என் மலர்
விருதுநகர்
சேதுநாராயணபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு ஆற்றில் இறங்கினார்
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் சேதுநாராயண பெருமாள் சுவாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர் சேது நாராயண பெருமாள் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகளும் நடந்தன. அதன் பின்னர் உற்சவர் சொத்து நாராயண பெருமாள் சுவாமி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதன் பின்னர் சேதுநாராயண பெருமாள் சுவாமி கள்ளழகர் வேடமணிந்து ஆற்றில் இறங்கும் வைபவம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்று சேதுநாராயண பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி வத்திராயிருப்பில் உள்ள அர்ச்சுனா நதி ஆற்றில் இறங்கினார். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கலாராணி மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பதுக்கி வைத்திருந்த 38 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இலந்தைகுளத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதனுக்கு ரகசிய தகவல் வந்தது. அதனடிப்படையில் நத்தம்பட்டி சப்இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் நத்தம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது இலந்தைகுளம் நடுத்தெருவில் கடை வைத்திருந்த ஞானசேகர் தனது கடைக்குள் 3 வெள்ளை நிற சாக்குப் பையில் பேப்பர் போட்டு மறைக்க முயன்றார். சந்தேகமடைந்த போலீசார் பரிசோதித்தபோது அந்த மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 38 கிலோ இருந்தது.
இதையடுத்து கடை உரிமையாளர் ஞானசேகர் மற்றும் அவருக்கு உதவிய அயன் கரிசல்குளத்தை சேர்ந்த முத்துவேல் ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த ரூ45 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் வைத் திருந்த 15 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டது.
யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் நெசவாளர் காலனியைச் சேர்ந்த ராஜ்குமார்-லீலாவதி தம்பதியின் மகன் டால்வின்ராஜ். 11ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்து யோகா பயிற்சியில் ஆர்வம் கொண்டிருந்த இவர், குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு, அப்துல்கலாம் வேர்ல்டு ரெக்கார்டு, டிரம்ப் வேர்ல்டு ரெக்கார்டு மற்றும் மாவட்ட அளவில் 37 சாதனைகளும், தமிழ்நாடு அளவில் 17சாதனைகளும் படைத்துள்ளார்.
இவர் கடந்த 11ந்தேதி கோவாவில் நடந்த அகில இந்திய அளவிலான யோகாபோட்டியில் வெற்றி பெற்று 2வது பரிசை பெற்றார். இதன்மூலம் அடுத்த மாதம் நேபாள நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொள் ளவும் தேர்வாகி யுள்ளார். கோவாவில் நடந்த யோகாபோட்டியில் வெற்றி பெற்று தனது சொந்த கிராமத்திற்கு திரும்பிய பள்ளி மாணவரை கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்தும், வெடிகளை வெடித்தும் சிலம்பம் சுற்றியும் சிறப்பான வரவேற்பு அளித்து வீதிகளில் வலம் வந்தனர்.
அகில இந்திய யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் கூறும்போது, நேபாளம் நாட்டில் நடை பெற உள்ள யோகா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தமிழ் நாட்டிற்கும், இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதே எனது லட்சியம் என்றார்.
வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள பேரூராட்சி கூட்டங்களில் சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி பேரூராட்சியின் சிறப்புகூட்டம் பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சிவ அருணாச்சலம் முன்னிலை வகித்தார். பேரூராட்சியில் சொத்துவரி, சீராய்வு தொடர்பான அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி சிறப்புகூட்டம் பேரூராட்சித்தலைவர் ஜோதிலட்சுமி தலைமையில் துணைத்தலைவர் தனபாக்கியலட்சுமி, செயல்அலுவலர் இருதயராஜ் முன்னிலையில் நடைபெற்றது. பேரூராட்சியில் சொத்துவரி, காலிமனை வரிஉயர்வு செய்து பொதுசீராய்வு மேற்கொள்ள மன்றத்தில் அனுமதி பெறப்பட்டது.
இதேபோல் சுந்தர பாண்டியம் பேரூராட்சி சிறப்புக்கூட்டம் பேரூராட்சித்தலைவர் ராஜம்மாள் தலைமையில் துணைத்தலைவர் இந்துஜா, செயல் அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்றது. பேரூராட்சியில் சொத்து வரிசீராய்வு தொடர்பாக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வத்திராயிருப்பு அருகே வனத்துறை அதிகாரியை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்தில் வனவராக கூடலிங்கம் என்பவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் அத்திகோவில் கான்சாபுரம் பீட்-1 மற்றும் பிட்-2 இணைப்பு பகுதிகளில் வனவர் கூடலிங்கம் மற்றும் அவருடன் சேர்ந்து வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து வந்தனர்.
