என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடைகளில் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்த கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
    விருதுநகர்

    தமிழக முதல் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்டம் 2021ன்படி கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்ட திருத்தம்   மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

    கடைகள் மற்றும் நிறு வனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் தங்களது பணி நேரம் முழுவதிலும்  நின்றுகொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

    எனவே மேற்படி சட்டத் தின்படி அனைத்து கடைகள் மற்றும்  நிறுவனங்களில் பணிபுரியும்  அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதிகள் செய்து கொடுத்து சட்ட திருத்தத்தை நடைமுறைப் படுத்துமாறு  அனைத்து தொழில் நிறுவன உரிமையாளர்களும்    கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி சட்ட திருத்தங்களை  கடைபிடிக்காத நிறுவன உரிமையாளர்கள் மீது 1947ம் வருட கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

    மேலும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட வேண்டிய வேலை அமைப்பு பதிவேடு, சம்பள பதிவேடு, விடுப்பு வழங்கல் பதிவேடு ஆகிய வற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.  எனவே  திருத்தியமைக்கப்பட்ட பதிவேடுகளை  பராமரிக்குமாறு    கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

    மேற்கண்ட  தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம் ) காளிதாஸ் தெரிவித்தார்.
    வத்திராயிருப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் இந்த கோவிலுக்கு சித்திரை மாத பவுர்ணமி மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் இன்று (14-ந் தேதி) முதல் வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்து.

    இந்த நிலையில் வத்திராயிருப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் யாரும் அனுமதி ரத்து செய்யப்பட்ட நாட்களில் அடிவாரப் பகுதியான தாணிப்பாறை வனத்துறை கேட்டிருக்க முன்பு வரவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு சித்திரை மாத பிரதோ‌ஷத்தை முன்னிட்டு 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பிரதோ‌ஷ சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி காட்சி அளித்தார்.

    சாத்தூர் அருகே பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த 8 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சாத்தூர்

    சாத்தூர் அருகே இருக்கன்குடியை சேர்ந்தவர் ராஜா (40). இவரது மகளுக்கு இருக்கன்குடி ஊராட்சி மன்றத்தலைவர் செந்தாமரைமகன் செல்போன் வாங்கி கொடுத்ததாகவும், இதனை பார்த்தராஜாவின் மனைவி தெய்வானை (38) தட்டிக்கேட்டதாகவும் இதை கேட்டதும் ஆத்திரமடைந்த செந்தாமரை (48) மற்றும் குடும்பத்தினர், ராஜா, தெய்வானை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தனர். 

    அப்போது செந்தாமரை, சுலைமான், சக்திமான், ஜெயமான், மயில்வாகனன், நீதிமான், ரகுமான், கருணாகரன், அவரது குடும்பத்தினர் 8 பேர் சேர்ந்து ராஜாவை அடித்ததாகவும், தெய்வானை சேலையை பிடித்து இழுத்து இழிவுபடுத்தி தகாத வார்த்தையால் திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் தெய்வானை புகார் செய்துள்ளார். 

    அதன்படி இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மயில்வாகனன் (53), கருணாகரன் (45) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருக்கன்குடி ஊராட்சித் தலைவர் செந்தாமரை உட்பட 6 பேரை தேடி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் புளியமரத்தை பக்தர்கள் தெய்வமாக வழிபட்டுச் செல்கின்றனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் மண்டபசாலை என்ற ஊரில் பிரமாண்டமான  மரம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராமநாத புரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி வரலாற் றுத்துறை உதவி பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். 

    இதுகுறித்து ராஜகுரு கூறியதாவது:&

    விருதுநகர் மாவட்டம் மண்டபசாலை கருப்பசாமி கோயில் அருகில் கமுதி செல்லும் சாலையின் கிழக்கு பகுதியில் 7 மீட்டர் உயரமும், அடிப்பகுதி 11 மீட்டர் சுற்றளவும் கொண்ட பிரமாண்டமான மரம் வளர்ந்து வருகிறது. 

