என் மலர்tooltip icon

    உலகம்

    • சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • அதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    ரோம்:

    மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் புலம்பெயர்ந்து அமெரிக்காவிற்குள் செல்கின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அமெரிக்க அரசு அனுப்பி வருகிறது.

    இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, போப் பிரான்சிஸ் அமெரிக்க பாதிரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த நடவடிக்கை புலம்பெயர்ந்தோரின் கண்ணியத்தை பாதிக்கிறது. இது மோசமாக முடிவடையும் என தெரிவித்துள்ளார்.

    போர், வறுமை மற்றும் காலநிலை பேரழிவுகளில் இருந்து தப்பிச் செல்பவர்களை பிற நாடுகள் வரவேற்று, பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் போப் ஆண்டவர், அரசாங்கங்கள் தங்கள் திறன் வரம்பிற்கு ஏற்றவாறு இதனை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • பொதுமக்கள், பாதுகாப்புப் படை மீது பயங்கரவாத குழு தாக்குதல் நடத்தி வருகிறது.
    • கிராமங்களில் உள்ள வீடுகளை பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்துச் சென்றனர்.

    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

    பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கோவின் தென்கிழக்கில் உள்ள இடுரி மாகாணத்தின் பஹிமா பட்ஜிரா பகுதியில் உள்ள கிராமங்களில் பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.

    கிராமங்களில் உள்ள வீடுகளை பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்துச் சென்றனர். இந்தத் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • பிறக்கும்போதே மிகவும் உயராக இருந்துள்ளது.
    • எருமைக்கு உரிமையாளர் கிங் காங் எனப் பெயரிட்டுள்ளார்.

    தாய்லாந்தில் 3 வயதில் 6 அடி, 8 அங்குலம் உயரம் கொண்ட நீர் எருமை, உலகிலேயே மிகவும் உயரமான நீர் எருமை என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது.

    நஹோன் ராட்சசிமா என்ற இடத்தில் உள்ள நின்லானீ பண்ணையில் இந்த நீர் யானையை வளர்ந்து வருகிறது. வழக்கமாக 3 வயதில் ஒரு நீர் எருமையின் உயரத்தை வட 20 அங்குலம் உயரமகா இந்த எருமை உள்ளது.

    கொரில்லா குரங்கு படத்தின் ஈர்ப்பு காரணமாக எருமைக்கு உரிமையாளர் கிங் காங் எனப் பெயரிட்டுள்ளார்.

    இயற்கையில் ராட்சத விலங்குகள் மிகவும் ஆக்ரோசமாக இருக்கும். ஆனால். இந்த எருமை மிகவும் சாதுவாக, வளர்ப்பவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

    பண்ணையில் வேலை பார்க்கும் செர்பாட் வுட்டி கிங் காங் குறித்து கூறுகையில் "கிங் காங் பிறக்கும்போது மற்ற கன்றுகளை விட மிகவும் உயரமாக இருந்ததை உணர்ந்தோம். இதனால் இதன் உயரம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பது முன்னதாக தெரிந்தது. தற்போது அதற்கு 3 வயதுதான் ஆகிறர்து. இளம் வயதாக இருந்தாலும், மிகப்பெரிய ராட்சத எருமையாக திகழ்கிறது" என்றார்.

    • பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • தலைநகர் பாரிசில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் அவர் பங்கேற்று பேசினார்.

    பாரிஸ்:

    பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பாரிசில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வருங்காலத்தில் எல்லாருக்கும் நன்மை பயக்கும் என்பதை உறுதி செய்வதற்கான அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

    பொதுநலனைக் கருத்தில் கொண்ட செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

    மனித குலத்தின் வரலாற்றில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை காட்டிலும், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வரும் முன்னேற்றங்கள் மிகவும் வித்தியாசமானவை.

    உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் அது பயன்பாட்டுக்கு வரும்போது, அதனால் ஏற்படக்கூடிய குறைபாடுகளை, பிரச்சனைகளை சரிசெய்ய நாம் ஒன்றிணைய வேண்டியது அவசியம். அதற்கு இந்த மாநாடு பயன் தரும் என நம்புகிறேன்.

    ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஜனநாயகப்படுத்த வேண்டும். இணைய பாதுகாப்பு, தவறான தகவல் பரப்புதல் மற்றும் டீப் பேக் தொடர்பான கவலைகளை தீர்க்க வேண்டும்.

    நிலையான செயற்கை நுண்ணறிவுக்கான கவுன்சிலில் ஏ.ஐ. அறக்கட்டளை அமைக்கும் முடிவை நான் வரவேற்கிறேன். அடுத்த ஏ.ஐ. உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதில் பெருமை கொள்கிறது என தெரிவித்தார்.

    • இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
    • 25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகம் கிடைக்கும்.

    அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணையதள வசதியை வழங்கி வருகிறது.

    பல்வேறு நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்டுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்பதில் ஸ்பேஸ் எக்ஸ் தாமதிப்பதால் ஸ்டார்லிங்க் சேவைகான ஒப்புதலில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அண்டை நாடான பூடானில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகத்தையும், 5 Mbps முதல் 10 Mbps வரை பதிவேற்ற வேகத்தையும் வழங்கும் அன்லிமிடெட் டேட்டாவை உள்ளடக்கிய மாதாந்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்து.

    இதற்கான கட்டணமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4,167 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

    • செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் நமது சமூகத்தை மறுவடிவமைத்து வருகிறது.
    • சைபர் பாதுகாப்பு, தவறான தகவல்கள் மற்றும் டீப்பேக்ஸ் குறித்து நாம் கவனிக்க வேண்டும்.

    செயற்கை நுண்ணறிவு மாநாடு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

    இன்று மதியம் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் நமது சமூகத்தை மறுவடிவமைத்து வருகிறது. இந்த நூற்றாண்டில் மனித குலத்திற்கான Code-ஐ AI எழுதுகிறது.

    * ஒரு எளிய உதாரணத்துடன் ஆரம்பிக்கிறேன். உங்கள் மருத்துவ அறிக்கையை ஒரு AI செயலியில் பதிவேற்றினால், அது உங்கள் ஆரோக்கியம் தொடர்பான அனைத்து தகவலையும் எளிய மொழியில் விளக்க முடியும்.

    * AI முன்னெப்போதும் இல்லாத அளவு மற்றும் வேகத்தில் வளர்ந்து வருகிறது. மேலும் மாற்றியமைக்கப்பட்டு இன்னும் வேகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    * நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் open source systems-ஐ நாம் உருவாக்க வேண்டும். ஒரு தரப்பு என்று இல்லாமல் தரமான தரவு மையங்களை உருவாக்க வேண்டும்.

    * சைபர் பாதுகாப்பு, தவறான தகவல்கள் மற்றும் டீப்பேக்ஸ் குறித்து நாம் கவனிக்க வேண்டும்.

    * வேலை இழப்பு ஏ.ஐ-யின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என பார்க்கப்படுகிறது. ஆனால் தொழில்நுட்பத்தால் வேலை மறைந்து போவதில்லை. அதன் தன்மை மாறுகிறது என்பதை நமது வரலாறு காட்டியுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தறிக்கு ஏற்றவாறு நமது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    * சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் பலவற்றை மேம்படுத்துவதன் மூலம் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற AI உதவும்.

    * நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான பயணத்தை எளிதாகவும் வேகமாகவும் மாறும் ஒரு உலகத்தை உருவாக்க இது உதவும். இதைச் செய்ய, நாம் வளங்களையும் திறமைகளையும் ஒன்றிணைக்க வேண்டும். 

    • சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
    • ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.

    ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலக பணக்காரருமாக எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிதாக அமைந்த டிரம்ப் அரசின் கீழ் அரசு செயல்திறன் துறை [DODGE] தலைவராக உள்ளார்.

    அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. பிந்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் யுஸ் - எய்ட் அமைப்பின் நிதியை DODGE ஆலோசனையின் பேரில் டிரம்ப் நிறுத்தினார்.

    இதற்கிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடாகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி மஸ்க் நடத்திக்கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது எலான் மஸ்கின் கண்கள் விழுந்துள்ளது.  சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

    இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். 2015 இல் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.

    ஆனால் 2018 கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழுவினர், ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

     

    ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு நேற்று அந்நிறுவனத்திடம் ப்ரொபோஸ் செய்துள்ளது.

    ஆனால் இதற்கு சாம் ஆல்ட்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சாம் ஆல்ட்மேன், "வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார். 

     

    • பாலஸ்தீனியர்களுக்குத் காசாவுக்குள் திரும்பிச் செல்லும் உரிமை இல்லை
    • எதிர்காலத்திற்கான சிறந்த ரியல் எஸ்டேட் தளம் என்று காசாவை அவர் வர்ணித்தார்.

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19 இல் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    இந்நிலையில் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்கவில்லை என்றால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    ஏற்க்கனவே காசாவை வாங்கி அமெரிக்காவுக்கு சொந்தமாக்குவேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். காசா அமெரிக்கா கட்டுப்பாட்டில் வந்த பிறகு அங்கிருக்கும் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்குத் காசாவுக்குள் திரும்பிச் செல்லும் உரிமை இல்லை என்றும் டிரம்ப் பரபரப்பை கிளப்பினார். எதிர்காலத்திற்கான சிறந்த ரியல் எஸ்டேட் தளம் என்று காசாவை அவர் வர்ணித்தார்.

    சனிகிழமைக்குள் அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் போர்நிறுத்தத்தை ரத்து செய்ய நேரிடும் என்று தெரிவித்தார். இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்றும் அதனால் அடுத்த கட்ட பயண கைதிகள் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் ஹமாஸ் அறிவித்ததை அடுத்து டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

    டிரம்ப் பேசியதாவது, என்னைப் பொறுத்தவரை, சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் அனைத்து பணயக்கைதிகளும் திருப்பி அனுப்பப்படாவிட்டால் போர் நிறுத்தத்தை ரத்து ரத்து செய்யச் சொல்வேன். சிறிது சிறிதாக அல்ல, இரண்டு, மூன்று என்று அல்ல, மொத்தமாக அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். இல்லையெனில் எல்லாம் கைமீறி போகும். நான் என்ன சொல்கிறேன் என்பதை ஹமாஸ் பிறகு தெரிந்துகொள்ளும் என்று கூறினார்.

    அமெரிக்கா காசாவை கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நட்பு நாடுகளான ஜோர்டான் மற்றும் எகிப்துக்கு பில்லியன் கணக்கான டாலர் அமெரிக்க நிதியுதவியை நிறுத்துவதாகவும் டிரம்ப் அச்சறுத்தியுள்ளார்.

    • லஞ்சம் கொடுத்து 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
    • பிரதமர் மோடி நாளை மறுநாள் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ளார்.

    அமெரிக்காவில்  ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. 

    மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள்  நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் அதானிக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

    FCPA என்பது வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் எனப்படுகிறது. இந்த சட்டம் அமெரிக்க நிறுவனங்களுக்கே பாதகமாக இருப்பதாக கூறியுள்ள டிரம்ப், புதிய சட்டத்தை உருவாக்க அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    தற்போது பிரான்சில் இருக்கும் பிரதமர் மோடி நாளை மறுநாள் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ள நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மற்ற நாடுகளில் வணிகத்தைப் பெறுவதற்காக வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான பல வழக்குகளும் இந்த FCPA சட்டத்தின்கீழ் பதிவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

    • சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.
    • 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லண்டன்:

    அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் 104 இந்தியர்கள் ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    இந்த நிலையில் அமெரிக்காவை போல இங்கிலாந்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள அகதிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் இங்கி லாந்தில் உள்ள இந்திய ஓட்டல்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தியர்கள் நடத்தும் உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்க ளில் சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள இந்தி யர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

