என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் பங்கேற்கிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 11-ம் தேதி தொடங்குகிறது.
லண்டன்:
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 11-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு இங்கிலாந்து அணி கேப்டனாக விக்கெட் கீப்பரும், அதிரடி வீரருமான பிலிப் சால்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து டி20 அணி கேப்டனான ஜோஸ் பட்லர் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- இந்தியா இதுவரை 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- இதில் 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் ஆகியவை அடங்கும்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இதுவரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில், பாரா வில்வித்தை கலப்பு ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங்-பூஜா ஜோடி ஸ்லோவேனியா ஜோடியை
எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்திய அணி வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.
- பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
- பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 25 பதக்கங்களை வென்றுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இதில் இந்தியா இதுவரை 24 பதக்கங்களை வென்றிருந்தது. இதில் 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கங்கள் அடங்கும். தற்போது ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலம் வென்றதை அடுத்து இந்தியா தனது 25 ஆவது பதக்கத்தை பெற்றது.
ஆண்கள் பாரா ஜூடோ விளையாட்டின் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் நாட்டின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்த்து விளையாடிய கபில் பர்மார் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார்.
- டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
- இந்தியா பி அணி முதல் நாள் முடிவில் 202 ரன்களை எடுத்தது.
பெங்களூரு:
துலிப் கோப்பை தொடர் இன்று தொடங்கியது. இந்திய அணியில் உள்ள கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் தவிர மற்ற அனைத்து நட்சத்திர வீரர்களும் கலந்து கொண்ட டெஸ்ட் தொடர் போன்றே விளையாடி வருகின்றனர்.
செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதுவதால் துலிப் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கியது. ஏ அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், பி அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் மோதினர். டாஸ் வென்ற ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், அபிமன்யு களமிறங்கினர். அபிமன்யு 13 ரன், ஜெய்ஸ்வால் 30 ரன், சர்ப்ராஸ் கான் 9 ரன், ரிஷப் பண்ட் 7 ரன், சாய் கிஷோர் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய முஷீர் கான் சதம் விளாசி அசத்தினார். 8-வது விக்கெட்டுக்கு முஷீர் கான், நவ்தீப் சைனி ஜோடி108 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் நாள் முடிவில் இந்தியா பி 79 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. முஷீர் கான் 105 ரன்னும், நவ்தீப் சைனி 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்தியா ஏ அணி சார்பில் ஆவேஷ் கான், கலீல் அகமது, ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
- இந்தியா இதுவரை 24 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- இதில் 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் ஆகியவை அடங்கும்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இதுவரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில், பெண்கள் 100 மீட்டர் டி-12 அரையிறுதி ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சிம்ரன் 2-வது இடம்பிடித்தார். இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
- டிராவிஸ் ஹெட் 17 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தி இருந்தார்.
- டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி வீரர் பவர்பிளேவில் அதிக பவுண்டரிகளை விளாசியது இதுவே முதல்முறையாகும்.
ஸ்காட்லாந்தில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்போட்டியில் 17 பந்துகளில் அரைசதத்தை கடந்த டிராவிஸ் ஹெட், டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனையை படைத்து அசத்தி உள்ளார்.
அதன்படி இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் பவர் பிளே ஓவர்களில் மட்டுமே 73 ரன்களைக் குவித்திருந்தார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி கேப்டன் பால் ஸ்டிர்லிங்ஸ் பவர்பிளே ஓவர்களில் 67 ரன்களைக் குவித்திருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது டிராவிஸ் ஹெட் முறியடித்துள்ளார்.
இது தவிர, டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்த சமயத்தில் பவர்பிளே ஓவரில் மட்டும் 16 பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். இதன்மூலம் ஆடவர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி வீரர் பவர்பிளேவில் அதிக பவுண்டரிகளை விளாசியது இதுவே முதல்முறையாகும்.
