என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என தகவல்.
    • இரணிய தீவு அருகே தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அடிக்கடி தமிழக மீனவர்கள் இவ்வாறு சிறைபிடிக்கப்படும் நிலையில், தற்போது 32 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இரணிய தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்துள்ளது.

    சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். நீதிமன்ற விசாரணைக்கு பின் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

    ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
    • போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

    காசா முனை:

    இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.

    இதற்கிடையே, போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் அமைப்பினர் நேற்று விடுதலை செய்தனர்.

    இந்நிலையில், பிணைக்கைதிகளில் ஒருவரான ஒமர் ஷேம் என்பவர் தங்களை அழைத்து வந்த ஹமாஸ் அமைப்பினரில் இரண்டு பேரை நெற்றியில் முத்தமிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ரஷிய வீரரான ரூப்லெவ் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரிட்டனின் ஜாக் டிராபர் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 7-5 என ரூப்லெவ் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை பிரிட்டன் வீரர் 7-5 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ரூப்லெவ் 6-1 என வென்று சாம்பியன் பட்ட்டம் கைப்பற்றி அசத்தினார்.

    • ஆஸ்திரேலியா அணி 47.3 ஓவரில் 356 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • அதிரடியாக ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 351 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட் சதமடித்து 165 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 47.3 ஓவரில் 356 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோஷ் இங்கிலிஸ் 120 ரன்னும், மேக்ஸ்வெல் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.

    ஏற்கனவே, கடந்த 2017-ம் ஆண்டில் இந்திய அணி நிர்ணயித்த (321/6) இலக்கை இலங்கை அணி (322/3) ரன் எடுத்து வெற்றிபெற்று இருந்தது.

    ஐ.சி.சி., ஒருநாள் தொடரில் (உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) இது சிறந்த சேஸ் ஆனது.

    இதேபோல், இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் சிறந்த சேஸ் ஆகவும் இது அமைந்தது. சிட்னியில் 2011-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா 334/8 ரன் எடுத்து வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • போப் பிரான்சிஸ் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது என வாடிகன் தெரிவித்தது.
    • இந்த அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    ரோம்:

    கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி கத்தோலிக்கர்களை வாடிகன் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    வாடிகன் நிர்வாகம் வெளியிட்ட இந்த அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • பாகிஸ்தான் சிறையிலிருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
    • அவர்கள் நேற்று அடாரி-வாகா எல்லையை அடைந்தனர் என தகவல் வெளியானது.

    இஸ்லமாபாத்:

    இந்திய கடல் எல்லையை தாண்டி சட்டவிரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, கடந்த மாதம் 1-ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கைதிகளின் பட்டியல்களின்படி பாகிஸ்தானில் மொத்தம் 266 இந்திய கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் 49 சிவில் கைதிகள் மற்றும் 217 மீனவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் தண்டனை காலம் முடிந்த 22 இந்திய மீனவர்களை நேற்று கராச்சி மாலிர் சிறையில் இருந்து அதிகாரிகள் விடுவித்தனர். அவர்கள் அடாரி-வாகா எல்லை வழியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என தகவல் வெளியானது.

    இதில் 18 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் டையூ பகுதி மற்றும் ஒருவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இறுதிச்சுற்றில் டென்மார்க் வீராங்கனை கிளாரா தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரிவா 7-6 (7-1), 6-1 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • உடைந்த சீட்களில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை.
    • இது பயணிகளை ஏமாற்றும் வேலை இல்லையா என கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேற்று போபாலில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட 8 சி சீட் சேதமடைந்து இருந்தது.

    இதுதொடர்பாக, சிவராஜ் சிங் சவுகான் எக்ஸ் வலைதளத்தில், போபால்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த சீட் கொடுக்கப்பட்டதாக பதிவிட்டார்.