    இது ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா போன்ற நாடுகளில் அதிகமாக வளர்ந்து வரும் பொந்தன்புளியமரம் ஆகும்.  5விரல் அமைப்புடைய இலைகள், இயற்கையாக உருவாகக்கூடிய பெரிய அளவிலான பொந்துகள், யானை போன்ற மிகப் பிரமாண்டமான அடிமரம் ஆகியவை  இந்த மரத்தின் சிறப்புகள். 

    ஓராண்டில் 6மாதங்கள் வரை இதில் இலைகள் உதிர்ந்து காணப்படும். இந்த மரங்கள் சாதாரணமாக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்பவை. இதன் தண்டுகளில் தண் ணீரை சேமித்து வைக்கிறது.

    மண்டபசாலையில் உயரமாக வளர்ந்து வந்த இம்மரத்தின் 3 கிளைகளும் சில ஆண்டுகளுக்கு முன் உடைந்து விழுந்துள்ளது. விழுந்த அதன் கிளைகளும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்தமரத்து தண்டின் நடுவில் 10பேர் அமரும் வகையில் பெரிய பொந்து உருவாகியுள்ளது. இதன் உள்ளே செல்லவும் வழியுள்ளது. இம்மரம் யானை போன்ற அமைப்பில் உள்ளது. இந்த மரத்தை பக்தர்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

    இதன் பிரமாண்டம், பொந்து போன்ற அமைப்பு, இலைகளின் புளிப்பு சுவை ஆகியவற்றால் இந்த மரத்தை பொந்தன்புளி, யானைமரம், ஆனைப்புளி, பெருக்கமரம், பப்பாரப்புளி எனபல பெயர்களில் அழைக்கிறார் கள். இதை ஆங்கிலத்தில் போபாப் என்கிறார்கள். மண்டபசாலை அருகில் பெருநிரவியார் எனும் வணிகக்குழுவின் பெயரால் அமைந்த நீராவி எனும் ஊர் உள்ளது. 

    கேரளாவில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை வழியாக அழகன்குளம் செல்லும் வணிகப்பெரு வழியில் இந்த ஊரிலும் தேரிருவேலி, அழகன் குளத்திலும் இந்த மரம் வளர்ந்து வருகிறது. மரத்தின் வயது ஆயிரம் ஆண்டுகளை கடந்தபின்பே அதில் பொந்து உண்டாகிறது. எனவே பொந்து உள்ள இந்தமரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என கருதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் தெரிவித்தார். மொட்டமலை, காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கி வைத்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூறியதாவது:

    தமிழக அரசு அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் இடைநிற்றல் இல்லாமல் கல்வித் தொடர வேண்டும் என்று அதிக கவனம் செலுத்தி வருகிறது.  பட்டாசு  தொழிற்சாலைகள், கடைகள் அதிகமாக உள்ள இடங்கள், சாலை, பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் நடைபெறும் இடங்கள், பஸ் நிலையம் உள்ள பகுதிகள், ரெயில்வே நிலையம் உள்ள பகுதிகள், மார்கெட்டுகள், கோவில் வாசல்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், பீடி தொழில் செய்யும் இடங்கள், ஒர்க்ஷாப், ஜவுளிக்கடை நடைபெறும் இடங்கள், டென்ட் அமைக்கப்பட்டுள்ள இடங்கள், மீன் விற்பனை செய்யும் இடங்கள், இதர பொருள்கள் பதப்படுத்தும் இடங்கள், செங்கல் சூளை பகுதிகள், பனைத்தொழில் நடைபெறும் இடங்களில் பள்ளி செல்லாத குழந்தை கள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    எங்கு கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டால் அங்கு பள்ளி செல்லாத குழந்தைகள் இருப்பார்களோ,  அங்கு முக்கியத்துவம் கொடுத்து  அந்த  இடங்களில் தினமும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி மேற்கொண்டு மாணவர்களின் உண்மைத்தன்மை அறிந்து, அருகாமைப்பள்ளியில் சேர்க்கை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கணக்கெடுப்பு பணியை வகுப்பு 1 முதல் 8ம் வகுப்பு வரையிலும், 9ம் வகுப்பு முதல் 12வரையிலும் அனைத்து மாணவர்களையும் கணக் கெடுப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. 

    விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி செல்லாமல் இருந்த வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர் குழந்தைகள் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவியரில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிகளில் சேர்க்கப்பட் டுள்ளனர். மீதமுள்ளவர் களையும் பள்ளியில் சேர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தவிட்டுள்ளார் என்றார்.

    இந்த ஆய்வின்போது இல்லம்தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார் ஞானராஜ், மாடசாமி, விஜயபாலன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.


    விருதுநகரில் காளை உரிமையாளர்கள், வீரர்கள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:     

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான ஜல்லிக் கட்டு நிகழ்வுகள் அரசாணை பெற்று நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டுகளில் அச்சிடப்பட்ட டோக்கன் மூலம் காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. 

    தற்போது அரசின் நெறிமுறைகளுக்குட்பட்டு விருதுநகர் மாவட்டத்தில் ஆன்லைனில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தனித்தனியாக உரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களுடன் பதிவு செய்யும் முறை நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

    எனவே காளை உரிமையாளர்கள் தங்களது பெயர், கைபேசி எண், முழு முகவரி, ஆதார் எண், மின்னஞ்சல் மற்றும் காளை உதவியாளர் பெயர் மற்றும் கைப்பேசி எண், காளையின் இனம், வயது, உயரம், நிறம், கொம்பின் நீளம், கொம்பு களுக்கு இடையே உள்ள இடைவெளி, உள்நாட்டினம், பல் வரிசைகள், காளையின் அடையாளம், சான்று பெற்ற கால்நடை மருந்தகத்தின் பெயர், காளைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம், ஜல்லிக்கட்டு நிகழ்வு நடைபெறவுள்ள இடம் ஆகிய விவரங்களை இணையத்தில் பதிந்தும்  மற்றும் ஆதார் அட்டை, காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களால் வழங்கப்பட்ட உடல் தகுதிச் சான்று, காளையின் உரிமை யாளர் மற்றும் உதவியாளர்  காளையின் அருகில் உள்ளவாறு எடுக்கப்பட்ட சமீபத்திய காளையின் புகைப்படம் ஆகிய ஆவணங்களை இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்ற மும்  செய்ய  வேண்டும்.  

    மேலும் காளைகளை தழுவக்கூடிய மாடுபிடி வீரரர்களும் இந்நிகழ்வில் பங்கேற்கும் பொருட்டு ஆன்லைன் முறையில் முன் பதிவு செய்ய வேண்டியுள்ளது. அந்நேரம்  தங்களது பெயர், முழுமுகவரி, மின்னஞ்சல், எடை, இரத்த வகை, தொடர்பு எண், ஆதார் எண், வயது, உயரம் போன்ற விவரங்களுடனும் மற்றும் ஆதார் அட்டை, மருத்துவச் சான்றிதழ், தடுப்பூசி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடனும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    எனவே காளை உரிமை யாளர்கள் மற்றும் மாடுபிடி வீரரர்கள் தங்களது ஆவணங் கள் மற்றும் விவரங்களை விருதுநகர் மாவட்ட தேசிய தகவலியல் மைய இணையதளத்தில்(virudhunagar.nic.in) 12.4.2022 முதல் 16.4.2022

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ராஜபாளையத்தில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.
    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர்மன்ற முதல்கூட்டம் தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர். 

    முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரது படங்கள் நகர்மன்ற கூட்ட அரங்கில் திறக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இதர தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

    18வது வார்டு அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் சோலைமலை எழுந்து, சொத்து வரி உயர்வு ஏழை எளிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது.  

    இதை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி கூட்டத்தை விட்டு வெளி நடப்பு செய்தார். பின்னர் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று முடிவடைந்தது.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் நகரசபை கூட்டம் இன்று நடந்தது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்றத்தின் முதல்தலைவர் தங்கம் ரவிகண்ணன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மல்லிகா, துணைத்தலைவர் செல்வமணி, நகராட்சி அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

    தலைவர் தங்கம் ரவிகண்ணன் அறிமுக உரையாற்றும் பொழுது சொத்துவரி குறித்து மன்றத்தின் தீர்மானத்தினை அரசுக்கு அனுப்புவதற்காக இந்தக்  கூட்டம் கூட்டப் பட்டுள்ளது. அடுத்த கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெறும். நமக்கு கிடைத் துள்ள பதவி என கருதாமல் பொறுப்புணர் வுடன் பொது மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பு என நாம் அனைவரும் நினைத்து  செயல்பட வேண்டும் என்றார்.  

