என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 4-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியோ அசரென்கா தகுதி சுற்று வீராங்கனையிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
    • உக்ரைனை சேர்ந்த டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட் கணக்கில் அசரென்காவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த 4-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 18-வது வரிசையில் உள்ள வருமான விக்டோரியோ அசரென்கா (பெலாரஸ்) தகுதி சுற்று வீராங்கனையிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    உக்ரைனை சேர்ந்த டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட் கணக்கில் அசரென்காவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் லிண்டா நோஸ்கோவை (செக்குடியரசு) சந்திக்கிறார்.

    19-வது வரிசையில் உள்ள எலினா சுவிட்டோலினாவுக்கு எதிராக லிண்டா 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது சுவிட்டோலினா காயத்தால் விலகினார். இதனால் லின்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    • இந்தியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் வருகின்ற 25-ந்தேதி தொடங்குகிறது.
    • இங்கிலாந்து பயிற்சி போட்டியில் விளையாடாமல் நேரடியாக களமிறங்க இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று நள்ளிரவு ஐதராபாத் வந்தடைந்தது.

    இங்கிலாந்து அணி பிரத்யேகமாக பயிற்சி ஆட்டம் எதிலும் விளையாடவில்லை. வலைப்பயிற்சி மேற்கொண்டு நேரடியாக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லாம் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, இங்கிலாந்து பாஸ்பால் முறையை டெஸ்ட் கிரிக்கெட்டில் கையாண்டு வருகிறது.

    பாஸ்பால் என்றால் அச்சமின்றி முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான்.

    இந்தியாவுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக விளையாடி இங்கிலாந்து வீரர்களில் ஒருவர் அலைஸ்டர் குக். இந்திய மண்ணில் பாஸ்பால் ஆட்டம் இங்கிலாந்துக்கு கைக்கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து தொடர் குறித்து அலைஸ்டர் குக் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணியின் பிரச்சனை என்னவென்றால், போட்டிக்காக தயாராகுவதில் உள்ள குறைபாடுதான். பயிற்சி ஆட்டம் இல்லாமல் களம் இறங்குவது, நவீன சுற்றுப் பயணத்தின் இயல்புதான். 2012-ல் நாங்கள் இந்தியாவில் தொடரை வென்றபோது, நாங்கள் சிறந்த எதிரணிக்கு எதிராக மூன்று பயிற்சி ஆடடத்தில் விளையாடினோம்.

    யுவராஜ் சிங், ரகானே, முரளி விஜய் உள்ளிட்ட நான்கு முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தியா "ஏ" அணியில் இடம் பிடித்திருந்தனர். மற்றொரு ஆட்டத்தில் புஜாரா விளையாடினார். அவர்கள் எதிர்த்து நாங்கள் விளையாடினோம்.

    வெளிநாட்டில் இருந்து வரும் அணிக்காக ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் சில பயிற்சி ஆட்டங்களில் இருந்தால் நன்றாக இருக்கும். தற்போது பெரும்பாலான தொடர்களில் உள்ளூர் அணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஆரோக்கியமானது என நான் நினைக்கவில்லை.

    பாஸ்பால் கிரிக்கெட்டை இந்தியாவில் செயல்படுத்த இங்கிலாந்து முயற்சிக்கும். இதில் சந்தேகமில்லை. வெற்றி பெற அவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு என நினைக்கிறேன். ஆசியக் கண்டத்தில் டெஸ்ட் போட்டிக்கான பாரம்பரிய விதிகளை பின்பற்ற தேவையில்லை.

    இவ்வாறு குக் தெரிவித்துள்ளார்.

    • இன்றைய நாளில் சிறந்த லெக் ஸ்பின்னர் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
    • தற்போது தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள், நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பது வேறு விசயம்.

    டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. இந்திய அணி சரியான அணியை தேர்வு செய்வதற்கான சோதனையில் இறங்கிவிட்டது.

