search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    156 ரன்கள் விளாசிய ஷான் மசூத்
    X
    156 ரன்கள் விளாசிய ஷான் மசூத்

    மான்செஸ்டர் டெஸ்ட்: பாகிஸ்தான் 326 ரன்னில் ஆல்அவுட்- ஷான் மசூத் 156

    தொடக்க வீரர் ஷான் மசூத் 156 ரன்கள் விளாச, பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி உள்ளது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    ஷான் மசூத், அபித் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபித் அலி 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் அசார் அலி களம் இறங்கினார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அப்போது பாகிஸ்தான் 43 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஷான் மசூத் உடன் இளம் நட்சத்திர வீரர் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாபர் அசாம் 70-வது பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஷான் மசூத்தும் அரைசதம் நோக்கி நகர்ந்தார்.

    மழை அடிக்கடி குறுக்கிட்டதால் முதல் நாளில் 49 ஓவர்களே வீசப்பட்டன. பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் 69 ரன்களுடனும், ஷான் மசூத் 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பாபர் அசாம் நேற்றைய 69 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஆசாத் ஷபிக் 7 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    மறுமுனையில் ஷான் மசூத் 156 பந்தில் அரைசதத்தை கடந்து சதத்தை நோக்கிச் சென்றார். அவருக்கு சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் ஒத்துழைப்பு கொடுக்க 251 பந்துகளை சந்தித்து ஷான் மசூத் சதம் அடித்தார்.

    ஸ்டூவர்ட் பிராட்

    சதாப்கான் 45 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த யாசிர் ஷா 5 ரன்னிலும், முகமது அப்பாஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். ஷான் மசூத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 156 ரன்கள் (319) அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 109.3 ஓவரில் 326 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

    இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், ஜாஃப்ரா ஆர்சர் தலா 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஆண்டர்சன் மற்றும் பெஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    Next Story
    ×