என் மலர்
புதுச்சேரி
- தமிழக போலீசார் அவ்வழியாக வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தனர்.
- இரு மாநில போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் மடுகரையில் கலால்துறை அனுமதி பெற்று, ஆண்டியர்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் சாராயக் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் பட்டாம்பாக்கம்-மடுகரை சாலையில் தென் பெண்ணையாறுசோதனைச் சாவடியில் இருந்த தமிழக போலீசார் அவ்வழியாக வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தனர்.
அவரிடம் இருந்து 10 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் மடுகரையில் உள்ள சாராயக்கடையில் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் மடுகரை சாராயக்கடைக்கு சென்று அங்கிருந்த 40 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து எடுத்து செல்ல முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த புதுச்சேரி நெட்டப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், மடுகரை சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தமிழக போலீசாரை முற்றுகையிட்டு சாராயக் கடையில் இருந்து எந்த பொருளையும் எடுத்துச் செல்லக்கூடாது என காரை மறித்து தடுத்து நிறுத்தினர்.
இதனால் இரு மாநில போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், தமிழக பகுதியில் பாக்கெட் சாராயம் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக பகுதியில் பாக்கெட் சாராயம் பிடிப்பட்டால் அது எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடித்து, தடை செய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றார். அதற்கு புதுச்சேரி போலீசார் எங்களது அனுமதியில்லாமல் எப்படி சாராய கடையில் இருந்து சாராய பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்து எடுத்து செல்லலாம் என கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தமிழக போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்ட போது, புதுச்சேரி போலீசாரை உரிய அனுமதியில்லாமல் தமிழக போலீசார் அத்துமீறி புதுச்சேரி கலால்துறை அனுமதியுடன் நடத்தி வரும் சாராயக் கடையில் புகுந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ய முயன்றது தவறு என்று தெரிவித்தார்.
- சினிமாவில் நடித்து கொண்டிருந்த துணை முதல்வர் நடிகைகளுடன் ஆட்டம் போடுவது போல் அரசியலை நினைக்கிறார்.
- அடுத்த தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற மாட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பா.ம.க., வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு புதுச்சேரி பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகாபலிபுரத்தில் நடைபெறும் பா.ம.க. சித்திரை திருவிழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி பேசியதாவது:-
வன்னியரான ரங்கசாமி புதுச்சேரி முதலமைச்சராக உள்ளார். ஆனால் அவர் வன்னியராக நடந்து கொள்வதில்லை. வன்னியருக்கு இருக்கக்கூடிய வீரம், உறுதி அவரிடமில்லை. யாரைப் பார்த்தாலும் வழவழப்பான சிரிப்பு. அதிலேயே அனைவரையும் கவிழ்த்து விடுகிறார்.
முதலமைச்சர் வீட்டு வாசலில் கொலை நடக்கிறது. மாதம் தோறும் கொலை நடக்கும் பகுதியாக புதுச்சேரி உள்ளது. இதற்கு சளைக்காமல் தமிழ்நாடு வந்து விட்டது. தமிழகத்தில் கொலை சாதாரணமாகி விட்டது.
12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சித்திரை திருவிழா வன்னியர் சங்கத்தின் இளைஞர் மாநாடு மகாபலிபுரத்தில் நடத்தப்படும். போலீசார் தடுத்தாலும் தடையை மீறி மாநாடு நடத்தப்படும். மாநாட்டிற்கு இளைஞர்கள் கிளர்ந்து எழ வேண்டும்.
சினிமாவில் நடித்து கொண்டிருந்த துணை முதல்வர் நடிகைகளுடன் ஆட்டம் போடுவது போல் அரசியலை நினைக்கிறார். அடுத்தும் எங்க ஆட்சி தான் என ஆட்டம் போடுகிறார். இதுக்கு போட்டியாக அடுத்து ஒரு சினிமா நடிகர் வந்துள்ளார். அவர் ஒரு கூட்டம் போட்டு 2026-ல் ஆட்சி என்கிறார். அடுத்த தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற மாட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
- புதுச்சேரியில் உள்ள காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
காரைக்கால்:
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகியமாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனையொட்டி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.
- அ.தி.மு.க. கூட்டணி அழைப்பதாக அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணி இணைந்து செயல்பட்டு உள்ளது.