    சுழற்பந்து வீச்சாளர்களில் பிஷ்னோய், அக்சார் பட்டேல், ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு சிறந்த நபரை தேர்வு செய்ய இருக்கிறது.

    ஆனால் டி20-யில் சிறப்பாக பந்து வீசும் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளரான சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் ஏன்ற புறக்கணிக்கப்படுகிறார் எனத் தெரியவில்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது:-

    சுழற்பந்து வீச்சு என்று வந்தாலே, நான் சாஹலைத்தான் முதலில் தேர்வு செய்வேன். அவர் புறக்கணிக்கப்படுகிறார். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இன்றைய நாளில் கூட, சிறந்த லெக் ஸ்பின்னர் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சாஹலை விட தைரியமான ஸ்பின்னர் உள்ளனர் என்று நான் நினைக்கவில்லை. மிகவும் கூர்மையான மனநிலை கொண்டனர்.

    2-வதாக ஜடேஜாவை தேர்வு செய்வேன். ஆஃப் ஸ்பின்னர் தேவைப்பட்டால் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்யலாம். தற்போது தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள், நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பது வேறு விசயம்."

    இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    • ஜனவரி 25-ந்தேதியில் இருந்து மார்ச் 11-ந்தேதி வரை இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    • கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியும் (முதல் இரண்டு போட்டி), இங்கிலாந்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணி நேற்று நள்ளிரவு ஐதராபாத் வந்தடைந்தது. ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நேற்று தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள் இன்று பயிற்சியை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

    இங்கிலாந்து அணி எந்தவிதமான பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் நேரடியாக டெஸ்ட் போட்டியில் களம் இறங்க இருக்கிறது.

    2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2-ந்தேதியும், 3-வது போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15-ந்தேதியும், 4-வது போட்டி பிப்ரவரி 23-ந்தேதி ராஞ்சியிலும், 5-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 7-ந்தேதி தரம்சாலாவிலும் தொடங்குகிறது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதன்பின் தற்போதுதான் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த ஹாரி ப்ரூக் கடைசி நேரத்தில் இந்திய தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலான லாரன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • 2017-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்தவர் ஆசிய மாரத்தானில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
    • அதன்பின் தற்போது 2-வது நபராக மான் சிங் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

    ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்ஸ் போட்டி ஹாங் காங்கில் நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 34 வயதான மான் சிங் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 2 மணி 16 நிமிடம் 58 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதற்கு முன்னதாக 2 மணி 14 நிமிடம் 19 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே அவரது சாதனையாக இருந்தது. மும்பையில் கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் கடந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.

    சீனாவின் ஹுயாங் யோங்ஜாங் 2 மணி 15 நிமிடம் 24 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கிர்கிஸ்தானின் தியாப்கின் 2 மணி 18 நிமிடம் 18 வினாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்தார்.

    மற்றொரு இந்தியர் ஏ.பி. பெல்லியப்பா 6-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.

    பெண்களுக்கான மாரத்தானில் அஷ்வினி மதன் ஜாதவ் 8-வது இடத்தை பிடித்தார். ஜோதி கவாதே 11-வது இடத்தை பிடித்தார்.

    2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்ஸ் போடடியில் இந்தியர் கோபி தொனக்கல் தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய மாரத்தானில் சாம்பியன் தங்கம் வென்ற முதல் இந்தியர் இவர்தான். தற்போது மான் சிங் 2-வது இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    மான் சிங் தங்கம் வெள்றாலும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான 2 மணி 8 நிமிடம் 10 வினாடிகள் என்ற இலக்கை அடைய முடியவில்லை.

    • ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் (245) அடிக்க தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது.
    • 2-வது இன்னிங்சில் சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் சிறப்பாக பந்து வீச ரெயில்வேஸ் அணி 114 ரன்னில் சுருண்டது.

    ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. கோவையில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு- ரெயில்வேஸ் அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் (245) அடிக்க தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ரெயில்வேஸ் அணி 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது. சாய் கிஷோர், வாரியார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    ரெயில்வேஸ் அணி 243 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது. இதனால் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 2-வது இன்னிங்சில் சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் சிறப்பாக பந்து வீச ரெயில்வேஸ் அணி 114 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    • முதல் செட்டை இந்திய ஜோடி 21-15 எனக் கைப்பற்றியது.
    • ஆனால் அடுத்த இரண்டு செட்களையும் இழந்து சாம்பியன் பட்டத்தை தவற விட்டது.

    இந்தியா ஓபன் பேட்மிண்டன் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இன்று மாலை ஆண்களுக்கான இரட்டையர் இறுதிப் போட்டி நடைபெற்றது.

    இதில் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, தென் கொரியாவின் ஹியுக் காங்- செயுங் ஜே சியோ ஜோடியை எதிர்கொண்டது.

    முதல் செட்டை இந்திய ஜோடி 21-15 என எளிதாக கைப்பற்றியது. ஆனால், 2-வது செட்டை 11-21 என இழந்தது. வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டில் இந்திய ஜோடி சிறப்பாக விளையாடியது. என்ற போதிலும் 3-வது செட்டை 18-21 என இழந்தது. இதனால் சாத்விக் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி சாம்பியன் பட்டத்தை தவறவிட்டு 2-வது இடத்தையே பிடித்தது.

    • சானியா மிர்சா- சோயிப் மாலிக் இடையே விவாகரத்து ஆனதாக செய்திகள் வெளியானது.
    • சோயிப் மாலிக் நடிகை சானா ஜாவித்தை திருமணம் செய்ததன் மூலம் அது உண்மையாகியுள்ளது.

    ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவரான இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.

    கடந்த சில வருடங்களாக இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். ஆனால், அவ்வப்போது இருவரும் சேர்ந்து காணப்பட்டனர்.

    பின்னர் இருவருக்கும் இடையில் விவாகரத்தானதாக தகவல் வெளியானது. ஆனால், இருவரும் அதை உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.

    இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை சோயிப் மாலிக் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதன்மூலம் விவாகரத்து பெற்றதாக வெளியான வதந்தி உண்மையாகிவிட்டது.

    சோயிப் மாலிக்கின் 2-வது திருமணம் குறித்து தற்போது சானியா மிர்சா குழு மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் எழுதப்பட்டதாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சானியா மிர்சா பொதுவெளியில் இருந்து தனது தனிப்பட்ட வாழ்க்கையை ஒதுக்கியே வைத்திருப்பார். எனினும், இன்று தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விசயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சோயிப் மாலிக்- சானியா மிர்சா இடையே விவாகரத்தாகி சில மாதங்கள் ஆகிறது. சோயிப் மாலிக்கின் புதிய பயணத்திற்கு சானியா வாழ்த்து தெரிவிக்கிறார்.

    அவருடைய வாழ்க்கையின் முக்கியமான இந்நேரத்தில், அவருடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் சானியா மிர்சாவின் தனியுரிமையை மதிக்கும் வகையில் எந்தவிதமான ஊகங்களில் ஈடுபடுவதை தவிர்க்க கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல் டெஸ்ட் போட்டி 25-ம் தேதி நடைபெறுகிறது.
    • மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார்.

    இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்யும் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. ஜனவரி 25-ம் தேதி இரு அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. ஹாரி புரூக் விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

     


    "தனிப்பட்ட காரணங்களுக்காக ஹாரி புரூக் உடனடியாக இங்கிலாந்துக்கு திரும்புகிறார். இதன் காரணமாக அவர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்," என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் ஹாரி புரூக். முன்னதாக இவர் கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கினார்.

    24 வயதான ஹாரி புரூக் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 1181 ரன்களை குவித்துள்ளார். இதில் நான்கு சதங்கள், ஏழு அரைசதங்கள் அடங்கும்.

    • ஜனவரி 25 அன்று முதல் போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது
    • இந்திய-இங்கிலாந்து அணியினர் 131 முறை மோதியுள்ளனர்

    இம்மாதம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் இந்தியாவின் பல நகரங்களில் நடைபெறுகிறது.

