என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியாவுக்கு எல்லை பிரச்சினை மூலம் குடைச்சல் கொடுத்து வரும் சீன நாட்டை சேர்ந்த நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஸ்பான்சர் ஒப்பந்தம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பின.
    புதுடெல்லி:

    32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கான சீருடை அறிமுக விழா கடந்த வாரம் டெல்லியில் நடந்தது. இந்திய அணிக்குரிய சீருடை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை (கிட்ஸ்) சீனாவைச் சேர்ந்த லி நிங் என்ற விளையாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ ஸ்பான்சர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அளித்து இருந்தது.

    இந்தியாவுக்கு எல்லை பிரச்சினை மூலம் குடைச்சல் கொடுத்து வரும் சீன நாட்டை சேர்ந்த நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஸ்பான்சர் ஒப்பந்தம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பின. இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் ‘கிட்ஸ்’ ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் இருந்து லி நிங் நிறுவனத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று முன்தினம் அதிரடியாக கழற்றி விட்டது.

    இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா கூறுகையில் ‘சீன நிறுவனம் ஸ்பான்சரில் இருந்து நீக்கப்பட்ட விஷயத்தில் யாருடைய பெயரையும் இழுக்க விரும்பவில்லை. மீடியாக்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் இருந்து வந்த விமர்சனத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சர் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்கான காலம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஸ்பான்சருக்காக யாருக்கும் நெருக்கடி கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. ஸ்பான்சர் ஒப்பந்தம் பரஸ்பர சம்மதம் கொண்டதாக இருக்க வேண்டும். இந்திய அணியினரின் சீருடையில் ஸ்பான்சர் பெயர் இடம் பெறுமா? அல்லது ஸ்பான்சர் பெயர் இல்லாமல் இருக்குமா? என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும். சீருடைகள் தயாராக இருக்கிறது.

    கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இந்தியா உள்பட 10 நாடுகளுக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்று வெளியாகி இருக்கும் செய்தி யூகத்தின் அடிப்படையிலானதாகும். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இருந்தோ? அல்லது போட்டி அமைப்பு குழுவிடம் இருந்தோ எங்களுக்கு அப்படி எந்த தகவலும் வரவில்லை. ஆனாலும் இந்த விஷயத்தில் தெளிவான நிலையை தெரிவிக்குமாறு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் போட்டி அமைப்பாளர்களை நாங்கள் கேட்டு இருக்கிறோம். கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தில் மற்ற பல நாடுகளை விட இந்தியா நல்ல நிலையில் தான் இருக்கிறது.’ என்றார்.

    இதற்கிடையே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் அங்கம் வகிப்பவர்களின் சீருடையில் எந்தவொரு ஸ்பான்சர் நிறுவனத்தின் பெயரும் இடம் பெறாது. சீருடையில் இந்தியா என்று மட்டுமே பொறிக்கப்பட்டு இருக்கும் என்று மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று டுவிட்டரில் அறிவித்தார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து சக்காரி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
    பாரீஸ்

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 9-ம் நிலை வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து), தரவரிசையில் 18-வது இடம் வகிக்கும் மரியா சக்காரியை (கிரீஸ்) எதிர்கொண்டார். அதிரடியான ஷாட்டுகளினால் ஸ்வியாடெக்கை திணறடித்த சக்காரி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றியை ருசித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியில் கிரீஸ் வீராங்கனை ஒருவர் அரைஇறுதியை எட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும். அதே சமயம் பிரெஞ்ச் ஓபனில் தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் வெற்றி கண்ட ஸ்வியாடெக்கின் வீறுநடை முடிவுக்கு வந்தது. இந்த ஆட்டம் 1 மணி 35 நிமிடங்கள் நீடித்தது. ‘வெற்றியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நிலையை எட்டியதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. மிகவும் மகிழ்ச்சியில் உள்ளேன்’ என்று 20 வயதான சக்காரி கூறி உணர்ச்சிவசப்பட்டார்.

    வெற்றி மகிழ்ச்சியில் சக்காரி, ரபெல் நடால், கிரெஜ்சிகோவா.


    மற்றொரு கால்இறுதியில் 33-ம் நிலை வீராங்கனையான பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) 7-6 (8-6), 6-3 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் கோகோ காப்பை தோற்கடித்து முதல்முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். முதல் செட்டில் கிரெஜ்சிகோவா 0-3, 3-5 என்ற வீதம் பின்தங்கி இருந்த போதிலும் அதில் இருந்து மீண்டு டைபிரேக்கர் வரை போராடி எழுச்சி பெற்றார்.

