என் மலர்
விளையாட்டு
- வெல்ஸ் பயர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
- கடைசி மூன்று பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்து ஷப்னிம் இஸ்மாயில் அசத்தினார்.
பெண்களுக்கான 100 பந்து போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பர்மிங்காம் பீனிக்ஸ் மற்றும் வெல்ஷ் பயர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பர்மிங்காம் பீனிக்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வெல்ஷ் பயர் அணி 100 பந்துகளில் 7 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பர்மிங்காம் பீனிக்ஸ் 100 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை ஷப்னிம் இஸ்மாயில் வீசினார். முதல் பந்தில் 1 ரன்களும் 2-வது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. அடுத்த மூன்று பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்து அணியின் வெற்றி ஷப்னிம் இஸ்மாயில் முக்கிய பங்காற்றினார்.
இதன்மூலம் வெல்ஸ் பயர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
- இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசையில் அனுபவம் வாய்ந்த சூர்யகுமார் யாதவை இறக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
- இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் 37 வயதான ஷிகர் தவான் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் எனது பெயர் இடம் பெறாதது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு மனதை தேற்றிக் கொண்டேன். கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் இடம் பிடித்துள்ள இளம் வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன்.
இந்திய அணிக்கு நான் திரும்புவதற்கு தயாராக இருப்பேன். அதனால் தான் உடல்தகுதியை நல்ல நிலையில் வைத்திருக்க தொடர்ந்து பயிற்சி மேற்கொள்கிறேன். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கு நான் தயார். கிரிக்கெட்டை நான் இன்னும் அனுபவித்து விளையாடுகிறேன். இதே போல் பயிற்சியிலும் உற்சாகமாக ஈடுபடுகிறேன். இவை எல்லாம் எனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்கள். எனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தேர்வாளர்களிடம் பேசவில்லை.
அடுத்த கட்டமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு தயாராக வேண்டும். அடுத்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன். இதே போல் சயத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளிலும் விளையாடுவேன்.
இவ்வாறு தவான் கூறினார்.
'உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசையில் அனுபவம் வாய்ந்த சூர்யகுமார் யாதவை இறக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அனுபவமும், இளமையும் கலந்த அணியாக நம்மிடம் உள்ளது. அத்துடன் பரிச்சயமான மைதானம் மற்றும் சாதகமான உள்ளூர் சூழலில் நடப்பதால் இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது' என்றும் தவான் குறிப்பிட்டார்.
- கோவை, சேலம் உள்பட 4 இடங்களில் நடக்கிறது.
- இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.3 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சமும், ஆட்டநாயகனுக்கு ரூ.10 ஆயிரமும், தொடர்நாயகனுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
சென்னை:
'தென்இந்திய கிரிக்கெட்டின் தந்தை' என்று அழைக்கப்பட்ட மறைந்த புச்சிபாபு நினைவாக அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) வருகிற 15-ந்தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 11-ந்தேதி வரை நெல்லை, கோவை, சேலம், நத்தம் ஆகிய இடங்களில் நடக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானம் தயார்படுத்தப்பட்டு வருவதால் முதல்முறையாக புச்சி பாபு கிரிக்கெட் சென்னைக்கு வெளியே நடத்தப்படுகிறது. 6 ஆண்டுக்கு பிறகு திரும்பும் இந்த போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், இந்தியன் ரெயில்வே, திரிபுரா, 'பி' பிரிவில் அரியானா, பரோடா, மத்திய பிரதேசம், 'சி' பிரிவில் மும்பை, டெல்லி, ஜம்மு-காஷ்மீர், 'டி' பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் கேரளா, பெங்கால் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 4 பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
வருகிற 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கும் தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- இந்தியன் ரெயில்வே (இடம்: கோவை), அரியானா-பரோடா (நத்தம்), மும்பை-டெல்லி (சேலம்), தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன்- கேரளா (நெல்லை) ஆகிய அணிகள் மோதுகின்றன.