    இந்திய அணிக்கு ரோஹித்தும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்சும் கேப்டனாக உள்ளனர்.

    முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை ஐதராபாத் நகரின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. பிற போட்டிகள் விசாகப்பட்டினம் (பிப்ரவரி 2-6), ராஜ்கோட் (பிப்ரவரி 15-19), ராஞ்சி (பிப்ரவரி 23-27) மற்றும் தரம்சாலா (மார்ச் 7-11) ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.

    இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்:

    ஜேம்ஸ் ஆண்டர்சன் (வேகப்பந்து வீச்சாளர்)

    ஆட்டங்கள் - 35 விக்கெட்டுகள் - 139 சராசரி - 24.89 சிறப்பு - 5/20

    பகவத் சந்திரசேகர் (லெக் ஸ்பின்னர்)

    ஆட்டங்கள் - 23 விக்கெட்டுகள் - 95 சராசரி - 27.27 சிறப்பு - 8/79

    அனில் கும்ப்ளே (லெக் பிரேக்)

    ஆட்டங்கள்- 19 விக்கெட்டுகள் - 92 சராசரி - 30.59 சிறப்பு - 7/115

    ஆர். அஸ்வின் (ஆஃப் ஸ்பின்னர்)

    ஆட்டங்கள் - 19 விக்கெட்டுகள் - 88 சராசரி - 28.59 சிறப்பு - 6/55


    பிஷன் சிங் பேடி (இடக்கர ஸ்பின்)

    ஆட்டங்கள் - 22 விக்கெட்டுகள் - 85 சராசரி - 6/71 சிறப்பு - 29.87

    கபில் தேவ் (வேகப்பந்து வீச்சாளர்)

    ஆட்டங்கள் - 27 விக்கெட்டுகள் - 85 சராசரி - 37.34 சிறப்பு - 6/91

    பிஎஸ் பேடி மற்றும் கபில் தேவ் இருவரும் தலா 85 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய-இங்கிலாந்து அணியினர் இதுவரை 131 முறை மோதியுள்ளனர். அதில் இங்கிலாந்து 50 ஆட்டங்களில் வென்றது; இந்தியா 31 ஆட்டங்களில் வென்றது. 50 ஆட்டங்கள் சமன் (draw) ஆகியுள்ளது.

    • பிரான்ஸ் வீரரை 6-0, 6-0, 6-3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேற்றம்.
    • 58 முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளார்.

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல்நிலை வீரரும், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் (செர்பியா) இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் பிரான்சை சேர்ந்த அட்ரியன் மேனா ரினோவை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-0, 6-0, 6-3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 44 நிமிட நேரம் தேவைப்பட்டது. ஜோகோவிச் கால்இறுதியில் டெய்லர் பிரீட்சை (அமெரிக்கா) சந்திக்கிறார்.

    காலிறுதிக்கு முன்னேறியதன் மூலம், அதிக முறை காலிறுதிக்கு முன்னேறிய பெடரர் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார். பெடரர் 58 முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் காலிறுதிக்கு முன்னேறியிருந்தார். அதை தற்போது ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது வரிசையில் உள்ள ஷபலென்கா (ரஷியா) 4-வது சுற்றில் அமந்தா அனிஸ்மோவாவை (அமெரிக்கா) சந்தித்தார். இதில் ஷபலென்கா 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 4-வது வரிசையில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ கவூப் 6-1, 6-2 என்ற கணக்கில் மக்டலினாவை (போலந்து) வீழ்த்தினார்.

    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • 4 போட்டிகளில் தோற்ற பாகிஸ்தான் அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

    கிறிஸ்ட்சர்ச்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடந்தது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 38 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் சவுத்தி, மேட் ஹென்ரி, பெர்குசன், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், நியூசிலாந்து 17.2 ஓவடில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் சார்பில் இப்திகார் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக இப்திகார் அகமதுவும், தொடர் நாயகனாக நியூசிலாந்து வீரர் பின் ஆலனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    ×