    இன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் சக்காரி- கிரெஜ்சிகோவா, அனஸ்டசியா பாவ்லிசென்கோவா (ரஷியா)- தமரா ஜிடன்செக் (சுலோவேனியா) ஆகியோர் மோதுகிறார்கள். இந்த 4 பேரும் இதற்கு முன்பு கிராண்ட்ஸ்லாமில் அரைஇறுதிக்கு வந்தது கிடையாது. எனவே இவர்களில் ஒருவரை முதல்முறையாக பிரெஞ்ச் ஓபன் மகுடம் அலங்கரிக்கப்போகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 13 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை (அர்ஜென்டினா) வீழ்த்தி 14-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபனில் நடால் பதிவு செய்த 105-வது வெற்றி இதுவாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 7-6 (7-3), 7-5 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீரர் டெனில் மெட்விடேவை(ரஷியா) விரட்டியடித்தார். சிட்சிபாஸ் அரைஇறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) எதிர்கொள்கிறார்.
    உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரான டேனிஷ் மெட்வதேவ் (ரஷியா) கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரான டேனிஷ் மெட்வதேவ் (ரஷியா) நேற்று நள்ளிரவு நடந்த கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    5-ம் நிலை வீரரான ஸ்டெபானோஷ் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3 , 7-6 ( 7-3 ), 7-5 என்ற நேர் செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 19 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    பெண்கள் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் கால் இறுதியில் சோகோ கவூப் (அமெரிக்கா)-பார்பரா கிரெஜி கோவா (ரஷியா) மோதுகிறார்கள். மாலை 3.45 மணிக்கு நடைபெறும் கால் இறுதியில் 8-வது வரிசையில் உள்ள இகாஸ்வாடேக் (போலந்து)- 17-வது இடத்தில் இருப்பவரான மரியா சக்காரி மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறுபவர்கள் அரை இறுதியில் சந்திப்பார்கள்.

    நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் அனஸ்டசியா (ரஷியா)- தமரா ஷிடென்செக் (சுலோ வேனியா) மோதுகிறார்கள். 

    தமிழக வீரர் அஸ்வின் குறித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் பதிலடி கொடுத்து இருந்தார்.

    சவுத்தம்டன்:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். சென்னையை சேர்ந்த அவர் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.

    34 வயதான அஸ்வின் 78 டெஸ்டில் விளையாடி 409 விக்கெடுகள் வீழ்த்தி உள்ளார். அவர் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் தற்போது 4-வது இடத்தில் உள்ளார்.

    இதற்கிடையே அஸ்வின் எக்காலத்திற்கும் தலைசிறந்த பந்து வீச்சாளர் என்று அழைப்பதில் தனக்கு சிக்கல் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருந்தார். வெளிநாடுகளில் அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றாதது குறித்து அவர் தனது விமர்சனத்தில் தெரிவித்து இருந்தார்.

    சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் விவாதமானது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் இதற்கு பதிலடி கொடுத்து இருந்தார். அஸ்வின் சிறந்த பவுலர் என்று பாராட்டி இருந்தார்.

    இதையும் படியுங்கள்... அஸ்வின் குறித்து மஞ்ச்ரேக்கருக்கு கருத்துக்கு இயன் சேப்பல் பதிலடி

    இதேபோல தமிழகத்தை சேர்ந்த அபினவ் முகுந்தும் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்தார். அவர் ஒரு சகாப்தம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதைத்தொடர்ந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    எக்காலத்துக்கும் சிறந்த வீரர் என்பது கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் உயரிய பாராட்டு. டான் பிராட்மேன், சோபர்ஸ், கவாஸ்கர், தெண்டுல்கர், விராட்கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் என்னுடைய மனதில் எக்காலத்துக்கும் சிறந்த வீரர்களாக இடம் பெற்று உள்ளனர்.

    உரிய மரியாதையுடன் எக்காலத்துக்கும் சிறந்த வீரர் என்ற பட்டியலில் அஸ்வின் இடம் பெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் மஞ்ச்ரேக்கர் டுவிட்டை மறுபதிவு செய்து அஸ்வின் கிண்டல் செய்து உள்ளார்.