புதுச்சேரி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. புதுச்சேரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விடுதலை சிறுத்தை கட்சியினர் உட்கட்சி விவகாரங்களை சமூக வலை தளங்களில் வெளியிட வேண்டாம். இதனால் கட்சி வளர்ச்சிக்கு தடை ஏற்படுகிறது. இக்கட்சி அனைத்து விளிம்பு நிலை மக்களுக்காக போராடும் சமூக பண்பாட்டு தளத்தை இயக்கும் இயக்கமாக உள்ளது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று தி.மு.க. அல்லது அ.தி.மு.க. சொல்கிறது என்றால், அது நடைமுறைக்கு சாத்தியமானது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் தங்கள் விருப்பத்தை சொல்வது தற்போதைய சூழலில் சாத்தியமானதா? என்ற கேள்வி எழுகிறது. 2026-ல் வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை. இப்போது தான் கூட்டணி தொடக்கப் புள்ளியாக உள்ளது. எனவே வரும் தேர்தலில் காலம் கனியும் என்றும் சொல்ல முடியாது.
அ.தி.மு.க. கூட்டணி அழைப்பதாக அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. கட்சியில் விவாதித்தார்களா? என்ற தகவல் இல்லை. யூகத்தின் அடிப்படையில் எதையும் சொல்லிவிட முடியாது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணி இணைந்து செயல்பட்டு உள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதிலும், இந்தியா கூட்டணியை உருவாக்கியதிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பங்கு உண்டு. அந்த கூட்டணியை மாநில அளவிலும், தேசிய அளவிலும் பாதுகாப்பதும், வலுப்படுத்துவது விடுதலை சிறுத்தைகளின் நோக்கமும், கடமைகளுள் ஒன்று. எங்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறாது. ஆனால், வெளியேறுவது போன்ற தோற்றத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாக்டர் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு ஆனந்தாநகர் வரதன் வீதியை சேர்ந்தவர் கோபால். தொழிலதிபர்.
இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் மருத்துவம் படித்து வருகின்றனர். அதில் ஒரு மகன் ரவீந்திரன் (வயது 25) ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் முதுகலை மருத்துவம் (எம்.டி.) படித்துக் கொண்டு பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
ரவீந்திரன் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு தேர்வு நடைபெற்றுள்ளது.
இதற்காக அவர் இரவும் பகலும் படித்து வந்துள்ளார். இதில் அதிகபடியான மனசோர்வுக்கு ஆளாகிய ரவீந்திரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மார்பில் தனக்கு தானே குத்தியுளார்.
இதில் கத்தி அவரது இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டுத்தியது குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று ரவீந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோரிமேடு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ஜிப்மர் டாக்டர் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தொடர் மழையால் தெருவோர சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
- கட்டிட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி போயினர்.
புதுச்சேரி:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 12-ந் தேதி முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பகலிலும், இரவிலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இன்று 5-வது நாளாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று இரவு அவ்வப்போது கனமழை கொட்டியது. இன்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்தவாறே உள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. தற்காலிக பஸ் நிலையமான ரோடியர் மில் திடலில் மழை நீர் தேங்கியதால் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். புதுச்சேரியில் 5 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் தெருவோர சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
அதுபோல் கட்டிட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி போயினர். தொடர் மழை காரணமாக புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதுபோல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுபோல் வில்லியனூர், திருக்கனூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், மணிலா, மரவள்ளி, கரும்பு போன்றவை மழை நீரில் மூழ்கியுள்ளது.
- ரூ.5 லட்சத்திற்கு மேல் வாங்கப்படும் சொகுசு பைக்குகளுக்கு 8 சதவீதம் பதிவு வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு ரூ.150 கோடி போக்குவரத்து துறை வரி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் 10 லட்சம் இருசக்கர வாகனங்கள், 1.5 லட்சம் கார்கள் பதிவு செய்யப்பட்டு, புதுச்சேரி மட்டுமின்றி, பிற மாநிலங்களின் சாலைகளில் இயங்குகின்றன.
