search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை லட்சுமி"

    • யானை லட்சுமியின் 16-ம் நாள் நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • ஈஸ்வரன் கோவில் பின்புறம் யானை லட்சுமி வசித்த கொட்டிலில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவையின் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் லட்சுமி என்ற 33 வயது யானை இருந்தது.

    யானை லட்சுமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் அன்பை பெற்றிருந்தது. கடந்த 30-ந்தேதி யானை லட்சுமி நடைபயிற்சிக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தது.

    யானையின் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். யானை லட்சுமிக்கு நினைவிடம் அமைக்க வேண்டும், கோவிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் யானை லட்சுமியின் 16-ம் நாள் நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்பட்டது. ஈஸ்வரன் கோவில் பின்புறம் யானை லட்சுமி வசித்த கொட்டிலில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

    மணக்குள விநாயகர் கோவில் நிர்வாகிகள் சார்பில் படம், கும்பம் வைத்து, பழம் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் பலரும் விளக்கேற்றியும், மலர் தூவியும் வழிபட்டனர்.

    யானை லட்சுமியின் பாகன் சக்திவேல் தொடர்ந்து சோகமாக இருந்து வருகிறார். அவரின் குடும்பத்தினர் நினைவேந்தலுக்காக அங்கு தங்கியுள்ளனர். நேற்று இரவு யானையின் சாண வாசம் அடித்ததாக சக்திவேல் கூறினார். மேலும் யானையின் கால்தடம் 2 இடத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார். இந்த இடத்திலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

    • புதுவையின் செல்லப்பிள்ளையாக இருந்த லட்சுமி இறந்தது பக்தர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
    • அரசு அனுமதியின்றி தனிநபர் சேர்ந்து வைக்கப்பட்ட சிலைக்கு பிரதிஷ்டையும் செய்து, பூஜைகள் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கடந்த மாதம் 30-ந் தேதி காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது காமாட்சியம்மன் கோவில் வீதியில் திடீரென மயங்கி விழுந்துஉயிரிழந்தது.

    புதுவையின் செல்லப்பிள்ளையாக இருந்த லட்சுமி இறந்தது பக்தர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. வனத்துறை அலுவலகம் அருகே யானை லட்சுமி உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் பொதுமக்கள் தினமும் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே யானை லட்சுமியின் நினைவாக அது உயிரிழந்த இடமான மிஷின்வீதி கலவை கல்லூரியையொட்டி உள்ள காமாட்சியம்மன் கோவில் வீதியில் கடந்த 2-ந் தேதி சிலை வைக்கப்பட்டது. அரசு அனுமதியின்றி தனிநபர் சேர்ந்து வைக்கப்பட்ட அந்த சிலைக்கு பிரதிஷ்டையும் செய்து, பூஜைகள் நடத்தினர்.

    தகவலறிந்த சட்டம்-ஒழுங்கு போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பொது இடத்தில் அனுமதியின்றி சிலை வைக்க கூடாது. இங்கு சிலை வைப்பதற்கு அனுமதி இல்லை என போலீசார் கூறினர்.

    அப்போது விரைவில் சிலையை எடுத்து விடுவதாக சிலையை வைத்தவர்கள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் சிலை எடுக்கபடாமல் இருந்தது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்துவதறகாக வந்தனர். மேலும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    இதுபற்றி அறிந்த சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். சிலையை அங்கிருந்து அகற்றகூடாது என நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் சிலையை அகற்றுவதற்கு கொண்டு வரப்பட்ட பொக்லைன் எந்திரம் மீது சிலர் கற்களை வீசினர். இதையடுத்து பொதுமக்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் யானை சிலையை அகற்றி நகராட்சி அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

    அப்போது பெண் ஒருவர் யானை சிலையை கட்டிப்பிடித்து அங்கிருந்து எடுத்து செல்ல வேண்டாம் என்று கதறி அழுதார். அவரை பெண் போலீசார் சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர். நள்ளிரவு நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • லட்சுமியின் உடல் மீது உப்பு, மஞ்சள், திருநீறு கொட்டப்பட்டது.
    • மண் கொட்டப்பட்டு லட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் லட்சுமிக்கு பிரியா விடையளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் யானை லட்சுமி இருந்தது.

    27 ஆண்டுகளாக கோவிலில் இருந்த யானை லட்சுமி புதுவை மக்கள், கோவிலுக்கு வருகிற பக்தர்கள், சுற்றுலா பயணிகள், குழந்தைகளின் அன்பை பெற்றிருந்தது. கடந்த 2 வாரமாக யானை லட்சுமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் வழக்கம்போல காலை நேரத்தில் யானைப்பாகன் லட்சுமியை நடை பயிற்சிக்கு அழைத்து செல்வார்.

    நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்றபோது கல்வே கல்லூரி அருகே திடீரென யானை லட்சுமி மயங்கி விழுந்து இறந்தது. யானை திடீரென மரணமடைந்தது புதுவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்,சோகத்தையும் ஏற்படுத்தியது.

    யானை இறந்த தகவலறிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர். அங்கேயே மாலை அணிவித்தனர், கண்ணீர் விட்டு கதறியழுதனர்.

    பின்னர் யானை கிரேன் மூலம் திறந்த லாரியில் ஏற்றப்பட்டு மணக்குளவிநாயகர் கோவில் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இங்கு கவர்னர் தமிழிசை, அரசியல்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், புதுவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் நீண்ட வரிசையில் நின்று மாலை அணிவித்து, மலர்த்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    மாலை 3 மணியளவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் நேருவீதி, அண்ணாசாலை, மறைமலை அடிகள் சாலை வழியாக வனத்துறை அலுவலகத்தின் பின்புறம் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.