    அந்நியன் படத்தில் சாரியிடம் (நடிகர் விவேக் கதாபாத்திரம்) “அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்கிறது” என்று அம்பி (நடிகர் விக்ரம் கதாபாத்திரம்) கூறும் மீம்சை அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

    இந்த கிண்டல் பதிலடி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களில் ரி‌ஷப்பண்ட் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரி‌ஷப்பண்ட். விக்கெட் கீப்பரான அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக அவர் இருக்கிறார்.

    இந்தநிலையில் இந்திய அணிக்காக ரி‌ஷப்பண்ட் 100 டெஸ்டில் விளையாடுவார் என்று தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழகத்தை சேர்ந்த அவர் இதுதொடர்பாக கூறியதாவது:-

    கடந்த சில மாதங்களாக ரி‌ஷப்பண்ட் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இக்கட்டான நேரங்களில் சிறப்பாக விளையாடி அணியை காப்பாற்றி இருக்கிறார்.

    எந்த போட்டியாக இருந்தாலும் அவரது ஆட்டம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

    மேலும் ரி‌ஷப்பண்ட்டுக்கு சவால்கள் மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அதுதான் அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருக்கிறது.

    2 ஆண்டுக்கு முன்பு நடந்த ஐ.பி.எல். போட்டியில் எலிமினேட்டர் ஆட்டத்தில் அவர் தனி ஒருவராக நின்று டெல்லி அணிக்கு வெற்றி தேடி தந்தார். இதுபோல பல நெருக்கடியான போட்டிகளில் ரன்களை எடுத்து இருக்கிறார்.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களில் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். ரி‌ஷப்பண்ட் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெறுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் நிச்சயமாக 100 டெஸ்டுகளில் விளையாடுவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்திய அணிக்கு 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விளையாடிய தினேஷ் கார்த்திக் தற்போது டெலிவி‌ஷன் வர்ணனை செய்யும் பணியில் ஈடுபட உள்ளார்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கவாஸ்கருடன் இணைந்து அவர் வர்ணனை செய்கிறார்.

    இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது.
    சவுதாம்ப்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது.

    கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    மைக்கேல் காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாகவும் தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பாரோவும் பணியாற்றவுள்ளார்கள். கிறிஸ் பிராட், போட்டியின் நடுவராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் முடிந்த பிறகு,  இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 -ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 14 -ல்முடிவடைகிறது. இந்தச் சுற்றுப்பயணத்துக்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.
    பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் கிரீசை சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெத்வதேவை சந்தித்தார்.

    இதில் சிட்சிபாஸ் 6-3, 7-6,7-5 என்ற கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 46ம் நிலை வீரரான ஸ்பெயினை சேர்ந்த டேவிடோவிச் போகினாவுடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வெரேவ் 6-4, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டேவிடோவிச் போகினாவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஸ்வெரேவ் முதல்முறையாக முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் சிட்சிபாஸ், ஸ்வெரேவை சந்திக்க  உள்ளார்.
    2020-21-ம் ஆண்டில் நடந்த முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் சிறந்த தொடருக்கான அங்கீகாரத்தை தட்டிச் சென்றது.
    துபாய்:

    விரைவில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அரங்கேற உள்ள நிலையில் இதுவரை நடந்துள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலேயே உச்சக்கட்டமாக மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எது? என்பதை அறிய சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்தது. இதையொட்டி 144 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பரபரப்பாகவும், திரில்லிங்காகவும் அமைந்த 16 தொடர்களை அடையாளம் கண்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் 1882-ம் ஆண்டு, 1932-ம் ஆண்டுகளில் நடந்த போட்டிகளும் இடம் பிடித்தன.

    இவற்றில் இருந்து இந்தியா-ஆஸ்திரேலியா 2001-ம் ஆண்டு தொடர், இந்தியா-ஆஸ்திரேலியா 2020-21-ம் ஆண்டு தொடர், இந்தியா-பாகிஸ்தான் 1999-ம் ஆண்டு தொடர், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து 2005-ம்ஆண்டு ஆஷஸ் தொடர் ஆகியவை அரைஇறுதிக்கு முன்னேறின. இதில் இருந்து நீயா-நானா இறுதிசுற்றில் இந்தியா-ஆஸ்திரேலியா (2020-21), இந்தியா-பாகிஸ்தான் (1999) தொடர்கள் மல்லுகட்டின.

