என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் அதிக திறன் கொண்ட பட்டாசு வெடித்த 32 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    புதுவை:

    புதுவை சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அதிக திறன் கொண்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது மற்றும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் இந்த தடையை மீறி புதுவையில் அதிக திறன் கொண்ட பட்டாசு வெடித்த 32 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கொரோனா தொற்றால் முடங்கி கிடக்கும் வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மீண்டும் புத்துயிர் பெறும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    கடந்த சில மாதங்களாக பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது.

    புதுவையில் நேற்று முன்தினம் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.107.79-க்கும், டீசல் ரூ.102.66-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசல் ரூ.10-ம் குறைத்து அறிவித்தது.

    இதனைத்தொடர்ந்து தீபாவளி பரிசாக புதுவை அரசின் சார்பில் தனது பங்கிற்கு மேலும் ரூ.7 வரை வாட்வரியை குறைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    இதனால் புதுவையில் பெட்ரோல்-டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது. பெட்ரோல் விலை ரூ.12.85 குறைந்து ரூ.94.94-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போன்று டீசல் விலை ரூ.19 குறைந்து ரூ.83.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    புதுவை மாநிலத்தின் பிராந்தியங்களான காரைக்காலில் பெட்ரோல் விலை ரூ.94.65, மாகியில் 92.52, ஏனாமில் 95.59 இன்று விற்பனை செய்யப்படுகிறது. மாகியில் டீசல் விலை ரூ 80.94 ஆகும்.

    பெட்ரோல்-டீசல் மீதான வாட்வரியை புதுவை அரசு குறைத்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ரங்கசாமி

    இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த வரி குறைப்பானது அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தீபாவளி பரிசாக அமையும்.

    இதனால், கொரோனா தொற்றால் முடங்கி கிடக்கும் வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மீண்டும் புத்துயிர் பெறும் என்று குறிப்பிட்டு உள்ளார்.


    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பசுமையான தீபாவளியை, இறைவனுக்கு மிகவும் பிடித்த எளிமையான முறையில் கொண்டாடி மகிழ வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் தங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் உறவினர்களோடும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நாள் தீபாவளித் திருநாள்.

    இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் சிறந்த ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்.

    இந்த தருணத்தில், மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா நடத்தை விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பசுமையான தீபாவளியை, இறைவனுக்கு மிகவும் பிடித்த எளிமையான முறையில் கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    புதுவை, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.
    புதுவை மற்றும் காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி புதுச்சேரி விடுதலை நாள், கல்லறை திருநாள் என தொடர்ச்சியாக தீபாவளி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்கள் மீண்டும் புதுவைக்கு திரும்ப வசதியாக கூடுதல் நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதைத்தொடர்ந்து புதுவை மற்றும் காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறைகள் முடிந்து வருகிற 8-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
    மருத்துவமனை, வழிபாட்டு தலங்களில் இருந்து 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ஸ்மிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையின்போது பசுமை பட்டாசுகளை மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்ட 2 மணி நேரத்திற்கு மட்டுமே வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்ற பட்டாசுகளுக்கு பதிலாக பசுமை பட்டாசுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    அமைதி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், வழிபாட்டுதலங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்தின் சுற்று வட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசுகள் வெடிப்பது முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    125 டெசிபெல் அளவுக்கு அதிகமாக வெடிக்கும் பட்டாசுகளை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பேரியம், ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் சரவெடிக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அதுபோன்ற பட்டாசுகளை சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது.

    தீபாவளி பண்டிகையை மக்கள் பொறுப்புடன் கொண்டாட வேண்டும். கொண்டாட்டத்தால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க வேண்டும். இயற்கையோடு இணைந்து தீபத்திருநாளை புதுச்சேரி மக்கள் கொண்டாட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு குழு கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் பதுங்கி இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, மிளகாய் பொடி பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் குற்றச்சம்பவங்களை தடுக்க ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் மேற்பார்வையில் இரவு ரோந்துப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த போலீஸ் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வேல்ராம்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த சிலர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அவர்களை சோதனை செய்தபோது, 2 கத்தி, மிளகாய் பொடி இருந்தது. இதையடுத்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் துலுக்கானத்தமன் நகரை சேர்ந்த வீரப்பன் என்கிற சந்துரு (25), பரூக் என்கிற முகமது பரூக் (28), புகழேந்தி (21), நைனார் மண்டபத்தை சேர்ந்த சத்யராஜ் (21), செபஸ்டின் (19) என்பதும், ஏரிக்கரை வழியாக வருபவர்களிடம் வழிப்பறி செய்யும் நோக்கத்துடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதில் வீரப்பன், பரூக், புகழேந்தி ஆகிய 3 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    பிடிபட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கொரோனா பரிசோதனைக்குப் பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள், மிளகாய்பொடி பறிமுதல் செய்யப்பட்டன.
    தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவை கடந்த 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி விடுதலை பெற்றது.

    நவம்பர் 1-ந்தேதி புதுவையின் விடுதலை நாள் விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை கடற்கரை சாலையில் விடுதலை நாள் விழாவுக்காக கொடிக்கம்பம், மேடை அமைக்கப்பட்டிருந்தது.

    சரியாக காலை 9.09 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது.

    இதன்பின் காவலர் அணிவகுப்பு மரியாதையை ரங்கசாமி பார்வையிட்டார். பின்னர் மீண்டும் மேடை திரும்பிய ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்றினார்.

    அவர் ஆற்றிய உரையின் முக்கியம்சங்கள் வருமாறு:-

    பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவை மாநிலம் இதேநாளில் விடுதலை அடைந்த மகத்தான நாள். இதேநாளில்தான் பிரெஞ்சு கொடியிறக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

    ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் பிரெஞ்சுகாரர்களும் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக தங்களை வளர்த்துக்கொண்டனர். தமிழகத்தை ஒட்டியிருக்கும் புதுவை, காரைக்கால், கேரளாவில் மாகி, ஆந்திராவில் ஏனாம், மேற்குவங்கத்தில் சந்திரநாகூரில் பிரெஞ்சுக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    பிரெஞ்சு வசம் இருந்து சந்திநாகூர் 1950-ம் ஆண்டு விடுதலை பெற்று மேற்கு வங்கத்துடன் இணைக்கப்பட்டது. வீர மறவர்களின் தன்னலமற்ற போராட்டத்தால் 1954-ம் ஆண்டு நவம்பர் முதல்நாள் நாம் விடுதலை பெற்றோம்.

    வரலாற்றின் சிறப்பு மிக்க இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் பிரெஞ்சு ஆட்சியாளர்கள் புதுவையை விட்டுவிட்டு எந்த இடத்திலிருந்து கப்பலில் சென்றார்களோ? வங்க கடலில் அதே இடத்தில் தேசியக்கொடியை ஆண்டுதோறும் ஏற்றி விடுதலை நாளை கொண்டாடி வருகிறோம்.

    பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. இதனால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். ஊரடங்குக்கு பிறகு பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.

    புதுவை மாநிலத்தில் இதுவரை சுமார் 70 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி போடாததே உயிரிழப்புக்கு காரணம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். போதிய தடுப்பூசிகள் சுகாதாரத்துறை வசம் உள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் எவ்வித அச்சமோ, தயக்கமோ இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும். எங்கள் அரசு பொறுப்பேற்ற 6 மாதத்தில் மாநில வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அவற்றில் சிலவற்றை தங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். மாநில மக்கள் அனைவருக்கும் விடுதலை தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து காவல்துறையின் ஆயுதப்படை, போக்குவரத்து, ரிசர்வ் பட்டாலியன், ஊர்க்காவல்படை, தீயணைப்புத்துறை, என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.

    இதைத்தொடர்ந்து நாட்டிய நாடகம், பரத நாட்டியம், காளியாட்டம், தப்பாட்டம், சிலம்பம், புலி ஆட்டம் ஆகியவை நடந்தது. பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.
    இயற்கை வளமும் ஆன்மீக பலமும் பெற்றிருக்கும் புதுவை மாநிலம் இந்திய பண்பாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணை புரியும் என்பது உண்மை என கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள விடுதலை நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சுமார் 300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவை, இந்திய இறையாண்மையின் கீழ் தன்னை இணைத்துக் கொண்ட மகத்தான நாள் இன்று.

    எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களாலும் மக்களின் போராட்டங்களாலும் 1954-ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் புதுவை முழுமையான விடுதலை பெற்றது. அதனை நினைவு கூறும் இந்த தருணத்தில், ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவக் கொள்கைகளோடு உலக சமுதாயத்திற்கு வழிகாட்டியாக திகழும் இந்திய ஜனநாயகத்தை ஒரு சமூகப் பொருளாதார சமத்துவம் நிறைந்த சமுதாயமாக உருவாக்க நம்மை அர்ப்பணித்து கொள்ள உறுதி ஏற்க வேண்டும்.

    இயற்கை வளமும் ஆன்மீக பலமும் பெற்றிருக்கும் புதுவை மாநிலம் இந்திய பண்பாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணை புரியும் என்பது உண்மை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
    புதுவையில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 15-ந் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    கடைகளை இரவு 11 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களில் இரவு காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் புதுவையில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 15-ந் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் திருவிழாக்கள், சூரசம்ஹாரம் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் இரவு11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையும் படியுங்கள்...கூட்டமான இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி- உளவு அமைப்புகள் எச்சரிக்கை

    புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதுவை முதல்-அமைச்சராக ஜானகிராமன் இருந்தபோது யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

    அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது. லட்சுமி யானை நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது. பக்தர்களும் யானைக்கு பழம், அருகம்புல் உள்ளிட்டவற்றை வழங்குகின்றனர்.

    யானை லட்சுமியானது கடந்த 31-10-1997-ம் ஆண்டு மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்தது. அதாவது இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 24 ஆண்டுகள் நிறைவடைகிறது. நாளை (திங்கட்கிழமை) 25 ஆண்டை அடியெடுத்து வைக்கிறது.

    தொடர்ந்து பக்தர்களிடம் அமோக வரவேற்பை யானை லட்சுமி பெற்றுள்ளது. புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    சில தனியார் பள்ளிகள் தீபாவளி முடிந்த பின்னரும் தொடர்ச்சியாக 7-ந்தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளன.
    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் நவம்பர் 1-ந்தேதி புதுச்சேரி விடுதலை நாள், 2-ந்தேதி கல்லறை திருநாள் என 2 நாட்கள் விடுமுறை நாட்கள் ஆகும். மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி 3-ந்தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. 4-ந்தேதி தீபாவளி விடுமுறை ஆகும். தொடர் விடுமுறை காரணமாக மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    அதுமட்டுமின்றி சில தனியார் பள்ளிகள் தீபாவளி முடிந்த பின்னரும் தொடர்ச்சியாக 7-ந்தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளன. வருகிற 8-ந்தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தி உள்ளன.
    கனமழை காரணமாக புதுவை- காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை அரசு பள்ளி கல்விதுறை இணை இயக்குனர் சிவகாமி பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நவம்பர் 2-ந் தேதி கல்லறை தினம் வருவதால் அன்றும், 3-ந் தேதி தீபாவளியை முன்னிட்டும் புதுவை, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

    ஏற்கனவே, 31-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை, மறுநாள் நவம்பர் 1-ந்தேதி (திங்கட்கிழமை) விடுதலை நாள், 4-ந் தேதி தீபாவளி விடுமுறையாகும்.

    இந்த நிலையில் கனமழை காரணமாக புதுவை- காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தீபாவளிக்கு 6 நாள் விடுமுறை அரசு பள்ளிகளுக்கு கிடைக்கிறது.

    அதேநேரத்தில் பல தனியார் பள்ளிகள் தீபாவளியையொட்டி அடுத்த வாரம் முழுவதும் விடுமுறை என ஏற்கனவே அறிவித்துள்ளன.

    வருகிற 8-ந் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அன்று முதல் சுழற்சி அடிப்படையில் அரை நாள் பள்ளிகள் இயங்கும்.
    ×