அப்போது சித்தாறில் ராமசாமியாபுரம் பஞ்சாயத்துபோர்டு தெருவை சேர்ந்த பெரியசாமி, கருப்பசாமி மற்றும் அதே தெருவைச் சேர்ந்த 6பேர் கையில் வைத்து மது அருந்தி கொண்டிருந்ததாகவும், அவர்களிடம் வனவர் கூடலிங்கம் அரசு காப்பு காட்டிற்குள் மது அருந்தக்கூடாது எனக்கூறி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்தபோதுபெரியசாமி, கருப்புசாமி உட்பட 6 பேர் சேர்ந்து வனத்துறை அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், வனவர் கூடலிங்கத்திற்கு கொலைமிரட்டல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கூடலிங்கம் கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
விருதுநகர் அருகே சதுரகிரி மலைக்கோவிக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தொடர்ச்சியாக சில தினங்களாக பெய்த தொடர்மழையின் காரணமாக பக்தர்கள் மலையேறி சென்று சாமிதரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சித்ராபவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் தாணிப்பாறையில் வனத்துறை நுழைவுவாயில் முன்பு குவிந்தனர்.
அவர்களுக்கு மலையேறிச்சென்று சாமிதரிசனம் செய்ய அனுமதி இல்லாததால் பக்தர்களிடம் வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தாணிப்பாறை வனத்துறை நுழைவுவாயில் முன்பு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
ராஜபாளையத்தில் சித்திரை திருவிழா நடந்தது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட ஷத்திரிய ராஜுக்கள் சமூகத்தினர்வசித்து வருகின்றனர். இவர்கள் சித்திரைதிருவிழா அன்றும் தமிழ்புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இந்தஆண்டு ஷத்திரிய ராஜூக்கள் பாரம்பரியஉடை அணிந்து வாணவேடிக்கைகள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல வீதி உலா நடந்தது. மாயூரநாத சுவாமி கோவிலில் இருந்து நீர் காத்த அய்யனார் பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள் சமேதராய் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா கொண்டு வரப்பட்டது. மூஞ்சூறு வாகனத்தில் விநாயகரும், குதிரை வாகனத்தில் அருள்மிகு ஓட்டக்கார சுவாமியும் முன்செல்ல, கோவில் காளை அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய உடையணிந்த ஷத்திரிய ராஜுக்கள் சமூகத்தினர், இளைஞர்கள் ஊர்வலமாய் அணிவகுத்து வந்தனர்.
கேரள செண்டை மேளம், பாண்டு வாத்திய குழுவினர் மற்றும் நாதஸ்வரம் முழங்க வீதி உலா கொண்டுவரப்பட்டது. மதுரை சாலை வழியாக பழைய பஸ்நிலையம், தென்காசி சாலை வழியாக காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து முடங்கியார் சாலை வழியாக பழையபாளையம் என்.ஆர்.கிருஷ்ணராஜா மண்டபத்தை சென்றடைந்து அங்கு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு இணையதளம் மூலம் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் முதலான 12 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் 60வயது முடிவடைந்த உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி நபர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து ஆயுள் சான்று சமர்ப்பித்து வருகின்றனர் இதனால் ஓய்வூதியர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் இணையதளத்தில் இணையதள முகவரி மூலம் ஓய்வூதியர்கள் ஆயுள்சான்று சமர்ப் பிக்கவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இணையதளம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் முதலான 18அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் மூலம் ஏற்கனவே மாதாந்திர ஓய்வூதியம் பெறுபவர்கள் இணையதளத்தில் ஆயுள்சான்று சமர்ப்பிக்கலாம்.
மேலும் மேற்படி இணைய தளத்தில் சொந்தமாக வீடுகட்ட, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு உள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற, பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் வரை நிதி உதவி பெற விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.
எனவே பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிதாஸ் தெரிவித் துள்ளார்.
ராஜபாளையத்தில் வெண்குடை திருவிழா நடந்தது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேவேந்திரகுல வேளாளர்சமூகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல்தேதி வெண்குடை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
வரலாற்று சிறப்புமிக்க இந்தவிழா இந்தஆண்டு ராசபாளையம் செல்லம் வடக்குத் தெரு, தெற்குத் தெரு, சீனிவாசன் புதுத்தெரு, குமரன்தெரு உள்பட தெருக்கள் வழியாக கேரள செண்டை மேளம், உருமி மேளம், ஒயிலாட்டம், ஆலிஆட்டம், முழங்க வெண்குடைஏந்தி மருளாடி சாமியாடி வந்தார்.
