என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கேப்டனுக்கு அதிக முக்கியத்துவம் கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக 4 முறை கோப்பையை வென்றுத் தந்தவருமான ரோகித் சர்மா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    அணியின் கேப்டனாக இருக்கும் போது, நமக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடாது என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். நீண்ட திட்டமிடலை யோசித்து பார்த்தால் மற்ற வீரர்களின் பங்களிப்பே மிகவும் முக்கியம். இந்த விஷயத்தில் ஒவ்வொரு கேப்டனின் அணுகுமுறையும் வெவ்வேறு விதமாக இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை கேப்டனுக்கு குறைந்தபட்ச முக்கியத்துவம் என்ற கொள்கை கைகொடுக்கிறது.

    கொரோனா பரவலால் நீண்ட நாட்களாக கையில் பேட்டை எடுக்கவில்லை. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இவ்வளவு காலம் விளையாடாமல் முடங்கி இருப்பது இது தான் முதல்முறையாகும். பயிற்சியை தொடங்கும் போது கொஞ்சம் சவாலாக இருக்கும். விளையாடாத வரை நான் எந்த நிலையில் இருக்கிறேன், உணர்வு எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால் உடல்ரீதியாக மிகவும் வலுவாக உள்ளேன்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள துபாய் ஆடுகளங்கள் சற்று வேகம் குறைந்தவை. இந்திய ஆடுகளங்களுடன் ஒப்பிடும் போது பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. ஆனால் சீதோஷ்ண நிலை கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அங்கு 40 டிகிரி வெயில் கொளுத்தும். நீங்கள் எப்போதும் 40 டிகிரி வெப்ப நிலையில் விளையாடிக்கொண்டு இருப்பதில்லை. அதை சமாளிப்பது சவாலானது. ஆனால் நிலைமையை நேரில் பார்த்த பிறகு சரியான வியூகங்களை வகுப்பது எளிதாகி விடும். போதுமான காலஅவகாசம் இருப்பதால் அவசரப்படத் தேவையில்லை.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஸ்பெயின் வீரரான நடப்பு சாம்பியன் நடால் விலகினார்
    மாட்ரிட்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் வருகிற 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நடக்கிறது. அமெரிக்காவை கொரோனா புரட்டிப்போட்டாலும் இந்த போட்டி திட்டமிட்டபடி நடத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு உயிர்பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி அரங்கேறப்போகும் இந்த போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ஸ்பெயினின் ரபெல் நடால் திடீரென விலகியுள்ளார்.

    34 வயதான நடால் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. நிலைமை இன்னும் கட்டுக்குள் வந்தது மாதிரி தெரியவில்லை. இதனால் நீண்ட யோசனைக்கு பிறகு விருப்பமின்றி அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக அறிவிக்கிறேன். இந்த விஷயத்தில் எனது மனது சொல்வதை பின்பற்றி இந்த முறை அமெரிக்காவுக்கு செல்வதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

    ஏற்கனவே 5 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கால்முட்டி காயத்தில் இருந்து குணமடைய எஞ்சிய சீசன் முழுவதும் ஓய்வு எடுக்கப்போவதாக கூறிவிட்டார். கொரோனா அச்சத்தால் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), முன்னாள் சாம்பியனான சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, பிரான்சின் மான்பில்ஸ், ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ் உள்ளிட்டோரும் அமெரிக்க ஓபனில் இருந்து பின்வாங்கி விட்டனர். பாதுகாப்பு கருதி கடைசி நேரத்தில் மேலும் சிலர் ‘ஜகா’ வாங்கலாம்.

    ஜாம்பவான்களான பெடரரும், நடாலும் ஒரே நேரத்தில் ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இல்லாமல் போவது 1999-ம் ஆண்டு அமெரிக்க ஓபனுக்கு பிறகு இதுவே முதல்முறை என்பது நினைவு கூரத்தக்கது.