    கூட்டத்தில்  69 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அவை உறுப்பினர்களின் ஏகமன தான ஆதரவோடு நிறை வேறியது.  நகர்மன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய பல்வேறு கோரிக்கைகளுக்கு நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் பதிலளித்து பேசும்போது, நிதிநிலைமை, ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம். 

    நகராட்சி எந்த இடத்தில் தவறு நேர்ந்தாலும் நிச்சய மாக பாரபட்சமின்றி நடவ டிக்கை எடுக்கும். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும். நகராட்சி அலுவலர்கள் அந்தந்த பகுதி மக்கள் பணி செய்ய வார்டுகளுக்குள் செல்லும் போது அவசியம் உறுப்பினர்கள் கவனத்திற்கு தெரிவித்து இணைந்து மக்கள் பணி செய்ய வேண்டும். 

    நகரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது வாரம்தோறும் நகரில் குறிப்பிட்ட ஒரு வார்டை தேர்வு செய்து அங்கு முழுவீச்சில் துப்புரவு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதை அறிவீர்கள். தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.  நகராட்சி நிர்வாகமும் பொதுமக்கள் சேவைக்கு முன்னுரிமை தந்து செயல்படும் என்றார். துணைத்தலைவர் செல்வமணி நன்றி கூறினார்.
    வத்திராயிருப்பு பகுதியில் 3-வது நாளாக பலத்த மழை பெய்தது.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக வெயி லின் தாக்கம் அதிகமாக இருந்தது. 

    இந்த நிலையில் தொடர்ச்சியாக 3வது நாளாக இடி-மின்னலுடன் கூடிய கனமழை மாலை நேரத்தில் பெய்ய தொடங்கியது. நேற்று மாலை 3.40 மணி அளவில் பெய்யத் தொடங்கிய சாரல் மழையானது சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்தமழையாக பெய்தது. 

    4 மணி நேரத்திற்கு மேலாக இரவு முழுவதும்  இந்த மழை நீடித்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

     சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலை பகுதியில் சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்த தால் ஓடைகளில் நீர்வரத்து வரத் தொடங்கியது. இதேபோல் கான்சாபுரம் அத்தி கோவில் பகுதியில் கனமழை பெய்ததால் அத்திக் கோவில் ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து தொடங்கியது. 

    2 நாட்களுக்கு முன் வத்திராயிருபபில் அதிகபட்சமாக 120 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வத்திராயிருப்பு பகுதியில் பெய்த இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையால் வத்திராயிருப்பில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது.  மழை நீருடன் வாறுகால் கழிவுநீரும் சேர்ந்து ஓடிய தால் தெருக்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கலந்து ஆறாக ஓடியது. 

    வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள ரோட்டடித் தெருவில் சாலையில் மழை நீர் ஆறாக ஓடியது. இதே போல் அக்ரஹாரம் வடக்குத் தெருவில் மழைநீர் செல்ல வாறுகால் வசதி சரிவர இல்லாததால் குளம்போல் தேங்கி நின்றது. சாலையில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு  சிரமப்பட்டனர். 

    ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள ரோட்டாடித்தெரு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து சென்றதால் துர்நாற்றம் வீசியது.  தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. வத்திராயிருப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள் தாழ்வாக இருப்பதால் மழைநீருடன் கழிவு நீர் சேர்ந்து சாலையில் ஆறாக ஓடுவதால் சாலை களில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சிரமம் அடைந்தனர்.

