என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தாபிசுர் ரகுமானை விடுவித்தது.
    • இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் தங்களது போட்டியை வேறு இடத்தில் நடத்த வங்கதேசம் கோரிக்கை.

    வங்கதேசத்தில் இந்திய நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் இடம் பிடித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பிசிசிஐ, அவரை விடுக்க கொல்கத்தா அணியிடம் கேட்டுக்கொண்டது. அதன்படி கொல்கத்தா அணியும் அவரை விடுவித்தது.

    இதனால் வங்கதேச கிரிக்கெட் போர்டு கடுங்கோபம் அடைந்தது. இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் தங்களுடைய போட்டிகளை இந்தியாவுக்கு வெளியில் நடத்த வேண்டும் என ஐசிசி-க்கு வேண்டுகோள் விடுத்தது. அத்துடன் ஐபிஎல் போட்டிகள் வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை விதித்தது.

    வங்கதேசத்தின் இந்த செயல்பாடு குறித்து, அந்நாட்டின் முன்னணி தொடக்க வீரரான தமிம் இக்பால், உலக கோப்பையில் விளையாடுவது குறித்து முடிவு எடுக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு செயல்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் போர்டின் டைரக்டர் எம். நஸ்முல் இஸ்லாம், "இந்த முறை, வங்கதேச மக்கள் தங்களது சொந்தக் கண்களால், மற்றொரு நிரூபிக்கப்பட்ட இந்திய உளவாளியின் தோற்றத்தைக் கண்டனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • முதல்தர வீராங்கனையாக சபலென்கா 2-0 என எளிதாக வெற்றி பெற்றார்.
    • அமெரிக்காவின் பெகுலா 6-3, 7(7)-6(3) என வெற்றி பெற்றார்.

    ஆஸ்திரேலியா ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.

    ஒரு காலிறுதி போட்டியில் முதல்தர வீராங்கனையாக சபலென்கா அமெரிக்காவைச் சேர்ந்த மேடிசன் கீய்ஸை எதிர்கொண்டார். இதில் சபலென்கா 6-3, 6-3 நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் பெகுலா, சம்சோனோவை எதிர்கொண்டார். இதில் 4-ம் நிலை வீராங்கனையான பெகுலா 6-3, 7(7)-6(3) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான ரைபாகினா, ரஷியாவின் கரோலினா முட்சோவைவை எதிர்கொண்டார். இதில் 11-ம் நிலை வீராங்கனையான முட்சோவா முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட ரைபாகினா 2-வது செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் போட்டிப்போட்டு விளையாடினர். என்றாலும் முட்சோவா 6-4 என 3-வது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    • நான் 2015-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன்.
    • ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒன்றாக ஒரு போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார். தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் கிரிக்கெட் குறித்து தானும் தனது மனைவியும் பேசிய நகைச்சுவையான சம்பவம் குறித்து எம் எஸ் தோனி கூறியுள்ளார்.

    அவர் கூறியதாவது:-

    நான் 2015-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன். அதனால் என் குடும்பத்துடன் செலவிட எனக்குக் கொஞ்சம் கூடுதல் நேரம் கிடைத்தது. பொதுவாக, நானும் என் மனைவியும் கிரிக்கெட் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆனால் ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒன்றாக ஒரு போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

    பந்துவீச்சாளர் ஒரு வைடு வீசினார். பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியே வந்து ஸ்டம்பிங் செய்யப்பட்டார். என் மனைவி உடனடியாக, அவர் அவுட் இல்லை, வைடு பந்தில் ஸ்டம்பிங் செய்ய முடியாது என்று கூறினார்.

    அவள் அவுட் இல்லை என்று சொல்லி முடிப்பதற்குள், அந்த பேட்ஸ்மேன் ஏற்கெனவே திரும்பி நடக்கத் தொடங்கிவிட்டார். அவரை மீண்டும் அழைப்பார்கள் என்று அவள் உறுதியாக நம்பினாள்.

    நான் அவளிடம், 'நோ-பால் பந்தில் மட்டும்தான் ஸ்டம்பிங் செய்தால் அவுட் கிடையாது. வைடு பந்தில் அவுட் உண்டு என்று கூறினேன். அதற்கு அவள், 'உங்களுக்கு ஒன்றும் தெரியாது, பாருங்கள், நடுவர்கள் அவரை மீண்டும் அழைப்பார்கள்' என்று பதிலளித்தாள் என தோனி கூறினார்.

    • இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பரோடாவில் நாளை மறுதினம் நடக்கிறது.
    • 23 வயதான ஆதித்யா அசோக் இதுவரை 2 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் ஆடியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பரோடாவில் நாளை மறுதினம் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். வேலூரில் பிறந்த அவருக்கு 4 வயதாக இருக்கும் போது அவரது குடும்பம் நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தது. அவரது உறவினர்கள் வேலூரில் தான் வசித்து வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு சென்னைக்கு வந்து சி.எஸ்.கே. அகாடமியில் சில வாரங்கள் பயிற்சியில் ஈடுபட்ட அவர் ஒரு நாள் தொடரில் சாதிக்க ஆர்வமுடன் உள்ளார். நேற்று நிருபர்களிடம் பேசிய ஆதித்யா அசோக் கூறுகையில், 'அதிர்ஷ்டவசமாக சென்னைக்கு வந்து பயிற்சி எடுக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். இந்த பயிற்சியின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக இங்குள்ள கரிசல் மண், செம்மண் போன்ற ஆடுகளங்களில் எப்படி பந்து வீசுவது என்பதை அறிந்து கொண்டேன். அந்த அனுபவம் ஒரு நாள் தொடரில் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்' என்றார். 23 வயதான ஆதித்யா அசோக் இதுவரை 2 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் ஆடியுள்ளார். அவர் தமிழ் சினிமாவில் பிரபலமான 'என் வழி, தனி வழி' என்ற வசனத்தை கையில் பச்சை குத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

    • காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் யமாகுச்சி உடன் மோதினார்.
    • முதல் செட்டை பிவி சிந்து 21-11 என கைப்பற்றினார்.

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து நடப்பு உலக சாம்பியனான ஜப்பானின் யமாகுச்சி உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை பிவி சிந்து 21-11 என கைப்பற்றினார். அடுத்த செட் விளையாடுவதற்கு முன்பு காயம் காரணமாக ஜப்பானின் யமாகுச்சி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து பிவி சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    • 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
    • 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்த டெஸ்டில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 1,454 ரன்கள் எடுத்தது. 1948-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் டெஸ்ட் ஒன்றில் மொத்தமாக எடுக்கப்பட்ட அதிக ரன்கள் இது தான்.

    இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் 160 ரன்களும், 2-வது இன்னிங்சில் பெத்தேல் 154 ரன்களும் விளாசினர். ஒரு அணியில் இரு வீரர்கள் 150 ரன்களுக்கு மேல் எடுத்தும் அந்த அணி தோல்வியை தழுவுவது இது 8-வது நிகழ்வாகும்.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்த தொடரில் 31 விக்கெட் மற்றும் 2 அரைசதம் உள்பட 156 ரன்களும் எடுத்தார். ஆஷஸ் தொடரில் 30-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி, இரு அரைசதமும் ஒரு வீரர் அடிப்பது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1985-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் இயான் போத்தம் இத்தகைய சாதனையை படைத்திருந்தார்.

    • தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • கடந்த ஆண்டில் பட்டம் வென்ற அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.3 கோடியும் வழங்கப்பட்டது.

    நவிமும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் 2023-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அறிமுக ஆண்டில் மும்பை இந்தியன்சும், அடுத்த ஆண்டில் (2024) பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், கடந்த ஆண்டு 2-வது முறையாக மும்பை இந்தியன்சும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

    இந்த நிலையில் 4-வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    பிப்ரவரி 5-ந் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில், முதல் 11 லீக் ஆட்டங்கள் நவிமும்பையிலும், இதைத்தொடர்ந்து அடுத்த 9 லீக் ஆட்டங்கள், வெளியேற்றுதல் சுற்று, இறுதிப்போட்டி ஆகியவை குஜராத் மாநிலம் வதோதராவிலும் அரங்கேறுகிறது. சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய பெண்கள் அணி வென்ற பிறகு நடக்கும் பெரிய போட்டி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சந்திக்கும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

    கடந்த 3 சீசன்களிலும் டெல்லி அணிக்கு தலைமை தாங்கி அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற மெக் லானிங் (ஆஸ்திரேலியா) உ.பி.வாரியர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டதுடன் அந்த அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்றுள்ளார். 50 ஓவர் உலகக் கோப்பையில் கலக்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். மற்றபடி எல்லா அணிகளும் ஒரு சில வீராங்கனைகள் மாற்றத்துடன் தங்களது படை பலத்தை அதிகரித்து களம் காணுகின்றன.

