என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- தொழிலதிபர் விவேக் ராமசாமியை பிரதமர் மோடி சந்தித்தார்.
- அதிபர் டிரம்புடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்தியாவில் இருந்து இரண்டு நாடுகள் பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். கடந்த புதன்கிழமை பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ சந்தித்தார். முன்னதாக உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.
அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிபர் டொனால்டு டிரம்புடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
அப்போது, பல முக்கியமான துறைகளில் தங்கள் மூலோபாய உறவுகளை விரிவுபடுத்துவதில் இந்தியாவும் அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன. இரு தரப்பினரும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவிவில், அதிபர் டிரம்புடன் "சிறந்த" சந்திப்பை நடத்தியதாகவும், அவர்களின் பேச்சுவார்த்தை "இந்திய-அமெரிக்க நட்புறவுக்கு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை சேர்க்கும்" என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
"அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி MAGA பற்றிப் பேசுகிறார். இந்தியாவில், நாங்கள் ஒரு விக்சித் பாரதத்தை நோக்கிச் செயல்படுகிறோம். இது அமெரிக்க சூழலில் MIGA என மொழி பெயர்க்கப்படுகிறது. மேலும், இந்தியா-அமெரிக்கா ஒன்றாக செழிப்புக்காக ஒரு MEGA கூட்டாண்மையைக் கொண்டுள்ளன!" என்று மோடி எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
மோடியுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இராணுவ விநியோகங்களை அதிகரிக்கும் நோக்கில், வாஷிங்டன் புது தில்லிக்கு F-35 போர் விமானங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
- 'பெஹெச்சான்' நடவடிக்கையின் கீழ் 8 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 10 நாட்களுக்கு முன்பு கிஷன்கஞ்ச் வழியாக வந்து நொய்டா வந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 8 வங்கதேச புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக டிசிபி ராம் பதன் சிங் கூறுகையில், 'பெஹெச்சான்' நடவடிக்கையின் கீழ் 8 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போலி ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 10 நாட்களுக்கு முன்பு கிஷன்கஞ்ச் வழியாக நொய்டா வந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அடையாள அட்டைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து ஏஜென்சிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
- செங்கல்பட்டு காவல் நிலையத்தில் இருந்தும் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
- பெரியார் குறித்த சீமானின் பேச்சிற்காக தமிழக முழுவதும் 72 இடங்களில் புகார் அளிக்கப்பட்டது.
பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில், திராவிடர் கழக கடலூர் மாவட்டச் செயலாளர் தண்டபாணி புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் 192, 353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு (குற்ற எண் 8/2025) செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நெய்வேலி டவுன் ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் கடந்த 10-ந்தேதி நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு சென்று பிப்ரவரி 14-ந்தேதி காவல்நிலையத்தில் நேரில் ஆஜராவது தொடர்பான சம்மனை கொடுத்தார். வடலூர் காவல் நிலைய சம்மனை தொடர்ந்து செங்கல்பட்டு காவல் நிலையத்தில் இருந்தும் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராவது தொடர்பாக சீமான் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்த நிலையில், வடலூர் காவல் நிலையத்தில் சீமான் இன்று ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. பெரியார் குறித்த சீமானின் பேச்சிற்காக தமிழக முழுவதும் 72 இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. அனைத்து புகார்களையும் ஒன்றாக விசாரிக்க வேண்டி நீதிமன்றத்தை அணுக சீமான் முடிவு செய்யதுள்ளார்.
72 புகார்களுக்கும் நேரில் ஆஜராவதை தவிர்க்க நீதிமன்றத்தை அணுகவும், நீதிமன்றத்தில் அளிக்கப்படும் தீர்ப்பை பொறுத்து ஆஜராக சீமான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- இனிமேல் ராணுவத்தில் உள்ளவர்கள் திருமணமே செய்யக் கூடாது என மன்னர் உத்தரவிட்டார்.
- அடித்தே கொலை செய்ய வேண்டும் என்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை.
காதலர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி கொண்டாடுகிறோம். இந்த நாளை 'வேலன்டைன்ஸ் டே' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றோம். இந்த பெயருக்கு பின்னால் ஒரு மனிதர் இருக்கிறார், அவரது உயிர்த் தியாகம் இருக்கிறது. அவர் யார்?, அவரது தியாகம் எப்படிப்பட்டது என்பதை இத்தொகுப்பில் அறிந்து கொள்வோம்.
