என் மலர்
புதுச்சேரி
- சிறுமியை வாடகை கார் மூலம் புதுச்சேரி அனுப்பி வைத்துள்ளனர்.
- கூட்டு பலாத்காரத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதும் அந்த நபர் பெங்களூரில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.
புதுச்சேரி:
மும்பையை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி தனது தாய் தந்தையுடன் கடந்த வாரம் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.
கடந்த 30-ந் தேதி வீட்டில் கோபித்து கொண்டு வெளியேறிய சிறுமியை காணவில்லை. இதுகுறித்து 31-ந்தேதி இரவு பெரியக்கடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கடத்தல் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.
இதனிடையே கடந்த 1-ந்தேதி மாலை கடற்கரையில் சுற்றி திரிந்த சிறுமியை போலீசார் மீட்டனர். அவரிடம் விசாரணை செய்ததில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.
சிறுமியை கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த காஜாமொய்தீன் (வயது 34) ஆட்டோவில் ஏற்றிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து மீண்டும் 30-ந்தேதி நள்ளிரவில் புதுச்சேரியில் விட்டு சென்றுள்ளார்.
அதன்பின்பு சாலையில் தனியாக சுற்றிய சிறுமியை புதுச்சேரி வந்த சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பேச்சு கொடுத்து தங்களின் காரில் சென்னைக்கு கடத்தி சென்றுள்ளனர். அங்கு ஓட்டலில் வைத்து மது வாங்கி கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளதும் தெரிய வந்தது.
இதன் பின்பு சிறுமியை வாடகை கார் மூலம் புதுச்சேரி அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து பெரியக்கடை போலீசார் போக்சோ மற்றும் கடத்தல் வழக்கு பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் கோட்டக்குப்பம் காஜா மொய்தீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து சென்னை சென்ற போலீசார் ஐ.டி. ஊழியர்களான ஒடிசாவை சேர்ந்த தீனபந்த் பாரிக் (30), தெலுங்கானா ரமேஸ் கஜூலா (29), வாரணாசி பங்கஜ்குமார் சிங் (30) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே கூட்டு பலாத்காரத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதும் அந்த நபர் பெங்களூரில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. 30 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் ஏராளமானோர் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களாகவே உள்ளனர். குடும்பமாக வரும் தம்பதிகள் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவு தான். ஜாலிக்காகவே சுற்றுலா வரும் வாலிபர்கள் காரில் இரவு நேரங்களில் குடிபோதையில் சுற்றிவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவர்கள் காரில் செல்லும் போது தனியாக ரோட்டில் யாராவது சென்றால் அவர்களிடம் குறும்பு தனத்தை காண்பித்தும், குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
கடந்த வாரம் காரில் வந்த சுற்றுலா பயணிகள் கும்பல் அண்ணா சாலையில் உள்ள பாஸ்டுபுட் ஓட்டலில் உணவு வாங்கவந்த ஒருவரை தாக்கிவிட்டு காரில் தப்பிச்சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த நிலையில் சுற்றுலா வந்த சென்னை ஐ.டி. ஊழியர்கள் ரோட்டில் சென்ற சிறுமி ஒருவரை சென்னைக்கு கடத்தி சென்று பாலியல் பலத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவங்களை போலீசார் தடுக்க இரவில் சுற்றும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்க வேண்டும். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- சிறுமியிடம் குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- தனி அறையில் சிறுமியை அடைத்து மதுபானம் கொடுத்து 4 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புதுச்சேரியில் மும்பையைச் சேர்ந்த சிறுமியை ஆட்டோ டிரைவர், சுற்றுலா பயணிகள் 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
மும்பையை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி தனது தாய் தந்தையுடன், கடந்த வாரம் புதுச்சேரி வந்தார்.
உறவினர் வீட்டில் தங்கியிருந்த சிறுமி கடந்த 30-ந்தேதி தாயுடன் கோபித்து கொண்டு இரவு 9.10 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
சிறுமியின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 31-ந்தேதி மாலை பெரியக்கடை போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் கடத்தல் வழக்கு பதிந்து தேடினர். 1-ந்தேதி மாலை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சுற்றித்திரிந்த அந்த சிறுமியை போலீசார் மீட்டனர்.
சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது.
சிறுமியிடம் குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 30-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி வழியில் சென்ற ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார்.