    இதற்கிடையே, பிரபல வீரர்களின் விலகலால் இந்திய வீரர் சுமித் நாகலுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவர் தகுதி சுற்று இன்றி நேரடியாக பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். டெல்லியில் வசிக்கும் 22 வயதான நாகல் தரவரிசையில் 127-வது இடம் வகிக்கிறார்.

    அவர் கூறுகையில், ‘கடினமான சூழலிலும் அமெரிக்க ஓபனை நடத்த போட்டி அமைப்பாளர்கள் எடுத்து வரும் தீவிரமான முயற்சி பாராட்டுக்குரியது. அமெரிக்க ஓபனில் நேரடியாக முதல் சுற்றில் ஆடும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அங்கு சென்று விளையாடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து பயிற்சியாளர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வேன். அங்கு எப்படி செல்லப்போகிறேன் என்பது தெரியவில்லை. யாருக்கு தெரியும், ஒரு வேளை இந்த போட்டி ரத்து செய்யப்படலாம்’ என்றார்.

    கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் தகுதி சுற்றுகளில் வெற்றி கண்டு அதன் மூலம் முதல் ரவுண்டில் ரோஜர் பெடரை எதிர்கொண்ட சுமித் நாகல், அதில் முதல் செட்டை கைப்பற்றி அடுத்த 3 செட்டுகளை பறிகொடுத்து தோற்றது குறிப்பிடத்தக்கது.
    பாபர் அசாம், ஷான் மசூத் சிறப்பாக விளையாட, மழை தடைபோட பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    ஷான் மசூட், அபித் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபித் அலி 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் அசார் அலி களம் இறங்கினார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அப்போது பாகிஸ்தான் 43 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஷான் மசூட் உடன் இளம் நட்சத்திர வீரர் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். களம் இறங்கியதும் பாபர் அசாம் சற்று தடுமாறினார். 15-வது பந்தில் முதல் ரன் கணக்கை தொடங்கினார். அதன்பின் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 70-வது பந்தில் அரைசதம் தொட்டார். கடைசி 56 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.

    அசார் அலி

    மறுமுனையில் ஷான் மசூத்தும் அரைசதம் நோக்கி நகர்ந்தார். பாகிஸ்தான் 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பாபர் அசாம் 69 ரன்களுடனும், ஷான் மசூத் 46 ரன்களுடனும் களத்தில் உள்ளது. மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தின் பெரும்பகுதி தடைபட்டது.
    மீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்த்துக்கொள்ள மஞ்ச்ரேக்கர் வேண்டுகோள் விடுத்த நிலையில், பிசிசிஐ அதை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இவர் பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) டெலிவிஷன் வர்ணனையாளர் குழுவில் இருந்தார்.


    பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி தொடருக்கு முன்பு அவர் நீக்கம் செய்யப்பட்டார்.

    ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி அல்லது 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. தற்போது ஐ.பி.எல். போட்டி வர்ணனையாளர் குழுவில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பி.சி.சி.ஐ.-க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஆனால் சுனில் கவாஸ்கர், எல். சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், ஹர்ஷா போக்லோ போன்றோருக்கு பிசிசிஐ வர்ணனை செய்யுமாறு இ-மெயில் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு இ-மெயில் அனுப்பவில்லையாம். இதனால் அவரது கோரிக்கை நிராகிரிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர்தான் இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
    சில நேரங்களில் சச்சினைக் காட்டிலும் ராகுல் டிராவிட் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ரஜா தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். அதேவேளையில் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட். இந்திய அணி தடுமாறிய போதெல்லாம் காப்பாற்றிய வரலாறு ராகுல் டிராவிட்டுக்கு உண்டு.

    இந்நிலையில் சில நேரங்களில சச்சினைக் காட்டிலும் ராகுல் டிராவிட் சிறந்த பேட்ஸ்மேன் என்று ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

    ரமீஸ் ராஜா இதுகுறித்து கூறுகையில் ‘‘தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் கடுமையான  ஆடுகளத்தில் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன். நங்கூரம் பாய்ச்ச மாதிரி நின்று தடுப்பாட்டம் ஆடுகையில், சில நேரங்களில் சச்சின் தெண்டுல்கரையும் விஞ்சிவிடுவார்.

