என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் அந்த பெண்ணை யாரென்று தெரியாது என கூறிய டேனி, பின்னர் இளம்பெண்ணின் சம்மதத்துடனேயே பாலியல் உறவு நடந்தது என கூறினார்.
    • பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டேனி இழப்பீடாக ரூ.1.34 கோடி வழங்க வேண்டும் என்றும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டில், அரசு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

    பார்சிலோனா:

    பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து வீரர் டேனி ஆல்விஸ் (வயது 40). பார்சிலோனா அணியில் விளையாடி 3 சாம்பியன்ஸ் லீக் மற்றும் பிரேசில் அணியில் விளையாடி 2 கோபா அமெரிக்கா கோப்பைகள் உள்பட 42 கோப்பைகளை அவர் வென்றிருக்கிறார். 2022-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியின்போது, பிரேசிலுக்காக விளையாடிய வயது முதிர்ந்த வீரராக அறியப்பட்டவர்.

    இவருக்கு எதிராக இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்திருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி பார்சிலோனாவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இருந்தபோது, கழிவறையில் வைத்து கட்டாயப்படுத்தி இளம்பெண்ணை அவர் பலாத்காரம் செய்துள்ளார்.

    கத்தாரில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் பிரேசிலுக்காக விளையாடிய பின்னர் விடுமுறையை கழிக்க அவர் பார்சிலோனாவுக்கு சென்றிருக்கிறார்.

    அப்போது, இளம்பெண் மற்றும் அவருடைய நண்பருக்கு மதுபானம் வழங்கிய டேனி, பின்னர் வேறொரு இடத்திற்கு இளம்பெண்ணை அழைத்து சென்றிருக்கிறார்.

    இதுபற்றிய தொலைக்காட்சி பேட்டி ஒன்றின்போது, முதலில் அந்த பெண்ணை யாரென்று தெரியாது என கூறிய டேனி, பின்னர் இளம்பெண்ணின் சம்மதத்துடனேயே பாலியல் உறவு நடந்தது என கூறினார்.

    இந்த வழக்கின்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டேனி இழப்பீடாக ரூ.1.34 கோடி வழங்க வேண்டும் என்றும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டில், அரசு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

    ஸ்பெயினில் குற்ற செயலை ஒப்பு கொண்டால் குறைந்த அளவிலான தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும், அதுபோன்ற ஒப்பந்தத்திற்கு அந்த இளம்பெண் முன்வரவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் கடந்த நவம்பரில் கூறினார். ஆனால், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்றும் அந்த இளம்பெண் கூறியிருக்கிறார்.

    இந்த வழக்கு வருகிற திங்கட் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்ட டேனி, அதுமுதல் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • பும்ரா 34 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். அதிலும் குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றி அசத்தினார்.

    இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், அக்சர் படேல் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் பும்ரா புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்;

    1. ஜஸ்பிரித் பும்ரா - 6781 பந்துகள்

    2.உமேஷ் யாதவ் - 7661 பந்துகள்

    3.முகமது ஷமி - 7755 பந்துகள்

    4. கபில் தேவ் - 8378 பந்துகள்

    5. அஸ்வின் - 8380 பந்துகள்

    இதே போல ஆசிய வேகப்பந்து வீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்து பாகிஸ்தான் வீரர்கள் அக்தர் - இம்ரான் கானை (இருவரும் 37 போட்டிகளில்) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பும்ரா (34 போட்டிகளில்) பிடித்துள்ளார்.

    முதல் இடத்தில் வக்கார் யூனிஸ் உள்ளார். அவர் 27 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்திருந்தது. இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் அஸ்வின் 20 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து குல்தீப் யாதவ் களம் இறங்கினார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 277 பந்துகளில் 201 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 18 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். தொடர்ந்து ஆடிய ஜெய்ஸ்வால் 209 ரன்களில் அவுட் ஆனார்.

    இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 112 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷிர் மற்றும் ரெஹன் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இவர்களில் டக்கெட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய முந்தைய ஆட்டத்தின் நாயகன் ஒல்லி போப் இந்த முறை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 23 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார். இதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜாக் கிராலி 78 பந்துகளில் 76 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து களமிறங்கிய வீரர்களில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தவிர மற்றவர்களில் ஜோ ரூட் 5 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோவ் 25 ரன்களிலும், பென் போக்ஸ் 6 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். நிலைத்து விளையாடிய ஸ்டோக்சும் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 55.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் அடித்திருந்தபோது 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜெய்ஸ்வால் 15 ரன்களுடனும், ரோகித் சர்மா 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி இதுவரை 171 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    • இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக சாக் கிராலி 76 ரன்கள் எடுத்தார்.
    • இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்திருந்தது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 209 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 112 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பஷீர், ரெஹான் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

    தொடக்க வீரர்களாக சாக் கிராலி- பென் டக்கெட் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டனர். இதனால் ரோகித், சுழற்பந்து வீச்சை பந்து வீச அழைத்தார். அதன்படி விக்கெட்டும் கிடைத்தது. பென் டக்கெட் 21 ரன்னில் அவுட் ஆனார். முதல் டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போப் பும்ரா பந்து வீச்சில் ஸ்டெம்புகள் சிதற விக்கெட் ஆனார்.

    அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ரூட் 5, பேர்ஸ்டோவ் 25, போக்ஸ் 6, ரெஹன் 6, டாம் ஹார்ட்லி 21 என ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் அணிக்காக போராடிய பென் ஸ்டோக்ஸ் 47 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆனார்.

    இறுதியில் இங்கிலாந்து அணி 253 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டும் குல்தீப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அவர், 'கிராண்ட்ஸ்லாம்' வெற்றிக் கோப்பையை காண்பித்தார்.
    • போபண்ணாவை பிரதமர் மோடி பாராட்டி மகிழ்ந்தார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில், ரோகன் போபண்ணா-மேத்யூ எப்டென் இணை சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் அதிக வயதில் 'கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை 43 வயது இந்திய வீரர் ரோகன் போபண்ணா படைத்தார்.

    இதையடுத்து அவருக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ரோகன் போபண்ணா வாழ்த்து பெற்றுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அவர், 'கிராண்ட்ஸ்லாம்' வெற்றிக் கோப்பையை காண்பித்தார். அப்போது போபண்ணாவை பிரதமர் மோடி பாராட்டி மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்களை போபண்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • டெஸ்ட் மேச்களில் 15 இந்திய வீரர்கள் சிக்சர் அடித்து 100-ஐ கடந்துள்ளார்கள்
    • ஜெய்ஸ்வால், டாம் ஹார்ட்லியின் பந்தில் சிக்சர் அடித்து 100 ரன்களை கடந்தார்

    டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் 100 ரன்கள் குவிப்பது அவருக்கும் அவரது நாட்டிற்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகவும் பெருமையை தரும் நிகழ்வு.

    90 ரன்களை தாண்டிய நிலையில், பேட்ஸ்மேன்கள், 100 ரன்களை குறி வைத்து நிதானமாக விளையாட முற்படுவது இயற்கை.

    தவறாக ஆடி விக்கெட்டை பறிகொடுக்காமல் இருக்கவும், 4 அல்லது 6 அடிக்க முற்பட்டு விக்கெட்டை இழக்காமல் இருக்கவும் அதிக கவனம் எடுத்து கொள்வார்கள்.

    அபூர்வமாக ஒரு சில பேட்ஸ்மேன்கள், 90களை கடந்தாலும், பதட்டமின்றி, துணிச்சலுடன் சிக்சர் அடித்து முக்கிய 3 இலக்க மைல்கல்லான 100-ஐ கடப்பதுண்டு.

    டெஸ்ட் போட்டிகளில் 90களை தாண்டி விளையாடும் போது, சிக்ச்ர் அடித்து 100-ஐ கடந்த இந்திய வீரர்கள், 15 பேர் உள்ளனர்.

