என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை வருகிற 2021ம் ஆண்டில் 8ல் இருந்து 9 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த எண்ணிக்கை வரும் 2023ம் ஆண்டில் 10 ஆகவும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த நீண்டகால திட்டம் பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனரான ராகுல் டிராவிட் கூறும்பொழுது, திறமை அடிப்படையில் விரிவாக்கத்திற்கு ஐ.பி.எல். தயாராகி வருகிறது என நான் உணர்கிறேன்.

    நிறைய திறமையான வீரர்கள் விளையாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். நிறைய அணிகள் இருக்கும்பொழுது, அனைத்து திறமையான வீரர்களும் அணியில் இடம் பெறுவார்கள். தரத்திலும் குறைவு இருக்காது என கூறியுள்ளார்.
    மக்கள் காயம் குறித்து புரிந்து கொள்ளாமல், தேவையில்லாமல் பேசுகிறார்கள் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்ததில் மிகப்பெரிய அளவில் சர்ச்சை. ரோகித் சர்மா காயத்தால் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். வருண் சக்ரவர்த்திக்கு காயம் ஏற்பட்டிருந்த போதிலும் அணியில் சேர்க்கப்பட்டார். சகா காயத்தால் அவதிப்பட்ட நிலையிலும் டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பின்னர் பல்வேறு விமர்சனங்கள் எழும்பிய நிலையில் வருண் சக்ரவர்த்தி நீக்கப்பட்டு நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ளார்.

    இந்நிலையில் காயம் குறித்து புரிந்து கொள்ளாமல் மக்கள் தேவையற்று பேசுகிறார்கள் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘வீரர்கள் காயம் குறித்து யாருக்குத் தெரியும்?. எங்களுக்குத் தெரியும், இந்திய பிசியோவிற்குத் தெரியும். என்சிஏ-வுக்குத் தெரியும். பிசிசிஐ எப்படி வேலை செய்கிறது என்பது குறித்து மக்களுக்கு தெரியும். பிசிசிஐ டிரைனர்ஸ், பிசியோ, சகா ஆகியோருக்கு தெரியும். அவருக்கு இரண்டாம் நிலை ஹாம்ஸ்டிரிங் பிரச்சினை உள்ளது. மக்கள் காயம் குறித்து புரிந்து கொள்ளவில்லை. அதனால் தேவையில்லாமல் பேசுகிறார்கள்’’ என்றார்.
    ஐபிஎல் 13-வது சீசனில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய ஐந்து டாப் வீரர்களை சேவாக் கண்டறிந்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக். இவர் டுவிட்டர் போடுவதிலும், விமர்சனம் செய்வதிலும் வித்தியாசமானவர். ஐபிஎல் 13-வது சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய ஐந்து வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரோன் பிஞ்ச், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அந்த்ரே ரஸல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், ஆர்சிபி-யின் டேல் ஸ்டெயின் ஆகியோர்தான் அந்து ஐந்து வீரர்கள்.
    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ், இந்தியாவின் டி வில்லியர்ஸ் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
    தென் ஆப்பிரிக்காவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் மைதானத்தின் எல்லா பகுதிகளுக்கும் சுழற்பந்து, வேகப்பந்து வீச்ச என பாராமல் விளாசக் கூடியவர்.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். ஒவ்வொரு சீசனிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருந்தாலும் அவருக்கு இன்னும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் இந்தியவின் டி வில்லியர்ஸ் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 13-வது சீசனில் 16 போட்டியில் 480ரன்கள் விளாசியுள்ளார். ஸ்டிரைக் ரேட் 145.01ஆகும்.

    ‘‘சூர்யகுமார் யாதவ் தன்னைத்தானே சிறந்த கேம் சேஞ்சராக மாற்றிக்கொண்டு, மும்பை இந்தியன்ஸ்க்கு மேட்ச் வின்னராக திகழ்கிறார். அவருடைய பேட்டிங்கில் அதிகமாக பொறுப்பு எடுத்துக் கொள்கிறார்.

