என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சித்தார்த் என்னை பற்றி கூறியது குறித்து கவலை இல்லை என சாய்னா நேவால் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    அண்மையில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி வரும் வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இந்த சம்பவத்திற்கு பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் கண்டனம் தெரிவித்தார். 

    சாய்னா நேவாலின் இந்த கருத்திற்கு பதில் அளித்து நடிகர் சித்தார்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பெண்களை கொச்சை படுத்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. சித்தார்த்தின் மீது தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்தது.

    இதையடுத்து தனது ட்விட்டர் பதிவுக்கு நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டார். தற்போது இந்த விவகாரம் குறித்து சாய்னா நேவாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

    சித்தார்த் என்னை பற்றி ஏதோ ஒன்றை கூறி பின் மன்னிப்பு கேட்டுவிட்டார். இந்த விவகாரம் ட்விட்டரில் ஏன் வைரலானது என்பதே தெரியவில்லை. ட்விட்டரை பார்த்தபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. யாரும் பெண்களை தவறாக பேசக்கூடாது.  சித்தார்த் என்னை பற்றி கூறியது குறித்து கவலை இல்லை. நான் என் இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்.

    இவ்வாறு சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த இந்துமதி, சந்தியா, கார்த்திகா, சவுமியா, மாரியம்மாள் ஆகிய 5 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
    சென்னை:

    ஆசிய கால்பந்து சம்மேளனம் (ஏ.எப்.சி.) நடத்தும் ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டி வருகிற 20-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை இந்தியாவில் நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை, நவி மும்பை, புனே ஆகிய 3 இடங்களில் கொரோனா பாதுகாப்பு வளையத்தின் கீழ் நடத்தப்படுகிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, சீனா, சீன தைபே, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், மியன்மார், ஈரான் ஆகிய 12 நாடுகள் பங்கேற்கின்றன.

    இவை 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது. இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. சீனா, ஈரான், சீன தைபே ஆகிய நாடுகள் அந்த பிரிவில் உள்ளன.

    ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த இந்துமதி, சந்தியா, கார்த்திகா, சவுமியா, மாரியம்மாள் ஆகிய 5 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    கேப்டன் அறிவிக்கப்படாத இந்த அணிக்கு ஆஷா லதா தேவி தலைமை வகிக்க வாய்ப்பு உள்ளது. வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்ட தெற்கு ஆசிய போட்டியில் 2-வது இடத்தை பிடித்த இந்திய அணியில் இடம்பெற்று இருந்த ஷில்கிதேவி, மாரியம் மாள், சுமதி, பிரியங்கா தேவி ஆகிய 4 வீராங்கனைகள் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.

    ஆசிய மகளிர் கால்பந்து போட்டியில் விளையாடும் இந்திய அணியின் விவரம் வருமாறு:-

    அதிதி சவுகான், மாய்ப்பம் தேவி, சவுமியா (கோல் கீப்பர்கள்), டாலிமா சிப்பர், சுவீட்டி தேவி, லிதுராணி, ஆஷா லதா தேவி, மணீஷா பன்னா, ஷில்கி தேவி, சஞ்சு யாதவ் (பின்களம்), கமலாதேவி, அஞ்சு தமங், கார்த்திகா அங்கமுத்து, ரத்தன்பாலா தேவி, பிரியங்கா தேவி, இந்துமதி கதிரேசன் (நடுகளம்), மணீஷா கல்யாண், கிரேஸ் டாங்மாய், தியாரி, ரேணு, சுமதிகுமாரி, சந்தியா ரங்கநாதன், மாரியம்மாள் பாலமுருகன் (முன்களம்).தலைமை பயிற்சியாளர் தாமஸ் டென்னார்பி.

    ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டி 1980-க்கு பிறகு முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும் பிபா உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று போட்டியாகும். 
    விராட் கோலியின் பேட்டிங் உண்மையிலேயே மிகவும் அபாரமாக இருந்தது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறும், சூழ்நிலைக்கு தகுந்தவாறும் அவர் ஆடினார் என தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா கூறியுள்ளார்.
    கேப்டவுன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 113 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் விளையாடியது. தென் ஆப்பிரிக்க வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் இந்தியா 77.3 ஓவரில் 223 ரன்னில் சுருண்டது.

    கேப்டன் விராட் கோலி தனி ஒருவராக போராடி 79 ரன் எடுத்து அணி கவுரமான ஸ்கோரை எட்ட உதவினார். 201 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். 4-வது வீரராக களம் இறங்கிய அவர் 9-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். அவர் நிதானமான ஆட்டத்தை பொறுப்புடன் வெளிப்படுத்தினார்.

