என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், கசுன் ரஜிதா, லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    • தைஜுல் இஸ்லாம் அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்தார்.

    வங்காளதேசம்- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சியால்ஹெட்டில் நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 280 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா 102 ரன்கள் அடித்தனர்.

    பின்னர் வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காளதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. மெஹ்முதுல் ஹசன் ஜாய் 9 ரன்னுடனும், தைஜுல் இஸ்லாம் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது. தைஜுல் இஸ்லாம் அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்தார். இலங்கை அணி சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், கசுன் ரஜிதா, லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    92 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    • சென்னை, பெங்களூரு அணிகள் களம்கண்டன.
    • பெங்களூரு அணி 173 ரன்களை குவித்தது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் பிரமாண்ட துவக்க விழாவுடன் நேற்று (மார்ச் 22) துவங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவக்க விழாவை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முதல் போட்டியில் களம்கண்டன.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. பேட்டிங்கின் போது துவக்கத்தில் அதிரடி காட்டிய பெங்களூரு அணி ஒருக்கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், இன்னிங்ஸ் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது.

    அடுத்து களமிறங்கிய சென்னை அணி துவக்கம் முதலே நிதானமாக ஆடி ரன்களை குவித்து வந்தது. சென்னை அணி பேட்டிங் செய்த போது, ஃபீல்டிங் செய்த விராட் கோலி ரசிகர்களை மகிழ்வித்தார். சென்னையில் நடைபெற்ற போட்டியின் போது, மைதானத்தில் தமிழ் பாடல்கள் அதிகளவில் இசைக்கப்பட்டது.

    அந்த வகையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த கில்லி படத்தின் "அப்படி போடு" பாடல் மைதானத்தில் ஒலிக்கப்பட்டது. இந்த பாட்டை கேட்ட விராட் உடனே வைப் ஆகி நடனம் ஆடினார். இதை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். "அப்படி போடு" பாடலுக்கு விராட் கோலி போட்ட குத்தாட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

    இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றது.



    • ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.
    • இணைய தள பதிவுக்காக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் 2-வது ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. குஜராத் டைடன்சுடன் மோதுகிறது.

    இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 ஆகவும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரமாகவும் நிர்ண யிக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல ரூ.2,500, ரூ.3,500, ரூ.4000 விலைகளிலும் டிக்கெட்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    டிக்கெட் வாங்குவதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய காத்திருந்தனர். இதனால் டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

    விற்பனை தொடங்கிய 1 மணி நேரத்திலேயே ரூ.1,700, ரூ.6 ஆயிரம் விலையிலான டிக்கெட்டுகள் ஆன்லைன்னில் விற்றன. அதைத் தொடர்ந்து ரூ.2,500, ரூ.3,500 விலைகளில் உள்ள டிக்கெட்டுகள் முழுமையாக விற்றன. கடைசியாக ரூ.4000 விலையிலான டிக்கெட்டும் விற்றன.

    விற்பனை தொடங்கிய 1½ மணி நேரத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனால் இணைய தள பதிவுக்காக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    • ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • கொல்கத்தா 16 போட்டியிலும், ஐதராபாத் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    மொகாலி:

    ஐ.பி.எல்.போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.

    மொகாலியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கார் விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் 14 மாதங்களுக்கு பிறகு களம் இறங்குகிறார். முழு உடல் தகுதியுடன் இருக்கும் அவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த சீசனில் அவர் இல்லாத டெல்லி அணி 10-வது இடத்தை பிடித்தது. தற்போது ரிஷப் பண்ட் வருகையால் டெல்லி அணியின் செயல்பாடு மேம்பாடு அடையலாம். பஞ்சாப் அணி கடந்த சீசனில் 8-வது இடத்தை பிடித்தது. இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளன.

    இரு அணிகளும் 32 முறை மோதியுள்ளன. இதில் தலா 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மோதிய ஆட்டத்தில் டெல்லி அணி 15 ரன்னில் வெற்றி பெற்றது.

    இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    சொந்த மண்ணில் கொல்கத்தா வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஐதராபாத் அணி வெல்லும் வகையிலும் சவால் கொடுத்து விளையாடும்.

    இரு அணிகளும் ஐ.பி.எல். தொடரில் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 16 போட்டியிலும், ஐதராபாத் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு கடைசியாக மோதிய போட்டியில் கொல்கத்தா 5 ரன்னில் வெற்றி பெற்றது. 

    • ரச்சின் ரவீந்திரா 15 பந்தில் 37 ரன்கள் விளாசினார்.
    • ஷிவம் துபே 27 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழகாமல் இருந்தார்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து 173 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் அனுஜ் ராவத் 25 பந்தில் 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 26 பந்தில் 38 ரன்களும் அடித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முஸ்டாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார் ருதுராஜ் கெய்க்வாட். மறுமுனையில் ரவீந்திரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அணியின் ஸ்கோர் 4 ஓவரில் 38 ரன்கள் இருக்கும்போது ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரவீந்திரா உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். சென்னை அணி 5.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது. அணியின் ஸ்கோர் 71 ரன்னாக இருக்கும்போது 7-வது ஓவரின் கடைசி பந்தில் ரவீந்திரா 15 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    ரகானே தனது பங்கிற்கு 19 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். டேரில் மிட்செல் 18 பந்தில் 2 சிக்சருடன் 22 ரன்கள் அடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்தது.

    ரச்சின் ரவீந்திரா

    கடைசி ஐந்து ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்டது. துபே உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். 16-வது ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. 17-வது ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 3 ஓவரில் 18 ரன்களே தேவைப்பட்டது. 18-வது ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது.

    இதனால் கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 18.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

    ஷிவம் துபே 34 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • அனுஜ் ராவத் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன்அவுட் ஆனார்.
    • முஸ்டாபிஜுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டு பிளிஸ்சிஸ், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    டு பிளிஸ்சிஸின் அதிரடி ஆட்டத்தால் ஆர்சிபி முதல் 3 ஓவரில் 33 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது ஓவரிலேயே சிஎஸ்கே சுழற்பந்து வீச்சை அறிமுகம் செய்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. தீக்சனா இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    5-வது ஓவரை முஸ்டாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டு பிளிஸ்சிஸ் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதே ஓவரில் ரஜத் படிதாரை டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    அடுத்த ஓவரில் தீபக் சாஹர் மேக்ஸ்வெல்லை முதல் பந்திலேயே வெளியேற்றினார். இதனால் ஆர்சிபி 6 ஓவரில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த 3 ஓவரில் (முதல் 3 ஓவருக்குப் பிறகு) 9 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கிடையே விராட் கோலி 8 பந்தில் 6 ரன் எடுத்து டி20 கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார்.

    விராட் கோலி மெல்லமெல்ல அதிரடிக்கு திரும்பிய நிலையில் முஸ்டாபிஜுர் ரஹ்மான் பந்தில் 20 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிந்தார். ரகானே பவுண்டரி லைனில் பந்தை பிடித்து ரச்சின் ரவிந்திராவிடம் தூக்கிப் போட்டார். அவர் கேட்ச் பிடித்தார். அதே ஓவரில கேமரூன் க்ரீன் க்ளீன் போல்டானார். அவர் 22 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்.

    இதனால் ஆர்சிபி 11.4 ஓவரில் 78 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது திணறியது.

    6-வது விக்கெட்டுக்கு அனுஜ் ராவத் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் ஆர்சிபி 12 ஓவரில் 100 ரன்களை கடந்தது.

    18-வது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸ் அனுஜ் ராவத் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் ஆர்சிபி-க்கு 25 ரன்கள் கிடைத்தது. ஆர்சிபி 18.1 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    முஸ்டாபிஜுர் ரஹ்மான்

    19-வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் ஆர்சிபி-க்கு 16 ரன்கள் கிடைத்தது. ஆர்சிபி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்திருந்தது.

