என் மலர்
விளையாட்டு
கராச்சி:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றது.
இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த நிலையில் நியூசிலாந்து அணி தொடரை ரத்து செய்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நாட்டு அரசு அறிவுறுத்தியதன் பேரில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென இந்த முடிவை எடுத்தது. உடனடியாக நியூசிலாந்து அணி அந்த நாட்டில் இருந்து விளையாடாமலேயே திரும்பியது.
நியூசிலாந்தின் இந்த முடிவால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சி அடைந்தது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அந்நாட்டு முன்னாள் வீரர்கள் பலரும் நியூசிலாந்து கிரிக்கெட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில் நியூசிலாந்து தொடரை ரத்து செய்த விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி. தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்- உல்-ஹக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நியூசிலாந்து செய்ததை எந்த நாடும் மற்ற நாட்டிற்கு செய்யாது. பாகிஸ்தான் எப்போதும் பிற நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும். 1997-ம் ஆண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி இலங்கைக்கு செல்ல பிற நாடுகள் தயங்கின. ஆனால் நாங்கள் இலங்கை சென்று விளையாடினோம்.
இந்த விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட வேண்டும். பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல் இருந்தால் நியூசிலாந்து அதற்கான ஆதரத்தை காட்ட வேண்டும். ஆதாரத்தை காண்பிக்க மறுப்பது ஏன்?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஆதாரத்தை காட்டவில்லை என்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவிக்கலாம்.
எங்களுடைய பிரதமர் இது தொடர்பாக பேசி நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு உறுதியும் அளித்தார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் முன்பே தெரிவிக்க வேண்டும். போட்டிக்கு முந்தைய நாள் இதுபற்றி நியூசிலாந்து தெரிவிக்கிறது. குறைந்தபட்சம் என்ன பிரச்சினை என்றாவது நியூசிலாந்து கூறி இருக்க வேண்டும். நியூசிலாந்தின் இந்த முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இவ்வாறு இன்சமாம்- உல்-ஹக் கூறி உள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து ஐ.பி.எல்லில் விளையாடும் நியூசிலாந்து வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றனர்.
புதுடெல்லி:
ஐ.பி.எல். போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் 4 மாதங்களுக்கு பிறகு துபாயில் இன்று தொடங்குகிறது.
14-வது ஐ.பி.எல். போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் பெறும் என்பது தொடர்பாக முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியின் 2-வது கட்ட போட்டிகள் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவுக்கு மாற்றப்பட்டதால், டெல்லி, மும்பை அணிகளுக்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். இதில் மும்பை இந்தியன்ஸ்சுக்குதான் ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற கூடுதலான வாய்ப்பு இருக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும். இதனால் சென்னை மற்றும் பெங்களூரூ அணிகளுக்கு கடுமையான சிக்கல் ஏற்படலாம்.
ஐ.பி.எல். முதல்கட்டத்தில் அதாவது இந்திய மைதானங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சராசரி ஸ்கோர் 201 ஆகும். ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் அவர்களது பேட்டிங் திறன் பாதிக்கப்படலாம்.அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் பற்றாக்குறையாகவே இருக்கிறது.
ஐ.பி.எல். போட்டியில் ஒரு அணியை தேர்வு செய்ய சொன்னால் என்னை பொறுத்தவரை அது மும்பை இந்தியன்சாக இருக்கும்.
ஒவ்வொரு அணிக்கும் இனி 7 ஆட்டங்கள் உள்ளன. இனி வரும் ஆட்டங்களில் திறமையை நிரூபிக்கும் வீரர்களுக்கு உலக கோப்பை அணியில் இடம்பெற இன்னும் வாய்ப்பு இருக்கிறது. அக்டோபர் 10-ந் தேதி வரை அணிகளை மாற்றம் செய்ய ஐ.சி.சி. அனுமதி வழங்கி உள்ளது.
இவ்வாறு ஷேவாக் கூறி உள்ளார்.


துபாய்:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி இந்தியாவில் தொடங்கியது. மே 2-ந் தேதி 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் கொரோனா தொற்றால் இந்தியாவில் நடத்தப்படவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இந்தப் போட்டிகள் மாற்றப்பட்டது.
14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட ஆட்டங்கள் நாளை (19-ந்தேதி) தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. எஞ்சிய 27 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் ஆக மொத்தம் 31 ஆட்டங்கள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
துபாயில் 13 , சார்ஜா 10, அபுதாபியில் 8 ஆட்டங்களும் நடக்கிறது. அக்டோபர் 8-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. முதல் குவாலிபையர் அக்டோபர் 10-ந் தேதியும், எலிமினேட்டர் 11-ந் தேதியும், 2-வது குவாலிபையர் 13-ந் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 15-ந் தேதி துபாயிலும் நடக்கிறது.