    சச்சின் டெண்டுல்கர் (6 முறை), ரோகித் சர்மா (3 முறை), கவுதம் கம்பீர் (2 முறை) கே எல் ராகுல் (2 முறை), ரிஷப் பண்ட் (2 முறை) ஆகியோருடன் பாலி உம்ரிகர், கபில் தேவ், முகமது அசாருதீன், ராகுல் டிராவிட், வீரேந்தர் சேவாக், இர்ஃபான் பத்தான், மகேந்திர சிங் டோனி, ஹர்பஜன் சிங், ஆர் அஸ்வின் மற்றும் சேத்தேஸ்வர் புஜாரா ஆகியோர் தலா 1 முறை நேரடியாக சிக்சர் அடித்து 100-ஐ தொட்ட இந்திய வீரர்கள்.

    பிப்ரவரி 2 அன்று விசாகப்பட்டினம் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கான 2-வது டெஸ்ட் மேட்சில், இந்திய இடது கை பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashaswi Jaiswal), டாம் ஹார்ட்லியின் பந்தில் சிக்சர் அடித்து நூறு ரன்களை குவித்தார்.

    இப்போட்டியில், ஜெய்ஸ்வால், 151 பந்துகளில் சென்சுரி அடித்தது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் சிக்சர் அடித்து 100-ஐ கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் 16-வது இடத்தை பிடித்தார், ஜெய்ஸ்வால்.

    • இந்த வீடியோ வைரலாகி 16 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
    • அந்த ஷூவை பிரேம் செய்யுங்கள் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி சமீபகாலமாக தான் செல்லும் இடங்களில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அப்போது ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ச்சி அடைகின்றனர்.

    அந்த வகையில் சித்தார்த் கெர்கெட்டா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் எம்.எஸ்.டோனி ரசிகரின் 'ஷூ'வில் ஆட்டோகிராப் போட்டு கொடுக்கும் காட்சிகள் உள்ளது. உடனே அந்த ரசிகர் எல்லையில்லா மகிழ்ச்சி அடையும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்துள்ளது.

    இந்த வீடியோ வைரலாகி 16 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் அந்த ரசிகரை மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும், அவரது 'ஷூ' விலைமதிப்பற்றது எனவும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், சித்தார்த் நீங்கள் அந்த ஷூ வை எப்போதும் அணிய வேண்டாம். பிரேம் செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் அணியாக முன்னேறி உள்ளது.
    • குஜராத் 50 புள்ளியுடன் 6-வது இடத்தில் உள்ளன.

    12 அணிகள் பங்கேற்று உள்ள 10-வது புரோ கபடி 'லீக்' போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

    அதை தொடர்ந்து பெங்களூர், புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத், பாட்னா ஆகிய இடங்களில் போட்டிகள் நடந்தது. 10-வது கட்ட போட்டிகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    புரோ கபடி 'லீக்' போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்'சுற்றுக்கு தகுதி பெறும்.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் அணியாக முன்னேறி உள்ளது. அந்த அணி 12 வெற்றி, 2 தோல்வி, 3 டையுடன் 71 புள்ளிகள் பெற்றுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 17 ஆட்டத்தில் 15 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியாஸ் 45-38 என்ற கணக்கில் டெல்லி அணியையும், அரியானா ஸ்டீலர்ஸ் 34-30 என்ற கணக்கில் குஜராத்தையும் தோற்கடித்தது.

    10-வது லீக் ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் உ.பி. யோதா-மும்பை அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி 6 வெற்றி, 8 தோல்வி, 2 டையுடன் 40 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 7-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. உ.பி. யோதா 3 வெற்றி, 12 தோல்வி, 1 டையுடன் 23 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் உள்ளது. மும்பையை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி தெலுங்கு டைட்டன்ஸ்சை வீழ்த்தி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி 10 வெற்றி, 5 தோல்வி, 2 டையுடன் 60 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    புனே அணி 68 புள்ளியு டன் 2-வது இடத்திலும், அரியானா 55 புள்ளியுடன் 4-வது இடத்திலும், பாட்னா 53 புள்ளியுடன் 5-வது இடத்திலும், குஜராத் 50 புள்ளியுடன் 6-வது இடத்திலும் உள்ளன.

