என் மலர்
விளையாட்டு

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர். இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அவர் பாகிஸ்தான் அணிக்கு 36 டெஸ்ட், 61 ஒருநாள் போட்டி மற்றும் 50 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் முகமது அமீர், பாகிஸ்தான் பிரீமியர் லீக் மற்றும் மற்ற நாடுகளில் நடக்கும் 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடி வருகிறார்.
இந்தநிலையில் பாகிஸ்தானில் நடக்க இருக்கும் உள்நாட்டு போட்டிக்கான ஒப்பந்தத்தில் முகமது அமீரின் பெயரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தை முகமது அமீர் ஏற்க மறுத்துள்ளார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அதில் விளையாடவில்லை என்றால் உள்நாட்டு கிரிக்கெட்டில் இடம்பெறுவதன் பயன் என்ன? இந்த ஒப்பந்தத்தை தருவதன் மூலம் அவர்கள் என்னை கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் அது நடக்காது.
உள்நாட்டு ஒப்பந்த பட்டியலில் எனது பெயரை சேர்ப்பதற்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை தொடர்பு கொண்டிருக்க வேண்டும். கிரிக்கெட் வாரியத்தில் உள்ளவர்கள் தங்கள் தரத்தில் நன்கு படித்தவர்களை கொண்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் இன்னும் அறியாமையுடன் நடந்துகொள்கிறார்கள். ஒரு இளம் கிரிக்கெட் வீரருக்கு எனது ஒப்பந்தம் வழங்கப்பட்டால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். ஒரு இளம் வீரருக்கு எனது இந்த ஒப்பந்தத்தை வழங்கி உதவ வேண்டும்.
நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறேன் என்ற உண்மையை அவர்கள் ஏற்கவில்லை. அதனால் தான் அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். நான் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவதை ரசித்து மீதமுள்ள நேரத்தை எனது குடும்பத்துடன் செலவிடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகமது அமீருக்கு 29 வயது தான் ஆகிறது. அதற்குள் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார். கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சில நிர்வாகிகள் மற்றும் சில வீரர்களுடன் அவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபி எமிரேட்சில் தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு 20 ஓவர் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று திடீரென்று அறிவித்தார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டனாக தொடருவேன் என்று தெரிவித்துள்ளார். பணிச்சுமையை குறைக்க வேண்டி இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
விராட்கோலியின் இந்த முடிவை முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி உள்ளார்கள். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறும்போது, இந்திய அணியின் எதிர்கால நலனை மனதில் கொண்டு விராட் கோலி இந்த முடிவை எடுத்துள்ளார். வருகிற 20 ஓவர் உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் டுவிட்டரில் கூறும்போது,” விராட்கோலியின் இந்த முடிவு மிகவும் சுயநலமற்றதாகும். அனைத்து அழுத்தங்களிலும் இருந்து சிறிது ஓய்வு எடுக்க உங்களுக்கு நல்ல இடத்தை அளிக்கும் இந்த முடிவுக்கு பாராட்டு” என்று கூறி உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத்காம்ப்ளி கூறியதாவது:-
தற்போது 20 ஓவர் அணி கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலக இருக்கிறார். அவரது இந்த முடிவு அதிர்ச்சி அளித்தது. ஆனால் அவர் தற்போது நிம்மதியாக உணர்வார். நாம் விராட்கோலியை ஒரு பேட்ஸ்மேனாக பார்க்க போகிறோம். ஏனென்றால் அவர் நெருக்கடி இல்லாமல் இருப்பார். விராட்கோலி தனது முழு திறமையுடன் எந்த நெருக்கடி இல்லாமல் விளையாடுவார். அவர் சுதந்திரமாக விளையாடவே நான் விரும்புகிறேன்.
அடுத்த கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். 20 ஓவர் உலக கோப்பை போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பு ஏற்பார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பல கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
கோலியின் முடிவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் உண்மையான சொத்து. தேவையான தருணத்தில் அணியை தன்னம்பிக்கையோடு வழிநடத்தக்கூடியவர். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் வெற்றிகரமான கேப்டன்களில் அவரும் ஒருவர். இந்திய அணியின் எதிர்கால நலனை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.
20 ஓவர் அணியின் கேப்டனாக இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள். அதன் பிறகும் அவர் இந்தியாவுக்காக நிறைய ரன்கள் குவிப்பார் என்று நம்புகிறேன்’ என்றார்.
துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக விராட் கோலி அளித்த பங்களிப்பு மகத்தானது. அதை ஒரு போதும் மறக்க முடியாது. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது அவரது தனிப்பட்ட முடிவு. அதை நாங்கள் மதிக்கிறோம். அவரது தலைமையில் இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன்’ என்றார்.
இந்திய அணியின் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகுவதாக அறிவித்ததையடுத்து அடுத்த கேப்டன் யார்? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் ரோகித் சர்மாவுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர் இந்திய அணியின் 20 ஓவர் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார். ரோகித் சர்மா தற்போது துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதையடுத்து அடுத்த துணை கேப்டன் யார் என்று விவாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 20 ஓவர் அணியின் துணை கேப்டனாக லோகேஷ் ராகுலை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
எதிர்காலத்தில் புதிய கேப்டனாக நியமிக்கப்படக் கூடியவர் என்று இந்திய அணி எதிர்பார்த்தால் அது ராகுலாகதான் இருக்க முடியும். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது கூட இங்கிலாந்தில் அவரது பேட்டிங் அருமையாக இருந்தது.
50 ஓவர் போட்டி மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் நன்கு விளையாடி வருகிறார். அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும்.
ஐ.பி.எல். போட்டியில் அவர் கேப்டன் பொறுப்பில் மிகவும் ஈர்க்க கூடிய வகையில் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கேப்டன்ஷிப் சுமை அவரது பேட்டிங்கை பாதிக்க ராகுல் அனுமதிக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, உதவி பயிற்சியாளர்கள் பரத் அருண், ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
லண்டனில் புத்தக வெளியீட்டு விழாவில் முககவசம் எதுவும் அணியாமல் கலந்து கொண்டதன் மூலம் இவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மர் கொரோனாவில் சிக்கியதால் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்திய வீரர்கள் கலக்கமடைந்தனர். இதைத் தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து இடையே மான்செஸ்டரில் நடக்க இருந்த 5-வது டெஸ்ட் ரத்தானது. இந்திய வீரர்கள் அனைவரும் அங்கிருந்து ஐ.பி.எல். போட்டி நடக்க உள்ள அமீரகம் சென்று விட்டனர்.
இதற்கிடையே இங்கிலாந்தில் 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடித்து விட்ட இந்திய பயிற்சி குழுவினர் எப்போது தாயகம் அனுப்பப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘ரவிசாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நன்றாக உள்ளனர். தனிமைப்படுத்துதலில் இருந்தும் வெளியே வந்து விட்டனர். ஆனால் அங்குள்ள சுகாதார நடைமுறைப்படி விமானத்தில் செல்வதற்கு சி.டி. ஸ்கேன் ஸ்கோர் 38-க்கு மேல்இருந்தால் (கொரோனாவால் ஒருவரது நுரையீரல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு அதில் இருந்து தேறி இருக்கிறார் என்பதை சுட்டிகாட்டுவது) தான் விமான பயணத்துக்கு தகுதியுடன் இருக்கிறார் என்பதற்கான சான்றிதழ் கிடைக்கும். அந்த சான்றிதழுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். எல்லாம் சரியாக நகர்ந்தால் அடுத்த 2 நாட்களில் அவர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.







