என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று நடக்கிறது.
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று நடக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பரில் நடக்க இருந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. தள்ளிவைக்கப்பட்ட இந்த உலக கோப்பை போட்டியை அடுத்த ஆண்டில் (2021) தங்களுக்கு நடத்தும் வாய்ப்பை தர வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே பெற்று இருக்கிறது. ஒரு வேளை 2021-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் அரங்கேறினால், இந்தியாவுக்குரிய உலக கோப்பை போட்டி 2022-ம் ஆண்டுக்கு மாற்றப்படும்.

    இந்த விவகாரம் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆஸ்திரேலிய நிர்வாகிகளுடன், இந்திய நிர்வாகிகள் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வர உள்ளனர். மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்தில் 50 ஓவர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
    ஐ.பி.எல். தொடரில் சம்பந்தப்பட்ட ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் போட்டிக்கு சிக்கலாகி விடும் என்று பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரங்கேறும் இந்த போட்டித் தொடர் மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்க இருக்கிறது.

    இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் வீரர்களுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் பயணிக்கும் முன்பு இருந்தே அவர்களுக்கான கட்டுப்பாடுகள் தொடங்கி விடும். இந்திய கிரிக்கெட் வாரியம் வகுத்து கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தொடர் முடியும் வரை வீரர்கள் மட்டுமின்றி, அணியின் உதவியாளர்கள், நிர்வாகிகள் உள்பட அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு அணியினரும் தனித்தனி ஓட்டலில் தங்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முகக்கவசம் எப்போதும் அணிய வேண்டும், பாதுகாப்பு வளையத்தை விட்டு எந்த காரணத்தை கொண்டும் வெளியே செல்லக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    இந்த விதிமுறைகளில் சிலவற்றை தளர்த்த வேண்டும் என்று அணிகள் சார்பில் ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் மற்றும் அணியினர் இரவு விருந்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அமீரகத்தில் தனிமைப்படுத்துதல் நாட்களை குறைக்க வேண்டும் என்பது உள்பட சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதனால் வழிகாட்டு நெறிமுறையின் இறுதி வடிவம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

    ஐ.பி.எல். நிர்வாகத்தினருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த அணியின் உரிமையாளர்கள் கூட்டத்துக்கு பிறகு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ்வாடியா கருத்து தெரிவிக்கையில், ‘அணியின் உரிமையாளர்களான எங்களுக்கு ஐ.பி.எல். போட்டி நடக்கிறது என்பது மட்டும் தான் தெரியும். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் பாதுகாப்பு குறித்து தான் நாங்கள் அதிகம் சிந்தித்து கொண்டு இருக்கிறோம். இந்த தொடரின் போது சம்பந்தப்பட்ட யாராவது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் கூட ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடும். ஐ.பி.எல். போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் எல்லோரும் ஒத்த கருத்துடன் இருக்கிறோம். நாங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.

    தற்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் ‘ஸ்பான்சர்’களை அணுகுவது என்பது கடினமானதாகும். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி வழக்கத்தை விட அதிகம் பேர் பார்க்கும் போட்டியாக அமையாவிட்டால் நான் எனது பெயரை மாற்றிக் கொள்ள தயார். எப்போதும் இல்லாத வகையில் இந்த போட்டி சிறப்பானதாக இருக்கும். இந்த ஐ.பி.எல். போட்டியில் ஸ்பான்சர்கள் பங்கேற்க மறுத்தால் அவர்கள் தான் முட்டாள். நான் ஸ்பான்சராக இருந்தால் நிச்சயம் இந்த போட்டிக்கு ஆதரவு அளிப்பேன்’ என்றார்.

    இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டியில் களம் காணும் அணிகள் வழிகாட்டு நெறிமுறையினை கடைப்பிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் தங்கள் அணியில் இடம் பெற்றுள்ள உள்நாட்டு வீரர்களை மும்பையில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்த தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டு வார கால தனிமைப்படுத்தலில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்படுகிறது. இதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வீரர்களை தனிமைப்படுத்த ஆரம்பித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த மாதத்தின் 2-வது வாரத்தில் அமீரகம் செல்ல முடிவு செய்திருந்தது. ஆனால் வழிகாட்டு நெறிமுறை இறுதி வடிவம் பெறுவதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக அவர்களது பயண திட்டம் தள்ளிபோடப்பட்டது. சென்னை அணி வீரர்களுக்கான தனிமைப்படுத்துதல் எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 
    குழந்தை பிறந்த சந்தோசத்தை வெளிப்படுத்தும் விதமாக டாக்டர்களுடன் கேக் வெட்டி ஹர்திக் பாண்டியா - நடாசா தம்பதி கொண்டாடியது.
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா. இவர் செர்பிய நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு ஹர்திக் பாண்ட்யா குழந்தை பிறந்ததை வெளிப்படுத்தினார்.
    நேற்று மருத்துவமனையில் டாக்டர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்த படத்தையும் இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அதில் ‘‘என்னுடைய குழந்தையை இந்த உலகத்திற்கு காட்டிய மருத்துவர்களுக்கு நன்றி, எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்’’ எனத்தெரிவித்துள்ளார்.
    தொடக்க வீரர் ஷான் மசூத் 156 ரன்கள் விளாச, பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி உள்ளது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    ஷான் மசூத், அபித் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபித் அலி 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் அசார் அலி களம் இறங்கினார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அப்போது பாகிஸ்தான் 43 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஷான் மசூத் உடன் இளம் நட்சத்திர வீரர் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாபர் அசாம் 70-வது பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஷான் மசூத்தும் அரைசதம் நோக்கி நகர்ந்தார்.

    மழை அடிக்கடி குறுக்கிட்டதால் முதல் நாளில் 49 ஓவர்களே வீசப்பட்டன. பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் 69 ரன்களுடனும், ஷான் மசூத் 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பாபர் அசாம் நேற்றைய 69 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஆசாத் ஷபிக் 7 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    மறுமுனையில் ஷான் மசூத் 156 பந்தில் அரைசதத்தை கடந்து சதத்தை நோக்கிச் சென்றார். அவருக்கு சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் ஒத்துழைப்பு கொடுக்க 251 பந்துகளை சந்தித்து ஷான் மசூத் சதம் அடித்தார்.

    ஸ்டூவர்ட் பிராட்

    சதாப்கான் 45 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த யாசிர் ஷா 5 ரன்னிலும், முகமது அப்பாஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். ஷான் மசூத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 156 ரன்கள் (319) அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 109.3 ஓவரில் 326 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

    இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், ஜாஃப்ரா ஆர்சர் தலா 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஆண்டர்சன் மற்றும் பெஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு மாற்றப்படுகிறது.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் ஒரு டெஸ்ட் டிசம்பர் மாதம் 26-ந்தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கப்படும் இந்த டெஸ்டுக்கு ‘பாக்சிங் டே’ எனப் பெயர். 26-ந்தேதி மெல்போர்ன் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி காணப்படும்.

    தற்போது ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. விக்டோரியா மாநிலத்தில்தான் மெல்போர்ன் மைதானம் அமைந்துள்ளது. தற்போது அங்கு 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 170 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால் பாதுகாப்பற்ற நிலையில் போட்டியை நடத்தி சுமார் 30 கோடி ஆஸ்திரேலிய டாலரை இழக்க ஆஸ்திரேலியா விரும்பவில்லை. இதனால் அடிலெய்டில் நடத்த விரும்புகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டில் 457 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 445 பேர் குணமடைந்துள்ளனர்.

    இதனால் போட்டியை அடிலெய்டுக்கு மாற்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு விரும்புகிறது. இதுகுறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்க இருக்கிறது.
    சீனாவின் விவோ நிறுவனத்துடனான ஐபிஎல் விளம்பர ஒப்பந்த‌த்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரத்து செய்துள்ளதாக ஐபிஎல் தெரிவித்துள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் டைட்டில் ஸ்பான்சராக விவோ இருந்து வந்தது. லடாக் பிரச்சனைக்குப்பிறகு சீனா பொருட்களை நிராகரிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

    ஆனால் ஐபிஎல் ஸ்பான்சராக விவோ தொடர்ந்து நீடிக்கும் என்று பிசிசிஐ தெரிவித்தது. இதனால் நெட்டிசன்கள் கொதித்து எழுந்தனர். ஐபிஎல்-ஐ புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அரசியல் சார்பிலும், அமைப்புகள் சார்பிலும் மறைமுகமாக எதிர்ப்பு கிளம்பின. இதனால் விவோ டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலக முடிவு செய்தது.

    இந்நிலையில் விவோ மொபைல் இந்தியா பிரைவேட் நிறுவனமும், பிசிசிஐ-யும் இணைந்து ஐபிஎல் 2020 டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகிக்கொள்கிறது. 2020 தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விராட் கோலியுடன் இணைந்து விளையாட இருப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் ஆரோன் பிஞ்ச். இவர் ஐபிஎல் போட்டியில் பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை ஏலம் எடுத்துள்ளது.

    ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். அவருடன் இணைந்து விளையாட இருப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘விராட் கோலி எப்படிப்பட்ட போட்டியாளர் மற்றும் உந்துதல் உள்ளவர் என்பது எனக்குத் தெரியும். ஆர்.சி.பி.யுடன் இணைவதற்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. உலகின் தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து லீக் அணிகளுக்காக விளையாடும் வாய்ப்பு வேடிக்கையாக இருக்கும். சின்னசாமி மைதானத்தில் சொந்த ரசிகர்கள் மத்தியில் விளையாடுவது அமேசிங்கான விசயம். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாட இருப்பது எனக்கு இன்னும கூடுதலானதாக இருக்கும்.

    நான் முதன்முறையாக விராட் கோலியின் கேப்டன்ஷிப் கீழ் விளையாட இருக்கிறேன். ஆனால், மிகவும் ஆர்வமாக இருக்கிறது. சர்வதேச போட்டி மற்றும் ஐபிஎல் தொடரில் அவருக்கு எதிராக ஏராளமான போட்டியில் விளையாடியிருக்கிறேன். அவர் எப்படிபட்ட போட்டியாளர், உந்துதல் உடையவர் என்பது எனக்குத் தெரியும். சில விசயங்களை அவரிடன் அருகில் இருந்து பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன்.

    எனது அனுபவம் எப்போதும் தயாராக இருக்கிறது. உதவி தேவைப்பட்டால் நான் அதற்கு தயாராக இருக்கிறேன். நெருக்கடியான நேரத்தில் விராட் கோலி ஏதாவது கேட்டால், அதன்பின் என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த பாபர் அசாமை நசீர் ஹுசைன் பாராட்டியுள்ளார்.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் தடைபட்டது.

    பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆண்டர்சன், பிராட், ஆர்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் பந்துகளை எந்தவித அச்சமின்றி எதிர்கொண்டு கவர் டிரைவ் சாட் மூலம் அசத்தினார்.

    இதை விராட் கோலி செய்திருந்தால் ஒவ்வொருவரும் பேசியிருப்பார்கள். பாபர் அசாம் என்பதால் ஒருவரும் பேசவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நசீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

    மேலும், பாபர் அசாம் இளம் வீரர், நேர்தியானவர், அனைத்து ஷாட்டுகள் விளையாடும் ஆக்ரோசத்தையும் பெற்றுள்ளார். இனிமேல் இந்த காலக்கட்டத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் நான்கு பேர் அல்லை. பாபர் அசாம் உடன் ஐந்து பேர் எனவும் தெரிவித்துள்ளார்.
    பாதுகாப்பான சூழலை விட்டு யாராவது விலகினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.பி.எல். வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். இந்த பாதுகாப்பான சூழலை விட்டு யாராவது விலகினால் அவர்கள் மீது ஐ.பி.எல். நடத்தை விதிமுறைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதல் நெறிமுறையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    8 அணிகளுக்கும் தனித்தனி ஓட்டல், எப்போதும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட்கோலி தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளார்.
    துபாய்:

    ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட்கோலி (871 புள்ளி), துணை கேப்டன் ரோகித் சர்மா (855 புள்ளி), பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (829 புள்ளி) ஆகியோர் மாற்றமின்றி முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர். அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஒரு இடம் முன்னேறி 22-வது இடத்தையும், பேர்ஸ்டோ ஒரு இடம் ஏற்றம் கண்டு 13-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

    பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் (722 புள்ளி) முதலிடத்திலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (719 புள்ளி) 2-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 4 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தையும், 8 விக்கெட்டுகள் சாய்த்த வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி 6 இடங்கள் அதிகரித்து 51-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ‘ஆல்ரவுண்டர்கள்’ தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதலிடத்தில் தொடருகிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 8-வது இடத்தில் உள்ளார். 
    கேப்டனுக்கு அதிக முக்கியத்துவம் கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக 4 முறை கோப்பையை வென்றுத் தந்தவருமான ரோகித் சர்மா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    அணியின் கேப்டனாக இருக்கும் போது, நமக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடாது என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். நீண்ட திட்டமிடலை யோசித்து பார்த்தால் மற்ற வீரர்களின் பங்களிப்பே மிகவும் முக்கியம். இந்த விஷயத்தில் ஒவ்வொரு கேப்டனின் அணுகுமுறையும் வெவ்வேறு விதமாக இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை கேப்டனுக்கு குறைந்தபட்ச முக்கியத்துவம் என்ற கொள்கை கைகொடுக்கிறது.

