என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • காலிறுதியில் பிரான்சை 7-6 என பெனால்டி ஷூட்அவுட்டில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது
    • கொலம்பியாவை 2-1 என இங்கிலாந்து வீழ்த்தியது

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

    நேற்று இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் போட்டி நேரத்தில் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 7-6 என ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்றது.

    இன்றும் நாளையும் ஓய்வு நாள். நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15-ந்தேதி) முதல் அரையிறுதி ஆட்டம் நடக்கிறது. இதில் ஸ்பெயின்- சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 16-ந்தேதி புதன்கிழைமை நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    3-வது மற்றும் 4-வது இடத்திற்கான போட்டி சனிக்கிழமையும் (19-ந்தேதி), இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமையும் (20-ந்தேதி) நடைபெற இருக்கிறது.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நடந்தது.
    • இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்து வெளியேறினார்.

    மாண்ட்ரியல்:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெகுலாவுடன் மோதினார்.

    இதில் பெகுலா 6-2, 6-7 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.

    இதன்மூலம் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்வியாடெக் கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

    • இதுவரை 4 போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என சமனிலையில் உள்ளன.
    • இந்தியா, வெஸ்ட் இண்டீசுக்கு இடையிலான 5வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    புளோரிடா:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமனிலையில் உள்ளது.

    முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அடுத்த இரு போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 5-வது டி20 போட்டி அமெரிக்காவில் இன்று நடைபெற உள்ளது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

    • இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
    • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் திரில்லிங்கான ஆட்டத்தைப் பார்த்தேன்! இடைவேளை நேரத்தில் 1-3 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த மென் இன் ப்ளூ, 4-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-3 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே வியப்பாக இருந்தது. அது போட்டியின் கடைசி நேரம் வரை எங்களை இருக்கைகளின் நுனியில் வைத்திருந்தது. இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டிகள் நடந்தது.
    • முன்னணி வீராங்கனைகளான ஸ்வியாடெக், ரிபாகினா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    மாண்ட்ரியல்:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை டேனியல் காலின்சுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு காலிறுதியில் தரவரிசையில் 3ம் இடத்திலுள்ள கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ரஷியாவின் டேரியா கசட்கினாவுடன் மோதினார்.

    இதில் ரிபாகினா 5-7, 7-5, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • இந்தியா 4-3 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
    • இதன்மூலம் இந்தியா 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    புதுடெல்லி:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் அற்புதமான வெற்றியைப் பெற்ற ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்! இது இந்தியாவின் 4-வது வெற்றியாகும். இது நமது வீரர்களின் அயராத அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி மற்றும் தளராத உறுதியை வெளிப்படுத்துகிறது. அவர்களின் அசாதாரண செயல்பாடு நாடு முழுவதும் மகத்தான பெருமை கொள்ள வைத்துள்ளது. எங்கள் வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 178 ரகள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 179 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    புளோரிடா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 4-வது டி20 போட்டி ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஷிம்ரன் ஹெட்மயர் 39 பந்தில் 61 ரன்களை குவித்தார். ஷாய் ஹோப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 45 ரன்களை குவித்தார்.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். சஹல், அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே ஜெய்ஸ்வால், சுப்மன் கில் அதிரடியாக ஆடினர். இதனால் ரன்கள் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக தெறிக்க விட்டனர். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

    முதல் விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த நிலையில், சுப்மன் கில் 47 பந்தில் 5 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 51 பந்தில் 3 சிக்சர், 11 பவுண்டரி உள்பட 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடர் 2-2 என சமனிலை வகிக்கிறது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி போட்டி நாளை நடைபெற உள்ளது.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் முன்னணி வீரர்களான மெத்வதேவ், அல்காரஸ் ஆகியோர் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தனர்.

    மாண்ட்ரியல்:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நாளையுடன் முடிவடைய உள்ளது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டி ஒன்றில் டென்னிஸ் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் டி மினார் 7-6 (9-7), 7-5 என்ற கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்க வீரர் டாமி பாலுடன் மோதினார். இதில் டாமி பால் 6-3, 4-6, 6-3 என்ற கணக்கில் கார்லோசை வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதல் பாதியில் மலேசியா 3-1 என முன்னிலை வகித்தது.
    • இரண்டாவது பாதியில் இந்தியா 3 கோல்களை அடித்து அசத்தியது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் மலேசியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் 3 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
    • ஷிம்ரன் ஹெட்மயர் அரைசதம் கடந்து அசத்தினார்.

    இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான நான்காவது டி20 போட்டி ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய கைல் மேயர்ஸ் மற்றும் பிரான்டன் கிங் முறையே 7 பந்துகளில் 17 ரன்களையும், 16 பந்துகளில் 18 ரன்களையும் அடித்தனர். அடுத்து வந்த ஷாய் ஹோப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 29 பந்துகளில் இரண்டு சிக்சர், மூன்று பவுன்டரிகளுடன் 45 ரன்களை குவித்து சாஹல் பந்தில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

     

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் மற்றும் ரோவ்மேன் பொவெல் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்து நடையை கட்டினர். அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார். இவர் 39 பந்துகளில் 61 ரன்களை குவித்து அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்களை குவித்துள்ளது.

    இந்திய சார்பில் அர்தீப் சிங் மூன்று விக்கெட்களையும், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு போஸ்டிற்கு 26.78 கோடி ரூபாய் பெறுவதாக தகவல்
    • மெஸ்சி 21.15 கோடி ரூபாய் பெறுகிறார்

    இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் 235 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். அதில் பிரபலங்களை கோடிக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். பிரபலங்களின் கணக்குகளில் விளம்பர பதிவை வெளியிட நிறுவனங்கள் விரும்புகின்றன.

    இதற்காக அவர்களுக்கு நிறுவனங்கள் கட்டணம் வழங்குகின்றன. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் விளம்பர பதிவுகள் ஈட்டும் முதல் 100 பிரபலங்கள் பட்டியலை இங்கிலாந்தின் ஹாப்பர் எச்.கியூ. நிறுவனம் வெளியிட்டது.

    முதலிடத்தில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். அவர் ஒரு பதிவுக்கு ரூ. 26.78 கோடி பெறுகிறார். அவரை 60 கோடி பயனர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். 2-வது இடத்தில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி (ரூ.21.15 கோடி) உள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியராக கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளார். அவர் ஒரு பதிவுக்கு ரூ.11.45 கோடி வருமானம் ஈட்டுகிறார்.

    அவர் மொத்த பட்டியலில் விராட் கோலி 14-வது இடத்தில் உள்ளார். விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். விராட் கோலியை 25.60 கோடி பேர் பின் தொடருகிறார்கள். பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் (ரூ.9.45 கோடி) ஒட்டுமொத்த பட்டியலில் 19-வது இடத்திலும், விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்திலும் உள்ளார்.

    முதல் 100 பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலி, நடிகை பிரியங்கா சோப்ரா, இன்ஸ்டாகிராம் பிரபலம் ரியாஸ் அலி ஆகிய மூன்று இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    பிரியங்கா சோப்ரா ஒரு பதிவுக்கு ரூ.4.4 கோடி வருமானம் ஈட்டி 29-வது இடத்தில் உள்ளார்.

    இந்த தகவலை பார்த்து, விராட் கோலி இவ்வளவு தொகை பெறுகிறாரா...! என ரசிகர்கள் வாயடைத்து போனர். ஆனால், இந்த தகவல் குறித்து விராட் கோலி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், ''நான் பெறும் அனைத்திற்கும் நன்றியுள்ளவனாகவும், கடமைப்பட்டுள்ளவனாகவும் இருக்கும்போது, சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் பெறும் வருமானம் குறித்து பரவி வரும் செய்தி உண்மையல்ல'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    என்றாலும், விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது உண்மை என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது.

    • ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறையாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது.
    • ஏற்கனவே 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன.

    லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    நேற்று மாலை 6 மணிக்கு நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை மலேசியா வீழ்த்தியது. இரவு 8.30 மணிக்கு நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் ஜப்பானை ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதுகின்றன. இதில் மலேசியாவை வீழ்த்தி

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறையாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது.

    இறுதிப்போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் பங்கேற்க உள்ளார் என்றும், அனுராக் தாகூர் இறுதிப் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியானது.

    ஏற்கனவே 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×