    அவர் ஸ்டிரைக் ரேட் 100 வைத்துள்ளார். நீங்கள் ஸ்டிரைக் ரேட் 100 வைக்க வேண்டுமென்றால், முதல் பந்தில் இருந்து சிறப்பாக அடித்து விளையாட வேண்டும். அனைத்து வகையான ஷாட்டுகளை விளையாடும் அவரை தடுத்து நிறுத்துவது கடினம். கவருக்கு மேல் தூக்கி அடிக்கிறார்.

    ஸ்வீப் ஷாட் சிறப்பாக விளையாடுகிறார். அதேபோல் சுழற்பந்து வீச்சையும், வேகப்பந்து வீச்சையும் விளாசுகிறார். அவர் இந்தியாவின் ஏபி டி வில்லியர்ஸ்’’ என்றார்.
    லிவர்பூல் நட்சத்திர வீரர் முகமது சாலா, தனது சொந்த நாட்டு அணிக்காக விளையாடும்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா. இவர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர். ஆப்பிரிக்கா தேசிய கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. எகிப்து நாளை நடக்கும் ஆட்டத்தில் டோகாவை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்நிலையில் முகமது சாலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. அவருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. பாசிட்டிவ் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். லிவர்பூல் அணியின் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததால் நாங்கள் எளிதாக கோப்பையை வெல்ல முடியும் என்பது இல்லை என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட்டில் ஆஷஸ் கிரிக்கெட் தொடருக்குப்பின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க தொடர் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலானது. குறிப்பாக ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடும்போது பயங்கரமாக இருக்கும்.

    கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. இந்த முறை அதற்கு தக்க பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா காத்திருக்கிறது.

    மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி  முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுகிறார். கடைசி மூன்று போட்டிகளில் அவர் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

    இருந்தாலும் எங்களால் கோப்பையை எளிதாக கைப்பற்றி விட இயலாது என்று அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘விராட் கோலி இல்லாதது இந்த தொடருக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.  எப்போதுமே யாராக இருந்தாலும் உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவார்கள். ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபஸ்சேன் ஆகியோருடன் விராட் கோலி உலகின் சிறந்த வீரர் என நான் நம்புகிறேன்.

    இது ஏமாற்றம்தான். இருந்தாலும் இந்திய அணி சூப்பர் ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்திய அணியில் புஜாரா, ரகானே மற்றும் சில இளம் வீரர்கள் உள்ளனர். இது இன்னும் மிகப்பெரிய சவாலான தொடராகத்தான் இருக்கப்போகிறது.

    விராட் கோலி இல்லாததால் நாங்கள் எளிதாக கோப்பையை வெல்வோம் என்று அர்த்தம் இல்லை. நாங்கள் இன்னும் அதிகமான வேலை செய்ய வேண்டியுள்ளது.’’ என்றார்.

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டாக டிசம்பர் 17-ந்தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்டாக டிசம்பர் 26-ந்தேதி தொடங்குகிறது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ந்தேதி தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில்   ஜனவரி 15-ந்தேதி தொடங்குகிறது.
    துபாயில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் 14 நாட்கள் கோரன்டைனை தொடங்கியுள்ளனர்.
    ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. செப்டம்பர் 19-ந்தேதி முதல் கடந்த நவம்பர் 10-ந்தேதி வரை (கடந்த திங்கட்கிழமை) நடைபெற்றது. இறுதிப் போட்டி முடிந்த நிலையில் 11-ந்தேதி துபாயில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டனர்.

    ஒயிட் பால் கிரிக்கெட் அணி மற்றும் டெஸ்ட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் என 25 பேர் நேற்று ஆஸ்திரேலியா சென்றடைந்தனர்.