    அவருக்கு அடுத்தபடியாக புஜாரா 43 ரன்னும், ரி‌ஷப்பண்ட் 27 ரன்னும் எடுத்தனர். ரபடா 4 விக்கெட்டும், மார்க்கோ ஜான்சென் 3 விக்கெட்டும், ஆலிவர், நிகிடி, கேசவ் மகராஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்திருந்தது. மார்க்ராம் 8 ரன்னுடனும், கேசவ் மகாராஜ் 6 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். கேப்டன் எல்கர் 3 ரன்னில் பும்ரா பந்தில் ஆட்டம் இழந்தார்.

    இந்த நிலையில் கேப்டவுன் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீரர் ரபடா பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த டெஸ்ட் போட்டி சமநிலையில் உள்ளது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் நாங்கள் டாஸ் வெல்ல விரும்பி இருந்தோம். ஆனால் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை 223 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி விட்டோம். அதே நேரத்தில் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    ஆடுகள தன்மையை பொறுத்தவரை இன்றும் அதே நிலைதான் இருக்கும் என்று கருதுகிறேன். பெரிதாக மாற போவதில்லை.

    இந்த நாள் சரியான நாள் என்று சொல்லமாட்டேன். மிகவும் சரியான நாள் அரிதாகவே கிடைக்கும். எனக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைந்தது. பொதுவாக ஒவ்வொரு ஆட்டத்திலும் விக்கெட்டுகளை இலக்காக வைத்துதான் வீசி வருகிறேன். எனது சக பந்து வீச்சாளர் ஜான்சென் எனக்கு உதவி புரியும் வகையில் சிறப்பாக வீசினார்.

    இந்த டெஸ்டில் விராட் கோலியின் பேட்டிங் உண்மையிலேயே மிகவும் அபாரமாக இருந்தது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறும், சூழ்நிலைக்கு தகுந்தவாறும் அவர் ஆடினார்.

    இவ்வாறு ரபடா கூறி உள்ளார்.
    100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது, ரபாடாவால் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டை கைப்பற்ற முடியும் என முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் கணித்துள்ளார்.
    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ரபாடா. இந்தியாவுக்கு எதிராக நேற்று தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியில் அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவர் 73 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.

    மயங்க் அகர்வால், ரகானே, பும்ரா, கேப்டன் விராட் கோலி ஆகியோரது விக்கெட்டை அவர் கைப்பற்றினார். இந்த தொடரில் ரபாடா இதுவரை 17 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்துள்ளார்.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் அனைத்து சாதனைகளையும் ரபாடா முறியடிப்பார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீரர் நிதினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரபாடா வலிமையான பந்து வீச்சாளர். மிகவும் வேகமாக பந்துகளை வீசும் உடல் தகுதியை பெற்றுள்ளார். எல்லாவிதமான பந்துகளையும் வீசி தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவின் அனைத்து சாதனைகளையும் ரபாடா முறியடிப்பார். அவர் தற்போது 50 டெஸ்டில் 230 விக்கெட்டை தொட்டுள்ளார். 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது, அவரால் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டை கைப்பற்ற முடியும்.

    இவ்வாறு நிதினி கூறியுள்ளார்.

    எந்தவொரு தென் ஆப்பிரிக்க வீரரும் 500 விக்கெட் எடுத்ததில்லை. ஸ்டெய்ன் 93 டெஸ்டில் 439 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். பொல்லாக் 421 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், நிதினி 390 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். ரபாடா 230 விக்கெட்டுடன் 7-வது இடத்தில் உள்ளார். 
    ஜோகோவிச் குறித்து இரண்டு செய்தி தொடர்பாளர்கள் தங்களது கருத்துக்களை பரிமாற்றம் செய்து கொண்டது நேரடியாக ஒளிப்பரப்பானதால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
    உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிச். செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றார். அப்போது, அவர் தடுப்பூசி செலுத்தவில்லை என அதிகாரிகள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர். மேலும், ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஜோகோவிச்சை நாடு கடத்த திட்டமிட்டனர்.

    இதனை எதிர்த்து ஜோகோவிச் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாத காலம் வரை விலக்கு அளிக்கப்படலாம் என ஜோகோவிச் தரப்பில் வாதிடப்பட்டது. இதில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    இதற்கிடையே ஜோகோவிச் மெல்போர்ன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் முன்னணி செய்தியானது. அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு அவரது செய்தியை ஒளிப்பரப்பு செய்தனர்.