    ரமீஸ் ராஜா

    இருந்தாலும், சச்சினை போன்று இயற்கையாகவே ராகுல் டிராவிட்டிற்கு திறமை கிடையாது. ஆனால், அர்ப்பணிப்பு, தீர்மானித்தல், பவர் ஆகியவற்றின் மூலம் சிறந்த வீரராக முடிந்தது’’ என்றார்.
    மான்செஸ்டர் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:

    1. ஷான் மசூட், 2. அபித் அலி, 3. அசார் அலி, 4. பாபர் அசாம், 5. ஆசாத் ஷபிக், 6. முகமது ரிஸ்வான், 7. ஷதாப் கான், 8. யாசீர் ஷா, 9. முகமது அப்பாஸ், 10. ஷாஹீன் அப்ரிடி, 11. நசீம் ஷா.

    இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோரி பேர்ன்ஸ், 2. டொமினிக் சிப்லி, 3. ஜோ ரூட், 4. பென் ஸ்டோக்ஸ், 5. ஒல்லி போப்ஸ், 6. ஜோஸ் பட்லர், 7. கிறிஸ் வோக்ஸ், 8. டாம் பெஸ், 9. ஜாஃப்ரா ஆர்சர், 10. ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.
    இங்கிலாந்துக்கு எதிராக 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 329 இலக்கை எளிதாக எட்டி அயர்லாந்து ஆறுதல் வெற்றி பெற்றது.
    இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு ஆட்டங்களில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    நேற்று 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5. ஓவரில் 328 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கேப்டன் இயன் மோர்கன் சிறப்பாக விளையாடி 84 பந்தில் 15 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 106 ரன்கள் குவித்தார். டாம் பேண்டன் 51 பந்தில் 58 ரன்களும், டேவிட் வில்லே 42 பந்தில் 51 ரன்களும் விளாசினர்.

    பின்னர் 329 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக பால் ஸ்டிர்லிங், காரேத் டேலனி ஆகியோர் களம் இறங்கினர். டேலனி 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து வீரர்கள்

    அடுத்து பால் ஸ்டிர்லிங் உடன் அண்ட்ரூ பால்பிரைன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். பால் ஸ்டிர்லிங்  128 பந்தில் 142 ரன்களும், பால்பிரைன் 112 பந்தில் 113 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இருவரும் ஆட்டமிந்தபோது அயர்லாந்து 44.3 ஓவரில் 279 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 33 பந்தில் 50 ரன்கள் தேவைப்பட்டது. ஹாரி டெக்டர் 26 பந்தில் 29 ரன்களும், கெவின் ஓபிரைன் 15 பந்தில் 21 ரன்களும் அடிக்க 49.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    ‘2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை டோனி என் மீது நிறைய நம்பிக்கை வைத்து இருந்தார்’ என்று முன்னாள் வீரர் யுவராஜ்சிங் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    2011-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன் தொடர்நாயகன் விருதையும் பெற்ற அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங், அந்த போட்டி முடிந்ததும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 19 மாத இடைவெளிக்கு பிறகு மறுபிரவேசம் செய்தாலும் அவரால் முன்பு போல் ஜொலிக்க முடியவில்லை. இதனால் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் கடந்த ஆண்டு (2019) ஜூன் மாதத்தில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். 38 வயதான யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு நான் மீண்டும் திரும்பிய போது விராட்கோலி எனக்கு ஆதரவு அளித்தார். அவருடைய ஆதரவு இல்லாமல் இருந்து இருந்தால் என்னால் இந்திய அணியில் மறுபடியும் இடம் பிடித்து இருக்க முடியாது. 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி குறித்து உண்மையான நிலைமையை டோனி எனக்கு உணர்த்தினார். அந்த உலக போட்டிக்கு தேர்வாளர்கள் எனது பெயரை பரிசீலிக்கவில்லை என்பதை எனக்கு புரிய வைத்தார். அவரால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்தார்.