    அதில், நான் போபாலில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்ய இருந்தேன். ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் பதிவுசெய்திருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட 8 சி இருக்கை சேதமடைந்து இருந்தது. சக பயணிகள் இருக்கையை மாற்றி அமரும்படி வற்புறுத்தினார்கள், ஆனால் வேறு எந்த நபருக்கும் தொந்தரவு கொடுக்க கூடாது என்பதால் சேதமடைந்த இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்தேன்.

    டாடா நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அபப்டி எதுவும் நடக்கவில்லை. பயணிகளிடமிருந்து முழுத் தொகையையும் வசூலித்த பிறகு, மோசமான மற்றும் வலிமிகுந்த இருக்கைகளில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை. இது பயணிகளை ஏமாற்றும் வேலை இல்லையா?

    ஏர் இந்தியா நிர்வாகம் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகானிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

    இதுதொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நிகழாமல் தடுக்க இந்த விஷயத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.

    • ஸ்பெயினில் நடந்து வரும் கார் ரேசில் நடிகர் அஜித் பங்கேற்றார்.
    • கார் விபத்துக்கு உள்ளானதில் அஜித் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    வாலென்சியா:

    நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது. சினிமாவில் நடித்து வரும் அஜித்குமார் கடந்த சில தினங்களாக கார் ரேசில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேசில் அஜித்குமாரின் அணி 3-வது இடத்தைப் பிடித்தது. இந்த ரேசில் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது. அதில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி அவர் தப்பினார்.

    இந்நிலையில், ஸ்பெயினின் வாலென்சியா நகரில் நடந்த கார் ரேசில் அஜித்குமார் பங்கேற்றார். கடந்த சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், தற்போது ரேசில் பங்கேற்றார்.

    ரேசின் போது குறுக்கே வந்த ஒரு காரால் அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அவரது கார் 3 முறை பல்டியடித்தது. ஆனாலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கார் ரேசில் விபத்தில் சிக்கிய அஜித்குமார் நலமுடன் உள்ளார் என தெரிவித்த அவரது தரப்பினர், இந்த ரேசில் அஜித்குமார் 14வது இடம் பிடித்தார் என தெரிவித்தனர்.

    • முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 144 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சினேலி ஹென்றி அதிரடியாக ஆடி 23 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    டெல்லி சார்பில் ஜெஸ் ஜோனாசென் 4 விக்கெட்டும், மரிஜான் காப், அருந்ததி ரெட்டி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் போராடி அரை சதம் கடந்தார்.

    கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய கிரேஸ் ஹாரிஸ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், டெல்லி அணி 19.3 ஓவரில் 144 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் நடப்பு தொடரில் உபி வாரியர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    உ.பி.வாரியர்ஸ் அணி சார்பில் கிரேஸ் ஹாரிஸ், கிராந்தி கவுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்தது.
    • ஆண்கள் இரட்டையரில் பிரிட்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்றது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் பிரிட்டனின் லாயிட் கிளாஸ்பூல்-ஜூலியன் கேஷ் ஜோடி, சக நாட்டின் ஜோ சாலிஸ்பெரி-நீல் கப்ஸ்கி ஜோடியுடன் மோதியது.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய லாயிட்-ஜூலியன் ஜோடி 6-3, 6-2 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 351 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 356 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட்சதமடித்து அசத்தினார். அவர் 165 ரன்களில் அவுட் ஆனார். ஜோ ரூட் அரை சதம் கடந்து 68 ரன்னில் அவுட் ஆனார்.

    ஆஸ்திரேலியா சார்பில் பென் துவார்ஷியஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் அரை சதம் கடந்து 63 ரன்னில் அவுட்டானார். அலெக்ஸ் கேரி 69 ரன்னில் வெளியேரினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் லபுசேன்47 ரன்னில் வெளியேறினார்.

    ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக ஆடி சதம் கடந்து அசத்தினார். இறுதிவரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோஷ் இங்கிலிஸ் 120 ரன்னும், மேக்ஸ்வெல் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ×