என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டி நடந்தது.
    • இதில் நம்பர் 2 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

    மாண்ட்ரியல்:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் சாம்சொனோவாவுடன் மோதினார்.

    இதில் சாம்சொனோவா 7-6 (7-2), 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

    முன்னணி வீராங்கனையான சபலென்கா இதில் தோற்றதன் மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
    • இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    புளோரிடா:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

    முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீசும், 3வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி அமெரிக்காவில் இன்று நடைபெற உள்ளது.

    இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் புரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், தொடரை இழக்கக்கூடாது என்பதற்காக இந்திய அணியும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டி நடைபெற்றது.
    • இதில் முன்னணி வீரர்களான மெத்வதேவ், அல்காரஸ் ஆகியோர் வென்று காலிறுதிக்கு முன்னேறினர்.

    மாண்ட்ரியல்:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் முசேட்டியுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், போலந்து வீரர் ஹுயுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார். இதில் அல்காரஸ் 3-6, 7-6 (7-2), 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
    • இரண்டாவது பாதியில் இந்தியா 5 கோல்களை அடித்து அசத்தியது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் 5 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்தியா மலேசியாவை எதிர்கொள்கிறது.

    • மலேசிய அணி 6-2 என்ற கோல்கணக்கில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவை வீழ்த்தியது.
    • மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.

    ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி தொடரில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா- மலேசியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மலேசிய அணி 6-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    மலேசிய அணி தரப்பில் அஸ்ராய் (3வது நிமிடம்), ஜஸ்லான் (9 மற்றும் 21வது நிமிடம்), சாரி (19வது நிமிடம்), சில்வரியஸ் (47 மற்றும் 48வது நிமிடம்) கோல் அடித்தனர். தென் கொரிய அணியில் ஜி 2வது நிமிடத்திலும், ஜாங் 14வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. 

    • ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு வீரர்களிடம் பீர் குடிக்கலாம் என பேசி கொண்டிருந்தோம்.
    • எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு தொடர் முடிந்த பிறகு பீர் குடிக்காமல் வந்தது இதுவே முதல் முறை.

    சமீபத்தில் நடந்த முடிந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.

    இந்நிலையில் இந்த முறைதான் ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு பீர் அடிக்காம வந்திருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு வீரர்கள் பீர் குடிக்கலாம் என பேசி கொண்டிருந்தோம். அப்போது பென் ஸ்டோக்ஸ் தங்கியிருந்த அறைக்கு சென்று அறையின் கதவை தட்டினோம். அவர் சிறிது நேரம் கழித்தே கதவை திறந்தார். வந்த வேகத்தில் 2 நிமிடம் காத்திருங்கள் என்று கூறி சென்றார். ஒரு மணி நேரம் ஆகியும் வராத காரணத்தால் பீர் அடிக்க வேண்டாம் என்று கூறி நாங்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.

    எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு தொடர் முடிந்த பிறகு பீர் குடிக்காமல் வந்தது இதுவே முதல் முறை. இது அசிங்கமாக இருந்தது. ஆனால் சில மணி நேரம் கழித்து வந்த பென் ஸ்டோக்ஸ், ஒரு வேலையாக சென்றதால் தாமதமாகி விட்டது. மன்னித்து விடுங்கள். மது அருந்துவது என்று முடிவு செய்து விட்டோம். அதனால் அதை கைவிட வேண்டாம். கண்டிப்பாக மது அருந்து விட்டு செல்லலாம் என அவர் கூறினார்.

    அவர் கூறும் அந்த வேலை நான் எனது அறைக்கு சென்று இருந்தேன். மது அருந்தாத மற்ற வீரர்கள் அவருடன் சேர்ந்து மது அருந்தி மகிழ்ந்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஷகிப் ஏற்கெனவே வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு உள்ளார்.
    • அவர் இறுதியாக 2017-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.

    டாக்கா:

    வங்காளதேச கிரிக்கெட் அணி வரும் 30-ம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. அதனை அடுத்து சொந்த ஊரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன் பின் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.

    இந்நிலையில் வங்காளதேச அணியின் ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து தமிம் இக்பால் திடீரென விலகினார். மேலும் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இதனையடுத்து புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இறங்கியது.

    அதன்படி வங்காளதேச கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான கேப்டனாக ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஷகிப் ஏற்கெனவே வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு உள்ளார். அவர் இறுதியாக 2017-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.

    இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹாசன் கூறுகையில்:-

    வரவிருக்கும் பெரிய தொடர்களை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். மிகவும் சிக்கலான நேரத்தில் அணிக்கு ஷகிப் அல் ஹசனை கேப்டனாக நியமித்துள்ளோம். உலகக்கோப்பைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ஷகிப்பை தவிர வேறு சிறந்த கேப்டனையும் தேர்வு செய்ய இயலாது. உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான அணியை நாளை அறிவிக்க உள்ளோம்' என கூறினார்.

    இதன் மூலம் ஷகிப் வங்காளதேசத்தின் மூன்று வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாகி உள்ளார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஷகிப் கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் வங்காளதேச அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹரி கேன் கடந்த 19 ஆண்டுகளாக வடக்கு லண்டன் அணிக்காக விளையாடி வந்தார்.
    • 100 மில்லியன் பவுண்டுகளுக்கு குறைவான எந்த ஒப்பந்தமும் ஏற்க முடியாது என டோட்டன்ஹாம் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.

