என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் ஆடிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் 236 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.

    கொழும்பு:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெறுகிறது. சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது.

    இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், வங்காளதேசமும் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்தது. சமர விக்ரமா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 93 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். பதும் நிசாங்கா 40 ரன்கள் எடுத்தார்.

    வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது,ஹசன் மமுத் தலா 3 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தவ்ஹித் ஹிருடோய் பொறுப்புடன் ஆடி 82 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், வங்காளதேச அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

    இலங்கை அணி சார்பில் தீக்ஷனா, தசுன் சனகா, பதரினா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    • நாய்க்குட்டியை விராட் கோலி பாசமாக கொஞ்சினார்.
    • இதனையடுத்து மற்ற வீரர்கள் நாய்க்குட்டியுடன் கால்பந்து விளையாட தொடங்கினர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு முன்னேறின. ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறின.

    'சூப்பர்-4' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    'சூப்பர்-4' சுற்றின் 3-வது ஆட்டம் கொழும்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.



    இந்த நிலையில் பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கொழும்புவில் இந்திய அணி வீரர்கள் பில்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

    இந்த பயிற்சிக்கு முன்பு வார்ம் அப் செய்வதற்காக வீரர்கள் கால்பந்து ஆட்டத்தில் விளையாடுவது வழக்கம். அப்போது மைதானத்தில் ஒரு நாய்க்குட்டி இந்திய வீரர்களை சுற்றிக் கொண்டு நின்றது. அப்போது அந்த நாய்க்குட்டியை பார்த்த விராட் கோலி அதனை செல்லமாக அழைக்க அது அழகாக வாழை ஆட்டிக்கொண்டு விராட் கோலி இடம் சென்றது.

    இதை அடுத்து அந்த நாய்க்குட்டியை விராட் கோலி பாசமாக கொஞ்சினார். இதனையடுத்து மற்ற வீரர்கள் நாய்க்குட்டியுடன் கால்பந்து விளையாட தொடங்கினர். பின்னர் அந்த நாய்க்குட்டி அங்கிருந்து சென்றது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

    • கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் இலங்கையில் விளையாடி வருகிறோம்.
    • நாளை வானிலை தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதி வருகிறது.

    முதல் போட்டியில் வங்காளதேசம் அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இன்று சூப்பர் 4-ல் 2-வது போட்டி நடைபெறுகிறது. இதில் வங்காளதேசம் மற்றும் இலங்கை மோதுகிறது. நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் இந்தியாவை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் இலங்கையில் விளையாடி வருகிறோம். நாங்கள் டெஸ்ட் விளையாடினோம். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு தொடரில் விளையாடினோம். அதன் பிறகு எல்.பி.எல். விளையாடி உள்ளோம். தொடர்ச்சியாக இங்கு விளையாடி வருவதால் இந்தியாவை நாங்கள் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.

    நாங்கள் புதிய பந்தில் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெறுகிறோம் மற்றும் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவதே எங்களது திட்டம். மிடில் ஓவர்களில் எங்களுக்கு விக்கெட்டுகள் தேவை. ஆனால் நாங்கள் அவற்றைப் பெறவில்லை.

    மிடில் ஓவர்களில் சொதப்பினாலும் போட்டியை நன்றாக முடிப்பதை நீங்கள் காணலாம். எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் இறுதியில் சிறப்பாக செயல்படுகின்றனர். இது ஒரு அணியின் கூட்டு முயற்சி. போட்டியில் யாராவது தோல்வியுற்றால், மற்றொரு பந்து வீச்சாளர் அதை சரி செய்கிறார்கள். நாளை வானிலை தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துடைப்ப குச்சியால் மெக்ராத் பாம்பின் தலை மற்றும் வாலை பிடித்து கொண்டு அதனை வீட்டிற்கு வெளியில் கொண்டு செல்லும் காட்சிகள் உள்ளது.
    • வீட்டுக்குள் நுழைந்த ராட்சத வண்டுகளை தனது மனைவி சாரா லியோன் உதவியுடன் பிடித்து வெளியே விட்டதாகவும் மெக்ராத் குறிப்பிட்டுள்ளார்.

    பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் வீட்டுக்குள் புகுந்த ஆபத்தான மலைபாம்பை துணிச்சலுடன் பிடித்து அசத்தி உள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரரான கிளன் மெக்ராத்.

