என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக) வரிசையாக தோற்றது.
    • டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் பாண்ட்யா சாமி தரிசனம் செய்திருந்தார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்நிலையில் போட்டிக்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் இஷான் கிஷன், பியூஸ் சாவ்லா மற்றும் குர்ணால் பாண்ட்யா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதனால் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ஏனென்றால் இந்த சீசனை மோசமாக தொடங்கிய மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக) வரிசையாக தோற்றது. இந்த தோல்விக்கு பிறகு 4-வது போட்டியில் டெல்லி அணியை மும்பை சந்தித்தது. அந்த போட்டிக்கு முன்னர் ஹர்திக் பாண்டியா குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து நடந்து போட்டியில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்து மும்பை வெற்றிக்கணக்கை தொடங்கியது. 

    இந்த நிலையில் இப்போதும் அவர் கோவிலுக்கு சென்றுள்ளதை வைத்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் 72 ரன்கள் விளாசினார்.
    • ஐபிஎல் தொடரில் 3 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    ஜெய்ப்பூர்:

    ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின் களமிறங்கிய குஜராத் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 72 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.

    இதன் மூலம் கில் புதிய சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 3 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல் கேஎல் ராகுலுக்கு பின் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். கேஎல் ராகுல் 80 இன்னிங்ஸ்களில் 3 ஆயிரம் ரன்களை சேர்த்த நிலையில், சுப்மன் கில் 94 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார்.

    அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் 3 ஆயிரம் ரன்களை விளாசிய இளம் வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார். இதுவரை 26 வயது 186 நாட்களில் விராட் கோலி 3 ஆயிரம் ரன்களை சேர்த்ததே சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலியின் சாதனையை சுப்மன் கில் 24 வயது 215 நாட்களில் முறியடித்துள்ளார். 

    • 14-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
    • பெரும்பாலான ஆட்டங்கள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் அங்கு போட்டிக்கான இடங்களை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

    ஜோகன்னஸ்பர்க்:

    14 அணிகள் பங்கேற்கும் 14-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்) 2027-ம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளான தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. பெரும்பாலான ஆட்டங்கள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் அங்கு போட்டிக்கான இடங்களை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

    இதன்படி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸ், பிரிட்டோரியா செஞ்சூரியன் பார்க், டர்பனில் உள்ள கிங்ஸ்ஸ்மீட், கெபஹாவின் செயின்ட் ஜார்ஜ்ஸ் பார்க், பார்லில் உள்ள போலன்ட் பார்க், கேப்டவுனின் நியூலாண்ட்ஸ், புளோம்பாண்டீன், ஈஸ்ட் லண்டனில் உள்ள பப்பலோ பார்க் ஆகிய 8 மைதானங்களில் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

    விமான நிலையம் மற்றும் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்குவதற்கு அதிகமான ஓட்டல் அறை தேவை உள்ளிட்ட வசதி வாய்ப்புகளை பரிசீலித்து அதற்கு ஏற்ப போட்டிக்குரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி பெலெட்சி மோசிகி தெரிவித்தார்.

    • நிச்சயம் குஜராத் அணியினரை பாராட்ட வேண்டும்.
    • நான் பேட்டிங் செய்யும் போது 180 ரன்கள் எடுத்தாலே, சவாலாக ஸ்கோராக நினைத்தேன்.

    ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 76, சஞ்சு சாம்சன் 68 ரன்கள் எடுத்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணியில் சுப்மன் கில் அரை சதம் விளாசினார். இறுதியில் ரஷித் கான் மற்றும் தெவாட்டியா அதிரடியாக விளையாடி குஜராத் அணியை வெற்றி பெற வைத்தனர்.

    இந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியதாவது:-

    இந்த ஆட்டத்தில் எங்கள் பிடி எப்போது தளர்ந்தது என்று கேட்டால், கடைசி பந்து தான் என்று சொல்ல வேண்டும். இந்த சூழலில் பேசுவதே கடினமாக உள்ளது. எனக்கு தெரிந்து, தோல்விக்கு பின் கேப்டனாக பேசுவதே இந்த தொடரில் கடினமாக விஷயம் என்று நினைக்கிறேன். கொஞ்சம் எமோஷனலாக உள்ளேன். சாதாரண நிலைக்கு வந்த பின், நிச்சயம் ஆட்டத்தில் எங்கு தோல்வியடைந்தோம் என்று சொல்ல முடியும்.

    நிச்சயம் குஜராத் அணியினரை பாராட்ட வேண்டும். இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று, அடுத்த போட்டிக்கு நகர வேண்டும். நான் பேட்டிங் செய்யும் போது 180 ரன்கள் எடுத்தாலே, சவாலாக ஸ்கோராக நினைத்தேன். நிச்சயம் 196 ரன்கள் என்பது வெற்றிக்கான இலக்கு தான்.