    ஐ.சி.சி


    உச்சக்கட்ட டெஸ்ட் தொடரை தேர்வு செய்வதற்காக உலகம் முழுவதும் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் தங்களது ஓட்டுகளை ஆர்வமுடன் பதிவிட்டனர். இதன் முடிவில் 2020-21-ம் ஆண்டில் நடந்த முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் சிறந்த தொடருக்கான அங்கீகாரத்தை தட்டிச் சென்றது. இதனை ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    2020-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2021-ம் ஆண்டு ஜனவரி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்ததை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

    இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்டில் 2-வது இன்னிங்சில் இந்தியா வெறும் 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. டெஸ்டில் இந்தியாவின் குறைந்த ஸ்கோர் இது தான்.

    குழந்தை பிறப்புக்காக முதலாவது டெஸ்டுடன் இந்திய கேப்டன் விராட் கோலி தாயகம் திரும்பினார். போட்டி கடைசி கட்டத்தை நெருங்குவதற்குள் முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, அஸ்வின், ஹனுமா விஹாரி என்று ஒவ்வொரு முன்னணி வீரர்களாக காயத்தில் சிக்கினர். ஆனாலும் பொறுப்பு கேப்டன் அஜிங்யா ரஹானே தலைமையில் இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு அவர்களது இடத்திலேயே ‘தண்ணி’ காட்டியது. குறிப்பாக பிரிஸ்பேனில் 32 ஆண்டுகளாக தோல்வியே சந்திக்காமல் வலம் வந்த ஆஸ்திரேலியாவின் கோட்டையை தகர்த்தது. அங்கு நடந்த கடைசி டெஸ்டில் 328 ரன்கள் இலக்கை இந்திய அணி ரிஷாப் பண்டின் (89 ரன்) அதிரடியோடு 3 விக்கெட் வித்தியாசத்தில் எட்டிப்பிடித்து அசத்தியது. டி.நடராஜன், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், சுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர் ஆகிய புதுமுக வீரர்களின் ஆட்டம் வெகுவாக கவனத்தை ஈர்த்தன. இந்த போட்டியின் முடிவு அனைவரையும் பரவசப்படுத்தின. அதனால் தான் ரசிகர்கள் அதிக அளவில் ஓட்டு போட்டு இதை மிகச்சிறந்த தொடராக தேர்வு செய்திருக்கிறார்கள்.

    2-வது இடத்தை பிடித்த இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி 1999-ம் ஆண்டில் இந்திய மண்ணில் நடந்தது. இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் நிறைவடைந்தது. இதில் டெல்லியில் நடந்த டெஸ்டில் ஒரு இன்னிங்சில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே 10 விக்கெட்டுகளையும் சாய்த்து சரித்திரம் படைத்தது நினைவு கூரத்தக்கது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று பெருமை சேர்க்கக்கூடிய வீராங்கனையாக கருதப்படும் ஹரியானாவை சேர்ந்த மானு பாகெர்.
    புதுடெல்லி:

    32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல்ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவில் பயிற்சி முகாம் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய துப்பாக்கி சுடுதல் அணியை சேர்ந்த 13 வீரர்-வீராங்கனைகள் குரோஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயிற்சி மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமையை மெருகேற்றி வருகிறார்கள்.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று பெருமை சேர்க்கக்கூடிய வீராங்கனையாக கருதப்படும் ஹரியானாவை சேர்ந்த 19 வயது மானு பாகெர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல் ஆகிய பந்தயங்களில் களம் காண இருக்கிறார். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவது குறித்து மானு பாகெர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக குரோஷியா பயணம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. எங்களது உடல் நலன் மற்றும் உடல் தகுதிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் நன்றாக கவனத்தில் கொள்ளப்படுகிறது. மிகவும் சிறப்பான சூட்டிங் ரேஞ்சில் பயிற்சி பெறுவதுடன், சில நல்ல போட்டிகளிலும் பங்கேற்று வருகிறோம். எனவே ஒலிம்பிக் போட்டிக்கு இதை விட சிறப்பான முறையில் தயாராக முடியாது என்று நான் நம்புகிறேன்.