இருசக்கர வாகனங்களை பொருத்தவரை என்ஜின் சி.சி., அடிப்படையில் வாகன பதிவு வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. 170 சி.சி., வரையுள்ள பைக்குகளுக்கு ரூ.850, 170 சி.சி., மேல் உள்ள டூவீலர்களுக்கு ரூ.1,200 வசூலிக்கப்படுகிறது. சராசரியாக 1 சதவீதம் என்ற இந்த வரி, இருசக்கர வாகனங்களுக்கு வசூலிக்கப்படுகிறது. இந்த என்ஜின் சி.சி., அடிப்படையிலான பதிவு வரியை கைவிட போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இனி வாகன மதிப்பில் வரியை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. எனவே தற்போதுள்ள 1 சதவீதத்திற்கு பதிலாக 2 சதவிகிதமாக வாகன பதிவு வரியை வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கார்களுக்கு இணையாக பல லட்சம் மதிப்பில் சொகுசு டூவீலர்கள் சாலையில் ஓடுகின்றன. இந்த பைக்குகளுக்கு ரூ.1,200 தான் பதிவு வரி வசூலிக்கப்படுகிறது. எனவே சொகுசு பைக்குகளுக்கு பதிவு வரியை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சத்திற்கு மேல் வாங்கப்படும் சொகுசு பைக்குகளுக்கு 8 சதவீதம் பதிவு வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதே போல் ரூ.40 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள கார்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் 7 சதவீத வாகன பதிவு வரியை, 8 சதவீதமாக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரூ.150 கோடி போக்குவரத்து துறை வரி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து துறை, 156 கோடியாக வருமானம் ஈட்டியது. இந்த ஆண்டு ரூ.171 கோடியாக போக்குவரத்து துறை இலக்கு நிர்ணயித்துள்ள சூழ்நிலையில் இதுவரை ரூ.155 கோடியாக வருமானம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் அவரது தாய் முன்னிலையில் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- வெளியே வந்த அந்த இளம்பெண் திடீரென வாந்தி எடுத்தார்.
புதுச்சேரி:
கும்பகோணத்தைச் சேர்ந்த 24 வயது என்ஜினீயரிங் பட்டதாரி பெண். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தனியார் விடுதியில் தங்கி சுத்துக்கேணியில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 11-ந் தேதி இரவு விடுதியில் இருந்து வெளியேறிய அவர் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோருக்கு விடுதி நிர்வாகம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் கோரிமேடு போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை தேடி வந்தனர். அந்த பெண் மதுரைக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் செல்போனில் பேசி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் அவரது தாய் முன்னிலையில் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது இளம்பெண் கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் இளம்பெண் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெண் போலீசார் கழிவறை கதவை தட்டி அந்த பெண்ணை வெளியே வர செய்தனர். அப்போது வெளியே வந்த அந்த இளம்பெண் திடீரென வாந்தி எடுத்தார்.
விசாரணையில் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை இளம்பெண் குடித்தது தெரிய வந்தது. மாயமானது குறித்து தாய் முன்பு போலீசார் விசாரணை நடத்தியதால் அவமானத்தில் ஆசிட் குடித்ததாக அந்த இளம்பெண் கூறினார்.
இதையடுத்து போலீஸ் வாகனம் மூலம் அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணையின்போது, இளம்பெண் ஆசிட் குடித்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சிவசங்கர் எம்.எல்.ஏ. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.
- போலீசார் ரவுடி ராமு மீது மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி உழவர்கரை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., சிவசங்கர். இவர் புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சேர்மன் பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையே புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரி எதிரில் உள்ள உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் திலாஸ் பேட்டையை சேர்ந்த ரவுடி ராமு சில கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் தாண்டி ஆக்கிரமித்து கடை நடத்துவதால் மற்ற வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, சிவசங்கர் எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து சிவசங்கர் எம்.எல்.ஏ. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதை அறிந்த ரவுடி ராமு சிவசங்கர் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு நேரடியாக சென்று ஜிப்மர் கடை விவகாரத்தில் தலையிட்டால் விபரீதத்ததை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து சிவசங்கர் எம்.எல்.ஏ. ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ரவுடி ராமு மீது மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர்.
ரவுடி ராமுவை கைது செய்ய வலியுறுத்தி ஒட்டு மொத்த வியாபாரிகள் சங்கத்தினரும் பேரணியாக சென்று கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரிடம் மனு அளித்தனர்.
நேற்று முன்தினம் சரணடைந்து ஜாமீன் பெற ரவுடி ராமு புதுச்சேரி கோர்ட்டுக்கு வந்தார். ஆனால் எம்.எல்.ஏ.வை மிரட்டிய வழக்கு என்பதால் ரவுடி ராமுவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
இதனால் கோர்ட்டில் இருந்து ரவுடி ராமு தப்பியோடி விட்டார். அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் நேற்று ரவுடி ராமுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
- கடந்த 4-ந் தேதி ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு இளவரசி மகன், மகளுடன் சென்றார்.
- இளவரசியின் தாய் ஆதிலட்சுமி நெட்டப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை நெட்டப்பாக்கம் வடுவக்குப்பம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி இளவரசி (வயது 38). இவர்களுக்கு கோபிநாதன்(19) என்ற மகனும், பிரியா(16) என்ற மகளும் உள்ளனர்.
