என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • பிரிக்ஸ் மாநாட்டில் சீன யுவானை செலாவணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது
    • 2023ல் பல நாடுகள் தங்களுக்கிடையே மாற்று கரன்சியை பயன்படுத்த உடன்பட்டன

    உலக நாடுகளில் வல்லரசாக அமெரிக்கா திகழ முக்கிய காரணம் அதன் ராணுவ பலமும், சர்வதேச வர்த்தகங்களில் அமெரிக்க கரன்சியான டாலர் (Dollar), பெருமளவில் பயன்படுத்தப்படுவதும்தான்.

    அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை பல நாடுகள் சில ஆண்டுகளாக எடுக்க துவங்கின.

    கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் சீனா அதன் கரன்சியை வர்த்தகத்திற்கு பயன்படுத்த பிரிக்ஸ் (BRICS) மாநாடுகளில் முன்மொழிந்தது. ஆனால், கோவிட் பெருந்தொற்றால் இந்த முடிவு தள்ளி போடப்பட்டது.


    2021ல் துவங்கிய, டாலருக்கு மாற்றாக ஒரு கரன்சியை தேடும் டீ-டாலரைசேஷன் (de-Dollarization) எனப்படும் இந்த முயற்சி, 2023ல் வேகமெடுக்க தொடங்கியது.

    ரஷியா மற்றும் அர்ஜெண்டினா சீனாவுடனான வர்த்தகத்திற்கு சீன யுவான் (Yuan) பயன்படுத்த தொடங்கின.

    கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சீனாவும், இந்தியாவும் தங்கள் நாட்டு கரன்சிகளை மாற்றாக கொண்டு வர முயற்சி எடுத்தன.

    எண்ணெய் சாராத வர்த்தகத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கையும், செலாவணிக்கு "இந்திய ரூபாய்" பயன்படுத்த உடன்பட்டுள்ளன.

    லத்தீன் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பல நாடுகள் டாலருக்கு மாற்று கரன்சிக்கான தேடுதலை துவங்கியுள்ளன.

    ஒரு சில நாடுகள் டிஜிட்டல் கரன்சி மற்றும் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராகி விட்டன.

    எதிர்காலத்தில் பல நாடுகள் டாலருக்கு மாற்றான வழிமுறையில் தீவிரமாக வணிகத்தில் ஈடுபடும் போது டாலருக்கான தேவை குறையும் என்றும் இதன் காரணமாக அமெரிக்காவிற்கு உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் சிக்கல்கள் அதிகமாகும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இதுவரை காசாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    காசா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். வான் வழியாக சரமாரியாக குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால் தினமும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவு உயிர் துறந்து வருகின்றனர். சாவு எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கி விட்டது.

    இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள விமான நிலையங்களை பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    லாஸ்ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். கையில் பதாகைகள் ஏந்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். திடீரென இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. விமான நிலைய நுழைவு வாயிலை அவர்கள் முற்றுகையிட்டனர்.

    விமான நிலையத்துக்கு செல்லும் ரோட்டில் கட்டிட குவியல்கள், மரக்கிளைகள், தடுப்புகள் போன்றவற்றை போட்டு அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனை தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரி ஒருவரை அவர்கள் தாக்கினார்கள். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் கைது செய்தனர். 45 நிமிடங்களுக்கு பிறகு விமான நிலையத்தை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த போராட்டத்தால் விமானங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. விமான பயணிகள் பத்திரமாக உள்ளனர். அவர்களை மீட்க 2 பஸ்களை பாதுகாப்பு படையினர் அனுப்பி வைத்தனர்.

    இதே போல நியூயார்க்கில் உள்ள ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்திலும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் அவர்கள் கையில் பதாகையுடன் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து போலீசார் 26 பேரை கைது செய்தனர்.