    கடைசி ஓவரை தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைக்க ஆர்சிபி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சிஎஸ்கே-வுக்கு 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. சிஎஸ்கே அணி சார்பில் முஸ்டாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    அனுஜ் ராவத்- தினேஷ் கார்த்திக் ஜோடி 96 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் ஆடியது.
    • சென்னை கேப்டனாக முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    2024 ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி கேப்டனாக எம்.எஸ். டோனி விலகிய நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் சென்னை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், சென்னை அணி கேப்டனாக முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.

    இன்றைய போட்டியில் டாஸ் சமயத்தில் தனது புதிய பொறுப்பு குறித்து ருதுராஜ் கெய்க்வாட்-இடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ருதுராஜ் கெய்க்வாட், "பெருமையாக உணர்கிறேன். யாருடைய இடத்தையும் பூர்த்தி செய்ய விரும்பவில்லை."

    "கேப்டன் மாறப்போவது பற்றி கடந்த வாரம் எனக்கு தெரியும், ஆனால் எம்.எஸ். டோனி கடந்த ஆண்டே இதை சூசகமாக தெரிவித்தார். இங்கு அனைவரும் அனுபவம் மிக்கவர்கள், வருத்தம் அளிக்கும் வகையில், கான்வே மற்றும் பதிரானா அணியில் இல்லை," என்று தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 21 ரன்னில் அவுட்டானார்.

    சென்னை:

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று முதலில் ஆடிய ஆர்சிபி அணியின் விராட் கோலி 21 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் 12,000 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,000 ரன்கள் அடித்த 2-வது வீரர் விராட் கோலி ஆவார். சிஎஸ்கே அணிக்கெதிராக விராட் கோலி 32 போட்டிகளில் 1006 ரன்கள் எடுத்துள்ளார்.

    • முஸ்டாபிஜுர் ரஹ்மான் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • மேக்ஸ்வெல் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.

    ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டு பிளிஸ்சிஸ், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    விராட் கோலி நிதானமாக விளையாட டு பிளிஸ்சிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டு பிளிஸ்சிஸ் முதல் ஓவரில் ஒரு பவுண்டரியும், 2-வது பந்தில் 2 பவுண்டரியும் அடித்தார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில் டு பிளிஸ்சிஸ் 4 பவுண்டரிகள் அடித்தார். இதனால் ஆர்சிபி 3 ஓவரில் 33 ரன்கள் எடுத்தது.

    இதனால் 4-வது ஓவரிலேயே சிஎஸ்கே சுழற்பந்து வீச்சை அறிமுகம் செய்தது. தீக்சனா 4-வது ஓவரில் 4 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    5-வது ஓவரை முஸ்டாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டு பிளிஸ்சிஸ் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதே ஓவரில் ரஜ் படிதாரை டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    அடுத்த ஓவரில் தீபக் சாஹர் மேக்ஸ்வெல்லை முதல் பந்திலேயே வெளியேற்றினார். இதனால் ஆர்சிபி 6 ஓவரில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 3 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கிடையே விராட் கோலி 8 பந்தில் 6 ரன் எடுத்து டி20 கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார்.

    ஆர்சிபி 9 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.

    • சிஎஸ்கே அணிக்கு முதன்முறையாக கேப்டனாக களம் இறங்குகிறார் ருதுராஜ் கெய்க்வாட்.
    • சென்னை அணியில் சமீர் ரிஸ்வி அறிமுகம் ஆகியுள்ளார்.