    ஹம்பர்சைட் பகுதியில் உள்ள இந்திய உணவகத்தில் நடந்த சோதனையில் 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இது தொடர்பாக உள் துறை செயலாளர் யுவெட்டே கூப்பர் கூறும் போது, கடந்த ஜனவரி மாதம் 828 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 609 பேர் கைது செய்யப்பட்டனர். உணவகங்கள், கபேக்கள், புகையிலை தொழிற்சாலை உள்ள இடங்களில்தான் சட்ட விரோதமாக தங்கி உள்ளவர்களின் செயல்பாடுகள் அதிகமாக உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை முதல், இந்தாண்டு ஜனவரி இறுதி வரை சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான சோதனைகள் அதிகரித்துள்ளது என்றார்.

    இந்த நிலையில் சுமார் 19 ஆயிரம் வெளிநாட்டு குற்றவாளிகள் மற்றும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படும் வீடியோவை இங்கிலாந்து அரசு முதன் முறையாக வெளியிட்டுள்ளது.

    • பாலஸ்தீன மக்களை வெளியேற்றி காசாவை ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்குவோம் என்று டிரம்ப் பேசுகிறார்.
    • போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியானது பாலஸ்தீன மக்களுக்காக மீண்டும் கட்டப்பட வேண்டும்

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    இந்நிலையில் காசாவை அமெரிக்கா வாங்க உள்ளதாக டிரம்ப் தெரித்துள்ளார். இது தொடர்பாக பேசிய டிரம்ப், "காசாவை வாங்குவதற்கும் சொந்தமாக்குவதற்கும் நான் உறுதிபூண்டுள்ளேன். அதை ஒரு ரியல் எஸ்டேட் தளம் என்று எண்ணிக்கொள்ளுங்கள். எனவே அதை மாற்றியமைக்க வேண்டும். ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் .

    அவர்கள் [காசா மக்கள்] காசாவுக்குத் திரும்ப விரும்பவில்லை. அவர்கள் காசாவுக்குத் திரும்புவதற்கு ஒரே காரணம் அவர்களிடம் மாற்று வழி இல்லை என்பதுதான். அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீட்டைக் கொடுக்க முடிந்தால் அவர்கள் திரும்ப விரும்பமாட்டார்கள்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில், காசாவை ரியல் எஸ்டேட் தளம் ஆக்குவோம் என்று டிரம்ப் அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "47000-த்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 111,000 பாலஸ்தீன மக்கள் காயமடைந்துள்ளனர். வலுக்கட்டாயமாக பாலஸ்தீன மக்களை வெளியேற்றி காசாவை ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்குவோம் என்று டிரம்ப் பேசுகிறார்.

    போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியானது பாலஸ்தீன மக்களுக்காக மீண்டும் கட்டப்பட வேண்டும் மாறாக 'கோடீஸ்வர சுற்றுலாப் பயணிகளுக்காக' அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

    • ஆன்லைன் மூலம் கடந்த சனிக்கிழமை ஏலம் நடைபெற்று உள்ளது.
    • ஏலம் நடத்தும் டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் உடைமைகளுடன் இப்புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார்.

    இங்கிலாந்து:

    1997ஆம் ஆண்டு ஜே.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்' புத்தகம் வெளியானது. இந்த புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எழுதினார் ரவுலிங். இதனையடுத்து ஹாரி பாட்டர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

    இந்த நிலையில், குப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஹாரி பாட்டர் நாவலின் முதல் பதிப்பு புத்தகம் சுமார் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது. ஆன்லைன் மூலம் கடந்த சனிக்கிழமை ஏலம் நடைபெற்று உள்ளது.

    ஏலம் நடத்தும் டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் உடைமைகளுடன் இப்புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார்.

    500 புத்தகங்களே அச்சிடப்பட்டது என்றும் பொது நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட 300 பிரதிகளில் ஒன்று இது என்றும் கூறப்படுகிறது. 

    ×