என் மலர்
புதுச்சேரி
புதுவை திருவள்ளூவர் நகரில் உள்ள துலுக்கானத்தமன் கோவில் அந்த பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். நேற்று மதியம் உச்சிகால பூஜையை முடித்து கோவில் நடையை சாத்திவிட்டு பூசாரி அய்யனார் வீட்டிற்கு சென்றார். பின்னர் மாலையில் மீண்டும் அங்கு வந்த அவர் கோவில் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே பதறியடித்துக் கொண்டு கோவிலுக்குள் சென்று பார்த்தபோது துர்க்கையம்மன், விநாயகர், முருகர் ஆகிய சாமி சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தி இருந்தது கண்டு திடுக்கிட்டார்.
இதுகுறித்து அய்யனார் தெரிவித்த தகவலின் பேரில் கோவில் அறங்காவல் குழுவினர் முத்தியால்பேட்டை போலீசுக்கு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் காட்சிகளை பார்வையிட்டு கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகளை சேதப்படுத்திய நபர்கள் யார்? எனவும் விசாரித்து வருகிறார்கள். பட்டப்பகலில் கோவிலுக்குள் இருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டை விட அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நம்பிக்கையோடு முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த மாணவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வாழ்த்து செய்தியில் ‘இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் நாட்டின் விலை மதிப்பற்ற சொத்து. அவர்களுடைய கல்வி, சமூக உரிமைகளை பாதுகாக்க உறுதி ஏற்போம். குழந்தைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து உருளையன்பேட்டை போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அண்ணாநகர் மற்றும் மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஸ்பாவில் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் 10 அழகிகள் மீட்கப்பட்டனர். இதில் அண்ணாநகர் ஸ்பாவிலிருந்து மீட்கப்பட்ட அழகிகளில் 17 வயது சிறுமியும் ஒருவர்.
இதனால் உருளையன் பேட்டை போலீசார் விபசார வழக்கை போக்சோ வழக்காக மாற்றி அண்ணாநகர் ஸ்பாவின் உரிமையாளர் சுனிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் அந்த சிறுமியை ஸ்பாவில் பியூட்டிசியன் வேலைக்காக அழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இந்த நிலையில் ஸ்பா உரிமையாளர் சுனிதாவை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த ஸ்பாவிற்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களின் தகவல்கள் அனைத்தையும் சுனிதா போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்தார்.அதன் அடிப்படையில் சென்னை,புதுவை,கடலூர் திண்டிவனம் ஆகிய ஊர்களை சேர்ந்த சுமார் 40 பேர் வரை அந்த சிறுமியை சீரழித்திருப்பது உறுதிபடுத்தப்பட்டது.
மேலும் ஸ்பாவிற்கு வந்து சென்ற வாடிக்கையாளர்ளை அடையாளம் காண்பதற்கான முயற்சியில் போலீசார் இறங்கினர்.
அதன்படி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தப்பட்டதற்கான பரிவர்த்தனை மற்றும் செல்போனில் பேசியதற்கான ஆதாரங்கள் மற்றும் ஸ்பாவில் உள்ள வருகை பதிவேடுகளை போலீசார் கைப்பற்றினர்.
அதன் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் சுமார் 30 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இதில் சம்பந்தப்பட்ட 2 பேர் மறைமலை அடிகள் சாலையில் சுற்றி திரிவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர்கள் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற விக்னேஷ்வரன் (வயது 29), மற்றொருவர் கோட்டக்குப்பத்தை சேர்ந்த அருண் (24) என்பது தெரிய வந்தது. இதில், விக்னேஷ்வரன் சென்னையில் உள்ள குடோனில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அருண் தனியார் நிறு வனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் 2 பேரும் அந்த சிறுமியை 10 நாட்களாக சீரழித்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் நடத்திய விசாரணையில் இவர்கள் 2 பேரும் ஏற்கனவே விபசார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர்கள் என தெரியவந்தது.
பின்னர் விக்னேஷ் மற்றும் அருணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் திவீரமாக இறங்கியுள்ளனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கோர்க்காடு ஏரிக்கரையில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றது.
ஆனால் போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதில் 4 பேர் சிக்கினர். 2 பேர் தப்பியோடி விட்டனர்.
பிடிப்பட்ட அவர்களிடம் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வீச்சரிவாள்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் நாட்டு வெடி குண்டுகள் மற்றும் வீச்சரிவாள்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பிடிபட்ட 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்த சல்மான்கான் (வயது21), நெல்லிக்குப்பம் பெரியசோழவள்ளி ராஜீவ்காந்திநகரை சேர்ந்த ராஜி(18), அதே பகுதியை சேர்ந்த சிற்றரசன்(20) மற்றும் வில்லியனூர் ஜி.என்.பாளையம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த வீரபாகு(20) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.
முன் விரோதத்தில் புதுவையை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் நோக்கத்தோடு பதுங்கியிருந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்நது விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக வெடி குண்டுகளை வீசி கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வாணரப்பேட்டையை பிரபல ரவுடி பாம் ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி ஆகியோர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை யூனியன் பிரதேசத்தில் டெங்குவை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கொசு மருந்து அடித்தல் மற்றும் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைளில் முன்கள பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். டெங்கு மற்றும் சிக்குன்குனியா வராமல் தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.