    30 வயதான ஹரி கேன் கடந்த 19 ஆண்டுகளாக வடக்கு லண்டன் அணிக்காக விளையாடி வந்தார். 100 மில்லியன் பவுண்டுகளுக்கு குறைவான எந்த ஒப்பந்தமும் ஏற்க முடியாது என டோட்டன்ஹாம் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிக்காக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மொத்தம் 103 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.

    ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிக்காக களமிறங்க இருப்பதால், மருத்துவ பரிசோதனைகளை முடித்துக்கொள்ள ஹரி கேன் ஜெர்மனிக்கு செல்ல இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் கோலி 11.45 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.
    • டோனி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதில்லை இருந்தும் இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து பணம் சம்பாதிக்கும் வழியை கண்டுபிடித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, கிரிக்கெட் வீரர்கள் இப்போது தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து ஒரு பதிவுக்கு பெரிய தொகையை பெற்று வருகின்றனர்.

    இந்தப் பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் இருப்பதாக புதிய அறிக்கை தெரிவிக்கிறது. ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் கோலி 11.45 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். அடுத்த இடத்தில் எம்எஸ் டோனி உள்ளார். இவர் ஒரு பதிவுக்கு இந்திய மதிப்பில் 1.44 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதில்லை இருந்தும் இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்.

    இவர்களை அடுத்து ரோகித் சர்மா 76 லட்சம், ரெய்னா 34 லட்சம், ஹர்திக் பாண்ட்யா 65 லட்சமும் சம்பாதிக்கின்றனர்.

    இன்ஸ்டாகிராம் வலைதளம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவோர் பட்டியலில் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். இவர் ஒரு பதிவுக்கு இந்திய மதிப்பில் ரூ. 26.75 கோடியை பெற்று வருகிறார். மற்றொரு புகழ்பெற்ற கால்பந்து வீரரான மெஸ்ஸி ஒரு பதிவுக்கு இந்திய மதிப்பில் ரூ. 21 கோடியே 49 லட்சத்தை பெற்று வருகிறார்.

    உலக அளவில் இன்ஸ்டாகிராம் வலைதளம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவோர் பட்டியலில் முதல் 20 இடங்களில் இடம்பிடித்த ஒரே இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்று இருக்கிறார். 

    • பெனால்டில் வாய்ப்பு மூலம் சுவீடனுக்கு ஒரு கோல் கிடைத்தது
    • 87-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தாலும், வெற்றிக்கான வழி கிடைக்கவில்லை

    உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து தொடரில் 2-வது காலிறுதி ஆட்டம், இந்திய நேரப்படி இன்று மதியம் நடைபெற்றது. இதில் சுவீடன்- ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனை அமண்டானா இலெஸ்டெட் கோல்அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் சுவீடன் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில், ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் சுவீடனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி பிலிப்பா ஏஞ்சல்டால் கோல் அடித்தார்.

    பின்னர் ஜப்பான் வீராங்கனை ஹோனோகா ஹயாஷி 87-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் ஜப்பான் அணியால் கோல் அடிக்க முடியாததால் சுவீடன் 2-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஜப்பான் அணிக்கு 4 கார்னர் வாய்ப்பும், சுவீடன் அணிக்கு 3 கார்னர் வாய்ப்பும் கிடைத்தது. சுவீடன் 6 முறையும், ஜப்பான் 3 முறையும் இலக்கை நோக்கி அடித்தனர்.

    • தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
    • சஞ்சு சாம்சனும் ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    லாடர்ஹில்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களை இந்தியா கைப்பற்றியது.

    இரு அணிகளும் 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது. 3-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹிலில் நடக்கும் இப்போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

    தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோற்றால் தொடரை இழந்துவிடும்.

    ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரர் சுப்மன் கில் ரன் குவிக்க திணறி வருகிறார். அதேபோல் சஞ்சு சாம்சனும் ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சாகல், அக்ஷர் பட்டேல் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதால் அந்த உத்வேகத்துடன் இந்தியா களம் இறங்கும்.

    ரோமன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் கில் பிரண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், ஹெட்மயர், மேயர்ஸ் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் மெக்காய், ஷெப் பர்ட், ஜோசன், ஹூசன் ஆகியோர் உள்ளனர்.

    நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று 20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது. ஆனால் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக போராடும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • வெல்ஸ் பயர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
    • கடைசி மூன்று பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்து ஷப்னிம் இஸ்மாயில் அசத்தினார்.

    பெண்களுக்கான 100 பந்து போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பர்மிங்காம் பீனிக்ஸ் மற்றும் வெல்ஷ் பயர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பர்மிங்காம் பீனிக்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய வெல்ஷ் பயர் அணி 100 பந்துகளில் 7 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பர்மிங்காம் பீனிக்ஸ் 100 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.


    கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை ஷப்னிம் இஸ்மாயில் வீசினார். முதல் பந்தில் 1 ரன்களும் 2-வது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. அடுத்த மூன்று பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்து அணியின் வெற்றி ஷப்னிம் இஸ்மாயில் முக்கிய பங்காற்றினார்.

    இதன்மூலம் வெல்ஸ் பயர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    ×