இறுதிப்போட்டி கோவையில் (செப்.8-11) அரங்கேறுகிறது. இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.3 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சமும், ஆட்டநாயகனுக்கு ரூ.10 ஆயிரமும், தொடர்நாயகனுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ. பழனி சென்னையில் நேற்று தெரிவித்தார். அப்போது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, பொருளாளர் ஸ்ரீனிவாசராஜ், உதவி செயலாளர் டாக்டர் பாபா, சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவர் செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- பி.வி.சிந்துவுக்கு நேரடியாக 2-வது சுற்றில் களம்இறங்கும் வகையில் முதல் சுற்றில் ‘பை சலுகை’ வழங்கப்பட்டுள்ளது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய தரப்பில் எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், ஸ்ரீகாந்த் ஆகியோர் விளையாடுகிறார்கள்.
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகனில் நடைபெறுகிறது. இதில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் (டிரா) நேற்று முடிவு செய்யப்பட்டது.
இதன்படி பெண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் ஒரே இந்தியரான பி.வி.சிந்துவுக்கு நேரடியாக 2-வது சுற்றில் களம்இறங்கும் வகையில் முதல் சுற்றில் 'பை சலுகை' வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் அடுத்தடுத்து சுற்றுகள் சிந்துவுக்கு கடினமாக அமைந்துள்ளது. அவர் 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) சந்திக்க வாய்ப்புள்ளது. அந்த தடையை வெற்றிகரமாக கடந்தால் பலம் வாய்ந்த தாய்லாந்தின் ராட்சனோக் இன்டானோன், 'நம்பர் ஒன்' புயல் அன்சே யங்கை (தென்கொரியா) ஆகியோரை எதிர்கொள்ள நேரிடலாம்.
கடந்த ஓராண்டாக எந்த பட்டமும் வெல்ல முடியாமல் திண்டாடும் சிந்து தொடர்ச்சியான தோல்விகளால் உலக தரவரிசையில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை 2019-ம் ஆண்டில் வென்று வரலாறு படைத்த சிந்து மீண்டும் அதே போல் அசத்துவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), ஒலிம்பிக் சாம்பியன் சென் யுபே (சீனா), முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரங்கள் தாய் ஜூ யிங் (சீனதைபே), கரோலினா மரின் (ஸ்பெயின்) உள்ளிட்டோரும் வரிந்து கட்டுவதால் சிந்துவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய தரப்பில் எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், ஸ்ரீகாந்த் ஆகியோர் விளையாடுகிறார்கள். சமீபகாலமாக தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 9-ம் நிலை வீரரான பிரனாய் முதல் சுற்றில் காலே கோல்ஜோனெனை (பின்லாந்து) சந்திக்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கென்டோ நிஷிமோட்டோவுடன் சவாலை தொடங்குகிறார். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான லக்ஷயா சென் முதல் ரவுண்டில் ஜார்ஜெஸ் ஜூலியன் பாலுடன் (மொரீசியஸ்) களம் காணுகிறார். ஒலிம்பிக் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) முதல் சுற்றில் 36-ம் நிலை வீரர் நேட் நுயேனுடன் (அயர்லாந்து) மோதுகிறார்.
இரட்டையரில் 5 இந்திய ஜோடிகள் ஆடுகிறது. இதில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தை பெற்று கவனத்தை ஈர்த்துள்ள சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையரில் திரிஷா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஆகிய ஜோடிகள் நேரடியாக 2-வது ரவுண்டில் கால்பதிக்கின்றன. அஸ்வினி பாத்- ஷிகா கவுதம், ரோகன் கபூர்- சிக்கிரெட்டி, வெங்கட் பிரசாத்- ஜூஹி தேவாங்கன் ஆகியோரும் களம் இறங்குகிறார்கள்.
- கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 4-6, 3-6 என்ற நேர்செட்டில் மான்பில்சிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
- இகா ஸ்வியாடெக் முன்னாள் நம்பர் ஒன் வீரரான கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
டொராண்டோ:
கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொராண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் விம்பிள்டன் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-2, 7-5 என்ற செட்டில் இத்தாலியின் அர்னால்டியை விரட்டியடித்தார். இன்னொரு ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 4-6, 3-6 என்ற நேர்செட்டில் மான்பில்சிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே), மெக்டொனால்டு (அமெரிக்கா), ஜானிக் சின்னெர் (இத்தாலி) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 7-6 (8-6), 6-2 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
2-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் பெட்ரா மார்டிச்சை (குரோஷியா) தோற்கடித்தார். இதே போல் கிவிடோவா (செக்குடியரசு), டேனிலி காலின்ஸ் (அமெரிக்கா), வான்ட்ரோசோவா (செக்குடியரசு), லேலா பெர்னாண்டஸ் (கனடா), கரோலினா முச்சோவா (செக்குடியரசு), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோரும் வெற்றியை ருசித்தனர்.
- ரொம்ப நாட்களுக்கு பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் 4-வது வரிசையில் நன்றாக விளையாடினார்.
- துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாய் அய்யருக்கு காயம் கொஞ்சம் குடைச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
மும்பை:
ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டிக்கான இந்தியாவின் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா செயல்படுகிறார். மும்பையில் நேற்று நடந்த இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோகித் சர்மா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங்கில் 4-வது வரிசை நீண்டகாலமாகவே பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. யுவராஜ்சிங்குக்கு பிறகு அந்த இடத்தில் எந்த பேட்ஸ்மேனும் தங்களை வலுவாக நிலைநிறுத்திக்கொள்ளவில்லை. ரொம்ப நாட்களுக்கு பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் 4-வது வரிசையில் நன்றாக விளையாடினார். கணிசமான ரன்களும் குவித்தார். துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாய் அய்யருக்கு காயம் கொஞ்சம் குடைச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், 4-5 ஆண்டுகளாக இது தான் நடக்கிறது. அந்த வரிசையில் ஆடிய நிறைய வீரர்கள் காயமடைந்து இருப்பதும், பிறகு அந்த இடத்திற்கு புதிய வீரர்கள் வந்து ஆடுவதும் வாடிக்கையாகி விட்டது. இருப்பினும் எந்த வீரரும் அந்த வரிசையில் கச்சிதமாக பொருந்தவில்லை. சரியான வீரர்களை அடையாளம் காண்பது சவாலாக உள்ளது.
கடந்த 4-5 ஆண்டுகளாக வீரர்கள் அதிக அளவில் காயமடைவது நமது நீண்டகால திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீரர்கள் காயமடையும் போதோ அல்லது அணித் தேர்வில் இருந்து ஒதுங்கி இருக்கும் போதோ புதிய வீரர்களை கொண்டு வெவ்வேறு விதமான முயற்சிகளை செய்து பார்க்கிறோம். அதனால் தான் 4-வது பேட்டிங் வரிசையை பற்றி பேச வேண்டி இருக்கிறது. நான் கேப்டனாக இல்லாத போது கூட இந்த வரிசையில் நிறைய வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்திருக்கிறார்கள்.
இந்திய அணியில் எனக்கு உள்பட யாருக்கும் தானாகவே இடம் கிடைத்து விடாது. இதே போல் யாருக்கும் இடம் உறுதி என்று கூறிவிட முடியாது. தாங்கள் உலகக் கோப்பை அணியில் இடம் பெறப்போகிறோம் என்பது சில வீரர்களுக்கு தெரியும். அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடிய சில வீரர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
ஸ்ரேயாஸ் அய்யரும், லோகேஷ் ராகுலும் கடந்த 4 மாதங்களாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. பெரிய அளவில் காயமடைந்து ஆபரேஷன் செய்து இருக்கிறார்கள். நானும் ஒரு முறை காயத்துக்கு ஆபரேஷன் செய்து இருக்கிறேன். காயத்துக்கு பிறகு அணிக்கு திரும்புவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்துள்ளேன். அவர்கள் எந்த அளவுக்கு காயத்தில் இருந்து மீண்டு தயாராக இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
இன்னும் சில தினங்களில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணி தேர்வு செய்யப்பட உள்ளது. வீரர்களை தேர்வு செய்வதில் நிறைய விவாதங்கள் இருக்கும். ஆனால் யாருக்கும் அணியில் தானாகவே இடம் கிடைத்து விடாது. ஒவ்வொரு இடத்திற்கும் கடும் போட்டி இருக்கிறது. நிறைய வீரர்களின் பெயர் பரிசீலனையில் உள்ளது. உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கு எது சரியான அணி கலவையாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டியது முக்கியம்.
உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தரமான அணிக்கு எதிராக நமது சில பேட்ஸ்மேன்கள் நெருக்கடிக்கு மத்தியில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புகிறேன்.
50 ஓவர் உலகக்கோப்பையை நான் வென்றதில்லை. அதை கையில் ஏந்த வேண்டும் என்பதே எனது கனவாகும். அதற்காகத் தான் நாங்கள் போராடுகிறோம். அதை வெல்வதை விட மகிழ்ச்சி அளிப்பது வேறு எதுவும் இருக்க முடியாது. உலகக் கோப்பையை தட்டில் வைத்து தந்து விட மாட்டார்கள். உண்மையிலேயே இதற்காக மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். 2011-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை நாங்கள் எல்லோரும் இதற்காகத்தான் போராடி வருகிறோம்.
ஒவ்வொருவரும் களத்திற்கு சென்று வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ளனர். ஏனெனில் நம்மிடம் சிறந்த அணி உள்ளது என்பதை அறிவோம். நமது வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள். அவர்களால் இதை செய்ய முடியும் என்ற உள்ளுணர்வும், தன்னம்பிக்கையும் இருக்கிறது.
அணியை வழிநடத்தினாலும் முதலில் நான் ஒரு பேட்டர். அதன் பிறகு தான் கேப்டன். அதனால் அணியில் எனது பங்களிப்பு பேட்டிங்கில் தான் அதிகம் உள்ளது. கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட வேண்டியது தான். அதே நேரத்தில் நான் நிறைய ரன்கள் குவித்து அதன் மூலம் அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டும்.
இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் கலந்து ஆலோசித்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கிறோம். சுழற்சி முறையில் அவர்களை பயன்படுத்துகிறோம். இது உலகக் கோப்பை ஆண்டு. ஒவ்வொரு வீரரும் புத்துணர்வுடன் இருக்க வேண்டும். எந்த வீரரும் முக்கியமான போட்டிகளை தவற விடுவதை நாங்கள் விரும்பவில்லை.
இடக்கை பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அவரை நான் இரு ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். முதிர்ச்சியான வீரர் போல் செயல்பட்டு வருகிறார். நான் அவரிடம் பேசும் போது, அவர் தனது பேட்டிங்கை நன்கு புரிந்து வைத்திருப்பதை அறிந்து கொண்டேன். பந்தை எங்கு அடிக்க வேண்டும், எந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அவருக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. இந்தியாவுக்கு ஆடிய கடந்த சில ஆட்டகளில் அதை நிரூபித்து காட்டி விட்டார்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
- ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா 1-1 என கோல் அடித்திருந்தது
- கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் ஒரு கோல் அடித்து வெற்றி
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இரண்டு அணி வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஸ்பெயின் வீராங்கனைகள் இலக்கை நோக்கி பந்து கடத்தி சென்றனர். இருந்தாலும் முதல் பாதி நேர ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை.
2-வது பாதி நேர ஆட்டத்திலும் கோல் அடிக்க முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி அந்த அணியின் மரியானோ கால்டென்டே கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
பிறகு 90 நிமிடம் வரை நெதர்லாந்து அணியால் கோல் அடிக்க முடியவில்லை. காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூடுதல் நேரம் வழங்கப்படும். அந்த நேரத்தில் (91-வது நிமிடம்) நெதர்லாந்து வீராங்கனை ஸ்டெபானி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.
நாக்அவுட் போட்டி என்பதால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. தலா 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. முதல் 15 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கூடுதல் நேரத்தில் ஆட்டத்தின் 111-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை சல்மா செலிஸ்டெ பராலுயெலோ அயுங்கோனா கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் ஆட்டம் முடியும் வரை நெதர்லாந்து வீராங்கனைகளால் கோல் அடிக்க முடியவில்லை.
எனவே, ஸ்பெயின் 2-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணிக்கு 8 முறையும், நெதர்லாந்து அணிக்கு 2 முறையும கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
நெதர்லாந்து வீராங்கனைகள் இரண்டு முறை ஆஃப்சைடு, ஸ்பெயின் வீராங்கனைகள் ஆஃப்சைடு செய்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இலக்கை நோக்கி ஸ்பெயின் 8 முறையும், நெதர்லாந்து 4 முறையில் பந்தை அடித்தன. பந்து 62 சதவீதம் ஸ்பெயின் வசமே இருந்தது.
- கனடா ஓபன் டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்று போட்டி நடந்தது.
- இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி முடிவடைய உள்ளது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ஜேமி முர்ரே- நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியைச் சந்தித்தது.
இதில் போபண்ணா ஜோடி 6-3, 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி எழும்பூரில் நடைபெற்று வருகிறது.
- இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.
சென்னை:
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் மலேசியா, நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகள் மோதுகின்றன.
இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.
முன்னதாக, மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், சீனா அணிகள் மோதுகின்றன.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டி நடைபெறுகிறது.
- இதில் முன்னணி வீரர்களான சிட்சிபாஸ், ஸ்வெரேவ் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி முடிவடைய உள்ளது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் 13-ம் நிலை வீரரான ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்பெயின் வீரர் புகினோ உடன் மோதினார். இதில் புகினோ 6-1, 6-2 என்ற கணக்கில் வென்று 3வத் சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், டென்னிஸ் தரவ்ரிசையில் 4வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் மான்பில்சுடன் மோதினார். இதில் மான்பில்ஸ் 6-4, 6-3 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- 3-வது போட்டிக்கு முன்பு பாண்ட்யா அடித்த பந்து சிறுமியை தாக்கியது.
- 3-வது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்த இக்கட்டான சூழலில் 3-வது போட்டியில் இரு அணிகளும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது நெழிச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.
இந்த போட்டிக்கு முன்பு ஹர்திக் பாண்ட்யா பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் அடித்த பந்து ஒரு சிறுமியை தாக்கியது. உடனே அந்த சிறுமி பிசிசிஐ-ன் மருத்துவ குழுவை அனுகினார். பின்னர் அந்த சிறுமியை போட்டி முடியும் வரை காத்திருங்கள் என்று பாண்ட்யா கூறினார். பின்னர் போட்டி முடிந்த பிறகு அந்த சிறுமிக்கு அவர் கையெழுத்திட்ட பந்தை அவர் பரிசாக வழங்கினார். அதை வாங்கி கொண்ட சிறுமி மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.
திலக் வர்மாவை அரை சதம் அடிக்க விடாமல் செய்து விட்டதாக ஹர்திக் பாண்ட்யா மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இந்திய அணி அடுத்த மாதம் அயர்லாந்து சென்று 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
- இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இந்த தொடர் முடிந்ததும் அடுத்த மாதம் அயர்லாந்து சென்று 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் புதுமுக வீரர்களை கொண்டே இந்த தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் 2 இந்திய வீரர்களுடன் டி20-யில் ரிங்கு சிங் அறிமுக போட்டியில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பட்டியலில் முதல் வீரராக ரிங்கு சிங் உள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர், இதுவரை எந்த சர்வதேச ஆட்டத்திலும் விளையாடவில்லை. ஐபிஎல் 2023-ல் தனது அசாத்திய பேட்டிங் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
2-வது வீரராக பேக்அப் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் முதன்மை கீப்பராக இருப்பார். இருப்பினும், தொடரில் மூன்று ஆட்டங்கள் உள்ளதால், ஜிதேஷ் ஷர்மா ஒரு ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ளது.
தொடை காயத்தில் இருந்து மீண்ட பிரசித் கிருஷ்ணா மீண்டும் களம் இறங்கியுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் மார்ச் 2021-ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.
இவர்கள் மூவரும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் களமிறங்க உள்ளனர்.
அணியின் விவரம்: ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான்.