    • சவானா தனது காதலன் மேத்யூவுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பொருட்களை வாங்க சென்றுள்ளார்.
    • காருக்குள் உடல் அழுகியநிலையில் இரண்டு சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஆண்டோனியோ நகரை சேர்ந்தவர் சவானா நிக்கோல் சோடோ (வயது 18). அதே பகுதியை சேர்ந்த இசைக்கலைஞரான மேத்யூ குரேரா (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிவீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது தனது தாயுடன் சவானா போனில் பேசி வந்துள்ளார்.

    இதனிடையே சவானா கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான சவானாவுக்கு இந்த மாத இறுதியில் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் தேதி குறித்திருந்தனர்.

    இந்தநிலையில் சவானா தனது காதலன் மேத்யூவுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பொருட்களை வாங்க சென்றுள்ளார். அதன்பின்பு இருவரும் வீடு திரும்பவில்லை.

    பதறிபோன அவர்களுடைய பெற்றோர்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம் காதல்ஜோடியை வலை வீசி தேடி வந்தனர்.

    இந்தநிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான சாலையில் கார் ஒன்று சந்தேகத்தை கிளப்பும் வகையில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அந்த கார், மாயமான குரேரா பெயரில் பதிவாகி இருந்தது தெரிந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த காரை சோதித்தனர். அப்போது காருக்குள் உடல் அழுகியநிலையில் இரண்டு சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர்.

    விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் சவானா மற்றும் அவருடைய காதலன் குரேரா என தெரிந்தது. உடல்கள் அழுகியநிலையில் இருந்ததால் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பதை போலீசாரால் உறுதியாக கூற முடியவில்லை.

    உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாயமான இளம் காதல்ஜோடி இறந்தநிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்புக்கு தகுதியற்றவர்.
    • அவருடைய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் டிரம்ப் பெயர் இடம் பெறாது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான பாராளுமன்ற வன்முறை வழக்கில் தீர்ப்பளித்த கொலராடோ மாகாண நீதிமன்றம் அவர் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறியது. மேலும் கொலராடோ மாகாணத்தில் அவருடைய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் டிரம்ப் பெயர் இடம்பெறாது. அப்படி இடம் பெற்றிருந்தால் வாக்குகள் எண்ணப்படாது என்று தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் டிரம்புக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகளை சுற்றி கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

    போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு விசாரணை குறித்த விளக்கத்தை அவர்கள் வெளியிடவில்லை.

    • 10 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தாக்குதலை நடத்தியுள்ளனர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்.
    • F-18 போர் விமானம் இந்த தடுப்பு நடவடிக்கையில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய டிரோன்கள், ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.

    செங்கடல் பகுதியில் சென்ற கப்பல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். இதையடுத்து அமெரிக்க ராணுவப் படைகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு ஏவுகணை, டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    10 மணி நேர கால இடைவெளியில் 12 டிரோன்கள், மூன்று கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் இரண்டு தரைவழி தாக்குதல் ஏவுகணைகளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

    • 46 சதவீதம் பேர், குடும்பங்களின் நிதி நிலைமை மோசமடைந்ததாக தெரிவித்தனர்
    • அனைத்தும் நன்றாக உள்ளது என ஜோ பைடன் பதிலளித்தார்

    அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    அமெரிக்க பொருளாதாரத்தை தற்போதைய அதிபர் ஜோ பைடன் சரிவர கையாளாததால் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன.

    இதன் காரணமாக கருத்து கணிப்புகளில் ஜோ பைடனுக்கு ஆதரவு குறைய தொடங்கியது. சுமார் 14 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே ஜோ பைடன் பொருளாதாரத்தை சரியாக கையாளுவதாக தெரிவித்தனர். மக்கள் தொகையில் சுமார் 46 சதவீத மக்கள் பைடனின் ஆட்சிமுறை அவர்கள் குடும்பங்களின் நிதி நிலைமையை மோசமடைய செய்ததாக தெரிவித்தனர்.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வெள்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க அதிபர் புறப்பட்ட போது அவரிடம் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து கேட்கப்பட்டது.