    வழிநெடுகிலும் லட்சுமிக்கு பிரியாவிடை தரும் வகையில் மக்கள் நின்று மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். ஊர்வலத்துக்கு முன்பு சிவவாத்தியங்கள் முழங்க உடல் கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் ராட்சத எந்திரங்கள் மூலம் லட்சுமியின் உடல் வைக்கப்பட்டது. அங்கு மணக்குள விநாயகர் அர்ச்சகர்கள் கஜபூஜை செய்தனர். பின்னர் லட்சுமியின் உடற்கூராய்வு நடத்தப்பட்டது. 15-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உடற்கூராய்வு செய்தனர். 2 மணி நேரம் இந்த உடற்கூராய்வு நடந்தது. உடற்கூராய்வின் போது லட்சுமியின் தந்தம் வெட்டி எடுக்கப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து லட்சுமியின் உடல் மீது உப்பு, மஞ்சள், திருநீறு கொட்டப்பட்டது. பின்னர் மண் கொட்டப்பட்டு லட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் லட்சுமிக்கு பிரியா விடையளித்தனர்.

    இன்று லட்சுமியின் நினைவிடத்தில் மணக்குள விநாயகர் கோவில் அர்ச்சகர்கள் வந்து பால் ஊற்றி, மலர்தூவி பூஜை செய்தனர். இதை தொடர்ந்து காலை முதல் பொதுமக்கள் லட்சுமியின் நினைவிடத்தில் பால் ஊற்றி, மலர்தூவி லட்சுமிக்கு பிடித்த உணவுப்பொருட்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • யானை லட்சுமி காலில் வெள்ளி கொலுசுடன் கோவில் வாயிலில் நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்
    • யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இன்று மரணம் அடைந்தது. இன்று காலை 6.15 மணியளவில் வழக்கமான நடைபயிற்சிக்கு யானையை பாகன் அழைத்துச்சென்றார். கல்வே பள்ளி அருகே வந்தபோது திடீரென யானை லட்சுமி மயங்கி சரிந்தது. இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது யானை லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    யானை இறந்த தகவல் பொதுமக்களிடம் பரவ தொடங்கியது. அந்த சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்கேயே யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பக்தர்கள் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர். பின்னர் யானை லட்சுமியின் உடல், கிரேன் மூலம் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    அதன்பின் யானை லட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், லட்சுமி நாராயணன் மற்றும் எம்எல்ஏக்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதிச்சடங்கிற்கு பிறகு யானையின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, பின்பு அடக்கம் செய்யப்பட்டது.



    இறந்த யானை லட்சுமிக்கு 31 வயதாகிறது. 5 வயதாக இருந்தபோது, 1996ல் தொழிலதிபர் ஒருவர் கோவிலுக்கு யானையை பரிசாக அளித்தார். வழக்கமாக ஆண் யானைக்கு தான் தந்தம் இருக்கும். இந்த யானை லட்சுமிக்கு ஆண் யானைபோல் தந்தம் இருந்தது. இந்த யானை கோவிலுக்கு வருகிற பக்தர்களிடம் அன்பாக பழகிவந்தது. காலில் வெள்ளி கொலுசுடன் கோவில் வாயிலில் நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். யானையைப் பார்க்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பேர் வருவார்கள். யானை லட்சுமியின் மறைவு பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    • யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • யானை லட்சுமி குருசு குப்பத்தில் உள்ள அக்கா சாமி மடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. மணக்குள விநாயகரை நாட்டின் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசிக்க வருவார்கள். இந்த கோவிலுக்கு 1996ல் தொழிலதிபர் ஒருவர் யானையை பரிசாக அளித்தார். 5 வயதான பெண் யானைக்கு லட்சுமி என பெயர் சூட்டப்பட்டது. வழக்கமாக ஆண் யானைக்கு தான் தந்தம் இருக்கும். ஆனால் மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு ஆண் யானைபோல் தந்தம் இருந்தது.

    இந்த யானை கோவிலுக்கு வருகிற பக்தர்களிடம் அன்பை பெற்றது. கோவில் வாசலில் நிற்கும் யானை லட்சுமியுடன் கோவிலுக்கு வருகிற பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு பிறகு போட்டோ எடுத்துக்கொள்வது, ஆசி பெறுவதும் வழக்கம். யானை லட்சுமிக்கு ஈஸ்வரன் கோவிலுக்கு பின்புறம் கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்குதான் இரவில் யானை லட்சுமி ஓய்வெடுக்கும். வழக்கம்போல் நேற்று இரவும் யானை லட்சுமி கொட்டிலில் ஓய்வெடுத்தது.

    இன்று காலை 6.15 மணியளவில் நடைபயிற்சிக்கு பாகன் அழைத்துச்சென்றார். கல்வேபள்ளி அருகே வந்தபோது திடீரென யானை லட்சுமி மயங்கி சரிந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது யானை லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். யானை இறந்த தகவல் பொதுமக்களிடம் பரவ தொடங்கியது.

    அந்த சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்கேயே யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பக்தர்கள் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர்.

    பின்னர் யானை லட்சுமி பொதுமக்கள் அஞ்சலிக்காக மணக்குள விநாயகர் கோவில் முன்பு வைக்கப்பட்டது. அங்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழகத்தில் இருந்து கால்நடைத்துறை டாக்டர்கள் வந்து யானை லட்சுமியை உடற்கூராய் செய்கிறார்கள். அதன்பின்னர் யானை லட்சுமி குருசு குப்பத்தில் உள்ள அக்கா சாமி மடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இறந்த யானை லட்சுமிக்கு 31 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, புதுச்சேரியில் உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிழை செளந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"யானை லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது. தங்கத்தேர் கோவிலில் வரும் போது தேர் போல வழிநடத்தி செல்வார் யானை லட்சுமி. யானை லட்சுமியின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

    ×