search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pondicherry Accident"

    புதுவை ரெட்டியார் பாளையத்தில் பஸ் மோதி அங்கன் வாடி பெண் ஊழியர் பலியான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர் பாளையம் காந்தி திருநல்லூரை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 45). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ராஜலட்சுமி எல்லை பிள்ளை சாவடியில் உள்ள அங்கன் வாடியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்ல வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டு வந்தார்.

    ரெட்டியார் பாளையம் கம்பன் நகர் அருகே வந்த போது தனியார் பஸ் ராஜலட்சுமி மொபட் மீது உரசியது. இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். பஸ்சின் முன் பக்க டயர் ராஜலட்சுமி தலையில் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே ராஜலட்சுமி துடிதுடித்து இறந்தார். இந்த காட்சி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த பதை பதைக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நாட்டு பட்டாசு வெடித்ததில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலை நேசன் (வயது 37). இவர் புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தீபாவளி பண்டிகையின் போது அரியாங்குப்பத்தில் தயாரிக்கப்படும் நாட்டு பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்வது வழக்கம்.

    இதற்கிடையே மரக்காணம் அருகே கூனிமேட்டில் மாமனார் வீட்டில் நாட்டு பட்டாசுகளை விற்பதற்காக கொடுத்திருந்தார்.

    நேற்று மாலை மாமனார் வீட்டில் தனது மனைவி ரூபணாவை (34) பார்த்து விட்டு கலைநேசன் தனது மகன் பிரதீசுடன் (7) அங்கு விற்பனை செய்யப்படாத மீதி இருந்த பட்டாசுகளை 2 மூட்டைகளில் கட்டி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு புதுவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    புதுவை எல்லையான முத்தியால்பேட்டையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் வந்த போது ஒருவர் திடீரென மோட்டார் சைக்கிளில் குறுக்கே பாய்ந்ததால் கலைநேசன் அவர் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டார். இதில், கலைநேசன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் கீழே சாய்ந்தது.

    இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கலைநேசன் மற்றும் அவரது மகன் பிரதீஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி உயிரிழந்தனர். இவர்களது உடல் பாகங்கள் 300 மீட்டர் தூரம் வரை சிதறி கிடந்தன.

    அந்த பகுதியில் அருகே வந்த வாகனங்கள் மற்றும் அருகில் இருந்த வீடுகளின் கூரைகளும் சேதமடைந்தன. அந்த சாலை முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. மேலும் பட்டாசு ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள் பல்வேறு துண்டுகளாக சிதறியது.

    இந்த வெடி விபத்து சம்பவம் நடைபெறும் போது அந்த சாலையில் வாகனங்களில் தனித்தனியே வந்த ‌ஷர்புதீன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் 2 மாநில எல்லைகளில் நடந்ததால் 2 மாநில போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தினர். இருப்பினும் விபத்து நடந்த இடம் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதி என்பதால் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் பார்வையிட்டு வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.

    மேலும் விபத்து நடந்த பகுதிக்கு விழுப்புரம் டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

    தடய அறிவியல் துணை இயக்குனர் சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தார்.

    வெடி விபத்தில் பலியாகி சிதறிய உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த பட்டாசு விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    காலாப்பட்டில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டாக்டர் பலியானார். தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.
    புதுச்சேரி:

    சென்னை திருவான்மியூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டீனாக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மகன் கோபால கிருஷ்ணன் (வயது 24). இவர் பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்து முடித்து அங்குள்ள விடுதியில் தங்கி பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று இரவு கோபாலகிருஷ்ணன் புதுவை பல்கலைக்கழக விடுதியில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நண்பரை சந்தித்து பேசி விட்டு விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    சின்ன காலாப்பட்டில் வந்த போது கோபாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், எதிரே பெரிய காலாப்பட்டை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உமாநாத் (31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் அதிவேகமாக மோதிக் கொண்டது.

    இதில், தூக்கி வீசப்பட்ட கோபாலகிருஷ்ணன் தலையில் பலத்த காயம் அடைந்தார். உமாநாத்துக்கும் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி டாக்டர் கோபால கிருஷ்ணன் பரிதாபமாக இறந்து போனார். உமாநாத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராம மூர்த்தி, ஏட்டு தனசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் இறந்த டாக்டர் கோபாலகிருஷ்ணனின் தாயும் சென்னையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். சங்கரநாராயணன் தம்பதியினருக்கு கோபால கிருஷ்ணன் ஒரே மகன் ஆவார்.

    கோபாலகிருஷ்ணன் பயிற்சி முடித்ததும் சென்னையில் தனியாக கிளினிக் தொடங்க அவரது பெற்றோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்த நிலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் டாக்டர் கோபாலகிருஷ்ணன் இறந்து போனதால் அவரது உடலை பெற்றோர் பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
    புதுவையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பல் டாக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேலு. இவர், புதுவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்.

    இவரது மகள் நந்தினி தேவி (வயது 24). பல் டாக்டரான இவர் புதுவை புஸ்சி வீதியில் உள்ள தனியார் கிளினிக்கில் பணி புரிந்து வந்தார்.

    நேற்று மதியம் பணி முடிந்து டாக்டர் நந்தினி தேவி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    ராஜீவ்காந்தி சிலை அருகே வந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக நந்தினிதேவி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்த நந்தினிதேவி உடல் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது.

    இதனை பார்த்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். உடல் நசுங்கிய நிலையில் நந்தினிதேவியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே நந்தினிதேவி பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து புதுவை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    திருபுவனை இந்திரா நகரை சேர்ந்தவர் வினோ பாலன். இவரது மகன் அம்மா தென்னவன். (26). இவர் நெட்டப்பாக்கத்தில் உள்ள டி.வி.எஸ். கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். திருபுவனை - விழுப்புரம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில், தூக்கி வீசப்பட்ட அம்மா தென்னவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று பகல் 12 மணிக்கு அம்மா தென்னவன் பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவையில் தனியார் பஸ் மோதியதில் கட்டிட தொழிலாளி பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய தாஸ் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஆரோக்கியதாஸ் தினமும் பஸ்சில் புதுவை வந்து கட்டிட வேலை செய்து விட்டு வீடு திரும்புவது வழக்கம்.

    சம்பவத்தன்று கட்டிட வேலை முடிந்து ஆரோக்கியதாஸ் வீட்டுக்கு செல்ல புதுவை மறைமலை அடிகள் சாலையில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக ஆரோக்கியதாஸ் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கிய தாஸ் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, ஏட்டு நாகராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×