    "2024ல் நுழையவிருக்கும் அமெரிக்க பொருளாதாரம் எவ்வாறு உள்ளது?" என பைடனிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த பைடன், "அனைத்தும் நன்றாக உள்ளது. நீங்கள் நன்றாக பாருங்கள். செய்திகளை சரியான முறையில் வெளியிட தொடங்குங்கள்" என தெரிவித்தார்.

    சில மாதங்களாகவே அதிபர் ஜோ பைடன் ஊடகங்கள் தனது நிர்வாகத்தில் உள்ள எதிர்மறை செய்திகளில் கவனம் செலுத்தி நேர்மறை செய்திகளை இருட்டடிப்பு செய்வதாக குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • நான் தந்தையானதும் விடுமுறைகளை குறித்த பார்வை மாறியது என்றார் பில் கேட்ஸ்
    • வேலையை கடந்து ஒரு உலகம் உள்ளது என்றார் பில் கேட்ஸ்

    கணினிகளுக்கான ஆபரேடிங் சிஸ்டம் எனப்படும் "இயங்கு முறைமை" தயாரிப்பதில் முன்னணியில் உள்ள அமெரிக்க நிறுவனம், மைக்ரோசாஃப்ட் (Microsoft). இதன் நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates), உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவர்.

    தனது சிறு வயது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை மனம் திறந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் பில் கேட்ஸ்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எனது சிறு வயதில் வார இறுதி விடுமுறைகளை குறித்து எனக்கு பெரிய எண்ணம் இருந்ததில்லை. ஆனால், வயது அதிகரித்த போது அவற்றின் மகத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். குறிப்பாக, நானும் ஒரு தந்தையானதும் விடுமுறைகளை குறித்த எனது பார்வையில் மாற்றம் ஏற்பட்டது. எனது குழந்தைகளின் வளர்ச்சியை காணும் பொழுது வேலையை கடந்தும் ஒரு உலகம் உள்ளது என்பதை முழுவதுமாக உணர தொடங்கினேன். வரவிருக்கும் ஆண்டிலிருந்து விடுமுறை நாட்களை அனுபவிக்க துவங்குங்கள். வேலையை கடந்து வாழ்க்கையின் செழுமையை உணர்ந்து கொள்ள அது உதவும். அது அடுத்து வரும் காலங்களில் வரும் சவால்களை எதிர்கொள்ள மிகவும் பயனுடையதாக அமையும்.

    இவ்வாறு பில் பதிவிட்டுள்ளார்.

    சில மாதங்களுக்கு முன் இன்போசிஸ்-சின் (Infosys) நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தி (Narayana Murthy) இந்திய இளைஞர்கள், வார விடுமுறைகளை குறைத்து கொண்டு ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க தயாராக வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

    அவரது கருத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

    மத்திய, மாநில அரசுத்துறை அலுவலகங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை, 5 நாட்கள்(40 மணி நேரம்) மட்டுமே ஊழியர்களுக்கு வேலை நாட்கள். ஒரு சில தனியார் நிறுவனங்களில் மட்டுமே இதே நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

    பிற தனியார் நிறுவனங்களில் திங்கள் முதல் சனி வரை, 6 நாட்கள் (48 மணி நேரம்), ஊழியர்கள் பணி செய்ய வேண்டும். எனவே நாராயண மூர்த்தி தெரிவித்த "70-மணி-நேர வார வேலை நாட்கள்" என்பது வேலை-வாழ்க்கை சமநிலையை (work-life balance) நலிவடைய செய்யும் என்பதே பல உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

    இப்பின்னணியில், பில் கேட்ஸின் விடுமுறை செய்தியை சமூக வலைதளங்களில் ஒப்பிட்டு பயனர்கள் விமர்சிக்கின்றனர்.

    • பல "ஸ்டார்ட் அப்" நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டன
    • பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2022-ஐ விட 2023ல் அதிகம்

    2022 வருட பிற்பகுதியில் அமெரிக்காவில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பணியாளர்களை கூட்டம் கூட்டமாக பணிநீக்கம் செய்யும் "லே ஆஃப்" (layoff) நடைமுறை தொடங்கியது.