ஆட்டோ டிரைவர் சிறுமியை கோட்டக்குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்று மதுபானம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் காலை தனது ஆட்டோவில் சிறுமியை அழைத்து வந்து புதுச்சேரியில் இறக்கி விட்டு சென்றுள்ளார்.
அப்போது புதுச்சேரி சுற்றிப்பார்க்க வந்த சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் சாலையில் நடந்து சென்ற சிறுமியை தங்களின் காரில் ஏற்றிக் கொண்டு சென்னை சென்றுள்ளனர்.
அங்கு தனி அறையில் சிறுமியை அடைத்து மதுபானம் கொடுத்து 4 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்பு சிறுமியை வாடகை கார் மூலம் புதுச்சேரிக்கு திருப்பி அனுப்பி வைத்தது தெரிய வந்தது.
சி.சி.டி.வி., காட்சிகள் மூலம் ஆய்வு செய்த போது, சிறுமி ஏறி சென்ற ஆட்டோவை கோட்டக்குப்பம் காஜாமொய்தீன் (வயது 34) ஓட்டிச் சென்றது தெரியவந்தது. காஜா மொய்தீனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
அதனை தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் ஆய்வு செய்ததில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சென்னையைச் சேர்ந்த 4 பேரில் 3 பேரை பெரியக்கடை போலீசார் நேற்று கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த மற்றொருவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம் கோட்டக்குப்பம் மற்றும் சென்னையில் நடந்துள்ளது. இதனால் பெரியக்கடை போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணையை விழுப்புரம் மாவட்ட கோட்டக்குப்பம் போலீசாருக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர்.
- புதுவையில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
- முதலமைச்சர் ரங்கசாமியும், த.வெ.க. தலைவரும் கூட்டணி குறித்து அறிவிக்கட்டும், அதன்பிறகு பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை சொல்லும்.
புதுச்சேரி:
த.வெ.க. தலைவர் விஜய்க்கும், புதுவை மாநில முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமிக்கும் இடையே வயதை தாண்டிய புரிதலும், நட்பும் உள்ளது.
விஜய் கட்சி தொடங்கும் முன்பும், மாநாட்டுக்கு முன்பும் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியிடம் சில ஆலோசனைகளை பெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதுவையில் த.வெ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவையில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக புதுவை பா.ஜ.க. அமைச்சர் நமச்சிவாயத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கூட்டணி அமைப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அல்லது த.வெ.க. தலைவர் விஜய் ஏதாவது கூறியுள்ளார்களா? பொதுவாக தேர்தல் குறித்து மக்களிடம் பல்வேறு கருத்துக்கள், எதிர்பார்ப்புகள் நிலவுவது வழக்கம். அது பொய்யாகவும் இருக்கலாம், உண்மையாகவும் இருக்கலாம்.
அந்த கருத்து யார் வாயால் கூறப்படுகிறது என்பதுதான் முக்கியம். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் கூறினால்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமியும், த.வெ.க. தலைவர் விஜயும் கூட்டணி குறித்து அறிவிக்கட்டும், அதன்பிறகு பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை சொல்லும். வதந்திகளுக்கு பதில் கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புனிதமான கோவிலில் மட்டன், சிக்கன் பிரியாணி வழங்கியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
- கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி நகர பகுதியில் பிரசித்தி பெற்ற இந்து கோவில் உள்ளது. இக்கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் தீபாவளி பண்டிகையொட்டி நிர்வாகத்திடம், துணி மணிகள், பட்டாசுகள் கேட்டனர்.
அவர்களை மகிழ்ச்சி படுத்த நினைத்த கோவில் நிர்வாகம், மட்டன், சிக்கன் பிரியாணி மற்றும் புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது.
புனிதமான கோவிலில் மட்டன், சிக்கன் பிரியாணி வழங்கியது தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக கவர்னருக்கு ஆதாரத்துடன் புகார் சென்றது.
இது தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதன் விசாரிக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதேபோல் அக்கோவிலில் இருந்த சில பொருட்களும் களவாடப்பட்டு யாருக்கும் தெரியாமல் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாகவும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
- குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி நகர பகுதி மற்றும் கிராம பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை சேகரிக்க 2 தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
அதன்படி நாள் ஒன்றுக்கு 2 நிறுவனங்களும் சராசரியாக 500 முதல் 550 டன் வரை குப்பைகளை சேகரித்து குருமாம்பேட் குப்பை கிடங்கில் சேமித்து வருகின்றனர். விழாக்காலங்களில் அதிகளவில் குப்பைகள் வருவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்த நிலையில் தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் பேப்பர்கள், அட்டை பெட்டிகள் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில் சாலைகளிலும், வீதிகளிலும் சிதறி கிடந்தது.