    இவரது வீட்டுக்குள் மலைபாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதை பார்த்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். எனினும் மெக்ராத் வீடு துடைக்க பயன்படுத்தப்படும் மாப்பை வைத்து அந்த மலைபாம்பை சாதுர்யமாக பிடித்து அப்புறப்படுத்திய காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    அதில் துடைப்ப குச்சியால் மெக்ராத் பாம்பின் தலை மற்றும் வாலை பிடித்து கொண்டு அதனை வீட்டிற்கு வெளியில் கொண்டு செல்லும் காட்சிகள் உள்ளது. ஏற்கனவே வீட்டுக்குள் நுழைந்த ராட்சத வண்டுகளை தனது மனைவி சாரா லியோன் உதவியுடன் பிடித்து வெளியே விட்டதாகவும் மெக்ராத் குறிப்பிட்டுள்ளார்.


    • வயலட்டா மிதுல் தமது தேசிய அணிக்காக 40 முறை களமிறங்கியுள்ளார்.
    • 26 வயதேயான வயலட்டா மிதுல் ஐரோப்பாவின் பல நாடுகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் முக்கிய வீரரான வயலட்டா மிதுல் விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் மொத்த கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் நட்சத்திர வீராங்கனையான 26 வயது வயலட்டா மிதுல் தமது தேசிய அணிக்காக 40 முறை களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் 4-ம் திகதி தமது சக கால்பந்து வீராங்கனை ஒருவருடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டவர் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

    அவரது மரணம் தொடர்பில் கால்பந்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் வீரர், சக வீரர் மற்றும் நண்பரின் திடீர் மரணத்தை எங்கள் இதயங்களில் ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

    26 வயதேயான வயலட்டா மிதுல் ஐரோப்பாவின் பல நாடுகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது.
    • இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று கார்டிப் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து சற்று தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது.

    அதை தொடர்ந்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. 45.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 297 ரன்களை எடுத்த நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு டேவோன் கான்வே- டார்ல் மிட்சேல் முக்கிய பங்காற்றியவர்கள். அந்த ஜோடி அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தனர். கான்வே 13 பவுண்டரி 1 சிக்ஸருடன் 111* (121) ரன்கள் விளாசி அசத்தினார். டார்ல் மிட்சேல் 7 பவுண்டரி 7 சிக்ஸருடன் சதமடித்து 118* (91) ரன்கள் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். டேவோன் கான்வே ஆட்டநாயகன் விருதை வென்றார். 

    அத்துடன் 3-வது விக்கெட்டுக்கு 180* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்த கான்வே - மிட்சேல் ஜோடி இப்போட்டி நடைபெற்ற கார்டிஃப் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற ராகுல் டிராவிட் - விராட் கோலியின் 12 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தனர்.

    அந்த பட்டியல்:

    1. டேவோன் கான்வே – டார்ல் மிட்சேல் : 180*, 2023

    2. ராகுல் டிராவிட் – விராட் கோலி : 170, 2011

    3. சர்ப்ராஸ் கான் – சோயப் மாலிக் : 163, 2016

    4. எம்எஸ் தோனி – சுரேஷ் ரெய்னா : 144, 2014

    • 29 வயதான லபுஸ்சேன் தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவர்.
    • அவருக்கு 10 வயதாக இருக்கும் போது அவரது பெற்றோர் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தனர்.

    புளோம்பாண்டீன்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஆட்டம் புளோம்பாண்டீன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 49 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 113 ரன்களுடன் (16.3 ஓவர்) தத்தளித்தது.

    இதற்கிடையே, 3-வது வரிசையில் களம் கண்ட கேமரூன் கிரீனுக்கு (0) வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா வீசிய 'பவுன்சர்' பந்து ஹெல்மெட்டோடு இடது காதோரம் பலமாக தாக்கியது. இதனால் வீக்கம் ஏற்பட்டு தலைக்குள் அதிர்வை சந்தித்ததால், வெளியே அழைத்து செல்லப்பட்டு ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். முன்னெச்சரிக்கையாக அவருக்கு ஓய்வு அளிப்பது என்று அணி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து பந்து தலையில் தாக்கினால் மாற்று வீரரை சேர்க்கும் விதிப்படி கேமரூன் கிரீனுக்கு பதிலாக மார்னஸ் லபுஸ்சேன் சேர்க்கப்பட்டார்.