    சிட்னி சென்றடைந்ததும் இந்திய அணி வீரர்கள் 14 நாட்கள் கோரன்டைனை தொடங்கியுள்ளனர். 14 நாட்கள் தனிமையில் இருந்தாலும் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. தனிமையில் இருக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் கோரன்டைனில் சரியான துணை என டுவிட்டரில் பதிவிட்டு, நானேதான் கம்பெனி எனத் தெரிவித்துள்ளார்.
    பார்சிலோனாவுக்காக விளையாடிய நேரத்தில் கூடுதலாக பணம் செலுத்தியதாக கூறப்படும் நிலையில் நெய்மரிடம் 12 மில்லியன் டாலர் பணத்தை திரும்ப கேட்கிறது பார்சிலோனா.
    பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரராக திகழ்பவர் நெய்மர். இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான பார்சிலோனாவுக்காக கடந்த 2013 முதல் 2017-வரை விளையாடினார். அதன்பின் கால்பந்து வரலாற்றில் மிகவும் அதிகத் தொகையான 222 மில்லியன் யூரோவிற்கு பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணிக்கு சென்றார்.

    2013-ம் ஆண்டு பிரேசில் கிளப்பான சான்டோஸில் இருந்து பார்சிலோனாவுக்கு மாறினார். அப்போது நெய்மருக்கான உண்மையான டிரான்ஸ்பர் தொகையை பார்சிலோனா மறைக்கிறது. வரி முறைகேட்டை தவிர்ப்பதற்காக நெய்மருக்கு பார்சிலோனா அதிக அளவில் சம்பளம் கொடுக்கிறது என குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் பார்சிலோனா 11.8 மில்லியன் டாலர் தொகை கண்டியிருக்க வேண்டியதில்லை என சமீபத்தில் இந்த விவகாரத்தை முடித்து வைத்தனர். இதனால் நெய்மர் அந்தத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என பார்சிலோனா விரும்புகிறது.

    கொரோனா வைரசால் பார்சிலோனா கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. வீரர்களை பெரிய அளவில் ஒப்பந்தம் செய்யவில்லை. வீரர்களின் சம்பளத்தை மிகப்பெரிய அளவில் குறைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான எம்எஸ் டோனி கோழிப்பண்ணை வணிகத்தில் கால்பதிக்கிறார்.
    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்எஸ் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கிரிக்கெட் தவிர மற்ற தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார். சமீபத்தில் மனைவியுடன் இணைந்து பொழுதுபோக்கு துறையில் அடியெடுத்து வைத்தார்.

    இவருக்கு ராஞ்சியில் பண்ணை வீடு உள்ளது. இவருக் இயற்கை உர விவசாயத்தில் அதிக ஈடுபாடு உண்டு. தர்பூசணியை இயற்கை உரத்தில் அதிக அளவில் மகசூல் பெறுவது எப்படி என்பதை கற்றுக்கொண்டதாக ஏற்கனவே பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் கோழிப்பண்ணை வணிகத்தில் கால் பதிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் உள்ள தண்ட்லா என்ற இடத்தில் வினோத் மேத்தா என்பவர் கதக்நாத் கோழி பண்ணை வைத்துள்ளார். அவரிடம் இருந்து 2000 கோழிகள் வாங்குவற்கு டோனியின் பண்ணையை நிர்வகிக்கும் மானேஜர் ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    இதை உறுதி செய்துள்ள வினோத் மேத்தா, ‘‘டோனியின் பண்ணை மானேஜர் கிரிஸ் விகாஸ் கேந்த்ரா மற்றும் எம்பி கதக்நாத் மொபைல் போன் ஆப் மூலம் தொடர்பு  கொண்டார். அப்போது 2000  கோழிக்கான ஆர்டரை பெற்றேன். டிசம்பர் மாதம் 15-ந்தேதி ராஞ்சியில் டெலிவரி செய்ய இருக்கிறேன். முன் பணம் ஏற்கனவே என்னுடைய அக்கவுண்ட்டில் செலுத்தப்பட்டுவிட்டது. பிரபலான எம்எஸ் டோனியின் பண்ணைக்கு கதக்நாத் கோழியை வழங்க இருப்பதில் பெருமை அடைகிறேன்’’ என்றார்.
    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா மிகவும் எளிதாக வெல்லும் என மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணி கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி டிசம்பர் 17-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த முறை ஆஸ்திரேலியா எளிதாக இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்லும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் விராட் கோலி மூன்று போட்டிகளில் விளையாடாதது என்பதுதான் என விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து வாகன் தனது டுவிட்டர் பக்க்தில் ‘‘விராட் கோலி ஆஸ்திரேலியாவில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. முதல் குழந்தை பிறக்க இருப்பதால் அவரது முடிவு சரியானது. ஆனால், இதற்கான அர்த்தம் ஆஸ்திரேலியா மிகவும் எளிதாக தொடரை வெல்லும்’’  என்றார்.
    காயம் காரணமாக இந்த ஆண்டில் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாத ரோஜர் பெடரருக்கு தர வரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    பாரீஸ்:

