search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரபாடா
    X
    ரபாடா

    தென் ஆப்பிரிக்காவின் அனைத்து சாதனைகளையும் ரபாடா முறியடிப்பார் - முன்னாள் வீரர் கணிப்பு

    100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது, ரபாடாவால் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டை கைப்பற்ற முடியும் என முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் கணித்துள்ளார்.
    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ரபாடா. இந்தியாவுக்கு எதிராக நேற்று தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியில் அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவர் 73 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.

    மயங்க் அகர்வால், ரகானே, பும்ரா, கேப்டன் விராட் கோலி ஆகியோரது விக்கெட்டை அவர் கைப்பற்றினார். இந்த தொடரில் ரபாடா இதுவரை 17 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்துள்ளார்.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் அனைத்து சாதனைகளையும் ரபாடா முறியடிப்பார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீரர் நிதினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரபாடா வலிமையான பந்து வீச்சாளர். மிகவும் வேகமாக பந்துகளை வீசும் உடல் தகுதியை பெற்றுள்ளார். எல்லாவிதமான பந்துகளையும் வீசி தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவின் அனைத்து சாதனைகளையும் ரபாடா முறியடிப்பார். அவர் தற்போது 50 டெஸ்டில் 230 விக்கெட்டை தொட்டுள்ளார். 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது, அவரால் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டை கைப்பற்ற முடியும்.

    இவ்வாறு நிதினி கூறியுள்ளார்.

    எந்தவொரு தென் ஆப்பிரிக்க வீரரும் 500 விக்கெட் எடுத்ததில்லை. ஸ்டெய்ன் 93 டெஸ்டில் 439 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். பொல்லாக் 421 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், நிதினி 390 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். ரபாடா 230 விக்கெட்டுடன் 7-வது இடத்தில் உள்ளார். 
    Next Story
    ×