    கொரோனா பரவலால் நீண்ட நாட்களாக கையில் பேட்டை எடுக்கவில்லை. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இவ்வளவு காலம் விளையாடாமல் முடங்கி இருப்பது இது தான் முதல்முறையாகும். பயிற்சியை தொடங்கும் போது கொஞ்சம் சவாலாக இருக்கும். விளையாடாத வரை நான் எந்த நிலையில் இருக்கிறேன், உணர்வு எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால் உடல்ரீதியாக மிகவும் வலுவாக உள்ளேன்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள துபாய் ஆடுகளங்கள் சற்று வேகம் குறைந்தவை. இந்திய ஆடுகளங்களுடன் ஒப்பிடும் போது பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. ஆனால் சீதோஷ்ண நிலை கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அங்கு 40 டிகிரி வெயில் கொளுத்தும். நீங்கள் எப்போதும் 40 டிகிரி வெப்ப நிலையில் விளையாடிக்கொண்டு இருப்பதில்லை. அதை சமாளிப்பது சவாலானது. ஆனால் நிலைமையை நேரில் பார்த்த பிறகு சரியான வியூகங்களை வகுப்பது எளிதாகி விடும். போதுமான காலஅவகாசம் இருப்பதால் அவசரப்படத் தேவையில்லை.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஸ்பெயின் வீரரான நடப்பு சாம்பியன் நடால் விலகினார்
    மாட்ரிட்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் வருகிற 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நடக்கிறது. அமெரிக்காவை கொரோனா புரட்டிப்போட்டாலும் இந்த போட்டி திட்டமிட்டபடி நடத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு உயிர்பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி அரங்கேறப்போகும் இந்த போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ஸ்பெயினின் ரபெல் நடால் திடீரென விலகியுள்ளார்.

    34 வயதான நடால் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. நிலைமை இன்னும் கட்டுக்குள் வந்தது மாதிரி தெரியவில்லை. இதனால் நீண்ட யோசனைக்கு பிறகு விருப்பமின்றி அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக அறிவிக்கிறேன். இந்த விஷயத்தில் எனது மனது சொல்வதை பின்பற்றி இந்த முறை அமெரிக்காவுக்கு செல்வதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

    ஏற்கனவே 5 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கால்முட்டி காயத்தில் இருந்து குணமடைய எஞ்சிய சீசன் முழுவதும் ஓய்வு எடுக்கப்போவதாக கூறிவிட்டார். கொரோனா அச்சத்தால் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), முன்னாள் சாம்பியனான சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, பிரான்சின் மான்பில்ஸ், ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ் உள்ளிட்டோரும் அமெரிக்க ஓபனில் இருந்து பின்வாங்கி விட்டனர். பாதுகாப்பு கருதி கடைசி நேரத்தில் மேலும் சிலர் ‘ஜகா’ வாங்கலாம்.

    ஜாம்பவான்களான பெடரரும், நடாலும் ஒரே நேரத்தில் ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இல்லாமல் போவது 1999-ம் ஆண்டு அமெரிக்க ஓபனுக்கு பிறகு இதுவே முதல்முறை என்பது நினைவு கூரத்தக்கது.

    இதற்கிடையே, பிரபல வீரர்களின் விலகலால் இந்திய வீரர் சுமித் நாகலுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவர் தகுதி சுற்று இன்றி நேரடியாக பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். டெல்லியில் வசிக்கும் 22 வயதான நாகல் தரவரிசையில் 127-வது இடம் வகிக்கிறார்.

    அவர் கூறுகையில், ‘கடினமான சூழலிலும் அமெரிக்க ஓபனை நடத்த போட்டி அமைப்பாளர்கள் எடுத்து வரும் தீவிரமான முயற்சி பாராட்டுக்குரியது. அமெரிக்க ஓபனில் நேரடியாக முதல் சுற்றில் ஆடும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அங்கு சென்று விளையாடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து பயிற்சியாளர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வேன். அங்கு எப்படி செல்லப்போகிறேன் என்பது தெரியவில்லை. யாருக்கு தெரியும், ஒரு வேளை இந்த போட்டி ரத்து செய்யப்படலாம்’ என்றார்.

    கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் தகுதி சுற்றுகளில் வெற்றி கண்டு அதன் மூலம் முதல் ரவுண்டில் ரோஜர் பெடரை எதிர்கொண்ட சுமித் நாகல், அதில் முதல் செட்டை கைப்பற்றி அடுத்த 3 செட்டுகளை பறிகொடுத்து தோற்றது குறிப்பிடத்தக்கது.
    ×