என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் இருந்து திலக் வர்மா விலகல்
- ஒருநாள் போட்டி தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது.
- டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.
புதுடெல்லி:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.
ஒருநாள் போட்டி தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் இருந்து இந்தியாவின் அதிரடி வீரரான திலக் வர்மா விலகி உள்ளார்.
திலக் வர்மாவுக்கு ராஜ்கோட்டில் வயிற்றுப் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்று காலை மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது சீராகவும், நல்ல முன்னேற்றத்துடனும் உள்ளார்.
மீதமுள்ள 2 டி20 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்பது பயிற்சி மற்றும் திறன் நிலைகளுக்குத் திரும்பும் போது அவரது முன்னேற்றத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