    8-வது விக்கெட்டுக்கு லபுஸ்சேனும், ஆல்-ரவுண்டர் ஆஷ்டன் அகரும் கைகோர்த்து அணியை நெருக்கடியில் இருந்து காப்பாற்றினர்.

    இறுதியில் ஆஸ்திரேலியா 40.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 225 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. லபுஸ்சேன் 80 ரன்களுடனும் (93 பந்து, 8 பவுண்டரி), ஆஷ்டன் அகர் 48 ரன்களுடனும் (69 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.

    லபுஸ்சேன் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 29 வயதான லபுஸ்சேன் தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவர். அவருக்கு 10 வயதாக இருக்கும் போது அவரது பெற்றோர் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வரும் லபுஸ்சேன் தற்போது தனது பூர்விக அணியை அதுவும் மாற்று வீரராக நுழைந்து தோற்கடித்து அசத்தி இருக்கிறார்.

    இந்த தொடருக்கான அணியில் முதலில் லபுஸ்சேன் தேர்வு செய்யப்படவில்லை. ஸ்டீவன் சுமித் காயத்தால் விலகியதால் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் தாயின் ஆசை நிறைவேறியதாக லபுஸ்சேன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முந்தைய நாள் இரவு எனது தாயார் என்னிடம் இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக நீ விளையாடுவாய் என்று கூறினார். அதற்கு நான், 'களம் காணும் அணியில் எனக்கு இடமில்லையே' என்று கூறியதும் மிகவும் வருந்தினார். முதல் பாதியில் நான் விளையாடாவிட்டாலும் கூட அவர் ஸ்டேடியத்தில் அமர்ந்து ஆட்டம் முழுவதையும் கண்டுகளித்தார். எதிர்பாராத விதமாக எனது அம்மாவின் ஆசைப்படி நானும் விளையாடும் வாய்ப்பை பெற்று விட்டேன். உண்மையில் எனது உணர்வை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் நீக்கப்பட்ட போது, நான் அதிர்ச்சி அடையவில்லை. ஏனெனில் கடந்த 10-12 ஒரு நாள் போட்டிகளில் நான் போதுமான அளவுக்கு ரன் எடுக்கவில்லை. அணி தேர்வாளர்களிடம், 'ஏன் இடம் கிடைக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது' என்று கூறினேன். அத்துடன் இன்னும் பேட்டிங்கில் மிடில் வரிசையில் இருக்க விரும்புவதாகவும் சொன்னேன். அணியைவிட்டு வெளியே இருக்கும் சமயத்தில், எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்' என்றார்.

    2-வது ஆட்டம் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    • அமெரிக்க ஓபன் தொடரில் 3-வது முறையாக மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    • இறுதிப்போட்டியில் மெத்வதேவ் - ஜோகோவிச் மோத உள்ளனர்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்க இளம் வீரர் பென் ஷெல்டன் ஆகியோர் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    இந்நிலையில் 2-வது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் கார்லஸ் அல்காரஸ் - மெத்வதேவ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-6 (7-3) என போராடி கைப்பற்றிய மெத்வதேவ் அடுத்த செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 3-வது செட்டை 6-3 என அல்காரஸ் கைப்பற்றினார். இதையடுத்து 4-வது செட்டில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6-3 என அல்காரஸை வீழ்த்தினார்.

    இறுதியில் 7-6 (7-3) , 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தி மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் தொடரில் 3-வது முறையாக இவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    இறுதிப்போட்டியில் மெத்வதேவ் - ஜோகோவிச் மோத உள்ளனர்.

    • பொதுவாக இந்த ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது.
    • இதனால் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.

    கொழும்பு:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர்4 சுற்றை எட்டியுள்ளன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

    இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், வங்காளதேசமும் மோதுகின்றன.

    தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றில் வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 2 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது. இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்து தப்பித்தது. இலங்கை அணியில் பேட்டிங்கில் குசல் மென்டிஸ், பதும் நிசாங்கா, அசலங்கா, திமுத் கருணாரத்னே நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் பதிரானா, தீக்ஷனா, ரஜிதா நம்பிக்கை அளிக்கிறார்கள். உள்ளூர் சூழலில் ஆடுவது இலங்கைக்கு கூடுதல் பலமாகும்.