ஆகையால் அந்த குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி நேற்று ஒரு நாள் மட்டும் நகர பகுதியில் 450 டன் குப்பையும், கிராமப்பகுதியில் 200 டன் குப்பையும் என மொத்தம் 650 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குருமாம்பேட் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி ஒரே நாளில் 100 டன் குப்பைகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
- திருநங்கை பூமிகா, தங்களுக்கு இந்த வாய்ப்பை அளித்த காரைக்கால் மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காரைக்காலில் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு குடிமைப் பொருள் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என 20க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் காமராஜர் அரசு வளாக கட்டிடத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

வழக்கமாக அதிகாரிகள் தேசியக் கொடி ஏற்றும் நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக காரைக்கால் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அவர்களது உத்தரவின் பேரில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பூமிகா என்ற திருநங்கை, தேசியக் கொடி ஏற்றி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் கலந்துகொண்டு திருநங்கை பூமிகாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் திருநங்கை பூமிகா, தங்களுக்கு இந்த வாய்ப்பை அளித்த காரைக்கால் மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.
- கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியை புதுச்சேரியின் விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டது.
- அரசு சார்பில் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
இந்தியாவில் வணிகம் செய்ய இடங்களை தேடிய பிரெஞ்சு நாட்டினர் 1673-ம் ஆண்டு புதுச்சேரியில் காலூன்றினர். அந்த ஆண்டு, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தனது வணிகத்தையும் தொடங்கியது.
அதன்பின் 1721-ல் மாகியையும் கையகப்படுத்திய இவர்கள் அடுத்தடுத்து ஏனாமையும், காரைக்காலையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.
இந்தியா முழுவதும் விடுதலைப் போராட்டங்கள் அதிகளவில் வெடித்ததால் 1947-ல் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு விடுதலை அளித்தனர். ஆனால், புதுச்சேரி மட்டும் தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. வெளியேறவும் இல்லை.
இதனால் சுதந்திர கனல் புதுச்சேரியில் கொழுந்து விட்டு எறிந்தது. பிரெஞ்சுக்காரர்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று புதுச்சேரி பிரெஞ்சு இந்திய போராட்ட வீரர்களும் பொதுமக்களும் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருவழியாக பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி சுதந்திரம் பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையடுத்து புதுச்சேரி கவர்னர் மாளிகையில் 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி பிரெஞ்சு கொடி இறக்கப்பட்டு இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
இருப்பினும் இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்ததற்கான ஒப்பந்தத்திற்கு 8 ஆண்டுகளுக்கு பின் 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதியன்று பிரெஞ்சு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதுவரை நவம்பர் 1-ந் தேதியன்று புதுச்சேரி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வந்தது. முழுமையாக அதிகாரம் பெற்றதால், 1962-ம் ஆண்டுக்கு பின் புதுச்சேரியின் சுதந்திர தினம் நவம்பர் 1-ந் தேதிக்கு பதிலாக ஆகஸ்டு 16-ந் தேதியாக மாற்றப்பட்டது.
ஆனால், அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர்களும் புதுச்சேரி பிரெஞ்சிந்திய மக்களும் நவம்பர் 1-ந் தேதியே புதுச்சேரியின் விடுதலை தினமாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
60 ஆண்டு காலம் அவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களினால், கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியை புதுச்சேரியின் விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந் தேதி புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி அரசு சார்பில் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியேற்றினார். இதனை தொடர்ந்து நடந்த போலீசார் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ரங்கசாமி ஏற்றுக்கொண்டு புதுச்சேரி விடுதலை நாள் உரையாற்றினார்.
- புதுவை ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் உதவும்படி கவர்னர் கைலாஷ்நாதன் செயல்பாடு அமைந்துள்ளது.
- அமைதியான முறையில் கவர்னரின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.
