search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகமது அமீர்
    X
    முகமது அமீர்

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது முகமது அமீர் பாய்ச்சல் - அறியாமையுடன் செயல்படுவதாக விமர்சனம்

    பாகிஸ்தானில் நடக்க இருக்கும் உள்நாட்டு போட்டிக்கான ஒப்பந்தத்தில் முகமது அமீரின் பெயரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர். இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    அவர் பாகிஸ்தான் அணிக்கு 36 டெஸ்ட், 61 ஒருநாள் போட்டி மற்றும் 50 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் முகமது அமீர், பாகிஸ்தான் பிரீமியர் லீக் மற்றும் மற்ற நாடுகளில் நடக்கும் 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடி வருகிறார்.

    இந்தநிலையில் பாகிஸ்தானில் நடக்க இருக்கும் உள்நாட்டு போட்டிக்கான ஒப்பந்தத்தில் முகமது அமீரின் பெயரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது.

    இந்த ஒப்பந்தத்தை முகமது அமீர் ஏற்க மறுத்துள்ளார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அதில் விளையாடவில்லை என்றால் உள்நாட்டு கிரிக்கெட்டில் இடம்பெறுவதன் பயன் என்ன? இந்த ஒப்பந்தத்தை தருவதன் மூலம் அவர்கள் என்னை கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் அது நடக்காது.

    உள்நாட்டு ஒப்பந்த பட்டியலில் எனது பெயரை சேர்ப்பதற்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை தொடர்பு கொண்டிருக்க வேண்டும். கிரிக்கெட் வாரியத்தில் உள்ளவர்கள் தங்கள் தரத்தில் நன்கு படித்தவர்களை கொண்டுள்ளனர்.

    ஆனால் அவர்கள் இன்னும் அறியாமையுடன் நடந்துகொள்கிறார்கள். ஒரு இளம் கிரிக்கெட் வீரருக்கு எனது ஒப்பந்தம் வழங்கப்பட்டால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். ஒரு இளம் வீரருக்கு எனது இந்த ஒப்பந்தத்தை வழங்கி உதவ வேண்டும்.

    நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறேன் என்ற உண்மையை அவர்கள் ஏற்கவில்லை. அதனால் தான் அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். நான் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவதை ரசித்து மீதமுள்ள நேரத்தை எனது குடும்பத்துடன் செலவிடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகமது அமீருக்கு 29 வயது தான் ஆகிறது. அதற்குள் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார். கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சில நிர்வாகிகள் மற்றும் சில வீரர்களுடன் அவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

    Next Story
    ×