    பெரிதாக பனிப்பொழிவு இல்லாத போது, எங்கள் பவுலர்கள் செய்து முடித்திருக்க வேண்டும். நிச்சயம் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடுவது எளிதல்ல. 197 ரன்கள் இலக்கு, அதிலும் பனிப்பொழிவு வராது என்றால், அந்த ஸ்கோரை நாங்கள் தாராளமாக எடுத்துக் கொள்வோம். பவுலிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

    இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறினார்.

    • ரஷித்கான் போன்ற ஒருவர் எப்போதும் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள்.
    • நான் ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்பதை நோக்கியே விளையாடுகிறேன்.

    ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.

    இந்த வெற்றியின் மூலமாக குஜராத் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

    இந்த வெற்றிக்கு பின் குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பேசியதாவது:-

    எங்களின் திட்டம் கடைசி 3 ஓவர்களில் 45 ரன்களுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான். ஏனென்றால் இதுபோன்ற சில நேரங்களில் எளிதாக வெற்றிபெற முடியும்.

    கணக்கு போட்டு பார்த்தால், ஒரு பேட்ஸ்மேன் 9 பந்துகளுக்கு 22 ரன்கள் சேர்க்க வேண்டும். ஆனால் 2 அல்லது 3 பந்துகள் மீதமிருக்கும் போதே வெற்றிபெற முடியும். இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் எந்த மாற்றமும் இருக்காது. எப்போது வெற்றி என்பது மனநிலையை பொறுத்தது தான். நான் ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்பதை நோக்கியே விளையாடுகிறேன்.

    இந்த ஆட்டத்தில் ராகுல் டிவாட்டியா மற்றும் ரஷீத் கான் ஃபினிஷ் செய்தது மகிழ்ச்சி. கடந்த போட்டியில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆட்டம் எங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடைசி பந்தில் வெற்றிபெற்றது அற்புதமாக உணர்வு. ரஷீத் கான் எப்போதுமே தரமான வீரர். அவரை போன்ற ஒருவர் எப்போதும் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள்.

    இவ்வாறு கில் கூறினார்.

    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
    • இதில் 14-ல் பெங்களூருவும், 18-ல் மும்பையும் வெற்றி கண்டுள்ளன.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மல்லுக்கட்டுகிறது.

    இந்த சீசனை மோசமாக தொடங்கிய மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக) வரிசையாக தோற்றது. ஒரு வழியாக உள்ளூரில் நடந்த கடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்து வெற்றிக்கணக்கை தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், ரோகித் சர்மா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட், ஒரே ஓவரில் 32 ரன் விளாசிய ரொமாரியோ ஷெப்பர்டு ஆகியோரின் அதிரடியால் மும்பை அணி 234 ரன்கள் குவித்ததோடு, அதை வைத்து டெல்லியை 205 ரன்னில் கட்டுப்படுத்தியது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள 20 ஓவர் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தனது முதல் ஆட்டத்தில் டக்-அவுட் ஆனார். என்றாலும் இன்றைய ஆட்டத்தில் அவரது வாணவேடிக்கையை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். சாதகமான உள்ளூர் சூழலை பயன்படுத்தி தொடர்ந்து 2-வது வெற்றியை வசப்படுத்தும் முனைப்புடன் மும்பை அணியினர் ஆயத்தமாகிறார்கள்.

    பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த சீசனிலும் தகிடுதத்தம் போடுகிறது. 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. சென்னை, கொல்கத்தா, லக்னோ, ராஜஸ்தான் ஆகிய அணிகளிடம் 'சரண்' அடைந்து விட்டது.

    ஆரஞ்சு நிற தொப்பியை தக்கவைத்துள்ள விராட் கோலி (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 316 ரன்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் பெங்களூரு அணியில் தடுமாறுகிறார்கள். குறிப்பாக மேக்ஸ்வெல் (5 ஆட்டத்தில் 32 ரன்), கேமரூன் கிரீன் (68 ரன்), கேப்டன் பிளிஸ்சிஸ் (109 ரன்), ரஜத் படிதார் (50 ரன்) ஆகியோரின் தொப்பல் தான் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் இன்னும் களம் காணும் சரியான லெவன் அணி அமையவில்லை. கோலியுடன் இதர பேட்ஸ்மேன்களும் நிலைத்து நின்று மட்டையை சுழற்றினால் தான் மும்பையை அடக்க முடியும். இதை உணர்ந்து செயல்பட்டு அவர்கள் தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்புவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் பெங்களூருவும், 18-ல் மும்பையும் வெற்றி கண்டுள்ளன.