    ஆஸ்திரேலியாவின் செவன் நியூஸ் சேனல் செய்தியாளர்கள் மைக் அம்ரோர்- ரெபேக்கா மாடர்ன் ஆகியோர் செய்தி வாசிக்க தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது மைக் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக என நினைத்து, ஜோகோவிச் குறித்து தரக்குறைவாக பேசினர். அவர் பொய் சொல்கிறார், மோசமான நபர். பொய் சொல்லி தப்பிக்க பார்க்கிறார் என திட்டி தீர்த்தனர்.

    ஆனால் மைக் ஆன்-இல் இருந்ததால் அவர்கள் பேச்சு நேரடியாக ஒளிப்பரப்பானது. தரக்குறைவான பேச்சு வெளிப்படையாக ஒளிப்பரப்பு ஆனது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறியுள்ளது.  இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாக தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இரண்டு நபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட வார்த்தை பரிமாற்றம் வெளி உலகத்திற்கு தெரியக்கூடாது என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் புஜாரா, விராட் கோலி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.
    கேப் டவுன்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். 

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்தார். புஜாரா 43 ரன்கள் எடுத்தார். 

    தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா 4, மார்கோ ஜேன்சன் 3, ஆலிவியர், நிகிடி, கேசவ் மகராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டாவது முறையாக அதிக பந்தில் அரை சதம் கடந்துள்ளார். இது இவரது 28-வது அரை சதமாகும். நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி 158 பந்தில் அரை சதம் கடந்தார்.

    விராட் கோலி ஏற்கனவே 172 பந்தில் அரை சதம் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் அணி 6 வெற்றி, 1 தோல்வி, 1 டிரா என மொத்தம் 34 புள்ளிகள் எடுத்து முதல் இடம் பிடித்துள்ளது.
    பெங்களூரு:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

    இதில் இன்றிரவு நடந்த முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே பாட்னா அணி அபாரமாக ஆடியது.

    இறுதியில், பாட்னா பைரேட்ஸ் 43 - 23 என்ற புள்ளிக்கணக்கில் வென்று ஐந்தாவது வெற்றியைப் பதிவுசெய்தது.

    இன்றிரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 40 - 22 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணி பெறும் 2-வது வெற்றி ஆகும். 
    நிதானமாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 201 பந்துகள் ஆடி 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    கேப் டவுன்:

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். 

    இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல். ராகுல் 12, மயங்க் அகர்வால் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா, விராட் கோலி ஜோடி நிதானமாக ஆடியது.

     புஜாரா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தவுடன் அடுத்து வந்த ரஹானே 9, ரிஷப் பண்ட் 27, அஸ்வின் 2, ஷர்துல் தாகூர் 12, பும்ரா 0, முகமது சமி 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

    ரபாடா

    நிதானமாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 201 பந்துகள் ஆடி 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி இந்த முறையும் சதம் அடிக்கும் வாய்ப்பை பக்கத்தில் வந்து இழந்தார். உமேஷ் யாதவ் 4 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

    இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா 4, மார்கோ ஜேன்சன் 3, ஆலிவியர், நிகிடி, கேஷவ் மகராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தொடங்கவுள்ளது.

    ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருப்பதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தாலும் அவரை மீண்டும் நாடு கடத்துவதற்கான முயற்சிகளை ஆஸ்திரேலியா அரசு மேற்கொண்டுள்ளது.
    மெல்போர்ன்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகிறது. டென்னிஸ் போட்டிகளிலேயே மிகவும் முக்கியத்துவம் பெற்றது இந்த போட்டியாகும்.

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி வருகிற 17-ந் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

    கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் தடுப்பூசி விவகாரத்தில் தயக்கம் காட்டி வருவதால், இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து சந்தேகம் நிலவியது.

    ஆஸ்திரேலிய ஓபனை 9 முறை வென்ற அவர் ஒட்டுமொத்தமாக 20 கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. பெடரர், நடாலுடன் இணைந்து அவர் முதல் இடத்தில் உள்ளார். ஜோகோவிச் 21-வது பட்டம் வென்று சாதனை படைக்க ஆஸ்திரேலிய ஓபன் அவருக்கு முக்கியமான போட்டியாகும்.

    இதற்கிடையே தடுப்பூசி செலுத்தாத ஜோகோவிச்சுக்கு மருத்துவ ரீதியிலான விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதை ஜோகோவிச் ஆஸ்திரேலியா சென்றவுடன் தெரிவித்தார்.

    ஆனால் இந்த வி‌ஷயத்தில் ஆஸ்திரேலியா தனது முடிவை மாற்றிகொண்டது. சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறி அவரது விசாவை ரத்து செய்தது. ஆஸ்திரேலியா வந்த அவர் மெல்போர்ன் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். ஆஸ்திரேலிய குடியேற்ற துறையின் தடுப்பு காவல் மையமாக செயல்படும் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டார்.