    2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை டோனி என் மீது நிறைய நம்பிக்கை வைத்து இருந்தார். ‘நீங்கள் அணியின் முக்கியமான வீரர்’ என்று அடிக்கடி சொல்வார். ஆனால் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டு வந்த பிறகு அணியில் நிறைய விஷயங்கள் மாறியிருந்தன. ஒரு கேப்டனாக சில நேரங்களில் உங்களால் எல்லாவற்றையும் நியாயப்படுத்த முடியாது. இறுதியில் ஒரு அணியாக நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பார்க்க வேண்டும். ஒவ்வொரு கேப்டனும் ஒரு சில வீரர்களுக்கு ஆதரவு அளிக்கலாம். ஆதரவு கொடுக்காமலும் இருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.

    சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தடுமாறிய போது டோனி அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். இதே போல் லோகேஷ் ராகுலுக்கு விராட் கோலி ஆதரவாக இருந்து இருக்கிறார். புற்றுநோயில் இருந்து மீண்டு களம் திரும்பிய போது என் மீது நம்பிக்கை வைக்காததற்காக நான் யாரையும் குறை சொல்லமாட்டேன். ஏனெனில் எனது ஆட்டத்தின் மீது முன்பு இருந்த நம்பிக்கை வருவதற்கு எனக்கே சில காலம் பிடித்தது.

    பஞ்சாப் அணிக்கு ஆலோசகராக பணியாற்ற இருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். பஞ்சாப் அணி வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஐ.பி.எல். போட்டி தொடங்கியதும் ஒவ்வொரு 5 நாட்கள் இடைவெளியிலும் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா சோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    மும்பை:

    8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு தொடர்புடையவர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை இந்திய கிரிக்கெட் வாரியம் தயாரித்து உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று கூறியதாவது:-

    ஐ.பி.எல். அணிகளில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர்கள், உதவியாளர்கள் இந்தியாவில் தங்களுடைய அணிகளுடன் இணைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 24 மணி நேரத்திற்குள் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்களது அணியுடன் இணைந்ததும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். முதற்கட்ட சோதனையில் எந்த வீரருக்காவது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த வீரர் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார். பிறகு 24 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தால் அந்த வீரர் அமீரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

    அமீரகம் சென்றதும் வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒரு வாரம் தனிமையில் இருப்பார்கள். அந்த காலக்கட்டத்தில் குறைந்தது 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதில் பாதிப்பு இல்லை என்பது தெளிவானதும் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு பயிற்சியை தொடங்குவார்கள்.

    ஐ.பி.எல். போட்டி தொடங்கியதும் ஒவ்வொரு 5 நாட்கள் இடைவெளியிலும் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா சோதனை நடத்தப்படும். வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள், மற்றும் பயிற்சியாளர்களை பொறுத்தமட்டில் அமீரகம் புறப்படுவதற்கு முன்பாக இரண்டு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதில் ‘நெகட்டிவ்’ என்ற முடிவு வந்தால் மட்டுமே அமீரகம் செல்ல முடியும். கொரோனா தொற்று இருந்தால் 14 நாட்கள் தனிமை, அதன் பிறகு மேலும் இரண்டு முறை பரிசோதனை போன்ற நடைமுறை அவர்களுக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
    சர்ச்சை எழுந்த காரணத்தால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து சீனாவின் விவோ நிறுவனம் வெளியேறியுள்ளது.
    பிசிசிஐ ஐபிஎல் டி20 லீக்கை நடத்தி வருகிறது. 2022 வரை சீன நிறுவனமான விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை பெற்றிருந்தது. இதனால் வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் வரை பிசிசிஐ-க்கு வருமானம் கிடைக்கும்.