    • குஜராத் அணி தரப்பில் சுப்மன் கில் 72 ரன்களை எடுத்திருந்தார்.
    • ராஜஸ்தான் தரப்பில் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளையும் சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 196 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 76, சஞ்சு சாம்சன் 68 ரன்களும் எடுத்திருந்தனர்.

    இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சாய் சுதர்சன் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய சுதர்சன் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூ வேட் 4, மனோகர் 1, விஜய் சங்கர் 16 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் அரை சதம் அடித்தார். அவர் 72 ரன்னில் வெளியேறினார். இம்பேக்ட் பிளேயராக வந்த ஷாருக்கான் 8 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ராகுல் தெவாட்டியா- ரஷித்கான் ஜோடி அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றது. இறுதி ஓவரில் குஜராத் அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 3 பந்தில் ரஷித்கான் 10 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தார். 5-வது பந்தில் தெவாட்டியா 3 ரன்கள் எடுக்க முயற்சித்து 2 ரன்னில் ரன் அவுட் ஆனர். கடைசி பந்தில் குஜராத் அணிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ரஷித்கான் அந்த பந்தை பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.

    ராஜஸ்தான் தரப்பில் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளையும் சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • இதில் ரஷிய வீரர் மெத்வதேவ் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் கெயில் மான்பில்ஸ் உடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ரஷித் கான் பந்தில் இரண்டு முறை ரியான் பராக் அவுட்டில் இருந்து தப்பினார்.
    • சஞ்சு சாம்சன், ரியான் பராக் அரைசதம் விளாசினர்.

    ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி ஜெய்ஸ்வால், பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 4.2 ஓவரில் 32 ரன்னாக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 19 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். இவர் இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.

    அடுத்த ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் பட்லர் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரியான் பராக் இந்த ஓவரின் கடைசி பந்தில் ரன்ஏதும் எடுக்காத நிலையில் கேட்ச் கொடுத்தார். விக்கெட் கீப்பர் வேட் டக்அவட்டில் இருந்து தப்பினார்.

    8-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ரியான் பராக் மீண்டும் கேட்ச் கொடுத்தார். இந்த முறையும் வேட் கேட்ச் பிடிக்க தவறினார். இதனால் 7 ரன்னில் இருந்து மீண்டும் ஒரு முறை தப்பினார்.

    அதன்பின் சாம்சன்- ரியான் பராக் ஜோடி ஆட்டமிழக்காமல் விளையாடியது. 2 விக்கெட் மட்டுமே இழந்தாலும் அதிரடியாக ரன்கள் அடிக்க முடியவில்லை.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது. ரியாக் பராக் 34 பந்தில் அரைசதம் அடித்தார். 16.5 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் 150 ரன்னைத் தொட்டது. அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சஞச்சு சாம்சன் 31 பந்தில் அரைசதம் அடித்தார்.

    19-வது ஒவரில் ரியான் பராக் 48 பந்தில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 18.4 ஓவரில் 172 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஹெட்மையர் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 19 ஓவர் முடிவில் 177 ரன்கள் எடுத்திருந்தது.

    உமேஷ் யாதவ் கடைசி ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 196 ரன்கள் குவித்துள்ளது. சஞ்சு சாம்சன் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி அடைந்தது.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி,

    குரோசியாவின் மேட் பவிக், எல் சால்வடாரின் மார்சிலோ அரிவலோ ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 3-6, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் ஆடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • குஜராத் டைட்டன்ஸ் தான் ஆடிய 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மழை காரணமாக டாஸ் போட தாமதமானது. இரவு 7.25 மணிக்கு டாஸ் போடப்பட்டடது.

    டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது.

    • குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்
    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் தோல்வியை தழுவியுள்ளது

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் துவங்கும் முன்பே மும்பை அணியின் கேப்டன் மாற்றப்பட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியது. அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டவரும், மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்தவருமான ரோகித் சர்மா நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டனுடன் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் தோல்வியை தழுவியுள்ளது. மேலும் ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் மற்றும் ரோகித் இடையே கருத்து வேறுபாடு இருக்குமோ என்ற வகையில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின

    இதனிடையே ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அவர் 2025 ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்றும் அவர் பெங்களூரு அணியில் இணையலாம் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "எந்த அணிக்கு செல்ல வேண்டும் என்பது ரோகித் சர்மாவின் விருப்பம். ஐபிஎல் தொடரில் உள்ள எல்லா அணிகளும் அவரை கேப்டனாக ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள். மும்பை அணியில் தற்போது நடந்தது போல் இல்லாமல் மற்ற அணிகள் ரோகித் சர்மாவை சரியாகக் கையாளும் விதத்தில், அவர் நிச்சயமாக வேறு அணிக்குச் செல்வார் என்று தெரிவித்துள்ளார்.

    ×