புதுச்சேரி:
சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசமாக புதுச்சேரி இருந்தாலும், புதுச்சேரி அரசு என்றால் அது கவர்னரைத்தான் குறிக்கும்.
கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் அவையாகத்தான் சட்டமன்றம் விளங்குகிறது. இதனால் சட்டமன்றத்தில் முடிவு எடுத்தாலும், கவர்னரின் அனுமதி பெற்றுத்தான் திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்ற முடியும். இதனால்தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
இத்தனை அதிகாரங்கள் இருந்தாலும், புதுச்சேரிக்கு வரும் பெரும்பாலான கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளில் தலையிடுவதில்லை. அரசின் திட்டங்களுக்கு அனுமதி அளித்து வந்தனர். இருப்பினும் ஒரு சில கவர்னர்கள் தங்களின் அதிகாரத்தை வெளிப்படுத்தினர்.
அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் உருவாகும். இதுபோலத்தான் 2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசுக்கும், அப்போதைய கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அரசின் பல திட்டங்களுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் அரசு நிர்வாகமே அதிகாரிகள் இரண்டாக பிரிந்ததால் ஸ்தம்பித்தது. கவர்னர் மாளிகை முன்பு கருப்பு சட்டை அணிந்து முதலமைச்சராக இருந்த நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதன் பின் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி பதவியேற்றது. அப்போது புதுச்சேரி பொறுப்பு கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தார்.
தமிழிசை அரசுக்கு சாதகமாக செயல்பட்டாலும், அவர் நேரடியாக மக்களை சந்திப்பது, குறைகேட்பது, நிர்வாகத்தில் தலையிடுவது என்பது ஆட்சியாளர்களுக்கு அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியது.
புதிய சட்டசபை, இலவச அரிசி உட்பட திட்டங்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுப்பியதால் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து தேர்தலில் போட்டியிட கவர்னர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தார். இதன்பின் பொறுப்பு கவர்னராக குறுகிய காலம் சி.பி.ராதாகிருஷ்ணன் இருந்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடியுடன் நேரடியாக தொடர்பில் உள்ள கைலாஷ்நாதன் புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர் மத்திய அரசில் செல்வாக்கு மிக்கவர் என்பதால், ஆட்சியாளர்களிடம் அச்ச உணர்வு இருந்தது. ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாக, தனது செல்வாக்கை புதுவை ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் உதவும்படி கவர்னர் கைலாஷ்நாதன் செயல்பாடு அமைந்துள்ளது.
மீண்டும் வழங்கவே முடியாது என்ற நிலையில் இருந்த இலவச அரிசி திட்டத்துக்கு மத்திய அரசிடம் பேசி, கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் பெற்று தந்துள்ளார். அதேபோல தீபாவளி பண்டிகைக்கு 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை, பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரமாக சம்பளம் உயர்வு, அரசின் காலி பணியிடங்களை நிரப்ப ஆக்ஷன் பிளான், புதிய சட்டசபை வளாகம் என அமைதியான முறையில் கவர்னரின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.
இது புதுவை ஆட்சியாளர்களிடையும் மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வரவேற்பை வெளிப்படுத்தும்விதமாக கவர்னர் கைலாஷ்நாதனை வாழ்த்தியும், பாராட்டியும் புதுச்சேரி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
தங்கள் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்திய புதுச்சேரி கவர்னர்கள் சேத்திலால், சந்திராவதி, மல்கானி ஆகியோர் புதுச்சேரி மக்களின் அன்பை பெற்றவர்கள்.
அவர்கள் வரிசையில் கவர்னர் கைலாஷ்நாதனும் இடம்பெறும் வாய்ப்பு உருவாகி வருகிறது.
- ஒருமுறை ஒரு கட்சியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் வேறு வேறு கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரித்திரம் உள்ளது.
- த.வெ.க.வால் தனியாக தேர்தலில் நின்று கால் பதிக்க முடியுமா? என்பது கேள்விக்குறிதான்.
புதுச்சேரி:
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்துள்ளார்.
த.வெ.க. மாநாட்டில் கூடிய இளைஞர்கள் கூட்டம் தமிழகத்தின் அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மாநாட்டில் பேசிய விஜய் கூட்டணியை வரவேற்று அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழ் பேசும் அண்டை மாநிலமான புதுச்சேரியில் விஜய்யின் த.வெ.க. தாக்கத்தை உருவாக்குமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரி 4 பிராந்தியமாக தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் சிதறி கிடக்கிறது.
