search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணக்குள விநாயகர் யானை லட்சுமி நினைவிடத்தில் பொதுமக்கள் பால் ஊற்றி அஞ்சலி
    X

    யானை லட்சுமி நினைவிடத்தில் பொதுமக்கள் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய காட்சி.

    மணக்குள விநாயகர் யானை லட்சுமி நினைவிடத்தில் பொதுமக்கள் பால் ஊற்றி அஞ்சலி

    • லட்சுமியின் உடல் மீது உப்பு, மஞ்சள், திருநீறு கொட்டப்பட்டது.
    • மண் கொட்டப்பட்டு லட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் லட்சுமிக்கு பிரியா விடையளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் யானை லட்சுமி இருந்தது.

    27 ஆண்டுகளாக கோவிலில் இருந்த யானை லட்சுமி புதுவை மக்கள், கோவிலுக்கு வருகிற பக்தர்கள், சுற்றுலா பயணிகள், குழந்தைகளின் அன்பை பெற்றிருந்தது. கடந்த 2 வாரமாக யானை லட்சுமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் வழக்கம்போல காலை நேரத்தில் யானைப்பாகன் லட்சுமியை நடை பயிற்சிக்கு அழைத்து செல்வார்.

    நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்றபோது கல்வே கல்லூரி அருகே திடீரென யானை லட்சுமி மயங்கி விழுந்து இறந்தது. யானை திடீரென மரணமடைந்தது புதுவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்,சோகத்தையும் ஏற்படுத்தியது.

    யானை இறந்த தகவலறிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர். அங்கேயே மாலை அணிவித்தனர், கண்ணீர் விட்டு கதறியழுதனர்.

    பின்னர் யானை கிரேன் மூலம் திறந்த லாரியில் ஏற்றப்பட்டு மணக்குளவிநாயகர் கோவில் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இங்கு கவர்னர் தமிழிசை, அரசியல்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், புதுவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் நீண்ட வரிசையில் நின்று மாலை அணிவித்து, மலர்த்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    மாலை 3 மணியளவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் நேருவீதி, அண்ணாசாலை, மறைமலை அடிகள் சாலை வழியாக வனத்துறை அலுவலகத்தின் பின்புறம் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.

    வழிநெடுகிலும் லட்சுமிக்கு பிரியாவிடை தரும் வகையில் மக்கள் நின்று மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். ஊர்வலத்துக்கு முன்பு சிவவாத்தியங்கள் முழங்க உடல் கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் ராட்சத எந்திரங்கள் மூலம் லட்சுமியின் உடல் வைக்கப்பட்டது. அங்கு மணக்குள விநாயகர் அர்ச்சகர்கள் கஜபூஜை செய்தனர். பின்னர் லட்சுமியின் உடற்கூராய்வு நடத்தப்பட்டது. 15-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உடற்கூராய்வு செய்தனர். 2 மணி நேரம் இந்த உடற்கூராய்வு நடந்தது. உடற்கூராய்வின் போது லட்சுமியின் தந்தம் வெட்டி எடுக்கப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து லட்சுமியின் உடல் மீது உப்பு, மஞ்சள், திருநீறு கொட்டப்பட்டது. பின்னர் மண் கொட்டப்பட்டு லட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் லட்சுமிக்கு பிரியா விடையளித்தனர்.

    இன்று லட்சுமியின் நினைவிடத்தில் மணக்குள விநாயகர் கோவில் அர்ச்சகர்கள் வந்து பால் ஊற்றி, மலர்தூவி பூஜை செய்தனர். இதை தொடர்ந்து காலை முதல் பொதுமக்கள் லட்சுமியின் நினைவிடத்தில் பால் ஊற்றி, மலர்தூவி லட்சுமிக்கு பிடித்த உணவுப்பொருட்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×