    ஐபிஎல் 2024 சீசன் தொடங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டிக்கான டாஸ் 7.40 மணிக்கு சுண்டப்பட்டது. ஆர்சிபி அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சமீர் ரிஸ்வி அறிமுகம் ஆகியுள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விவரம்:-

    1. டு பிளிஸ்சிஸ், 2. விராட் கோலி, 3. ரஜத் படிதார், 4. மேக்ஸ்வெல், 5. கேமரூன் க்ரீன், 6. தினேஷ் கார்த்திக், 7. அனுஜ் ராவத், 8. கரண் சர்மா, 9 அல்சாரி ஜோசப், 10. மயங்க் தாகர், 11. முகமது சிராஜ்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-

    1. ருதுராஜ் கெய்க்வாட், 2. ரச்சின் ரவீந்திரா, 3. ரகானே, 4. டேரில் மிட்செல், 5. ஜடேஜா, 6. சமீர் ரிஸ்வி, 7. எம்.எஸ். டோனி, 8. தீபக் சாஹர், 9. மஹீஷ் தீக்சனா, 10. முஸ்தாபிஜுர் ரஹ்மான், 11. துஷார் தேஷ்பாண்டே.

    • பாலிவுட் நடிகர்கள் அக்சய்குமார், டைகர் ஷெராஃப் ஆகியோர் நடனம் ஆடினர்.
    • ஏர்.ஆர். ரஹ்மான் தனது மகனுடன் பாடல்கள் பாடி அசத்தினார்.

    ஐபிஎல் 2024 சீசன் தொடக்க விழா இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்டமாக தொடங்கியது. சுமார் அரை மணி நடத்திற்கு மேலாக திரைப்பட பிரபலங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

    விழா தொடங்கியதும் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் தேசிய கொடியுடன் அந்தரத்தில் இருந்து பறந்து வந்தார். அவரிடம் இருந்து தேசியக்கொடியை பெற்றுக் கொண்ட மற்றொரு பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் தேசியக் கொடியை பெற்று மேடையின் உயரமான இடத்தில் நாட்டினார்.

    அதன்பின் இருவரும் இணைந்து இந்தி பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை பரவசப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான் தனது மகனுடன் இணைந்து மேடை ஏறினார். ஏ.ஆர். ரகுமான், அவரது மகன் அமீன், சுவேதா மோகன் உள்ளிட்டோர் இணைந்து பல பாடல்களை பாடினர்.

    அதன்பின் பிசிசிஐ தலைவர், செயலாளர், ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டோர் மேடை ஏற்றப்பட்டனர். இரண்டு அணி கேப்டன்களான டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் மேடை ஏறினர். கெய்க்வாட் நடப்பு சாம்பியன் கோப்பையுடன் மேடைக்கு வந்தார்.

    • கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடவில்லை.
    • கடந்த சில நாட்களுக்கு முன் உடற்தகுதி பெற்றதாக பிசிசிஐ அறிவித்தது.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் கார் விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு உடற்தகுதி பெற்று ஐபிஎல் போட்டியில் களம் இறங்க இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் விக்கெட் கீப்பர் பணியுடன், சிறப்பாக பேட்டிங் செய்தால் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

    இதுவரை ஐபிஎல்-லில் களம் இறங்கிய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், தற்போது வர்ணனையாளராக செயல்பட உள்ளார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஆட்டத்தை மீண்டும் பார்க்க உற்சாகமாக இருக்கிறேன் என சுமித் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஸ்டீவன் சுமித் கூறுகையில் "ரிஷப் பண்ட் ஆட்டத்தை மீண்டும் பார்க்க உற்சாகமாக இருக்கிறேன். வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், கடினமான காலத்தை கடந்து வந்துள்ளார். மீண்டும் அவரை களத்தில் பார்க்க இருப்பது சிறப்பானது. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர் விரும்வார்.

    ஆகவே, அவரது எண்ணம் விளையாட்டில் எப்படி செல்கிறது என்று பார்க்க வேண்டும். தன்ன வலுக்கட்டாயமாக மீண்டும் பழைய விளையாட்டுக்கு இழுத்துச் செல்வார் என நினைக்கிறேன். அவர் சூப்பர் ஸ்டார். அவர் விளையாடிய வகையில் மிடில் ஆர்டரில் யாரும் விளையாட முடியாது. அவர் ஆக்ரோசமாக விளையாடுபவர். விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். ஆவர் ரிஷப் பண்ட் மட்டுமே என்று நினைக்கிறேன்" என்றார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

    ×