29 ஆட்டங்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகியவை 5 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 10 புள்ளிகள் பெற்று முறையே 2-வதுமற்றும் 3-வது இடங்களில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (6 புள்ளி), பஞ்சாப் கிங்ஸ் (6 புள்ளி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4 புள்ளி), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (2 புள்ளி ) ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களில் உள்ளன. லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் “பிளே ஆப்” சுற்றுக்கு முன்னேறும்.
துபாயில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி, மும்பையை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 5-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. சென்னை அணியில் காயம் காரணமாக டூபெலிசிஸ், சாம்கரண் விளையாடுவது சந்தேகம்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி உள்ளார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.
20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கிறது.
ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைவதால் அவரது இடத்தில் புதிய பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட், பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர் இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு பயிற்சியாளராக இருந்து சிறந்த இளம் வீரர்களை உருவாக்கி வருகிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராகவும் உள்ளார்.
இந்தநிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்காக முன்னாள் கேப்டன் கும்ப்ளே, முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன் ஆகியோரை கிரிக்கெட் வாரியம் அணுகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பயிற்சியாளராக இருக்குமாறு இருவரிடமும் கிரிக்கெட் வாரியம் கேட்க உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.
இதில் கும்ப்ளே ஏற்கனவே இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து உள்ளார். விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரால் பயிற்சியாளர் பதவியில் நீடிக்க முடியவில்லை.
வி.வி.எஸ். லட்சுமணன் கிரிக்கெட் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்து உள்ளார். இருவருமே 100 டெஸ்டுக்கு மேல் விளையாடி உள்ளனர். நல்ல அனுபவம் வாய்ந்த இவர்கள் பயிற்சியாளர்கள் பதவிக்கு தகுதியானவர்கள் என்று கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.
வெளிநாட்டை சேர்ந்தவரை பயிற்சியாளராக நியமிப்பது என்பது 2-வது கட்ட கருத்தாகவே உள்ளது.
இஸ்லாமாபாத்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றது.
கொரோனா பாதிப்பு காரணமாக மைதானத்தில் 25 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருந்தது. பாகிஸ்தான் சென்ற நியூசிலாந்து அணி இந்த போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தது.
முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற இருந்தது.
இந்தநிலையில் பாகிஸ்தான் தொடரை பாதுகாப்பு காரணங்களுக்காக நியூசிலாந்து அணி ரத்து செய்தது. அந்நாட்டு அரசு எச்சரிக்கை வெளியிட்டதால் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென இந்த முடிவை எடுத்தது. அந்நாட்டில் இருந்து நியூசிலாந்து அணி உடனடியாக நாடு திரும்புகிறது.
நியூசிலாந்து அணி திடீரென தொடரை கைவிட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகுந்த கோபம் அடைந்து உள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான ரமீஸ் ராஜா கூறியதாவது:-
நியூசிலாந்து அணியின் முடிவு சிறுபிள்ளைதனமானது. வெறும் பாதுகாப்பு மிரட்டல் தொடர்பாக தொடரில் ஆடாமல் வெளியேறுவது எங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக உள்ளது.
நியூசிலாந்து தன்னிச்சையாக இந்த முடிவை அறிவித்து உள்ளது. போட்டிகளின் போது பலத்த பாதுகாப்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து இருந்தது. எங்கள் பிரதமர் இம்ரான்கானும் இது தொடர்பாக நியூசிலாந்து அரசுடன் பேசினார். நியூசிலாந்து அணிக்கு பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என விளக்கினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறும்போது, “நியூசிலாந்து அணியின் இந்த முடிவு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது” என்றார்.
இதற்கிடையே தொடரை விளையாடாமலேயே ரத்து செய்த நியூசிலாந்து அணி மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளிக்கிறது.
நியூசிலாந்து அணியின் இந்த முடிவை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளனர்.
இதற்கிடையே இங்கிலாந்து அணி பாகிஸ்தான் பயணம் குறித்து 48 மணி நேரத்தில் தனது முடிவை அறிவிக்கிறது. அந்த அணி அக்டோபர் 13 மற்றும் 14-ந் தேதிகளில் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு உள்ளது.
நியூசிலாந்து வழியில் இங்கிலாந்தும் தொடரை ரத்து செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