    ஒவ்வொரு அணியிலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நட்சத்திர பட்டாளங்கள் அதிகம் இடம் பிடித்துள்ளனர். இதனால் எந்த அணி வாகை சூடும் என்று கணிப்பது கடினமான காரியமாகும். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இடையே கோப்பையை வெல்வதில் கடும் போட்டி நிலவும் என கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    போட்டிக்கான பரிசுத் தொகை விவரம் அறிவிக்கப்படவில்லை என்றாலும், கடந்த ஆண்டில் பட்டம் வென்ற அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.3 கோடியும் வழங்கப்பட்டது. அதே பரிசுத் தொகையே இந்த முறையும் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    நவிமும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணியில் நாட் சிவெர், ஹெய்லி மேத்யூஸ், அமெலியா கெர், இல்லிங்வொர்த், அமன்ஜோத் கவுர், ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக், தமிழக விக்கெட் கீப்பர் கமலினி உள்ளிட்ட சிறந்த வீராங்கனைகள் அங்கம் வகிக்கின்றனர்.

    இதேப ோல் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணியில் ஜார்ஜியா வோல், கிரேஸ் ஹாரிஸ் நடினே டி கிளார்க், அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்ட்ராகர், லாரென் பெல், ராதா யாதவ், ஸ்ரேயங்கா பட்டீல், ரிச்சா கோஷ் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். தனிப்பட்ட காரணத்தால் ஆல்-ரவுண்டரான எலிசி பெர்ரி (ஆஸ்திரேலியா) விலகி இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகும்.

    உலகக் கோப்பையில் ஒன்றாக கலக்கிய ஹர்மன்பிரீத், மந்தனா இருவரும் எதிரும், புதிருமாக கோதாவில் குதிப்பதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்

    இருவரும் நேற்று நிருபர்களிடம் பேசும் போது, 'நாங்கள் (இந்தியா) உலகின் தலைச்சிறந்த அணியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இன்னும் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. அதற்கு டபிள்யூ.பி.எல். போட்டி உதவிகரமாக இருக்கும்' என்றனர்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 4 ஆட்டத்திலும், பெங்களூரு 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ ஹாட் ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம்.

    • விஜய் ஹசாரே டிராபியின் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன.
    • காலிறுதிச் சுற்றுகள் பெங்களூருவில் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ளன.

    புதுடெல்லி:

    33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இதில் 'எலைட்' பிரிவில் இடம் பெற்ற 23 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதின. இதன் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நேற்று நடந்து முடிந்தன.

    அகமதாபாத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான தமிழக அணி கேரளாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்–றது. தொடர்ந்து 4 தோல்வி கண்டு காலிறுதி வாய்ப்பை இழந்து விட்டது தமிழக அணி.

    இந்நிலையில், லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கர்நாடகம், மத்திய பிரதேசம், பி பிரிவில் உத்தர பிரதேசம், விதர்பாவும், சி பிரிவில் பஞ்சாப், மும்பையும், டி பிரிவில் டெல்லி, சவுராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

    காலிறுதிச் சுற்று பெங்களூருவில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.

    • பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 2 வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் நம்பர் 2 வீராங்கனையான அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய உக்ரைன் வீராங்கனை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெண்டா அனிசிமோவா தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றில் வெற்றி பெற்றது.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, மலேசியாவின் யாப் ராய் கிங்-ஜுனைத் ஆரிப் ஜோடி உடன் மோதியது.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சாத்விக்- சிராக் ஜோடி 21-18, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    காலிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி இந்தோனேசியாவின் முகம்மது ஷோஹிபுல் பிக்ரி-பஜர் அல்பியான் ஜோடி உடன் மோதுகிறது.

    • சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இடம்பெற்றுள்ளார்.
    • சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா இடம்பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    அதன்படி, டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜஸ்டின் கிரீவ்ஸ், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    அதேபோல் டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் இந்தியாவின் ஷபாலி வர்மா, தென் ஆப்பிரிக்காவின் லாரா வால்வோர்ட் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனையை தேர்வு செய்து அறிவிக்கப்படும்.

    • ஒருநாள் போட்டி தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது.
    • டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.

    புதுடெல்லி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.

    ஒருநாள் போட்டி தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் இருந்து இந்தியாவின் அதிரடி வீரரான திலக் வர்மா விலகி உள்ளார்.

    திலக் வர்மாவுக்கு ராஜ்கோட்டில் வயிற்றுப் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்று காலை மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது சீராகவும், நல்ல முன்னேற்றத்துடனும் உள்ளார்.

    மீதமுள்ள 2 டி20 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்பது பயிற்சி மற்றும் திறன் நிலைகளுக்குத் திரும்பும் போது அவரது முன்னேற்றத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×