என் மலர்
புதுச்சேரி
தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் புதுவையின் முக்கிய ஏரிகளான ஊசுடு, பாகூர், வேல்ராம்பட்டு, கனகன் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இடைவிடாது பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
நகரில் தேங்கிய மழை வெள்ளத்தை நகராட்சி, பொதுப்பணித்துறை ஊழியர்கள் இரவு பகலாக அப்புறப் படுத்தினர். ஆங்காங்கே ராட்சத மோட்டார்கள் மூலம் மழை தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டது.
சில இடங்களில் வாய்க்கால்களில் இருந்த அடைப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் சரி செய்து மழைநீர் வழிந்தோட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நடேசன் நகர், பாவாணர் நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், டி.வி.நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தேங்கி கிடந்த மழை தண்ணீர் வெளியேற்றப்பட்டு வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. இதேபோல் பல இடங்களில் காலி மனைகளில் தேங்கி கிடந்த தண்ணீரும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
புதுவையை பொறுத்தவரை நேற்று பகலில் மழை பெய்யவில்லை. ஆனால் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. வெயில் முகம் காட்டவில்லை. மாலை 6 மணிக்கு மேல் லேசாக மழை விட்டு விட்டு பெய்தபடி இருந்தது.
இந்தநிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. ஆள் உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்கின்றன.
அதிகனமழை எச்சரிக்கையால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட இருந்த அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் யாரும் வரவில்லை. ஏற்கனவே கடலுக்குச் செல்லாத நிலையில் புதுச்சேரி மீனவர்கள் 3-வது நாளாக நேற்று மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதனால் விசைப் படகுகள், பைபர் படகுகள் அனைத்தும் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழையின் தீவிரம் நாளை மறுதினம் வரை இருக்கும் என்று கூறப் படுகிறது. அதன்படி, வங்க கடலில் ஏற்கனவே அறிவித்தபடி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்), கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
அதிகனமழை 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை பெய்யக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வழங்கப்படும் ‘ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (வியாழக்கிழமை) புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், நீலகிரி, கோவை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
13-ந் தேதி (சனிக்கிழமை) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை வரை மணிக்கு 40 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையொட்டி 3 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் 20 முதல் 25 சென்டி மீட்டர் வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மழை பாதித்தால் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க சமுதாய நலக்கூடங்கள், பள்ளிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளதால் அவற்றில் உடைப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் பொதுப்பணித்துறையினர் ஆங்காங்கே மணல் மூட்டைகளை அடுக்கி தயார் நிலையில் வைத்துள்ளனர். அனைத்து ஊழியர்களும் தயார் நிலையில் இருக்க பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
ஏரி, குளங்களை தொடர்ந்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தடையில்லா மின்சாரம் வழங்கவும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அவற்றை உடனடியாக சரிசெய்யவும் மின்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தீயணைப்புத்துறை, காவல்துறையினரும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் (புதன், வியாழன்) விடுமுறை விடப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுவையில் ஏற்கனவே மழை காரணமாக கடந்த 2 நாட்களாக விடுமுறை விடப்பட்டு இருந்தது. தற்போது மேலும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக புதுச்சேரி-கடலூர் சாலையில் அரியாங்குப்பம் போலீஸ்நிலையம் அருகே சாலையின் இரு புறங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.
தொடர் மழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தில் கட்டப்பட்டுள்ள படுகை அணை நிரம்பி வழிகிறது.
தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை குறித்து ஆலோசனை நடத்தினார்.
மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்தில் 61.53 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 84 ஏரிகள் உள்ளன. தற்போது மழை பெய்து வருவதையொட்டி நேற்றைய நிலவரப்படி 26 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில் மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரி 11.51 அடி உயரம் கொண்டது. இதில் தற்போது 9 அடியை எட்டியுள்ளது. 9.84 அடி உயரம் கொண்ட பாகூர் ஏரியின் நீர்மட்டம் தற்போது 7.21 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஏரிகள் நிரம்பி விடும்.
முருங்கப்பாக்கம், உழந்தை கீரப்பாளையம், சோரப்பட்டு, வம்புபட்டு, அபிஷேகப்பாக்கம் உள்பட 26 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. தொடர்ந்து ஏரிகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரி வாய்க்கால்களையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து எச்சரித்துள்ளது. மீதம் உள்ள 58 ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
வங்கக்கடல் பகுதியில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 10-ந் தேதி (நாளை), 11-ந் தேதியில் (நாளை மறுதினம்) சில இடங்களில் கன முதல் அதி கனமழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
வழக்கமாக அதி கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக ஆய்வு மையத்தால் வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும். அந்த வகையில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ள இடங்களுக்கு ‘ரெட் அலர்ட்' எச்சரிக்கையும், மிக கன மழை பெய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கையும் விடப்படும்.
அதன்படி, 10-ந் தேதி கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்டும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல், 11-ந் தேதி கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ‘ரெட் அலர்ட்'டும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்'டும் விடுக்கப்பட்டுள்ளது.
‘ரெட்' மற்றும் ‘ஆரஞ்சு அலர்ட' விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரையில் மழை பதிவாக வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென் கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக நாளை (புதன்கிழமை) டெல்டா மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், தமிழகத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை மறுதினம் (வியாழக்கிழமை) கடலூர், விழுப்புரம், சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும் பெய்யக்கூடும்.