ரோம் நகரை இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருடைய ராணுவ வீரர்கள் பலர் திருமணம் செய்ய தொடங்கியதால் குழந்தைகள் மீதும், மனைவி மீதும் அதிக அன்பு செலுத்தி வந்தனர். இதனால் ராணுவப் பணியில் அவர்களது கவனம் குறையத் தொடங்கியது.

இதை அறிந்த மன்னர், இனிமேல் ராணுவத்தில் உள்ளவர்கள் திருமணமே செய்யக் கூடாது என உத்தரவிட்டார். இதனால் பலரும் அச்சப்பட்டனர். அந்த காலத்தில் தான் வேலன்டைன் எனும் பாதிரியார் வாழ்ந்து வந்தார். அவர் மன்னருக்கு தெரியாமல் காதலர்கள் பலருக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இந்த செய்தியை அறிந்த மன்னர் அவரை சிறையில் அடைத்து மரணதண்டனை கொடுத்தார். அடித்தே கொலை செய்ய வேண்டும் என்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை.
ஆனால் அதற்கு பதிலாக அவரது தலையை வெட்டி கொலை செய்தனர். அவர் கொலை செய்யப்பட்ட நாள்தான் பிப்ரவரி 14. அதனால்தான் இந்த நாள் வேலன்டைன்ஸ் டே என அழைக்கப்பட்டது. இவ்வாறு மகிழ்ச்சியாய் கொண்டாடும் காதலர் தினத்துக்குள் ஒரு மனிதரின் உயிர்த் தியாகம் மறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் இதே கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
- 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளை நியமித்த விஜய், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதுதவிர த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து 2 நாட்களாக பல்வேறு ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கட்சி பணிகளில் மும்முரம் காட்டி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர் என்றும் இந்த 'Y' பிரிவு பாதுகாப்பானது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
- அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. பிரதான சாலை நுழைவுவாயிலில் வி.வி.ஐ.பி. பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
- அண்ணாசாலையில் மதியம் 2 மணி முதல் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
சென்னை:
பிரபல இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மதியம் 3 மணி முதல் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியையொட்டி, போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் செனடாப் சாலை, காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் சாலை, லோட்டஸ் காலனி 2-வது தெரு (நந்தனம் எக்ஸ்டன்ஷன்) வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம்.
சைதாப்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுபுறம் வழியாக சென்று சேமியர்ஸ் சாலையில் யு டர்ன் எடுத்து, லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம்.
அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. பிரதான சாலை நுழைவுவாயிலில் வி.வி.ஐ.பி. பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
அதேபோல நிகழ்ச்சிக்கு வரும் கலைஞர்களின் வாகனங்கள் காஸ்மோபாலிட்டன் கிளப் சாலை நுழைவுவாயில் வழியாக அனுமதிக்கப்படும்.
அண்ணாசாலையில் மதியம் 2 மணி முதல் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. நிகழ்ச்சிக்கு வருவோர் மெட்ரோ ரெயில், மாநகர பஸ்கள் மற்றும் மின்சார ரெயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அதிபர் டிரம்ப் முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார்.
- அதிபர் டிரம்ப் தனித்தனியாக பேசியிருந்தார்.
அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேசினார். அப்போது, ரஷியா உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இருக்கவில்லை என்று உறுதியாக தெரிவித்தார். மேலும், இந்தியா அமைதியின் பக்கம் நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் அதிபர் டிரம்ப் முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார்.
இது குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது. இது போரின் சகாப்தம் அல்ல என்று நான் ஏற்கனவே அதிபர் விளாடிமிர் புதினிடம் கூறியுள்ளேன். அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன்" என்று கூறினார்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் அதிபர் டிரம்ப் தனித்தனியாக தொலைபேசியில் பேசியிருந்தார். இதன் பிறகு பிரதமர் மோடி இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதில் இருந்து, 2022 உக்ரைன் படையெடுப்பு குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் உரையாடியதாக அமெரிக்க அதிபர் கூறினார். மேலும் அமைதி பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் "ஒரு பகுதியாக" இருக்கும் என்றும், ரஷிய அதிபர் புதின் "சமாதானத்தை விரும்புகிறார்" என்று தான் உறுதியாக நம்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவும் இது "போரின் சகாப்தம் அல்ல, உரையாடல் மற்றும் ராஜதந்திரத்தின்" சகாப்தம் என்று வலியுறுத்தி வருகின்றனர். உக்ரைன் மோதல் தொடங்கியதில் இருந்து, பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனும் பலமுறை பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு இரு தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.
- திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-2 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை இரவு 10.21 மணி வரை. பிறகு திருதியை
நட்சத்திரம்: பூரம் இரவு 11.41 மணி வரை. பிறகு உத்திரம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம். மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர். படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆரோக்கியம்
ரிஷபம்-சிறப்பு
மிதுனம்-கண்ணியம்
கடகம்-சுகம்
சிம்மம்-செலவு
கன்னி-நன்மை
துலாம்- ஆசை
விருச்சிகம்-ஊக்கம்
தனுசு- பயிற்சி
மகரம்-வெற்றி
கும்பம்-நிம்மதி
மீனம்-யோகம்
- எனது நிர்வாகம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
- அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டார்.
மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் (26/11) ஈடுபட்டு, இந்தியாவில் தேடப்படும் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த தனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டவரான ராணா தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 26/11 தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் தொடர்புடையவர் என்று அறியப்படுகிறது.
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இது குறித்து பேசிய அவர், "மும்பை கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக செயல்பட்டவனும், உலகின் மிகவும் மோசமான நபரை இந்தியாவில் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள நாடு கடத்துவதற்கு எனது நிர்வாகம் ஒப்புதல் அளித்து இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் அவர் இந்தியாவுக்கு சென்று நீதியை எதிர்கொள்ள இருக்கிறார்," என தெரிவித்தார்.
- பிரதமர் மோடியை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
- மோடி மிக சிறப்பாக செயல்படுகிறார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.
வாஷிங்டன்:
பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி அதிபர் டிரம்பை இன்று சந்தித்துப் பேசினார்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது.
இந்நிலையில், இந்தச் சந்திப்பின் போது அதிபர் டிரம்ப் பேசியதாவது:
இந்தியாவுக்காக மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்ய இருக்கிறது. அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அவர்கள் (இந்தியா) கொள்முதல் செய்ய இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர். மிகச்சிறப்பாக செயல்படுகிறார். இந்தியாவுடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும்.
பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வர்த்தகம் தொடர்பாக நாங்கள் பேச இருக்கிறோம். பல விஷயங்கள் பற்றி பேச இருக்கிறோம் என தெரிவித்தார்.
- உங்களை மீண்டும் வெள்ளை மாளிகையில் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
- 140 கோடி இந்திய மக்களின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன் என்றார்.
வாஷிங்டன்:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். அப்போது வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.
இந்நிலையில், அதிபர் டிரம்பை சந்தித்தபோது பிரதமர் மோடி கூறியதாவது:
நான் இந்த அறைக்குள் நுழைந்தவுடனே அகமதாபாத் மற்றும் கிரிக்கெட் ஸ்டேடியம், நாங்கள் பெரிய பேரணி நடத்தியதும், அகமதாபாத்தில் நமஸ்தே ட்ரம்ப், ஹவுடி மோடி ஹூஸ்டனில் செய்த நிகழ்வுகளும் நினைவுக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
உங்களை மீண்டும் வெள்ளை மாளிகையில் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 140 கோடி இந்திய மக்களின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன்.
இந்திய மக்கள் எனக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க வாய்ப்பளித்துள்ளனர். நமது இரு நாடுகளின் முன்னேற்றம் மற்றும் செழுமையை நோக்கி நாம் ஒன்றாகப் பயணிப்போம்.
எங்கள் உறவை இன்னும் விரிவானதாக ஆக்குவதற்கும், எங்கள் உறவில் மேலும் உயரங்களை அடைவதற்கும் இந்தியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதில் மகத்தான பங்களிப்பைச் செய்தீர்கள்.
அதிபர் டிரம்ப் எப்போதும் அமெரிக்காவின் தேசிய நலனை உச்சமாக வைத்திருப்பதை பாராட்டுகிறேன். அதிபர் டிரம்பை போலவே இந்தியாவின் நலன்களை உயர்வாக வைத்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.
உங்கள் இரண்டாவது பதவிக்காலத்தில் நாங்கள் இன்னும் அதிக வேகத்துடன் வேலை செய்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
எனது மூன்றாவது பதவிக்காலத்தில் மூன்று முறை வேகத்துடன் செயல்படுவோம் என இந்திய மக்களுக்கு நான் உறுதியளித்தது போல், அடுத்த 4 ஆண்டுகளில், அதிபர் டிரம்ப்புடன், அவரது இரண்டாவது பதவிக்காலத்தில், அவரது முதல் பதவிக்காலத்தை விட இரு மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.