    • முதலில் ஆடிய இந்தியா 297 ரன்கள் குவித்தது.
    • இதில் இந்திய வீரர்கள் 2 பேர் சதமடித்து அசத்தினர்.

    புளோம்பாண்டீன்:

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் சிக்ஸ் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் குரூப் 1 பிரிவில் இந்தியா இடம் பெற்றிருந்தது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை 214 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

    இந்நிலையில், இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் நேற்று நேபாளத்துடன் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது. சச்சின் தாஸ் 116 ரன்னும், உதய் சஹாரன் 100 ரன்னும் குவித்தனர்.

    நேபாள அணி சார்பில் குல்சன் ஜா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நேபாளம் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்தியா சார்பில் சவுமி பாண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நடப்பு தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'லீக்' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
    • 'சூப்பர் 5' சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு ஆட்டத்தில் விளையாடும்.

    சென்னை:

    பிரைம் வாலிபால் (கைப்பந்து) 'லீக்' போட்டி 2022-ம் ஆண்டு ஐதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 7 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் கொல்கத்தா தண்டர் போல்ட்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.

    கடந்த ஆண்டு பெங்களூர், ஐதராபாத், கொச்சி ஆகிய இடங்களில் நடந்தது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் அகமதாபாத் டிபென்டர்ஸ் அணி கோப்பையை வென்றது.

    3-வது ரூபே பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வருகிற 15-ந்தேதி முதல் மார்ச் 21-ந்தேதி வரை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபென்டர்ஸ், பெங்களூர் டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர் போல்ட்ஸ், மும்பை மீட்டி யார்ஸ், புதிதாக இணைந்து உள்ள டெல்லி டூபான்ஸ் ஆகிய 9 அணிகள் கலந்து கொள்கின்றன.

    'லீக்' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 5 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 5' சுற்றுக்கு முன்னேறும்.

    'சூப்பர் 5' சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு ஆட்டத்தில் விளையாடும். இதன் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    போட்டிகள் மாலை 6.30 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் நடக்கிறது. 15-ந்தேதி நடைபெறும் தொடக்க போட்டிகளில் சென்னை பிளிட்ஸ்-அகமதாபாத் டிபன்டர்ஸ் (மாலை 6.30 மணி), பெங்களூர்-கொல்கத்தா (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.

    சோனிஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

    • ஜெய்ஸ்வாலை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் அரைசதம் கூட தாண்டவில்லை.
    • இங்கிலாந்தின் மூன்று பந்து வீச்சாளர்கள் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் சேர்த்தது. ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அஸ்வின் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 209 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த பும்ரா 6 ரன்னிலும், முகேஷ் குமார் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 396 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது. ஜெய்ஸ்வாலை தவிர்த்து இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் அரைசதத்தை தாண்டவில்லை.

    இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், பஷிர், அகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    • நேற்றைய முதல் ஆட்ட முடிவில் 179 ரன்கள் எடுத்திருந்தார்.
    • ஒரே ஓவரில் சிக்ஸ், பவுண்டரி என அடுத்தடுத்து விளாசி இரட்டை சதம் அடித்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்று 179 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ஜெய்ஸ்வால் தொடரந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    பஷீர் வீசிய ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி விளாசி இரட்டை சதம் விளாசினார். இதனால் இளம் வயதிலேயே இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

    இந்திய மண்ணில் அவருக்கு இது முதல் சதமாகும். முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றி அசத்தியுள்ளார்.

    ஜெய்ஸ்வாலுக்கு தற்போது 22 வயது முடிந்து 37 நாட்கள் ஆகிறது. இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    வினோத் காம்ப்ளி 21 வயது 35 நாட்கள், 21 வயது 55 நாட்கள் என இளம் வயதில் இரண்டு முறை இரட்டை சதம் அடித்துள்ளார். கவாஸ்கர் 21 வயது 283 நாட்களில் இரட்டை சதம் அடித்துள்ளார்.

    ×