search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    புதுவைக்கு அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’- பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் 2 நாள் விடுமுறை

    புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையொட்டி 3 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது.

    வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் புதுவையின் முக்கிய ஏரிகளான ஊசுடு, பாகூர், வேல்ராம்பட்டு, கனகன் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இடைவிடாது பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

    நகரில் தேங்கிய மழை வெள்ளத்தை நகராட்சி, பொதுப்பணித்துறை ஊழியர்கள் இரவு பகலாக அப்புறப் படுத்தினர். ஆங்காங்கே ராட்சத மோட்டார்கள் மூலம் மழை தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டது.

    சில இடங்களில் வாய்க்கால்களில் இருந்த அடைப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் சரி செய்து மழைநீர் வழிந்தோட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    நடேசன் நகர், பாவாணர் நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், டி.வி.நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தேங்கி கிடந்த மழை தண்ணீர் வெளியேற்றப்பட்டு வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. இதேபோல் பல இடங்களில் காலி மனைகளில் தேங்கி கிடந்த தண்ணீரும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

    புதுவையை பொறுத்தவரை நேற்று பகலில் மழை பெய்யவில்லை. ஆனால் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. வெயில் முகம் காட்டவில்லை. மாலை 6 மணிக்கு மேல் லேசாக மழை விட்டு விட்டு பெய்தபடி இருந்தது.

    இந்தநிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. ஆள் உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்கின்றன.

    அதிகனமழை எச்சரிக்கையால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட இருந்த அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் யாரும் வரவில்லை. ஏற்கனவே கடலுக்குச் செல்லாத நிலையில் புதுச்சேரி மீனவர்கள் 3-வது நாளாக நேற்று மீன்பிடிக்கச் செல்லவில்லை.

    இதனால் விசைப் படகுகள், பைபர் படகுகள் அனைத்தும் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழையின் தீவிரம் நாளை மறுதினம் வரை இருக்கும் என்று கூறப் படுகிறது. அதன்படி, வங்க கடலில் ஏற்கனவே அறிவித்தபடி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.

    இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்), கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

    அதிகனமழை 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை பெய்யக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வழங்கப்படும் ‘ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    நாளை (வியாழக்கிழமை) புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், நீலகிரி, கோவை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    13-ந் தேதி (சனிக்கிழமை) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை வரை மணிக்கு 40 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர்.

    புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையொட்டி 3 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் 20 முதல் 25 சென்டி மீட்டர் வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    மழை பாதித்தால் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க சமுதாய நலக்கூடங்கள், பள்ளிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளதால் அவற்றில் உடைப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் பொதுப்பணித்துறையினர் ஆங்காங்கே மணல் மூட்டைகளை அடுக்கி தயார் நிலையில் வைத்துள்ளனர். அனைத்து ஊழியர்களும் தயார் நிலையில் இருக்க பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

    ஏரி, குளங்களை தொடர்ந்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தடையில்லா மின்சாரம் வழங்கவும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அவற்றை உடனடியாக சரிசெய்யவும் மின்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தீயணைப்புத்துறை, காவல்துறையினரும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதனால் புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் (புதன், வியாழன்) விடுமுறை விடப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    புதுவையில் ஏற்கனவே மழை காரணமாக கடந்த 2 நாட்களாக விடுமுறை விடப்பட்டு இருந்தது. தற்போது மேலும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×