முன்னதாக, கடந்த 2018 -ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் பவர்பிளேயின் போது 14 பவுண்டரிகளை அடித்து முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் கொலின் முன்ரோவை ஹெட் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
மேற்கொண்டு இந்த இந்த இன்னிங்ஸின் போது டிராவிஸ் ஹெட் 17 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தி இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிவேக அரைசதமடித்த முதல் வீரர் எனும் மார்கஸ் ஸ்டொய்னிஸின் சாதனையை ஹெட் சமன்செய்துள்ளார். முன்னதாக, கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில், இலங்கைக்கு எதிராக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா டி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- டி அணியில் அதிகபட்சமாக அக்ஷர் படேல் அரை சதம் விளாசினார்.
துலிப் கோப்பை தொடர் இன்று தொடங்கியது. இந்திய அணியில் உள்ள கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் தவிர மற்ற அனைத்து நட்சத்திர வீரர்களும் கலந்து கொண்ட டெஸ்ட் தொடர் போன்றே 4 நாள்கள் கொண்ட ஆட்டத்தில் விளையாடுகின்றனர். வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதுவதால் துலிப் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியா சி மற்றும் இந்தியா டி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கியது. சி அணியின் கேப்டனாக ருதுராஜ்-ம் டி அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரும் மோதினர். இதில் டாஸ் வென்ற சி அணியின் கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி டி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அதர்வா டைட், யாஷ் தூபே களமிறங்கினர். இருவரும் முறையே 4 மற்றும் 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 9, தேவ்தத் படிக்கல் 0, ரிக்கி புய் 4, ஸ்ரீகர் பரத் 13, சரனேஷ் ஜெய்ன் 13, ஹர்சித் ரானா 0 என ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் கடுமையாக போராடிய அக்ஷர் படேல் அரை சதம் விளாசினார். கடைசியில் 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்தியா டி அணி 48.3 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சி அணி தரப்பில் வைஷாக் 3 விக்கெட்டும் அனுஷ் காம்போஜ் ஹிமான்ஷு சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
- முதலில் ஆடிய மங்கோலிய வீரர்கள் மின்னல் வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
- இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்னுக்கு சுருண்ட அணி என்ற சாதனையை படைத்தது.
கோலாலம்பூர்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026-ம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. தற்போது இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், சிங்கப்பூர், மங்கோலியா அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்றுப் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற சிங்கப்பூர் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மங்கோலியா வீரர்கள், மின்னல் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 10 ஓவரில் 10 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்னுக்கு சுருண்ட அணி என்ற சாதனையை மங்கோலியா சமன் செய்தது.
சிங்கப்பூர் சார்பில் பரத்வாஜ் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து ஆடிய சிங்கப்பூர் ஒரு விக்கெட்டுக்கு 13 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
- எனது காயத்திலிருந்து நான் தற்போது 50% குணமடைந்துவிட்டேன்.
- ஆனாலும் இது இன்னும் எனக்கு பிரச்சனையாகவே இருந்து வருகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகினார். இதன் காரணமாக இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஒல்லி போப் இத்தொடரில் செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இந்நிலையில் எதிர்வரும் பாகிஸ்தான் தொடருக்கு முன்னதாக முழு உடற்தகுதியை எட்டிவிடுவேன் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எனது காயத்திலிருந்து நான் தற்போது 50% குணமடைந்துவிட்டேன். ஆனாலும் இது இன்னும் எனக்கு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. அதனால் மோசமான ஏதாவது ஒன்றைச் செய்து, நீண்ட காலத்திற்கு என்னை விளையாட்டிலிருந்து வெளியேற்றும் அபாயத்தை விட, இரண்டு வாரங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.
நான் எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறேனென்றும், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டு போட்டிக்குள் தகுதியடைவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன் என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டோக்ஸ் கூறினார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது அக்டோபர் 7-ம் தேதி தொடங்கவுள்ளது.
- மெஸ்சி 8 முறை பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார்.
- ரொனால்டோ 5 முறை பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார்.