    அணியில் எனக்கு தான் பதக்கம் வெல்ல மிகப்பெரிய அளவில் வாய்ப்பு இருப்பதாக நினைக்கவில்லை. அப்படி நினைத்தால் அது நியாயமற்றதாகும். துப்பாக்கி சுடுதலை பொறுத்தமட்டில் இந்திய அணியில் பதக்கம் வெல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இேதபோல் பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், வில்வித்தை, குத்துச்சண்டை போன்ற போட்டிகளுக்கான இந்திய அணியிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர், வீராங்கனைகள் உள்ளனர்.

    ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் நான் நன்றாக புள்ளிகள் குவித்தேன். இருப்பினும் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். முதலில் பயிற்சியில் நிலையாக செயல்படுவதில் கவனம் செலுத்துகிறேன். அடுத்து அதனை போட்டியிலும் செயல்படுத்துவேன். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக எனது மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இலக்கு.

    இவ்வாறு மானு பாகெர் கூறினார்.
    மற்ற பேட்ஸ்மேன்களை விட பந்தை கணித்து அடிப்பதில் ரோகித் சர்மா சிறப்பானவர் என ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் ரஷித் கான் தெரிவித்தார்.
    அபுதாபி:

    ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித்-கான்  யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது:


    எந்த மாதிரியான சூழ்நிலையிலும் அவர் தனது இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்துவார். அவர் தனது வழக்கமான பாணி ஆட்டத்தை விடுத்து வித்தியாசமாக எதுவும் செய்யமாட்டார். விராட்-கோலி தனக்கு சொந்தமான நடைமுறையில் இருந்து விலகாமல் இருப்பது தான் அவரது மிகச் சிறந்த வெற்றிகரமான செயல்பாட்டுக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். 

    ரஷித் கான்

    நல்ல பந்து வீச்சை மதிக்கக்கூடிய அவர், மோசமான பந்து வீச்சை தண்டிக்கவும் செய்வார். விராட்-கோலி நல்ல தன்னம்பிக்கை கொண்டவர். சில பேட்ஸ்மேன்கள் தன்னம்பிக்கை இல்லாததால் தான் தடுமாறுகிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டியில் டோனியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்பது எனது கனவாகும். பவுலர்களுக்கு சிறப்பான ஆலோசனை வழங்கக்கூடிய டோனியுடன் இணைந்து விளையாடுவது என்பது மிகவும் முக்கியமானதாகும். 

    டோனிக்கு எதிராக விளையாடிய ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் அவருடன் விவாதிப்பது எனக்கு உதவிகரமாக இருந்துள்ளது. கடந்த முறை அவர் என்னிடம் பேசுகையில் பீல்டிங்கின் போது ஆக்ரோஷத்தை குறைத்து கவனமுடன் செயல்பட்டால் காயத்தைத் தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தினார். மற்ற பேட்ஸ்மேன்களை விட பந்தை கணித்து அடிப்பதில் ரோகித் சர்மா சிறப்பானவர் என தெரிவித்தார்.
    லார்ட்ஸ் டெஸ்ட் டிரா ஆன நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெர் விளையாடமாட்டார் என நியூசி. பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. ஒரு நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதித்ததால் போட்டி டிராவில் முடிவடைந்தது.

    2-வது ஆட்டம் நாளைமறுதினம் (ஜூன் 10-ந்தேதி) எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இதற்கான பயிற்சியில் நியூசிலாந்து அணி ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெருக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் விளையாடமாட்டார் என, நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

    மேலும், கேன் வில்லியம்சனின் இடது முழங்கையில் உள்ள காயம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அவர் 2-வது டெஸ்டில் விளையாடுவது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்றார். 
    வரவிருக்கும் தேசிய மற்றும் பிற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இருக்கும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவி நிர்வாகிகள் மற்றும் மருத்துவ குழுவுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
    கொச்சி:

    நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துப்பட்டு வருகிறது. தடுப்பூசி மூலமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

    இந்தநிலையில் தடுப்பூசியில் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முன்னாள் பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    வரவிருக்கும் தேசிய மற்றும் பிற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இருக்கும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவி நிர்வாகிகள் மற்றும் மருத்துவ குழுவுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கேரள முதல்வருக்கு தாழ்மையான வேண்டுகோள் விடுக்கிறேன். விளையாட்டு துறையை நாம் புறக்கணித்து விட முடியாது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

    கேரள முதல்-மந்திரி மட்டுமின்றி மத்திய சுகாதாரத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கும் பி.டி. உஷா இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளார்.

    ×