என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி, நாதன் லயன்
    X
    விராட் கோலி, நாதன் லயன்

    கோலி இல்லை என்றாலும் சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர்: நாதன் லயன்

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததால் நாங்கள் எளிதாக கோப்பையை வெல்ல முடியும் என்பது இல்லை என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட்டில் ஆஷஸ் கிரிக்கெட் தொடருக்குப்பின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க தொடர் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலானது. குறிப்பாக ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடும்போது பயங்கரமாக இருக்கும்.

    கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. இந்த முறை அதற்கு தக்க பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா காத்திருக்கிறது.

    மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி  முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுகிறார். கடைசி மூன்று போட்டிகளில் அவர் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

    இருந்தாலும் எங்களால் கோப்பையை எளிதாக கைப்பற்றி விட இயலாது என்று அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘விராட் கோலி இல்லாதது இந்த தொடருக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.  எப்போதுமே யாராக இருந்தாலும் உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவார்கள். ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபஸ்சேன் ஆகியோருடன் விராட் கோலி உலகின் சிறந்த வீரர் என நான் நம்புகிறேன்.

    இது ஏமாற்றம்தான். இருந்தாலும் இந்திய அணி சூப்பர் ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்திய அணியில் புஜாரா, ரகானே மற்றும் சில இளம் வீரர்கள் உள்ளனர். இது இன்னும் மிகப்பெரிய சவாலான தொடராகத்தான் இருக்கப்போகிறது.

    விராட் கோலி இல்லாததால் நாங்கள் எளிதாக கோப்பையை வெல்வோம் என்று அர்த்தம் இல்லை. நாங்கள் இன்னும் அதிகமான வேலை செய்ய வேண்டியுள்ளது.’’ என்றார்.

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டாக டிசம்பர் 17-ந்தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்டாக டிசம்பர் 26-ந்தேதி தொடங்குகிறது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ந்தேதி தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில்   ஜனவரி 15-ந்தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×