என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது
    • மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

    பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ஐபிஎல் தொடரில் இன்னும் 12 லீக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
    • பிளேஆஃப் சுற்றுகள், இறுதிப் போட்டிகள் என 4 போட்டிகளும் நடத்த வேண்டியுள்ளது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடி கொடுத்ததால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

    நேற்று முன்தினம் தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது இந்தியா- பாகிஸ்தான் எல்லை நகரங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக தரம்சாலா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் Blackout செய்யப்பட்டன. இதனால் பாதியிலேயே போட்டி நிறுத்தப்பட்டது.

    பதற்றம் தொடர்ந்து நிலவி வருவதால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. பின்னர் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலையை மதிப்பீடு செய்து மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றம் தணிந்து மே மாதம் போட்டிகளை நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் போட்டியை நடத்த தென்இந்தியாவில் உள்ள பெங்களூரு, சென்னை, ஐதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் உள்ள தைானங்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சொந்த மைதானமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. ஐதராபாத்தை சொந்த மைதானமாக கொண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஏறக்குறைய வெளியேறும் நிலையில் உள்ளது. பெங்களூருவை சொந்த மைதானமாக கொண்ட ஆர்சிபி பிளேஆஃப் சுற்றை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது.

    இன்னும் 12 லீக் போட்டிகள் (இடைநிறுத்தம் செய்யப்பட்ட பஞ்சாப்- டெல்லி போட்டி உள்பட) நடைபெற இருக்கிறது. அதன்பின் பிளேஆப் சுற்று போட்டிகள், இறுதிப் போட்டிகள் என 4 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

    • முதல் இரண்டு இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடியது.
    • முதல் இரண்டு போட்டிகளும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், 3ஆவது போட்டியும் அங்குதான் நடைபெற இருக்கிறது.

    டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் சர்வதேச நாடுகளுக்கும் 2025-2027 வரை இரண்டு வருடங்கள் விளையாடும் தொடர்களின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    இந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2021-ல் இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    2ஆவது இறுதிப் போட்டியும் (2023) இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதின. ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

    3ஆவது இறுதிப் போட்டி (2025) வருகிற ஜூன் மாதம் அதே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    அடுத்த இறுதிப் போட்டி 2027-ல் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை இந்தியாவில் நடத்த பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஐசிசி தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிப் போட்டியை நடத்துவது தொடர்பான திட்டம் பின்னர் இறுதி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்க வாய்ப்பில்லை. ஒருவேளை பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றால் போட்டியை இந்தியாவில் நடத்துவதில் சிரமம் ஏற்படும்.

    • நேற்று முன்தினம் தர்மசாலாவில் நடந்த பஞ்சாப்-டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
    • நடப்பு தொடரில் 12 லீக் ஆட்டம் மற்றும் 4 நாக்-அவுட் ஆட்டம் உள்பட 16 போட்டிகள் எஞ்சி உள்ளன.

    10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நேற்று முன்தினம் தர்மசாலாவில் நடந்த பஞ்சாப்-டெல்லி (58-வது லீக் ஆட்டம்) அணிகள் மோதிய ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

    போர் பதற்ற சூழல் காரணமாக ஐ.பி.எல் போட்டியை தொடர்ந்து நடத்தலாமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவசர ஆலோசனை நடத்தியது. இதில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நடப்பு தொடரில் 12 லீக் ஆட்டம் மற்றும் 4 நாக்-அவுட் ஆட்டம் உள்பட 16 போட்டிகள் எஞ்சி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியதாக தி கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஒரு வார நிறுத்தி வைப்புக்கு பிறகும் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டியை மீண்டும் தொடங்க முடியாவிட்டால், மீதமுள்ள போட்டிகளை இந்த ஆண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் நடத்தலாம் என்று அவர் பரிந்துரைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக விராட் கோலி பிசிசிஐ-க்கு தகவல்.
    • இங்கிலாந்து தொடரில் விளையாடுமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டதாக தகவல்.

    இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. முன்னாள் கேப்டனான இவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறது.

    ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு இந்தியா இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்தது.