கால்பந்தில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர். கால்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் உயரிய விருது பலோன் டி'ஆர் விருது. இந்த விருதை மெஸ்சி 8 முறை வென்றுள்ளார். ரொனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார்.
2024-ம் ஆண்டிக்கான பலோன் டி'ஆர் விருது அக்டோபர் 28-ந்தேதி வழங்கப்பட இருக்கிறது. அதற்கான 30 வீரர்கள் கொண்ட பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மெஸ்சி மற்றும் ரொனால்டோ பெயர் இடம் பெறவில்லை.
2003-ம் ஆண்டில் இருந்து தற்போதுதான் பரிந்துரை பட்டியலில் இருவருடைய பெயரும் இடம் பெறாதது இதுதான் முதன் முறையாகும்.
மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறி பி.எஸ்.ஜி. அணிக்கு சென்றார். பின்னர் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு சென்றார்.
மெஸ்சி முதன்முறையாக 2006-ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் 2009-ல் முதல் விருதை வென்றார். ரொனால்டோ 2004-ம் ஆண்டு முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்டார். 2008-ல் இருந்து இருவரிடையே கடும் போட்டி நிலவியது. 13 முறை இவர்கள்தான் வென்றுள்னர்.
ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து யுவென்டஸ் அணிக்கு சென்றார். தற்போது சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
- சின்னர் அரை இறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்றார்.
- சின்னர் அரை இறுதியில் டிராப்பருடன் மோதுகிறார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) கால் இறுதி ஆட்டத்தில் 5-வது வரிசையில் இருக்கும் மெட்வதேவை (ரஷியா) எதிர்கொண்டார்.
இதில் சின்னர் 6-2, 1-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 39 நிமிட நேரம் தேவைப்பட்டது.
சின்னர் அரை இறுதியில் டிராப்பருடன் மோதுகிறார். 25-ம் நிலை வீரரான ஜேக் டிராப்பர் (இங்கிலாந்து) 6-3, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் 10- வது வரிசையில் உள்ள அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார். 22 வயதான டிராப்பர் முதல் முறையாக கிராண்ட்சிலாம் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.
- இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக வருமான வரி செலுத்துவோரின் பட்டியல் வெளியாகி உள்ளது.
- சினிமா நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது விராட் கோலி 5-வது இடத்தில் உள்ளார்.
இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக தொகையை வருமான வரியாக செலுத்துவோரின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி ரூ.66 கோடி வருமான வரி கட்டி வருவதாகவும், சிஎஸ்கே ஜாம்பவான் டோனி ரூ.38 கோடியை கட்டி வருவதும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 2 வாரங்களில் ஹோம் சீசன் தொடங்கவுள்ளது. வங்கதேசம் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மூலமாக இந்திய அணி ஹோம் சீசனை தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பலரும் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக வருமான வரி செலுத்துவோரின் பட்டியலை ஃபார்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். அவர் மொத்தமாக வருமான வரியாக மட்டும் ரூ.66 கோடி கட்டி வருகிறார். அதேபோல் 2-வது இடத்தில் 2020-ம் ஆண்டிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் டோனி இருந்து வருகிறார்.
அவர் வருமான வரியாக மட்டும் ரூ.38 கோடி கட்டி வருகிறார். இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 3-வது இடத்தில் இருக்கிறார். அவர் மொத்தமாக ரூ.28 கோடியை வருமான வரியாகவும், இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ரூ.23 கோடி வருமான கட்டுவதன் மூலமாக 4-வது இடத்திலும் இருக்கிறார்.
அதேபோல் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ரூ.13 கோடியை வருமான வரியாகவும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ரூ.10 கோடியையும் வருமான வரியாக கட்டி வருகிறார். அதேபோல் சினிமா நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது விராட் கோலி 5-வது இடத்திலும், டோனி 7-வது இடத்திலும் இருக்கின்றனர். இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாப் 20 இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.