    இதற்கிடையே ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜோகோவிச் மெல்போர்ன் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஜோகோவிச்சின் விசா ரத்து நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய கோர்ட்டு தடை விதித்தது.

    அதோடு தடுப்பு காவலில் இருந்து அவரை விடுவிக்கவும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஓட்டலில் இருந்து ஜோகோவிச் விடுவிக்கப்பட்டார். அவர் சென்ற இடம், எங்கு இருக்கிறார் என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

    ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருப்பதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தாலும் அவரை மீண்டும் நாடு கடத்துவதற்கான முயற்சிகளை ஆஸ்திரேலியா அரசு மேற்கொண்டுள்ளது.

    அவரது விசாவை மீண்டும் ரத்து செய்ய ஆஸ்திரேலிய குடியுரிமை துறை மந்திரி தனது தனிப்பட்ட அதிகாரத்தை உபயோகிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அரசு தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார்.

    அவ்வாறு நுழைய விசா ரத்து செய்யப்பட்டால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஜோகோவிச் ஆஸ்திரேலியா வர முடியாது.

    ஆஸ்திரேலியாவில் அவர் தற்போது இருந்தாலும், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஆட அனுமதிக்கப்படுவாரா? என்று தெரியவில்லை.
    2016-ம் ஆண்டு முதல் வருடம் ரூ.440 கோடி செலுத்தி விவோ நிறுவனம் ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்தது.
    மும்பை:

    இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் குழுமமான டாடா கைப்பற்றியுள்ளது. 

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து அதன் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை பெறுவதற்கும் நிறுவனங்களிடையே கடும் போட்டி நடைபெறும். 

    ஐபிஎல் தொடங்கிய போது டி.எல்.எஃப், பெப்சி ஆகிய நிறுவனங்கள் டைட்டில் ஸ்பான்சராக இருந்தன. இதன்பின் 2016-ல் இருந்து சீனாவை சேர்ந்த விவோ நிறுவனம் ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்தது. இதற்காக அந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.440 கோடி பிசிசிஐ-க்கு செலுத்தி வந்தது.

    ஐபிஎல் கோப்பை

    இந்நிலையில் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் எல்லையின் கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இந்தியா- சீனா வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் அந்த ஆண்டு மட்டும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் பொறுப்பில் இருந்து விவோ நீக்கப்பட்டது.

    அதற்கு பதில் ரூ.222 கோடிக்கு டிரீம் 11 நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரானது. பின்னர் 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்-லில் விவோ நிறுவனம் மீண்டும் உரிமத்தை பெற்றது.

    இந்நிலையில் தற்போது 2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் தேர்வாகியுள்ளது. இதனை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதி செய்துள்ளார். 

    தென் ஆப்ரிக்காவின் உள்ளூர் கிரிக்கெட் அணியான டைடன்ஸுக்கு பயிற்சியாளராக செயல்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
    கேப் டவுன்:

    பிரபல தென் ஆப்ரிக்க ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அனைத்து போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர், தென் ஆப்ரிக்காவின் உள்ளூர் அணியான டைடன்ஸுக்கு பயிற்சியாளராக செயல்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    2012-ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமான கிறிஸ் மோரிஸ், இதுவரை 4 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 23 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 

    இதில் டெஸ்ட்டில் 459 ரன்கள் 12 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டியில் 1756 ரன்கள், 48 விக்கெட்டுகள் மற்றும் சர்வதேச டி20 போட்டியில் 697 ரன்கள், 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கிறிஸ் மோரிஸ்

    ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காகவும் கிறிஸ் மோரிஸ் விளையாடி உள்ளார். 81 ஐபிஎல் போட்டிகளில் 618 ரன்கள் குவித்ததோடு, 95 விக்கெட்டுகளையும் விழ்த்தியுள்ளார்.

    மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை கிறிஸ் மோரிஸ் பெற்றுள்ளார். ஐபிஎல் 2021 ஏலத்தில் 16.25 கோடிக்கு மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ள நிலையில், ஹனுமா விஹாரி ஏமாற்றம் அடைந்துள்ளார்.
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் விராட் கோலி காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கே.எல். ராகுல் கேப்டனாக செயல்பட்டார். ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த போட்டியில் விராட் கோலி விளையாடுவதால், ஹனுமா விஹாரி நீக்கப்பட்டுள்ளார்.

    முகமது சிராஜ் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    1. கே.எல். ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரகானே, 6. ரிஷாப் பண்ட், 7. அஸ்வின், 8 ஷர்துல் தாகூர், 9. முகமது சமி, 10. பும்ரா, 11. உமேஷ் யாதவ்.
    ×