என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adithya Ashok"

    • இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பரோடாவில் நாளை மறுதினம் நடக்கிறது.
    • 23 வயதான ஆதித்யா அசோக் இதுவரை 2 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் ஆடியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பரோடாவில் நாளை மறுதினம் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். வேலூரில் பிறந்த அவருக்கு 4 வயதாக இருக்கும் போது அவரது குடும்பம் நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தது. அவரது உறவினர்கள் வேலூரில் தான் வசித்து வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு சென்னைக்கு வந்து சி.எஸ்.கே. அகாடமியில் சில வாரங்கள் பயிற்சியில் ஈடுபட்ட அவர் ஒரு நாள் தொடரில் சாதிக்க ஆர்வமுடன் உள்ளார். நேற்று நிருபர்களிடம் பேசிய ஆதித்யா அசோக் கூறுகையில், 'அதிர்ஷ்டவசமாக சென்னைக்கு வந்து பயிற்சி எடுக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். இந்த பயிற்சியின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக இங்குள்ள கரிசல் மண், செம்மண் போன்ற ஆடுகளங்களில் எப்படி பந்து வீசுவது என்பதை அறிந்து கொண்டேன். அந்த அனுபவம் ஒரு நாள் தொடரில் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்' என்றார். 23 வயதான ஆதித்யா அசோக் இதுவரை 2 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் ஆடியுள்ளார். அவர் தமிழ் சினிமாவில் பிரபலமான 'என் வழி, தனி வழி' என்ற வசனத்தை கையில் பச்சை குத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

    ×