    இவ்வருடமும் அந்த நடைமுறை தொடர்வதுடன் பணிநீக்கங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

    கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட், யாஹு, மெடா மற்றும் ஜூம் உள்ளிட்ட பல மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி "ஸ்டார்ட் அப்" நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

    பல பணியாளர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு மாற்றி வரும் சூழல், குறைந்து வரும் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை, பணியாளர்களின் திறன் வளர்த்தல் குறைபாடு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை, ஆண்டுதோறும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு செலவினங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் லே ஆஃப் நடப்பதாக கூறப்பட்டு வருகிறது.

    பணியை இழந்தவர்களுக்கு வேறு இடங்களில் வேலை கிடைப்பது குதிரை கொம்பாகி வருகிறது.


    அமெரிக்காவில் ஹெச்1-பி விசா முறையில் பணிக்காக சென்றவர்கள் பணியில்லாமல் சில மாதங்களே வசிக்க முடியும். வேறு வேலை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும். இச்சூழலில் வேலை இழந்தவர்கள் மாற்று வேலையை தேடி வருகிறார்கள்.

    கடந்த டிசம்பர் 21 வரை 2,24,503 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த 2022 ஆண்டு எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க பொருளாதார மந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டும் இது தொடரலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • எக்ஸ் தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் எலான் மஸ்க்.
    • பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார்.

    எக்ஸ் தளத்தில் இதுபோன்று பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் எலான் மஸ்க்.

    இந்நிலையில், எலான் மஸ்க், "எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எலான் மஸ்க் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:-

    எக்ஸ் செயலி மூலம் பிறருக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

    இறுதி ஒப்புதல் வந்த பிறகு அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தற்கொலை சம்பவங்களில் நிகழ்ந்தவை
    • மாஸ் ஷூட்டிங் நிகழ்வுகள் 632க்கும் மேல் நடந்துள்ளன

    இவ்வருட தொடக்கம் முதல் கடந்த டிசம்பர் 7 வரை அமெரிக்காவில் 40,167 பேர் துப்பாக்கி சூட்டில் நிகழும் வன்முறையால் உயிரிழந்துள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 118 பேர் எனும் விகிதத்தில் உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவர்களில் 1306 பேர் பதின் வயதுக்காரர்கள்; 276 பேர் குழந்தைகள்.

    இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தற்கொலைகளால் (22,506) நிகழ்ந்தவை.

    டெக்ஸாஸ், கலிபோர்னியா, ஃப்ளோரிடா, ஜியார்ஜியா, வடக்கு கரோலினா, இல்லினாய்ஸ் மற்றும் லூசியானா மாநிலங்களில்தான் இவை அதிகம் நடந்துள்ளன. பணியின் போது உயிரிழந்த 46 காவலர்களும் இப்பட்டியலில் அடங்குவர்.

    "மாஸ் ஷூட்டிங்" எனப்படும் 4 அல்லது அதற்கு மேற்பட்டோர் சுடப்படும் நிகழ்வுகள் 632க்கும் மேல் நடந்துள்ளன.

    ஆண்டுதோறும் நிகழும் துப்பாக்கி கலாச்சார உயிரிழப்புகள், முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து கொண்டே செல்வதால் இதை தடுக்க அமெரிக்க அரசு முனைய வேண்டும் என உளவியல் வல்லுனர்களும், காவல் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் கருத்து தெரிவித்தனர்.

    • கார் ரேஸ்களை மையமாக கொண்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் வின் டீசல்
    • தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் என்னை பணிநீககம் செய்தனர் என்றார் அஸ்டா

    கார் பந்தயங்களை மையக்கருவாக வைத்து 2001ல் வெளியான ஹாலிவுட் திரைப்படம், தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ் (The Fast and the Furious). இத்திரைப்படம் உலகெங்கும் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் பல பாகங்கள் தொடர்ந்து வெளிவந்தன.