12-ந்தேதி வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் நாளை மறுதினம் வரை சூறாவளி காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 9-ந்தேதிக்குள்(இன்று) கரை திரும்ப வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.
புதுவையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது.
புதுவையையொட்டிய தமிழக பகுதியிலும் தொடர் மழை பெய்வதால் வீடுர் மற்றும் சாத்தனூர் அணைகள் நிரம்பியுள்ளது. அணை நீர் வெளியேற்றப்படுவதால் மலட்டாறு மற்றும் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.
நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. புதுவையின் கிராமப்புற பகுதிகளில் மழை வெள்ளம் விவசாய நிலங்களில் புகுந்துள்ளது.
ஏம்பலம், சேலியமேடு, கிருமாம்பாக்கம், நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லூர், பாகூர், குருவிநத்தம், கல்மண்டபம், மடுகரை உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெல் பயிர் பயிரிடப்பட்டிருந்தது.

மதகடிப்பட்டு கிராமத்தையொட்டிய தமிழக பகுதியான குமளம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் பூச்செடிகள் பயிரிடப்பட்ட நிலங்களிலும் மழை நீர் புகுந்துள்ளது.
விவசாய நிலத்துக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். நீர்ப்பாசன வழிகளில் அடைப்புகளை அரசு சீர் அமைக்காத காரணத்தினால் வெள்ள நீர் கடல் நோக்கி செல்ல முடியாமல் விவசாய நிலத்துக்குள் புகுந்ததாக விவசாயிகள் புகார் செய்தனர்.
தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுவைக்கு ‘ஆரஞ்சு அலார்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும். ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்று மீனவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
மீன்பிடி படகுகள், வலைகள் மற்றும் என்ஜினை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களை தங்களது கிராமத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் மற்றும் படகு உரிமையாளர்களுக்கும் ஒலிபெருக்கி மூலமாகவும், தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வழக்கமாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பு மட்டுமே வெளியிடப்படும். முதல் முறையாக மீன் வளத்துறை சார்பில் மீனவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று ஆயிரத்து 523 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 5, காரைக்காலில் 6, ஏனாமில் 2, மாகியில் 7 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 49, காரைக்காலில் 5, ஏனாமில் 2, மாகியில் 8 பேர் என 64 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 18, காரைக்காலில் 7, மாகியில் 10 பேர் என 35 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 165 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 999 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 119, காரைக்காலில் 62, ஏனாமில் 8, மாகியில் 51 பேர் என 240 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 304 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். ஏனாமை சேர்ந்த 47 வயது ஆண் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை உள்பட 11 லட்சத்து 35 ஆயிரத்து 205 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி புதுவை அரசு துறைகள் சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனை முதல்- அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதுவை அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலை நேசன் (வயது 37). இவர் புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தீபாவளி பண்டிகையின் போது அரியாங்குப்பத்தில் தயாரிக்கப்படும் நாட்டு பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்வது வழக்கம்.
இதற்கிடையே மரக்காணம் அருகே கூனிமேட்டில் மாமனார் வீட்டில் நாட்டு பட்டாசுகளை விற்பதற்காக கொடுத்திருந்தார்.
நேற்று மாலை மாமனார் வீட்டில் தனது மனைவி ரூபணாவை (34) பார்த்து விட்டு கலைநேசன் தனது மகன் பிரதீசுடன் (7) அங்கு விற்பனை செய்யப்படாத மீதி இருந்த பட்டாசுகளை 2 மூட்டைகளில் கட்டி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு புதுவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
புதுவை எல்லையான முத்தியால்பேட்டையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் வந்த போது ஒருவர் திடீரென மோட்டார் சைக்கிளில் குறுக்கே பாய்ந்ததால் கலைநேசன் அவர் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டார். இதில், கலைநேசன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் கீழே சாய்ந்தது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கலைநேசன் மற்றும் அவரது மகன் பிரதீஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி உயிரிழந்தனர். இவர்களது உடல் பாகங்கள் 300 மீட்டர் தூரம் வரை சிதறி கிடந்தன.
அந்த பகுதியில் அருகே வந்த வாகனங்கள் மற்றும் அருகில் இருந்த வீடுகளின் கூரைகளும் சேதமடைந்தன. அந்த சாலை முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. மேலும் பட்டாசு ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள் பல்வேறு துண்டுகளாக சிதறியது.
இந்த வெடி விபத்து சம்பவம் நடைபெறும் போது அந்த சாலையில் வாகனங்களில் தனித்தனியே வந்த ஷர்புதீன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் 2 மாநில எல்லைகளில் நடந்ததால் 2 மாநில போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தினர். இருப்பினும் விபத்து நடந்த இடம் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதி என்பதால் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் பார்வையிட்டு வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.
மேலும் விபத்து நடந்த பகுதிக்கு விழுப்புரம் டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
தடய அறிவியல் துணை இயக்குனர் சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தார்.
வெடி விபத்தில் பலியாகி சிதறிய உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த பட்டாசு விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