தேங்காய் மட்டைகளை நிமிர்த்து வைக்காமல் நீர் தேங்காமல் கவிழ்த்து வைப்போம். தேவையுள்ள தண்ணீர் பானையை மூடி வைப்போம். தேவையற்ற பானைகளை மூடிவைப்போம். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம். தேவையற்ற பொருட்களை முறையாக அப்புறப்படுத்துவோம்.
தேவையற்ற டயர்களை தவிர்ப்போம். தேவையெனில் ஓட்டைபோட்டு மழைநீர் தேங்காமல் தடுப்போம். தண்ணீர் தொட்டியை கொசு புகாமல் மூடி வைப்போம். 2 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு ஆஸ்பத்திரியை அணுகவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் பருவமழை காலங்களில் நகர பகுதியில் தொடர்ந்து வெள்ள நீர் சாலைகளில் தேங்குகிறது.
இந்திராகாந்தி, சிவாஜி சிலை சதுக்கம், புஸ்சி வீதி உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதேபோல பல ஆண்டுகளாக பாவாணர் நகர், நடேசன் நகர், கிருஷ்ணாநகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ளம் தேங்கி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது.
இதனால் ஒவ்வொரு பருவமழை காலத்திலும் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மழைநீர் தேங்க வடிகால்கள் தூர்வாரப்படாதது முக்கிய காரணமாக உள்ளது.
அதேநேரத்தில் பல இடங்களில் அரசு இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதும் தண்ணீர் வெளியேற வழியில்லாத நிலையை உருவாக்கி உள்ளது.
இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இத்தகைய சூழலில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, அரசு அதிகாரிகளுடன் சட்டமன்ற வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அரசு செயலர்கள் வல்லவன், விக்ராந்த்ராஜா, கலெக்டர் பூர்வா கார்க், இயக்குனர்கள் சக்திவேல், முத்துமீனா, பாலாஜி, சப்-கலெக்டர்கள் கந்தசாமி, ரிஷிதாகுப்தா, நகராட்சி ஆணையர்கள் சிவக்குமார், சுரேஷ்ராஜ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், ராகுல் அலுவால் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தொடர் மழையால் புதுவை, காரைக்காலில் ஏரி, குளங்கள் நிரம்பியிருப்பது, மழை அளவு ஆகியவை குறித்து அதிகாரிகள் விளக்கினர். அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ரங்கசாமி கேட்டறிந்தார்.
தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பயிர் சேதம், சாலைகள் சேதம் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக மழைவெள்ளம் தேங்கும் பகுதிகளில் வரும் காலத்தில் தண்ணீர் தேங்காதவாறு நிரந்தரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மழை நிவாரணம் பெற புதுவை, காரைக்காலில் ஏற்பட்டுள்ள பயிர், சாலை உட்பட அனைத்து துறையின் சேத விபரங்களை உடனடியாக அறிக்கையாக தயார் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி பேசும்போது, வெள்ள வடிகால்களை கட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனால் தான் இந்திராகாந்தி சதுக்கத்தில் உடனடியாக தண்ணீர் வடிந்தது. அடுத்த பருவமழைக்குள் நகர பகுதியில் வெள்ள நீர் தேங்காததவாறு அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... சென்னையில் 40 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வந்தன. இந்தநிலையில் தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.
இதையடுத்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகை விடுமுறைகள் முடிந்ததும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கடந்த வாரம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் கனமழை காரணமாக கடந்த 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் ஏற்கனவே அறிவித்திருந்தபடி இந்த வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஆனது. தற்போது இன்றும், நாளையும் (வெள்ளி, சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே மீண்டும் பள்ளிகள் தொடங்குவது எப்போது? என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடுவிடம் கேட்டபோது, சமூக வலைதளத்தில் வைரலான தகவலை மறுத்தார்.
மேலும் அவர் கூறுகையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வழக்கம்போல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடியாக பாடங்கள் நடத்தப்படும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், காரைக்காலில் நேற்று காலை முதல் லேசாக மழை பெய்து வந்தது. இந்த மழை பிற்பகல் 3 மணிக்கு மேல் வெளுத்து வாங்கியது. அதன் பின்னர் நேற்று இரவில் இருந்து காலை வரை பலத்த மழை கொட்டியது.
இதனால், காரைக்காலின் பாரதியார் சாலை, காமராஜர் சாலை, பி.கே.சாலை மற்றும் ஏராளமான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. வாகனங்கள், முகப்பு விளக்குடன் ஊர்ந்து செல்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், பெரும்பாலுமான சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, கடலோர மீனவ கிராமங்கள், நெடுங்காடு, திருநள்ளாறு மற்றும் நகர் பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளுக்கும், அரசுத்துறை அதிகாரிகளுடன் சென்று, மழை நீர் வடிவதை ஆய்வு செய்தார். மழையினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்றும் அங்குள்ளோரிடம் கேட்டறிந்தார். அதேபோல், காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகாரிகாபட், மழை பாதிப்பை பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.
காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள வயல்களில் தண்ணீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. மழை நீரை சேமிக்க பொதுப்பணித்துறையினர் முறையான வழிவகை செய்யாததால், ஆறுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி, வீணாக கடலில் கலக்கிறது. மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. காரைக்காலில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை வரை 17 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.