    லடாக் மோதலுக்குப் பிறகு சீனா பெருட்களையும், சீன நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக விவோ தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ரசிகர்கள் கடும்கோபத்தை வெளிப்படுத்தினர். டுவிட்டரில் ‘BoycottIPL’ என ஹேஸ்டேக் உருவாக்கி எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகியுள்ளது. இது பிசிசிஐ-க்கு மிகப்பெரிய  அளவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
    இங்கிலாந்து அணி கடந்த 10 தொடர்களில் 8-ல் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் தொடரில் இதை மாற்ற விரும்புகிறது.
    கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு கடந்த மாதம் 8-ந்தேதி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் தொடர் தொடங்கின. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-1 என வென்றது.

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்து சுமார் ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது.

    இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் வலுவானது. அங்குள்ள சீதோஷ்ணநிலை பந்து ஸ்விங் ஆக சாதகமாக இருக்கும் என்பதால் அந்த அணியை எதிர்த்து விளையாடுவது எளிதான காரியம் அல்ல. இங்கிலாந்து மண்ணில் வெளிநாட்டு அணி தொடரை வென்றால் மிகச்சிறப்பானதாக பார்க்கப்படும்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டை இழந்ததாலும் கடைசி இரண்டு டெஸ்ட போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.

    இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் வலுவாக உள்ளனர். ரோரி பேர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஜோ டென்லி ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தால் அந்த அணியால் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.

    பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜாஃப்ரா ஆர்சர், கிறிஸ் வோக்ஸ் உள்ளனர். இதனால் பந்து வீச்சு குறித்து அந்த அணி கவலைப்படாது.

    ஆனால் கடந்த 10 தொடர்களில் 8-ல் முதல் போட்டியை இங்கிலாந்து தோற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகவும் இது நிகழ்ந்தது. இதனால் தொடரை வெற்றியோடு ஆரம்பிக்க இங்கிலாந்து முயற்சி செய்யும்.

    பாகிஸ்தான் அணி கடந்த இரண்டு முறை இங்கிலாந்து சென்றிருந்தபோது தொடரை டிரா செய்துள்ளது. அந்த நம்பிக்கையில் களம் இறங்கும். பந்து வீச்சில் முகமது அப்பாஸ், ஷாஹீன் ஷா மற்றும் நசீம் ஆகியோர் முதுகெலும்பாக உள்ளனர்.

    பேட்டிங்கில் கேப்டன் அசார் அலி, இளம் வீரர் பாபர் அசாம் உள்ளனர். 350 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டால் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு கடும் சவாலாக விளங்கும்.
    மூன்று போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்தாலே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும்  டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

    டெஸ்ட் தொடர் மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது. இதற்கு முன் இரண்டு முறை பாகிஸ்தான் இங்கிலாந்து சென்றிருந்தபோது இரண்டு முறையும் தொடரையும் டிரா செய்திருந்தது.

    இந்நிலையில் இந்தத் தொடரையும் டிரா செய்தாலே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷாஹித் அப்ரிடி கூறுகையில் ‘‘டெஸ்ட் போட்டி என்று வரும்போது இங்கிலாந்து சூழ்நிலை மிகவும் கடினமானது. பாகிஸ்தான் அணி டிரா செய்தாலே அது மிகப்பெரிய என்று நான் நினைக்கிறேன். டிரா வெற்றிக்கு சமமானது. தற்போதுள்ள அணி நிர்வாகம் அணிக்கு மிகப்பெரிய பலம். செசனுக்கு செசன் வீரர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள் என்ற உறுதி எனக்குள்ளது’’ என்றார்.

    மிஸ்பா-உல்-ஹக் (தலைமை பயிற்சியாளர்) மற்றும் யூனிஸ் கான் (பேட்டிங் பயிற்சியாளர்), வக்கார் யூனிஸ் (பந்து வீச்சு பயிற்சியாளர்), முஷ்டாக் அகமது ஆகியோர் அணியுடன் உள்ளனர்.
    ×