரு பேட்டியில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இது குறித்து கருத்து தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
என்னுடன் பழகும் ஒவ்வொரு மனிதரும் கூறும் கருத்துக்களையும் ஆராயும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால், யூதர்களுக்கு எதிரான வெறியையும், வன்முறை சம்பவங்களையும், அவர்களுக்கு எதிரான சித்தாந்தத்தையும் நான் எதிர்க்கிறேன். நீங்கள் சாலையில் செல்லும் யாரோ ஒருவரா அல்லது எலான் மஸ்கா என்பது குறித்தெல்லாம் எனக்கு கவலையில்லை. தகாத வார்த்தைகளால் பொய்யாக விமர்சிப்பது அனைத்து வகையிலுமே ஏற்க முடியாதது. எல்லா வகையிலுமே யூத எதிர்ப்பு என்பது முழுவதும் தவறு.
இவ்வாறு சுனக் தெரிவித்தார்.
- வெற்றிகரமான கதாநாயகனாகவும், கலிபோர்னியா கவர்னராகவும் இருந்தார் ஆர்னால்ட்
- கென்னடி மற்றும் ரீகன் காலம் போன்று பிரசாரம் நடக்கவில்லை என்றார் ஆர்னால்ட்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் (81) மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருந்தாலும், இருவரும் இப்போதே தங்களுக்கு ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா உட்பட உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட தொழில்முறை பாடிபில்டரும், பிரபல ஹாலிவுட் முன்னணி கதாநாயகனும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (76) அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்கர்களை குறித்து கவலைப்படுகிறேன். 2024 தேர்தலில் மீண்டும் ஜோ பைடனுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் போட்டி என்பது ஏமாற்றமடைய செய்கிறது. இருவருக்கும் அதிக வயதாகி விட்டது என்பதனால் மட்டுமல்ல; அவர்கள் சிறப்பானவர்கள் என்று நான் கருதவில்லை.
வெள்ளை மாளிகையில் புதிய ரத்தம் வேண்டும். புதிய சிந்தனைகளை உடைய தலைவர்கள் வேண்டும். இரு கட்சிகளிலும் அப்படி ஒரு புதிய முகம் இல்லாதது கவலை அளிக்கிறது.
பைடன் பேட்டி அளித்தால் அனைத்து பத்திரிகையாளர்களும் அதை படம் பிடிக்கின்றனர். டிரம்ப் எது கூறினாலும் அதையும் படம் பிடிக்கின்றனர். தலைப்பு செய்திகள் முழுவதும் பைடன் அல்லது டிரம்ப் குறித்தே உள்ளது. இந்நிலையில் வேறு ஒரு புதிய முகம் எவ்வாறு உருவாக முடியும்?
நாட்டின் முன் உள்ள பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள மிகுந்த திறன் படைத்த ஒருவர் வேண்டும். ஜான் கென்னடி மற்றும் ரொனால்ட் ரீகன் காலகட்ட பிரசாரம் போன்று தற்போது நடைபெறுவதில்லை. இரு கட்சிகளிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஒன்றிணைக்கும் புதிய முகம் வேண்டும்.
இவ்வாறு ஆர்னால்ட் தெரிவித்தார்.
வாக்காளர்களின் மனநிலை குறித்த ஆய்வுகளில் பல அமெரிக்கர்கள், பைடனின் மன ஆரோக்கியம் மற்றும் டிரம்ப் மீது உள்ள வழக்குகள் குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். வேறு சிலர் மாறி மாறி வரும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சி வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இப்பின்னணியில், ஆர்னால்டின் கருத்தும் இதனையே பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- கடைகள் மட்டுமின்றி இணையதள வழியாகவும் மக்கள் பொருட்களை அதிகம் வாங்குகின்றனர்
- வர்த்தகர்கள் அறிவித்த அதிக தள்ளுபடி, அதிக விற்பனைக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்தனர்
அமெரிக்காவில், நவம்பர் மாத நான்காவது வியாழக்கிழமை "தேங்க்ஸ்கிவிங் டே" (Thanksgiving Day) என்றும் அடுத்த நாளான வெள்ளிக்கிழமை "ப்ளாக் ஃப்ரைடே" (Black Friday) என்றும் கொண்டாடப்படுகிறது.
கருப்பு வெள்ளி என நவம்பரில் அழைக்கப்படும் இந்நாளில் தொடங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடக்கம் வரை அமெரிக்கர்கள், தங்கள் குடும்பத்தினருடன் ஆடைகள், அணிகலன்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதும். மேலும், வர்த்தகர்கள், தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்காக பல தள்ளுபடி அறிவிப்புகளையும், ஊக்க தொகை மற்றும் பரிசு பொருட்கள் போன்ற பல சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்.
கடைவழி வர்த்தகத்தை போன்றே இணையதள வழி வர்த்தகமும் மிகவும் மும்முரமாக நடைபெறும்.
இந்நிலையில், அமெரிக்காவில் கருப்பு வெள்ளி அன்று நடைபெற்ற இணையவழி வர்த்தகம், $9.8$ பில்லியன் அளவிற்கு நடைபெற்றதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதிக தள்ளுபடிகள் மற்றும் மின்னணு சாதனங்களை வாங்க அதிகரிக்கும் விருப்பம் ஆகியவையே இதற்கு காரணம் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்கள் மக்களால் முதலில் விரும்பப்படும் பொருட்களாக உள்ளன.
கடந்த சில மாதங்களாக விலைவாசி உயர்வின் காரணமாக மக்கள் அதிக செலவு செய்வதை தவிர்த்து வந்ததால், வர்த்தகர்களிடம் பொருட்கள் தேங்கி கிடந்தது. ஆனால், தற்போது விற்பனை சூடு பிடித்திருப்பதை வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.
கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொய்வடைந்திருந்த சில்லறை வர்த்தகத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என தெரிவிக்கும் பொருளாதார நிபுணர்கள், அடுத்து வரும் நாட்களில் விற்பனையின் அளவு இதே போன்று நீடிக்குமா என்பது இனிதான் தெரிய வரும் எனவும் கூறுகின்றனர்.