    இத்திரைப்படத்தில் இணை கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றவர், வின் டீசல் (Vin Diesel). இவர் ஒன் ரேஸ் புரொடக்ஷன்ஸ் (One Race Productions) எனும் பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

    வின்னின் அலுவலகத்தில் பணி புரிந்தவர் அஸ்டா ஜொனாஸ்ஸன் (Asta Jonasson) எனும் பெண்.

    வின் டீசல் மீது அஸ்டா பாலியல் குற்றம் சாட்டி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தனது புகாரில் அஸ்டா தெரிவித்திருப்பதாவது:

    ஒன் ரேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் போது, அட்லான்டா மாநிலத்தில் ஒரு நட்சத்திர ஓட்டல் அறையில் வின் டீசல் என்னிடம் முறையற்று நடக்க முயன்றார். நான் மறுத்து சம்மதம் தெரிவிக்காத போதிலும் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். அங்குள்ள ஒரு குளியலறையை நோக்கி நான் பயந்து, அலறி கொண்டே ஓடினேன். ஆனால் வின் டீசல் என்னை விடாமல் பலவந்தமாக பாலியல் ரீதியாக தாக்கினார். அது மட்டுமில்லாமல் என் முன்னிலையில் ஆபாசமாக நடந்து கொண்டார். தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் என்னை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    9 நாட்களே வேலையில் இருந்த ஒரு பணியாளர் 13 வருடங்களுக்கு முன் நடந்ததாக கூறும் இந்த புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என வின் டீசல் தெரிவிப்பதாக அவரது வழக்கறிஞர் ப்ரையன் ஃப்ரீட்மேன் தெரிவித்துள்ளார்.

    • 20 இந்திய பணியாளர்களுடன் சென்ற இஸ்ரேலுக்குச் சொந்தமான வணிக கப்பலை திடீரென டிரோன் தாக்கியது.
    • இந்த டிரோன் ஈரானில் இருந்து ஏவப்பட்டது என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.

    வாஷிங்டன்:

    சவுதி அரேபியாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் மங்களூரு நோக்கி லைபீரியா நாட்டு கொடியுடன் எம்.வி. செம் புளூட்டோ என்ற சரக்கு கப்பல் வந்து கொண்டிருந்தது. இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய இந்திய பெருங்கடல் பகுதியில் குஜராத் வெராவத் நகரில் இருந்து சுமார் 200 மைல் தூரத்தில் வந்து கொண்டிருந்த போது அந்தக் கப்பல் மீது திடீரென டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதனால் கப்பலில் தீப்பற்றியது. உடனடியாக அந்த தீ அணைக்கப்பட்டது. இதில் கப்பலின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. டிரோன் தாக்குதலின் போது கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்துக் கொண்டதாக தகவல் வெளியானது. பின்னர் தான் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது.

    அந்த சரக்கு கப்பலில் 21 இந்திய பணியாளர்கள் மற்றும் ஒரு நேபாளி ஆகியோர் இருந்தனர்.அரபிக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நடந்த இந்த தாக்குதல் இந்தியாவை குறிவைத்து நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில், ஏமனில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த டிரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    காசா விவகாரத்தில் ஈரான் அளித்து வரும் ஆதரவினால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி வரும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பாட்டில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று ஈரான் கூறி வந்தாலும் கள நிலவரம் இதுவாகவே உள்ளது. இந்திய பணியாளர்களுடன் வந்த சரக்கு எண்ணெய் கப்பலை தாக்கிய டிரோன் ஈரானில் இருந்து தான் ஏவப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    செங்கடலுக்கு அப்பால் வணிக கப்பல் போக்குவரத்துக்கு விரிவடைவதை விரும்பாமல் ஈரான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருந்து வருகிறார்கள்.

    செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கிச் செல்லும் கப்பல்களை தாக்குவோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து தொடர்ந்து நடுக்கடலில் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அந்தக் கடற்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல்மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்த கப்பலை மீட்க இந்திய கடலோர படைக்குச் சொந்தமான விக்ரம் கப்பல் அங்கு விரைந்துள்ளது. கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்டு நாளை மும்பை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ×