search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கசாமி
    X
    ரங்கசாமி

    புதுவை அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்: ரங்கசாமி அறிவிப்பு

    தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவை கடந்த 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி விடுதலை பெற்றது.

    நவம்பர் 1-ந்தேதி புதுவையின் விடுதலை நாள் விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை கடற்கரை சாலையில் விடுதலை நாள் விழாவுக்காக கொடிக்கம்பம், மேடை அமைக்கப்பட்டிருந்தது.

    சரியாக காலை 9.09 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது.

    இதன்பின் காவலர் அணிவகுப்பு மரியாதையை ரங்கசாமி பார்வையிட்டார். பின்னர் மீண்டும் மேடை திரும்பிய ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்றினார்.

    அவர் ஆற்றிய உரையின் முக்கியம்சங்கள் வருமாறு:-

    பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவை மாநிலம் இதேநாளில் விடுதலை அடைந்த மகத்தான நாள். இதேநாளில்தான் பிரெஞ்சு கொடியிறக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

    ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் பிரெஞ்சுகாரர்களும் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக தங்களை வளர்த்துக்கொண்டனர். தமிழகத்தை ஒட்டியிருக்கும் புதுவை, காரைக்கால், கேரளாவில் மாகி, ஆந்திராவில் ஏனாம், மேற்குவங்கத்தில் சந்திரநாகூரில் பிரெஞ்சுக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    பிரெஞ்சு வசம் இருந்து சந்திநாகூர் 1950-ம் ஆண்டு விடுதலை பெற்று மேற்கு வங்கத்துடன் இணைக்கப்பட்டது. வீர மறவர்களின் தன்னலமற்ற போராட்டத்தால் 1954-ம் ஆண்டு நவம்பர் முதல்நாள் நாம் விடுதலை பெற்றோம்.

    வரலாற்றின் சிறப்பு மிக்க இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் பிரெஞ்சு ஆட்சியாளர்கள் புதுவையை விட்டுவிட்டு எந்த இடத்திலிருந்து கப்பலில் சென்றார்களோ? வங்க கடலில் அதே இடத்தில் தேசியக்கொடியை ஆண்டுதோறும் ஏற்றி விடுதலை நாளை கொண்டாடி வருகிறோம்.

    பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. இதனால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். ஊரடங்குக்கு பிறகு பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.

    புதுவை மாநிலத்தில் இதுவரை சுமார் 70 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி போடாததே உயிரிழப்புக்கு காரணம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். போதிய தடுப்பூசிகள் சுகாதாரத்துறை வசம் உள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் எவ்வித அச்சமோ, தயக்கமோ இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும். எங்கள் அரசு பொறுப்பேற்ற 6 மாதத்தில் மாநில வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அவற்றில் சிலவற்றை தங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். மாநில மக்கள் அனைவருக்கும் விடுதலை தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து காவல்துறையின் ஆயுதப்படை, போக்குவரத்து, ரிசர்வ் பட்டாலியன், ஊர்க்காவல்படை, தீயணைப்புத்துறை, என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.

    இதைத்தொடர்ந்து நாட்டிய நாடகம், பரத நாட்டியம், காளியாட்டம், தப்பாட்டம், சிலம்பம், புலி ஆட்டம் ஆகியவை நடந்தது. பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.
    Next Story
    ×