என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரோகித் சர்மா, பொல்லார்ட் ஆகியோர் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்ற ஐந்து முறையும் அந்த அணிக்காக விளையாடியவர்கள் ஆவார்கள்.
    ஐபிஎல் கோப்பை இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ். கடந்த வருடமும் கோப்பையை வென்றிருந்தது. இதன்மூலம் அடுத்தடுத்து கோப்பையை வென்ற 2-வது அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்தடுத்து கோப்பையை வென்றிருந்தது.

    மேலும் அந்த அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அதேபோல் ஐந்து முறையும் அணியில் இருந்த வீரர் என்ற பெருமையை பொல்லார்ட் பெற்றுள்ளார்.

    ரோகித் சர்மா 6 முறை கோப்பையை வென்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
    ஐபிஎல் தொடர் முடிந்த அடுத்த நாளா இன்றே இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டனர்.
    ஐபிஎல் 13-வது சீசன் கடந்த செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நேற்று வரை (நவம்பர் 10) நடைபெற்றது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணியில் இடம் பிடித்திருந்து ஐபிஎல் தொடரில் இடம் பிடித்த வீரர்களும், இடம் பெறாமல் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தவர்களும் இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.

    ஐபிஎல் தொடர் முடிந்த மறுநாளே ஓய்வின்றி அப்படியே சென்றுள்ளனர்.
    அகமதாபாத்தை மையமாகக் கொண்டு ஐபிஎல் தொடரில் 9-வது அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 8 அணிகள் இதில் பங்கேற்றன. 4-வது சீசனில் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 8 ஆக குறைக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு போட்டியில் இருந்து தற்போது வரை 8 அணிகளே விளையாடி வருகின்றன.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2021) நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக ஒரு அணியை சேர்க்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2021 சீசனில் 9 அணிகள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காகவே அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் 9-வது அணியை சேர்க்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.

    அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிக்காக வீரர்கள் அனைவரும் புதிதாக ஏலத்தில் விடப்படுவார்கள் என்று கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வீரர்களின் ஏலம் நடைபெறும். 9-வது அணி அகமதாபாத்தை மையமாக கொண்ட அணியாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஐபிஎல் தொடரில் முதல் ஓவரிலேயே 8 விக்கெட் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் டிரென்ட் போல்ட்.
    நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றைய இறுதிப் போட்டியில் அவரது பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவர் 30 ரன் கொடுத்து, 3 விக்கெட் வீழ்த்தினர். இந்த சீசனில் அவர் மொத்தம் 25 விக்கெட் கைப்பற்றி 3-வது இடத்தை பிடித்தார்.

    போல்ட் ஆட்டத்தின் முதல் பந்திலேயே டெல்லி தொடக்க வீரர் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் இதன்மூலம் இந்த சீசனில் முதல் ஓவரில் 8 விக்கெட் கைப்பற்றினார்.

    ஒரு சீசனில் முதல் ஓவரில் அதிக விக்கெட் கைப்பற்றி போல்ட் புதிய சாதனை படைத்தார். 2016-ம் ஆண்டு புவனேஷ்வர் குமார் 6 விக்கெட்டும், 2013-ல் பிரவீன் குமாரும், 2012-ல் ஜாகீர் கானும் தலா 5 விக்கெட்டுகளை முதல் ஓவரில் கைப்பற்றி இருந்தனர்.
    சூர்யகுமார் முதிர்ச்சி அடைந்த வீரர். அவர் தனது விக்கெட்டை எனக்காக தியாகம் செய்தார் என்று மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    துபாய்:

    மும்பை இந்தியன்ஸ் 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது குறித்து அந்த அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வீரர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்தது.

    இதைப்போல அணியின் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என அனைவரும் உதவியாக இருந்தார்கள். ஒட்டுமொத்த அணியாக இந்த வெற்றியை பெற்று இருக்கிறோம்.

    சூர்யகுமார் யாதவ் முதிர்ச்சி அடைந்த வீரர். அவர் தனது விக்கெட்டை எனக்காக தியாகம் செய்தார். நான் ரன் அவுட் ஆவதை விரும்பாமல் அவர் ரன் அவுட் ஆகி தியாகத்தை வெளிப்படுத்தினார்.

    அணிக்கு சமநிலை ஏற்படுத்துவதற்காகவே ஜெயந்த் யாதவ் இறுதிப்போட்டியில் சேர்க்கப்பட்டார்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் கூறியதாவது:-

    நாங்கள் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்தோம். இதனால் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த தொடர் மிகவும் கடினமான ஒன்றாகும். எனவே இறுதிப் போட்டிக்கு நுழைந்ததே மிகப்பெரிய சாதனை ஆகும். ஆனால் கோப்பையை வெல்ல முடியாமல் போய்விட்டது.

    அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியிலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். கோப்பையை கைப்பற்ற முயற்சிப்போம். எங்களது சிறப்பான செயல்பாட்டுக்கு பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் முக்கிய பங்கு வகித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வங்காளதேச டெஸ்ட் அணியின் கேப்டன் மொமினுல் ஹக்கும் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கிறார்
    டாக்கா:

    வங்காளதேச 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மக்முதுல்லா 2 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் டெஸ்ட் அணியின் கேப்டன் மொமினுல் ஹக்கும் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

    லேசான அறிகுறியுடன் பாதிப்பை சந்தித்து இருக்கும் மொமினுல் ஹக்கும், அவரது மனைவியும் வீட்டில் தனிமைப்படுத்தலை கடைப்பிடித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே வங்காளதேச அணி வீரர்கள் அபு ஜெயத், சைப் ஹஸ்சன், மோர்தசா உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த மாதம் இறுதியில் நடைபெறும் உள்ளூர் 20 ஓவர் போட்டியில் மொமினுல் ஹக் ஆடமாட்டார் என்று தெரிகிறது.
    இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான போட்டியை நேரில் கண்டு களிக்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
    அடிலெய்டு:

    இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான போட்டி தொடர் வருகிற 27-ந் தேதி தொடங்கி ஜனவரி 19-ந் தேதி வரை நடக்கிறது. இரு அணிகள் இடையே 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் அரங்கேறுகின்றன. இதற்காக இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இன்று புறப்பட்டு ஆஸ்திரேலியா செல்கிறது. இந்த போட்டி தொடரில் உள்ளூர் மாநில அரசின் வழிகாட்டுதலுக்கு தகுந்தபடி ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டு களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு கிரிக்கெட் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். கொரோனா மருத்துவ பாதுகாப்பு நடைமுறையின் படி முன்னதாக நடந்த அனைத்து போட்டி தொடர்களும் ரசிகர்கள் அனுமதியின்றி பூட்டிய ஸ்டேடியத்தில் தான் நடந்தது. ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் ஸ்டேடியத்தின் மொத்த இருக்கை வசதியில் 50 சதவீத ரசிகர்களையும், முதலாவது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களையும், 2-வது டெஸ்ட் போட்டிக்கு 25 சதவீத ரசிகர்களையும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு 75 சதவீத ரசிகர்களையும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி டெஸ்ட் போட்டிக்கு தினசரி சுமார் 25 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். போட்டி நடைபெறும் சமயத்தில் நிலவும் சூழ்நிலைக்கு தகுந்தபடி ரசிகர்களின் அனுமதிக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டியில் விராட்கோலி விளையாடமாட்டார் என்பது லேசான ஏமாற்றமும், ஆச்சரியமும் அளிப்பதாக ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரி முதல் வாரத்தில் குழந்தை பிறக்க இருப்பதால் அவர் அடிலெய்டில் டிசம்பர் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் நாடு திரும்புகிறார்.

    அடுத்த 3 டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கருத்து தெரிவிக்கையில், ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டியில் விராட்கோலி விளையாடமாட்டார் என்பது லேசான ஏமாற்றமும், ஆச்சரியமும் அளிக்கிறது. இந்த தொடர் விராட்கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்றாலும் குடும்பத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். விராட்கோலி இல்லாதது டெஸ்ட் போட்டி தொடரில் விறுவிறுப்பை குறைக்கக்கூடும். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் இல்லாத போது இந்திய அணி வெற்றி பெற்றதை போன்று தான் இருக்கும். குறிப்பாக இதுபோன்ற பெரிய போட்டி தொடரில் நீங்கள் சிறந்த அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்’ என்றார்.
    பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    கராச்சி:

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தொடரை இழந்ததை தொடர்ந்து டெஸ்ட் அணியின் கேப்டனான 35 வயது அசார் அலி மாற்றம் செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாயின. இந்த நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அசார் அலி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக 26 வயதான பாபர் அசாம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    20 ஓவர் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான பாபர் அசாம் இனிமேல் 3 வகையான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) போட்டிக்கும் கேப்டனாக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அடுத்த மாதம் இறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து சென்று 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குரிய இந்த தொடரின் முதலாவது ஆட்டம் மவுன்ட்மாங்கானுவில் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பாபர் அசாம் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.
    ஐபிஎல் தொடரில் 670 ரன்கள் குவித்த கேஎல் ராகுல் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி கிடைத்துள்ளது.
    துபாய்:

    ஐபிஎல் 13-வது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற 60 ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. 

    இந்த லீக் ஆட்டங்களில் அதிக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்படும்.

    அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 14 போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 670 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

    17 போட்டிகளில் 30 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடா பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

    மேலும் விருது பெற்றவர்கள்:

    வளர்ந்து வரும் வீரர்( எமர்ஜிங் பிளேயர்) - தேவ்தத் படிக்கல் (ஆர்சிபி)

    ஃபேர் பிளே விருது - ரோகித் சர்மா (மும்பை) 

    கேம் சேஞ்சர் விருது - கேஎல் ராகுல் (பஞ்சாப்) 

    சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - பொல்லார்டு (மும்பை)

    அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருது - இஷான் கிஷண் - (மும்பை- 30 சிக்சர்)

    பவர் பிளேயர் விருது - டிரெண்ட் போல்ட் (மும்பை)

    மதிப்பு மிகுந்த வீரர் - ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்)
    ஐபில் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர் டிரெண்ட் போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    துபாய்:

    துபாயில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இறுதிப்போட்டியில் வழங்கப்பட்ட விருதுகள்:

    ஆட்ட நாயகன் விருது மும்பை அணியின் டிரெண்ட் போல்ட்டுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

    கேம் சேஞ்சர் விருது - ரோகித் சர்மா

    சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - இஷாந்த் கிஷண்

    அதிக சிக்சருக்கான விருது - ரோகித் சர்மா

    பவர் பிளேயர் விருது - போல்ட்
    ஐபிஎல் தொடரில் 5-வது முறை வென்ற கோப்பையுடன் மும்பை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
    துபாய்:

    துபாயில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படும். 

    இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    2-வது இடம் பெற்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 
    ×