என் மலர்
விளையாட்டு
மும்பை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டி ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெற்று வந்தது.
இந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டது. மார்ச்-மே மாதங்களில் நடைபெற இருந்த இந்த போட்டி செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடத்தப்பட்டது.
சமீபத்தில் முடிந்த இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.
கொரோனா பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. ரசிகர்கள் டெலிவிஷன், டிஜிட்டல் மூலம் இந்த போட்டியை வெகுவாக ரசித்தார்கள்.
கொரோனா பாதிப்புக்கு இடையே ஐ.பி.எல். போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாக இருந்தது. டெலிவிஷன் மற்றும் டிஜிட்டல் மூலம் பார்வையாளர்களில் எண்ணிக்கையில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.
கடந்த ஐ.பி.எல். போட்டியை விட இந்த ஐ.பி.எல். போட்டியை 28 சதவீதம் பேர் கூடுதலாக பார்த்து உள்ளனர்.
இதுகுறித்து ஐ.பி.எல். சேர்மன் பிரிசேஸ் பட்டேல் கூறும்போது, “ஐ.பி.எல். போட்டி எப்போதுமே உலக தரம் வாய்ந்தது. இதனால் இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டிக்கு ஆதரவு அளித்த அனைத்து விளம்பர நிறுவனங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டில் கடந்த ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலால் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021-ம் ஆண்டில் ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.
தற்போது கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு யுக்திகளை பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் விளையாட வரும் வீரர், வீராங்கனைகள் அங்கு 14 நாட்கள் முதலில் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 14 நாள் தனிமைப்படுத்துதலை அமல்படுத்துவது மிகவும் கடினம் என்பதால் அந்த நடைமுறை பின்பற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு போட்டி அமைப்பாளர்கள் விடை அளித்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி தோஷிரோ முட்டோ கூறுகையில், ‘ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி படைத்த வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், போட்டி தொடர்பான அலுவலர்கள் குறிப்பிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஜப்பானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாட்டு ரசிகர்களை அனுமதிப்பது குறித்து அடுத்த ஆண்டு நிலைமைக்கு தகுந்தபடி முடிவு எடுக்கப்படும். ரசிகர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்துதல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதனால் அவர்கள் வருவதற்கு முன்பும், ஜப்பான் வந்த பிறகும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும்’ என்றார்.
வீரர், வீராங்கனைகளுக்கு 14 நாள் தனிமைப்படுத்துதல் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் ஜப்பான் வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. இது தொடர்பான பாதுகாப்பு வரைமுறைகள் விரைவில் வகுக்கப்படும் என்றும் போட்டி அமைப்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு ‘பச்சைக்கொடி’ காட்டப்படும் என்று நம்புவதாக கூறியுள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் 3 நாள் சுற்றுப்பயணமாக அடுத்த வாரம் ஜப்பான் செல்கிறார். அப்போது ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள் குறித்தும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தோஷிரோ முட்டோவிடம் ஆலோசனை நடத்துகிறார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான 60 வயது மரடோனா உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 2-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ஆபரேஷன் செய்து ரத்த உறைவு அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்த மரடோனா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். தற்போது அவர் தனது மகளின் வீட்டில் தங்கி இருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான யூனிஸ்கான் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தற்காலிகமாக பணியாற்றினார். அவரது செயல்பாடு சிறப்பாக இருந்ததை அடுத்து அவரை பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கிரிக்கெட் வாரியம் நேற்று நியமனம் செய்துள்ளது. யூனிஸ்கான் 2022-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை அந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம்கான் கூறுகையில், ‘இங்கிலாந்து தொடரில் யூனிஸ்கானின் செயல்பாட்டின் தாக்கம் அருமையாக இருந்ததாக அணி நிர்வாகம் தரப்பில் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக குறைந்தபட்சம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவர் பணியாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய செயல் திட்டம், அர்ப்பணிப்பு, ஆட்ட அறிவு முதன்மையானதாகும். அவரது நியமனத்தின் மூலம் திறமையான பேட்ஸ்மேன்கள் பலரும் பயன் அடைவார்கள் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் அணிக்கு போட்டிகள் இல்லாத சமயத்தில் யூனிஸ்கானின் திறமையை உள்ளூர் பேட்ஸ்மேன்களின் திறமையை வளர்க்க பயன்படுத்தி கொள்வோம். அதாவது போட்டிகள் இல்லாத நேரத்தில் கராச்சியில் உள்ள கிரிக்கெட் உயர் திறன் மையத்தில் முகமது யூசுப்புடன் இணைந்து அவர் பணியாற்றுவார்‘ என்றார்.
அடுத்த மாதம் தொடங்கும் நியூசிலாந்து தொடரில் இருந்து பேட்டிங் பயிற்சியாளர் பணியை தொடங்க இருக்கும் யூனிஸ்கான் கருத்து தெரிவிக்கையில், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் நீண்ட நாள் அடிப்படையில் இணைய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பை கவுரவமாக கருதுகிறேன். அடுத்து வரும் நியூசிலாந்து தொடரை எதிர்நோக்கி இருக்கிறேன். தேசிய அணியை தாண்டி உள்ளூர் திறமையை கண்டறிந்து வளர்க்கவும் எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. உள்ளூர் திறமையை மேம்படுத்துவதிலும் முழுமையான ஆர்வத்தை காட்டுவேன்‘ என்றார்.
42 வயதான யூனிஸ்கான் பாகிஸ்தான் அணிக்காக 118 டெஸ்ட், 265 ஒருநாள் மற்றும் 25 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பாகிஸ்தான் பெண்கள் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக டெஸ்ட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அர்ஷத் கான் ஒரு ஆண்டுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.






