"புதிய ரத்தம் வேண்டும்" - வெளிப்படையாக பேசிய ஆர்னால்ட்

வெற்றிகரமான கதாநாயகனாகவும், கலிபோர்னியா கவர்னராகவும் இருந்தார் ஆர்னால்ட்கென்னடி மற்றும் ரீகன் காலம் போன்று பிரசாரம் நடக்கவில்லை என்றார் ஆர்னால்ட்
"புதிய ரத்தம் வேண்டும்" - வெளிப்படையாக பேசிய ஆர்னால்ட்
Published on

அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் (81) மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருந்தாலும், இருவரும் இப்போதே தங்களுக்கு ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா உட்பட உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட தொழில்முறை பாடிபில்டரும், பிரபல ஹாலிவுட் முன்னணி கதாநாயகனும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (76) அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

அமெரிக்கர்களை குறித்து கவலைப்படுகிறேன். 2024 தேர்தலில் மீண்டும் ஜோ பைடனுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் போட்டி என்பது ஏமாற்றமடைய செய்கிறது. இருவருக்கும் அதிக வயதாகி விட்டது என்பதனால் மட்டுமல்ல; அவர்கள் சிறப்பானவர்கள் என்று நான் கருதவில்லை.

வெள்ளை மாளிகையில் புதிய ரத்தம் வேண்டும். புதிய சிந்தனைகளை உடைய தலைவர்கள் வேண்டும். இரு கட்சிகளிலும் அப்படி ஒரு புதிய முகம் இல்லாதது கவலை அளிக்கிறது.

பைடன் பேட்டி அளித்தால் அனைத்து பத்திரிகையாளர்களும் அதை படம் பிடிக்கின்றனர். டிரம்ப் எது கூறினாலும் அதையும் படம் பிடிக்கின்றனர். தலைப்பு செய்திகள் முழுவதும் பைடன் அல்லது டிரம்ப் குறித்தே உள்ளது. இந்நிலையில் வேறு ஒரு புதிய முகம் எவ்வாறு உருவாக முடியும்?

நாட்டின் முன் உள்ள பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள மிகுந்த திறன் படைத்த ஒருவர் வேண்டும். ஜான் கென்னடி மற்றும் ரொனால்ட் ரீகன் காலகட்ட பிரசாரம் போன்று தற்போது நடைபெறுவதில்லை. இரு கட்சிகளிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஒன்றிணைக்கும் புதிய முகம் வேண்டும்.

இவ்வாறு ஆர்னால்ட் தெரிவித்தார்.

வாக்காளர்களின் மனநிலை குறித்த ஆய்வுகளில் பல அமெரிக்கர்கள், பைடனின் மன ஆரோக்கியம் மற்றும் டிரம்ப் மீது உள்ள வழக்குகள் குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். வேறு சிலர் மாறி மாறி வரும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சி வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இப்பின்னணியில், ஆர்னால்டின் கருத்தும் இதனையே பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com