    ரோகித் சர்மா கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியான நிலையில், ஒரு சில தினங்களுக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இந்த நிலையில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளார். முக்கியமான இங்கிலாந்து தொடருக்கு எதிராக விராட் கோலியின் இந்த முடிவு பிசிசிஐ-க்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    தனது முடிவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்யும்படி பிசிசிஐ, விராட் கோலியுடன் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஒருவேளை ஓய்வு முடிவில் விராட் கோலி உறுதியாக இருந்தால் இங்கிலாந்து தொடரில் மட்டும் விளையாடும்படி பிசிசிஐ வற்புறத்தலாம்.

    எப்படி இருந்தாலும் விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவிருக்கிறது.

    விராட் கோலி இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ரன்கள் அடித்துள்ளார். இதில் 30 சதம், 31 அரைசதம் அடங்கும். ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் அடித்தது ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    • நாட்டில் போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது.
    • ஏராளமான இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால் பி.சி.சி.ஐ. இதை செய்ய வேண்டி உள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தீவிரம் அடைந்து வருவதால் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐ.பி.எல். 2025 இடைநிறுத்தப்பட்டது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக சவுரவ் கங்குலி கூறுகையில்,

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, நடந்து வரும் ஐ.பி.எல். 2025 போட்டியை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக நேற்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.

    நாட்டில் போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது. மேலும் ஏராளமான இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால் பி.சி.சி.ஐ. இதை செய்ய வேண்டி உள்ளது. போட்டி ஒரு முக்கியமான கட்டத்திற்கு நெருங்கி வருவதால், ஐ.பி.எல். விரைவில் மீண்டும் தொடங்கும் என்று நம்புவோம்

    குறிப்பாக தரம்சாலா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் பி.சி.சி.ஐ இதைச் செய்ய வேண்டியிருந்தது. இவை அனைத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடங்கள்.

    தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப இதை செய்வது அவசியம். காலப்போக்கில், நிலைமை சீரடைந்து போட்டிகளும் நடத்தப்படும்.

    பி.சி.சி.ஐ. ஐ.பி.எல். போட்டிகளை முடித்துவிடும். மேலும் பாகிஸ்தான் நீண்ட காலத்திற்கு அழுத்தத்தை கையாள முடியாததால் இந்த நிலைமை மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று அவர் கூறினார்.

    • ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வெளிநாட்டு வீரர்கள் அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
    • பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சில மாநிலங்களில் மட்டுமே பதற்றம் அதிக அளவில் உள்ளது.

    மும்பை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஐபிஎல் தொடரை ஒருவாரம் ஒத்திவைத்தாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வெளிநாட்டு வீரர்கள் அச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் தங்களை ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல அனுமதிக்குமாறு ஐபிஎல் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய போட்டி தரம்சாலாவில் நடந்தது. அந்தப் போட்டி தான் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த தரம்சாலாவில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அங்கு இருக்கும் ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் ஒளிபரப்பு செய்யும் குழுவினர் மற்றும் ஐபிஎல் சார்ந்த பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் ஐபிஎல் நிர்வாகம் பாதுகாப்பாக ரெயிலில் அழைத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறது. இதுபோன்ற இடர்பாடுகளை அடுத்து தான் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

    இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் விரைவில் விவாதிக்க உள்ளதாகவும், ஐபிஎல் தொடரை வேறு நாட்டில் நடத்துவது குறித்தும் அதில் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதன் முடிவில், ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வெளிநாட்டு வீரர்களை அவர்கள் நாட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சில மாநிலங்களில் மட்டுமே பதற்றம் அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை அணியில் இருந்து விலகி கோவா அணிக்காக விளையாடபோவதாக சில தினங்களுக்கு முன்பு ஜெய்ஸ்வால் கூறினார்.
    • மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் இதற்கான தடையில்லா சான்றிதழையும் ஜெய்ஸ்வால் கேட்டிருந்தார்.

    இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் கடந்த 2023-ம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேற்கொண்டு இந்த ஆண்டு இந்திய ஒருநாள் அணிக்காகவும் அறிமுகமானர்.