இதில் பெரும்பகுதி தமிழகத்தையொட்டி உள்ளது. அதிலும் புதுவை, காரைக்கால் தமிழகத்தோடு பூகோளரீதியில் பின்னி பிணைந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தின் அரசியல் தாக்கம் புதுச்சேரியில் பெரும்பாலும் எதிரொலித்தது இல்லை.
தமிழகத்தில் திராவிட கட்சிகளின் எழுச்சிக்கு பிறகு கடந்த அரை நூற்றாண்டு காலமாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆனால் புதுச்சேரியில் நீண்ட காலமாக காங்கிரஸ் கோலோச்சி வருகிறது.
தற்போதும் காங்கிரசில் இருந்து பிரிந்த ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணிதான் ஆட்சியில் உள்ளது. தமிழகம் பெரிய மாநிலம் என்பதால் கட்சி மற்றும் தலைவர்களின் செல்வாக்கு வாக்குகளாக மாறும். ஆனால் புதுச்சேரி சிறிய மாநிலம் என்பதாலும் 45 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட தொகுதிதான் பெரிய தொகுதியாக உள்ளது. இதனால் தொகுதி மக்களோடு நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்ற பிரபலங்கள் எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெறுகிறார்கள்.
ஒருமுறை ஒரு கட்சியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் வேறு வேறு கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரித்திரம் உள்ளது. தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் முதலமைச்சராக பரூக் மரைக்காயர் இருந்துள்ளார்.
தேர்தலுக்கு தேர்தல் தொகுதியில் பிரபலமாக வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளவர்களை தங்கள் கட்சி பக்கம் இழுத்து, எம்.எல்.ஏ.வாக்கி ஆட்சி அமைப்பது புதுச்சேரியில் வாடிக்கையாக உள்ளது. இதனால் புதுவை தேர்தல் களம் வித்தியாசமாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி முதலமைச்சர் ஆவதற்கு முன்பே புதுச்சேரியில் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அன்றைய கால கட்டத்தின் சினிமா தாக்கமும் தற்போது இல்லை. அதேநேரத்தில் எம்.ஜி.ஆர். சினிமா புகழினால் மட்டுமல்ல கட்சியின் அடிமட்டத்தில் இருந்து தி.மு.க.வின் பொருளாளராக இருந்து வெளியேறி அ.தி.மு.க.வை தொடங்கினார்.
இருப்பினும், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர். இவர் புதுச்சேரி புஸ்சி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இதனால் புதுச்சேரியிலும் த.வெ.க.வை வலுப்படுத்தி 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற திட்டம் உள்ளது.
த.வெ.க.வால் தனியாக தேர்தலில் நின்று கால் பதிக்க முடியுமா? என்பது கேள்விக்குறிதான். அதேநேரத்தில் கூட்டணி உருவாகும்பட்சத்தில் புதுச்சேரியில் த.வெ.க. காலூன்றலாம். தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுடன் புதுச்சேரியிலும் களம் இறங்கும் வாய்ப்பு உள்ளது.
விஜய்க்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் நட்புணர்வு உள்ளதால் 2026 தேர்தலில் என்.ஆர்.காங்கிரசுடன் த.வெ.க. கூட்டணி அமையும் வாய்ப்பும் உருவாகலாம். அதற்கு முன்பாக புதுச்சேரியில் கட்சியில் நிர்வாகிகளை நியமித்து பிரபலமானவர்கள், மக்களுடன் நெருக்கமானவர்கள் களத்தில் இறங்கி இப்போதே உழைக்க தொடங்கினால் தான் புதுச்சேரியில் த.வெ.க. கால் பதிக்க முடியும்.
- அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.
- அரசுக்கு ரூ.16 கோடி கூடுதலாக செலவாகும்.
புதுச்சேரி:
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதுபோல் தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது.
இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, புதுச்சேரியில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதி துறை சார்பு செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுவை அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.580 முதல் ரூ.6 ஆயிரத்து 800 வரை கிடைக்கும்.
இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் புதுவை அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.16 கோடி கூடுதலாக செலவாகும்.
- விஜய் புதிய அரசியல்பாதை அமைப்பார் என எதிர்பார்த்தோம்.
- பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பார்களையும் அகற்றுவோம்.
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
த.வெ.க. முதல் மாநாடு நடத்திய விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். மாநாட்டில் அவர் எந்த புதிய கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் கூறிவரும் மதவாதம் ஒழிப்பு, நீட் ஒழிப்பு, ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றைத்தான் கூறியுள்ளார்.
ஏற்கனவே 2 ஆண்டுகளாக ராகுல்காந்தி பல்வேறு கூட்டங்களில் பேசிய கருத்துக்கள்தான். விஜய் புதிய அரசியல்பாதை அமைப்பார் என எதிர்பார்த்தோம், ஆனால் அது இல்லை. இருப்பினும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இறுதி முடிவு எடுக்க வேண்டியது மக்கள்தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
புதுச்சேரியில் விடிய விடிய இயங்கிய ரெஸ்டோபாரை அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் சேர்ந்து அவர்களை விரட்டி மூடியுள்ளனர். பள்ளி, கல்லூரி குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரெஸ்டோபார்களை அகற்ற வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறோம்.
பார்களை குறைக்க வேண்டும் என்றும் கூறி வருகிறோம். கலாச்சாரம், சட்ட ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தும் ரெஸ்டோ பார்களுக்கு தொடர்ந்து புதுவை அரசு அனுமதி அளித்து வருகிறது. 2026 இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றால் அனைத்து ரெஸ்டோபார்களும் மூடப்படும். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பார்களையும் அகற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநாடு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
- விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முதலமைச்சர் ரங்கசாமிக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கும் வயது வித்தியாசம் இருந்தாலும், நல்ல புரிதலும், நட்புணர்வும் உள்ளது.
த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுவையை சேர்ந்தவர். இவர் புஸ்ஸி தொகுதியில் ஒருமுறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தது முதல் முதலமைச்சர் ரங்கசாமியுடன் நெருக்கம் உண்டு.
இதன் மூலம் த.வெ.க. தலைவர் விஜய்க்கு ரங்கசாமியின் அறிமுகம் கிடைத்தது. 2021 சட்டமன்ற தேர்தல் முடிந்து என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசின் முதலமைச்சராக பதவியேற்ற ரங்கசாமி விஜய்யை பனையூரில் உள்ள அவரின் வீட்டில் சந்தித்து பேசினார்.
இதன் மூலம் ரங்கசாமி, விஜய் இடையே நெருக்கம் உண்டானது. கட்சி தொடங்கும் முன்பாக முதலமைச்சர் ரங்கசாமியிடம், பல்வேறு ஆலோசனைகளை விஜய் கேட்டு வந்தார். ரங்கசாமி ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். எந்த காரியத்தை தொடங்கும் முன்பும் ஜோசியர்கள், ஆன்மீக பெரியவர்களிடம் கருத்து கேட்பார்.
அதேபோல விஜய் த.வெ.க. மாநாடுக்கும், சில ஆன்மீக வழிகாட்டுதல்களையும் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநாடு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
மாநாட்டில் லட்சகணக்கான இளைஞர்கள் திரண்டனர். மாநாட்டு நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை முதலமைச்சர் ரங்கசாமி, கோரிமேட்டில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து பார்த்தார். முழுமையாக விஜய் பேச்சையும் கேட்டார்.
மாநாடு குறித்து முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
நடிகர் விஜய்க்கு இளம் வயது. அவர் நினைத்திருந்தால் இன்னும் பல படங்களில் நடித்து பல கோடிகளை சம்பளமாக பெற்றிருக்க முடியும். ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். இது பாராட்டுக்குரியது.
மாநாட்டுக்கு வந்துள்ளவர்கள் அனைவரும் இளைஞர்களாக உள்ளனர். மேடையிலும் இளைஞர்களே இருந்தனர். மாநாட்டில் இளைஞர்களின் எழுச்சியை பார்க்க முடிந்தது. இதை மனதார பாராட்டுகிறேன். அவர் பல வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் தயாராக இருப்பதாக விஜய் பேச்சில் குறிப்பிட்டுள்ளார். இதனால் வரும் காலத்தில் தமிழகத்தோடு இணைந்து புதுவையிலும் சட்டமன்ற தேர்தல் வரும்போது விஜய் த.வெ.க. கட்சியுடன், ரங்கசாமியின் என்ஆர்.காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.