    டென்னிஸ் வீரர்களின் தர வரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டுள்ளது. அதன்படி ஜோகோவிச் (செர்பியா) தொடர்ந்து முதல் இடத்திலும், ரபேல் நடால் (ஸ்பெயின்) 2-வது இடத்திலும் உள்ளனர்.

    காயம் காரணமாக இந்த ஆண்டில் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாத ரோஜர் பெடரருக்கு தர வரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    அவர் தற்போது 5-வது இடத்துக்கு பின் தங்கிய நிலையில் உள்ளார்.

    டென்னிஸ் உலகில் ரோஜர் பெடரரும், ரபெல் நடாலும் தான் அதிக கிராண்ட் சலாம் பட்டங்களை வென்று உள்ளனர். இருவரும் தலா 20 கிராண்ட் சலாம்களை வென்று சாதித்து உள்ளனர்.

    ஆஸ்திரியாவை சேர்ந்த டெமினிக் தீம் 3-வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் நடந்த பாரீஸ் மாஸ்டர் போட்டியில் வெற்றி பெற்ற ரஷ்யாவின் மெட்வதேவ் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

    சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-வது இடத்திலும், அலெக்சாண்டர் சுவெரேவ் (ஜெர்மனி) 7-வது இடத்திலும் உள்ளனர்.

    ஐ.பி.எல். போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐ.பி.எல். போட்டியை விட இந்த ஆண்டு 28 சதவீதம் பேர் கூடுதலாக பார்த்து உள்ளனர்.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டி ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெற்று வந்தது.

    இந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டது. மார்ச்-மே மாதங்களில் நடைபெற இருந்த இந்த போட்டி செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடத்தப்பட்டது.

    சமீபத்தில் முடிந்த இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    கொரோனா பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. ரசிகர்கள் டெலிவி‌ஷன், டிஜிட்டல் மூலம் இந்த போட்டியை வெகுவாக ரசித்தார்கள்.

    கொரோனா பாதிப்புக்கு இடையே ஐ.பி.எல். போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாக இருந்தது. டெலிவி‌ஷன் மற்றும் டிஜிட்டல் மூலம் பார்வையாளர்களில் எண்ணிக்கையில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.

    கடந்த ஐ.பி.எல். போட்டியை விட இந்த ஐ.பி.எல். போட்டியை 28 சதவீதம் பேர் கூடுதலாக பார்த்து உள்ளனர்.

    இதுகுறித்து ஐ.பி.எல். சேர்மன் பிரிசேஸ் பட்டேல் கூறும்போது, “ஐ.பி.எல். போட்டி எப்போதுமே உலக தரம் வாய்ந்தது. இதனால் இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டிக்கு ஆதரவு அளித்த அனைத்து விளம்பர நிறுவனங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.

    ×