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறுநடை போடுகிறது. இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால், தொடர்ந்து அதிக வெற்றிகளை குவித்து சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானை (தலா 12 வெற்றி) பின்னுக்கு தள்ளிவிடும்.

    ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசம் லீக் சுற்றில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சூப்பர்4 சுற்றுக்கு வந்தது. சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் வங்காளதேச அணி, பாகிஸ்தானிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் உதை வாங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 38.4 ஓவர்களில் 193 ரன்னில் அடங்கியது. அனுபவம் வாய்ந்த ஷகிப் அல்-ஹசன் (53 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (64 ரன்) அரைசதம் அடித்ததால் கவுரவமான ஸ்கோரை எட்டியது. இல்லாவிட்டால் நிலைமை மோசமாகி இருக்கும்

    பேட்டிங்கில் சீரற்ற தன்மை அவர்களின் பலவீனமாக உள்ளது. நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தசைப்பிடிப்பால் விலகியது அந்த அணிக்கு இன்னொரு பின்னடைவாகும். டாப்-5 வீரர்களில் யாராவது ஒருவர் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடினால் சவாலான ஸ்கோரை எட்டலாம். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் வங்காளதேசத்தின் இறுதிப்போட்டி கனவு தகர்ந்து விடும் என்பதால், தவறுகளை திருத்திக்கொண்டு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டுவார்கள். மொத்தத்தில், வலுவான இலங்கையின் வெற்றிப்பயணத்துக்கு வங்காளதேச வீரர்கள் முட்டுக்கட்டை போடுவார்களா? அல்லது மீண்டும் அடங்கிப்போவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அங்கு மழை பெய்வதற்கு 68 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பொதுவாக இந்த ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். இந்த மைதானத்தில் இலங்கை அணி இதுவரை 120 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 74-ல் வெற்றியும், 39-ல் தோல்வியும் கண்டுள்ளது. 7 ஆட்டத்தில் முடிவில்லை. அதே சமயம் வங்காளதேசத்துக்கு இது ராசியான மைதானம் கிடையாது. இங்கு அந்த அணி 11 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் தோற்று இருக்கிறது. 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா 375 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் அதிகபட்சமாகும். 2002-ம் ஆண்டு நெதர்லாந்து 86 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இலங்கை: பதும் நிசாங்கா, கருணாரத்னே, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, சமரவிக்ரமா, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), துனித் வெல்லாலகே, தீக்ஷனா, கசுன் ரஜிதா, பதிரானா.

    வங்காளதேசம்: முகமது நைம், லிட்டான் தாஸ், அபிப் ஹூசைன், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹரிடோய், முஷ்பிகுர் ரஹிம், ஷமிம் ஹூசைன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மமுத்.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண விஐபிக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
    • பிசிசிஐ தலைமை செயலாளர் ஜெய் ஷா சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கினார்.

    மும்பை:

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

    இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

    இதற்கிடையே, இந்தியாவின் தலைசிறந்த நட்சத்திரங்களுக்கு உலக கோப்பை போட்டிகளை நேரில் காண பிசிசிஐ கோல்டன் டிக்கெட் வழங்கி வருகிறது.

    இந்நிலையில், பிசிசிஐ தலைமை செயலாளர் ஜெய் ஷா உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கி உள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை பிசிசிஐ தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ மற்றும் ஐசிசி-க்கு சச்சின் தெண்டுல்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டி நடைபெற்றது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன.

    இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்க இளம் வீரர் பென் ஷெல்டனுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    • சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
    • இதனால் அந்தப் போட்டி மாற்று நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ஆசிய கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன.

    நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி கொழும்புவில் பாகிஸ்தானை ச்சந்திக்கிறது. கொழும்புவில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதனால் லீக் சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் தடைப்பட்டது போல சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் தடைபட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

    இந்நிலையில், கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நாளை (நடக்கும் இந்தியா, பாகிஸ்தான் சூப்பர்4 சுற்று ஆட்டத்திற்கு மட்டும் மாற்று நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளான அடுத்த நாளில் (11-ம் தேதி) போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    ×