குடும்ப தகராறில் புருஷோத்தமனை பிரிந்த இளவரசி, மகன், மகளுடன் வடுவகுப்பத்தில் தனியாக வசித்து வந்தார்.
இளவரசி புதுச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். கணவரை பிரிந்த இளவரசிக்கும், அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன டிரைவரான ராஜூ என்ற கிருஷ்ணப்பனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. கடந்த 8 ஆண்டாக இளவரசி வீட்டுக்கு ராஜூ வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு இளவரசி மகன், மகளுடன் சென்றார். மகன், மகளை அங்கேயே விட்டு விட்டு இளவரசி மட்டும் 5-ந்தேதி புதுச்சேரிக்கு திரும்பினார். பின்னர் வழக்கம் போல வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இளவரசியை காணவில்லை. தகவலறிந்த இளவரசியின் மகன், மகள் புதுவைக்கு திரும்பி தாயை தேடி வந்தனர். அதே பகுதியில் வசிக்கும் இளவரசியின் தாய் ஆதிலட்சுமியும் மகளை தேடினார். உறவினர் வீடுகளில் தேடியும் இளவரசி கிடைக்கவில்லை.
இதனால் இளவரசியின் தாய் ஆதிலட்சுமி நெட்டப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருவக்கரையில் உள்ள முட்புதரில் சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் பிணம் ஒன்று கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் வானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு சென்று சாக்கு மூட்டையில் இருந்த பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது பிணமாக மீட்கப்பட்டது மாயமான இளவரசி என தெரியவந்தது. இளவரசியை அடித்து கொன்று சாக்கு மூட்டையில் கட்டி முட்புதரில் பிணமாக வீசியுள்ளதும் தெரிய வந்தது.
இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசாருக்கு வானூர் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
சந்தேகத்தின்பேரில் போலீசார் ராஜூவிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கடந்த 9-ந்தேதி இளவரசி வீட்டுக்கு ராஜூ வந்துள்ளார். சாப்பாடு தயார் செய்யாததால் ராஜூவுக்கும், இளவரசிக்கும் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரமடைந்த ராஜூ அவரை தாக்கியுள்ளார். இதில் இளவரசி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ராஜூ, இளவரசியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி தமிழக பகுதியில் முட்புதரில் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- புதுச்சேரி வங்கிகளில் இருந்து ரூபாய் நோட்டுகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஏராளமான தேசிய வங்கிகள் உள்ளன.
இங்கிருந்து 6 மாதங்களுக்கு ஒரு முறை கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கியின் கிளைக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வங்கிகளில் இருந்து ரூபாய் நோட்டுகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை பரிசோதனை செய்தபோது அதில் 500 ரூபாய் நோட்டு கட்டுகளில் 55 கள்ள நோட்டுகள் என மொத்தம் ரூ.27,500 இருப்பது தெரியவந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் சென்னை கிளை மேலாளர் அபிஷேக் சிங், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது வங்கிக்கு வரும் கள்ள ரூபாய் நோட்டுகளை எளிதாக கண்டறிந்து விடுவார்கள். அப்படி இருந்தும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அரசியல் கட்சியை தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது.
- விஜய், பொருளாதார கொள்கை குறித்து பேசவில்லை.
புதுச்சேரி:
புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த விழாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் கட்சியை தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது. தமிழகத்தில் பிற அரசியல் கட்சிகளை விமர்சிக்க விஜய்க்கு உரிமை உள்ளது. திராவிடம் குறித்து பேசும் விஜய், பெரியார் உட்பட தலைவர்களின் கட்அவுட்களையும் பயன்படுத்தியுள்ளார்.
மக்கள் வாழ்வாதார பிரச்சனையான, பொருளாதாரம் குறித்து பேசுவது அவசியம். அதை தீர்மானிப்பது அரசியல் கட்சியின் பொருளாதார கொள்கை. ஆனால் விஜய், பொருளாதார கொள்கை குறித்து பேசவில்லை. அவரது பொதுக்குழு கூட்டத்திலும் ஒரு வார்த்தைகூட இடம்பெறவில்லை. இதுகுறித்து விஜய் விளக்க வேண்டும். அதன்பிறகே அவரின் இயக்கம் குறித்து கூற முடியும்.
மத்தியில் பாஜகவை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம். அதனடிப் படையில்தான் இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