    இந்திய அணியின் மிக முக்கிய தொடக்க வீரராக திகழும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வானார்.

    இந்நிலையில் மும்பை அணியில் இருந்து விலகி கோவா அணிக்காக விளையாடபோவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அவர் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் இதற்கான தடையில்லா சான்றிதழையும் கேட்டிருந்தார்.

    மும்பை அணியில் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாகவும், கோவா அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததன் காரணமாகவும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கோவா அணிக்காக விளையாடும் தனது முடிவிலிருந்து பின்வாங்கி மீண்டும் மும்பை அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளான.

    இதுகுறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், "கீழே கையொப்பமிட்டுள்ள நான், கோவாவுக்குச் செல்வதற்கான சில குடும்பத் திட்டங்கள் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், எனக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றை திரும்பப் பெறுவதற்கான எனது கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனவே, இந்த சீசனில் மும்பைக்காக விளையாட என்னை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

    • அருண் ஜெட்லி மைதானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் பாகிஸ்தானின் உறுதியான ஸ்லீப்பர் செல் செயல்பட்டு வருகிறது.

    பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுதப் படைகள் மேற்கொண்டுள்ள 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தை வெடிக்கச் செய்வதாகக் கூறி டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு (டிடிசிஏ) இன்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை அருண் ஜெட்லி மைதானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டிடிசிஏ உயர் அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ்-இடம் தெரிவித்தார்.

    அந்த மின்னஞ்சலில், "உங்கள் மைதானத்தில் ஒரு குண்டு வெடிக்கும். இந்தியாவில் பாகிஸ்தானின் உறுதியான ஸ்லீப்பர் செல் செயல்பட்டு வருகிறது. இந்த வெடிப்பு, ஆபரேஷன் சிந்தூருக்கு நாங்கள் பழிவாங்கும் செயலாக இருக்கும்" என்று அதில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் மின்னஞ்சல் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது ஒரு வார காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
    • எஞ்சிய பிஎஸ்எல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்தது. அதேபோல் பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வந்தது. இரண்டு தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்படுகிறது. அதன்பின் சூழ்நிலை குறித்து விரிவாக ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. போட்டியை நடத்த அனுமதி கேட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வேண்டுகோளை யுஏஇ நிராகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் போர்டுக்கு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு எப்போதுமே ஆதரவாக இருந்து வருகிறது. அதேவேளையில் இந்தியாவில் நடைபெறக் கூடிய போட்டிகளுக்கு எதாவது சிக்கல் ஏற்பட்டால் இந்த போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டுள்ளது.

    2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் அங்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் தொடக்கத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற்றன. இதனால் இந்திய கிரிக்கெட் போர்டுக்கும் எமிட்ரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் நல்ல பிணைப்பு இருந்து வருகிறது.

    தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை முன்னிட்டு பாதுகாப்பு கவலையை கருத்தில் கொண்டு நிராகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
    • காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், தற்போது ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்றிரவு ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அரியானா, குஜராத், ராஜஸ்தான், இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன.

    இதனால் தரம்சாலாவில் நேற்றிரவு நடைபெற்று வந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது. அத்துடன் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் மேலும் மேலும் மோசமடைந்து வருவதால் ஐபிஎல் போட்டியில் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இன்று காலை பிசிசிஐ தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் ஒருவார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐ இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஐபிஎல் தொடர் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சஸ்பெண்ட் ஒரு வார காலத்திற்கு இருக்கும்.

    அதன்பின் சூழ்நிலை குறித்து விரிவாக ஆராய்ந்து புதிய போட்டி அட்டவணை மற்றும் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.

    • ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரிக்கை.
    • பாகிஸ்தானை சேர்ந்த மின்னஞ்சல் போல் உருவாக்கப்பட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். நடப்பு சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளை ஒருவாரத்திற்கு மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    பாகிஸ்தானை சேர்ந்த மின்னஞ்சல் போல் உருவாக்கப்பட்டு சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

    ×