என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாய ஹெல்மெட்- ஜனவரி முதல் அமல்
- புதுச்சேரியில் கவர்னராக இருந்த கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்துமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- மிக குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு ஊழியர்களும், சில வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து கட்டாய ஹெல்மெட் திட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அதன்பின்னர் புதுச்சேரியில் கவர்னராக இருந்த கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்துமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மீண்டும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
புதுச்சேரியில் ஏற்கனவே போலீசார் மற்றும் அரசுஊழியர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு ஊழியர்களும், சில வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.
இந்த சூழலில் தற்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் வருகிற ஜனவரி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதனை அமல்படுத்தவும் போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.






