என் மலர்
விளையாட்டு
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலியிம் மசெட்டியுடன் மோதினார்.
இதில் டை பிரேக்கர் வரை சென்ற முதல் 2 செட்களை மசெட்டி கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின்னர் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் 3வது செட்டை 6-1 எனவும், 4வதுசெட்டை 6-0 எனவும் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் ஜோகோவிச் 4-0 என முன்னிலையில் இருந்தார். அப்போது மசெட்டிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியில் இருந்து விலகினார்.
இறுதியில், ஜோகோவிச் 6-7, 6-7, 6-1,6-0, 4-0 என செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் உள்பட 24 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வருகிற 11-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி வரை 11 நாடுகளில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராக ஒவ்வொரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் யூரோ போட்டிக்கான ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன் செர்ஜியோ பஸ்கெட்ஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அணியினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அணியின் மற்ற வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஸ்பெயின் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஸ்பெயின் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 14-ந் தேதி சுவீடனை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் செர்ஜியோ பஸ்கெட்ஸ் ஆடுவது சந்தேகம் தான். 32 வயதான செர்ஜியோ ஸ்பெயின் அணிக்காக 120-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் 2010-ம் ஆண்டு உலக கோப்பை மற்றும் 2012-ம் ஆண்டு யூரோ கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியில் அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். சென்னையை சேர்ந்த அவர் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.
34 வயதான அஸ்வின் 78 டெஸ்டில் விளையாடி 409 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 59 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும். 30 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். இந்திய மண்ணில் 24 முறையும், வெளிநாட்டில் 6 முறையும் இதை சாதித்து உள்ளார்.
7 தடவை ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார். சமீபத்தில் இந்திய மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அஸ்வின் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் தற்போது 4-வது இடத்தில் உள்ளார்.
இந்தநிலையில் அஸ்வின் எக்காலத்திற்கும் தலை சிறந்த பந்து வீச்சாளர் என்று அழைப்பதில் சிக்கல் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அஸ்வின் ஒருமுறை கூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை. கடந்த 4 ஆண்டுகளில் இந்திய ஆடுகளங்களில் அஸ்வினுக்கு இணையாக விக்கெட் வீழ்த்தும் திறமையை ஜடேஜா பெற்றிருக்கிறார்.
மேலும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அஸ்வினை காட்டிலும் அக்ஷர்பட்டேல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதுவே அஸ்வினை எல்லா கால கட்டத்துக்கும் தலைசிறந்த வீரர் என்று அழைப்பதில் எனக்கு இருக்கும் பிரச்சினையாகும்.
இவ்வாறு மஞ்சுரேக்கர் கூறி உள்ளார்.
மஞ்சுரேக்கரின் விமர்சனத்துக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான இயன் சேப்பல் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
அஸ்வின் மிகச்சிறந்த சுழற்பந்து வீரர் ஆவார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் லயனை விட அவர் சிறந்த வீரர் ஆவார். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஜோல் கார்னர் அச்சுறுத்தும் பந்து வீச்சாளர் ஆவார். ஆனால் அவர் அதிக முறை 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளாரா?
என்னை பொறுத்தவரை அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்த சீசனுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 6-வது சுற்றான அஜர்பைஜான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள பாகு ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.049 கிலோமீட்டர் இலக்கை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.
இதில் மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் (ரெட்புல் அணி) 2 மணி 13 நிமிடம் 36.410 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். பார்முலா1 கார்பந்தயத்தில் அவர் வசப்படுத்திய 2-வது வெற்றி இதுவாகும். அவரை விட 1.385 வினாடி பின்தங்கிய செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) 2-வதாகவும், பியரே கேஸ்லி (பிரான்ஸ்) 3-வதாகவும் வந்தனர். 7 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தாலும் பிரேக் பிரச்சினையால் நேரம் விரயமானதால் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு முன்னணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பெனின் (நெதர்லாந்து) கார் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதால் பாதியிலேயே வெளியேற நேரிட்டது.
ஆனாலும் 6 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் வெர்ஸ்டப்பென் 105 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஹாமில்டன் 101 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், செர்ஜியோ பெரேஸ் 69 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 7-வது சுற்று போட்டி பிரான்சில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது.
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அறிமுக வீரர் டிவான் கான்வே அபாரமாக ஆடி (200 ரன்) இரட்டை சதம் விளாசி அவுட்டானார். நிக்கோல்ஸ் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், மார்க் வுட் 3விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 101.1ஓவரில் 275 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 42 ரன், ஒல்லி போப் 22 ரன், ஒல்லி ராபின்சன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்து 132 ரன்னில் வெளியேறினார்.
நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டும், ஜேமிசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நியூசிலாந்து வீரர்கள் ரன்கள் சேர்த்தனர். அந்த அணி 52.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தபோது டிக்ளேர் செய்தது. லாதம் 36 ரன்னும், ராஸ் டெய்லர் 33 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி வீரர்கள் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தனர்.
இறுதியில், இங்கிலாந்து அணி 70 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சிப்லி 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கேப்டன் ஜோ ரூட்40 ரன்னில் அவுட்டானார்.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் வரும் 10ம் தேதி பெர்மிங்காமில் நடைபெறுகிறது.