    தாழ்வாக உள்ள கழிவுநீர் கால்வாய்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டுள்ளதால் மழை பெய்யும் காலங்களில் மழை நீர் செல்வதற்கு மிகவும் சிரமமாக இருப்பதால் மழை நீர் கழிவு நீருடன் சேர்ந்து சாலையில் ஆறாக ஓடுகிறது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    பேரூராட்சி நிர்வாகம் பலஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவுநீர்க் கால்வாய்களை அகற்றிவிட்டு தற்போது புதிதாக கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

    சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது மாலையில் பெய்யும் பலத்த மழையால் பொதுமக்கள், மகிழ்ச்சி அடைந்த தோடு மட்டுமல்லாமல் வெப்பம் குறைந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நெல் விவசாயம் செய்து வரும் விவசாயிகளும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சொத்து வரி உயர்வை கண்டித்து ராஜபாளையத்தில் நடந்த முதல் நகராட்சி கூட்டத்தை புறக்கணித்து, அதிமுக கவுன்சிலர்கள் 2 பேர் வெளிநடப்பு செய்தனர்.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மன்ற முதல் கூட்டம் குமாரசாமி ராஜா நகராட்சி கூட்ட அரங்கில் தலைவர் பவித்ரா ஷ்யாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், 42 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவ படங்களை நகராட்சி அலுவலகத்தில் புதியதாக வைக்கப்பட வேண்டும், சொத்து வரி உயர்வு குறித்த விளக்கம் மற்றும் அரசாணைக்கு ஒப்புதல் உள்ளிட்ட 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கேள்வி நேரத்தின் போது, சொத்து வரி உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்த அதிமுக கவுன்சிலர்களான சோலை மலை மற்றும் மீனாட்சி ஆகிய இருவர் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.
    சாத்தூர் அருகே தீக்காயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண் பரிதாபமாக இறந்தார்.
    சாத்தூர்

    சாத்தூர் அருகே உள்ள நல்லான்பட்டியை சேர்ந்தவர் முருகலட்சுமி(வயது 19). இவருக்கும் நாருகாபுரத்தைச் சேர்ந்த ஜான்பாண்டியனுக்கும் (27) 5மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் தாராபுரத்தில் வசித்து வந்தனர். முருகலட்சுமி 3மாத கர்ப்பிணியாக இருந்தார். 

    இந்தநிலையில் முருகலட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டில் தீப்பிடிப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர்காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவஇடத்திற்கு விரைந்து சென்ற சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயைஅணைத்தனர்.  

    வீட்டுக்குள் முருகலட்சுமி உடலில் தீக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். 

    சம்பவஇடத்திற்கு வந்த இருக்கன்குடி போலீசார் முருகலட்சுமியின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முருகலட்சுமியின் தாயார் முருகேசுவரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு நேரில்வந்த தடவியியல்துறை நிபுணர்களும் இந்தசம்பவம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகின்றனர். 

    முருகலட்சுமிக்கு திருமணமாகி 4மாதங்களே ஆவதால் அவரது மர்மமரணம் குறித்து சாத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இளம்பெண் மர்மமரணத்தால் நாருகாபுரம் மற்றும் நல்லான்பட்டி கிராமமக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
    ராஜபாளையத்தில் மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சோழபுரத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு வேதியியல் ஆசிரியராக பணியாற்றுபவர் தங்கராஜ் (வயது 35).

    இவர் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தவறான பொருள்படும்படியான வாசகத்தை எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார்.

    இதனை அந்த மாணவியின் தங்கை ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து ஆகாஷ் என்பவருக்கு அனுப்பி உள்ளார். அவர் வேறு சிலருக்கு அந்த குறுந்தகவலை அனுப்பி உள்ளார். இப்படியாக சமூக வலைதளங்களில் இந்த எஸ்.எம்.எஸ். வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி தெரியவந்ததும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணியன் உத்தரவிட்டார். ஆசிரியைகள் ஜாய்ஸ், ஜெகதா ஆகியோர் விசாரணை நடத்தியதில் ஆசிரியர் தங்கராஜ் குறுந்தகவல் அனுப்பியதை ஒப்புக்கொண்டார்.

    மேலும் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததோடு, வேலையை ராஜினாமா செய்து விட்டும் சென்று விட்டார். இருப்பினும் இதுகுறித்து மேல்நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியது.

    அதன்பேரில் தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணியன் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் விசாரணை நடத்தி புனல்வேலியை சேர்ந்த ஆசிரியர் தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    ×