வெண் குடையை சுற்றிலும் ராஜபாளையம் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முடங்கியாறு ரோடு வழியாக வட்டாட்சியர் அலுவலகம், ராஜாக்கள் கல்லூரி அருகே உள்ள பகுதியில் முகாமிட்டனர்.
மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு நீர்காத்த அய்யனார் கோவில் சென்று வழிபாடு நடத்தி மாலையில் வாணவேடிக்கைகள் முழங்க திரும்ப உள்ளனர்.
பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிளவக்கல் பெரியாறு அணை அமைந்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு இந்த அணையில் 28 அடியாக நீர்மட்டம் சில நாட்களாக பெய்த தொடர் ம¬யினால் 32 அடியை எட்டியது. இந்த நிலையில் பாசனத்துக்காக பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. 3 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. உதவி- கலெக்டர் பிரித்திவிராஜ் அணை மதகை திறந்து வைத்தார். இதன் மூலம் வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள 802 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலெக் டரின் நேர்முக உதவியாளர் தனமுனி, மாவட்ட வேளாண் இயக்குனர் சங்கரநாராயணன், செயற்பொறியாளர் மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்கள் மலர்விழி, கிரண்பேடி, வத்திராயிருப்பு தாசில்தார் சின்னதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் சாரல் மழையில் நனைந்தபடி தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வரலாற்று சிறப்புமிக்க திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிறப்புக்கு முதல் நாள் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
2 ஆண்டு காலமாக கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு திருவிழா தொடங்கியது. கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா 10 தினங்கள் நடத்தப்பட்டு, 11வது நாளான நேற்று பூக்குழி திருவிழா நடத்தப்பட்டது.
சுவாமி பொட்டி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா கொண்டுவரப்பட்டது. திரவுபதி அம்மன், அர்ச்சுனர், கிருஷ்ணர் ஆகியோருடன் சப்பரத்தில் கொண்டுவந்து சப்பரத்தின் பின்னால் தீ மிதிக்கும் பக்தர்கள் வந்தனர்.
வீதிஉலா கோவிலை வந்தடைந்ததும், பூசாரி உள்பட ஏராளமான பக்தர்கள், பெண்கள் கைக்குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அப்போது சாரல் மழை பெய்துகொண்டே இருந்ததால் நனைந்தபடியே தீமிதி திருவிழா நடத்தப்பட்டது.
அந்த வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார், ஊர்காவல் படையினர் செய்திருந்தனர். தீமிதி திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா தசரதராஜா தலைமையில் செய்திருந்தனர்.
ராஜபாளையம் கோவில் திருவிழாவில் மதுரை குண்டுமல்லி பூ சப்பரத்தில் வீதி உலா வந்து அம்மன் அருள்பாலித்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வில் தேவர் சமூகத்தாரின் 7ம்நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆண்டத்தம்மன் கோவில் தெரு இந்து மறவர் மகாசபை தலைவரும், நாட்டாண்மையு மான கதிர்வேல்தேவர் தலைமையில் செயலாளர் குருநாதன், பொருளாளர் வி.எஸ்.ராசா, துணை செயலாளர் செந்தில்வேல், துணை தலைவர் மாரியப்பன், இணை தலைவர்கள் சுப்பிரமணியம், கணேசன், முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பாரம்பரிய முறைப்படி தனித்துவத்துடன் பல்லாயிரம் கிலோ எடை கொண்ட மணக்கும் குண்டு மல்லி கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூ சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
12-க்கும் மேற்பட்ட வாடிப்பட்டி மேளம், மேளதாளம், நாதஸ்வரம் முழங்க வீதி உலா வந்த அம்மனுக்கு தெருக்களில் கூடி நகன்ற பக்தர்கள் கொழுக்கட்டை படையலிட்டு, மாவிளக்கு ஏற்றி வைத்து தேங்காய் உடைத்து அம்மனுக்கு பூ மாலை அணிவித்து வழிபட்டனர். பூ பல்லக்கில் அசைந்து, அசைந்து அம்மன் பவனி வந்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது.
விழாவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் சின்னமாரிமுத்து, கணேசன், குழந்தைவேல், நாராயணன், பாலசுப்பிரமணியன், கோபால், சிவபிரகாசம், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
விழா ஏற்பாடுகளை புதுப்பாளையம் தேவர் சமூகத்தார் ஆண்டத்தம்மன் கோவில் தெரு நாட்டாண்மை கதிர்வேல்தேவர் மேனேஜ்மெண்டில் சிறப்பாக செய்திருந்தனர்.






