என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ராஜபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • விழாவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    ராஜபாளையம்,

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், கர்ப்பிணிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டின் முன்னிலை வகித்தார்.

    விழாவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு சேலை, ஊட்டச்சத்து பொருட்கள், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை 1000 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசிதாவது:-

    வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்காமல், குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது.

    சாதி, மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பயன்பெறுவார்கள். பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணி தாய்மார்களை சென்றடைய செய்து, அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயர்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துதல், மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப்படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவித்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள், இணை உணவின் அவசியம், குழந்தைகள் நோய் வாய்ப்படும் போது அளிக்கப்பட வேண்டிய கவனிப்பு போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பிணிதாய்மார்களும், கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சிங்கராஜா, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, ராஜபாளையம் வட்டாட்சியர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக ஜேக்கப் செல்வகுமார் விரக்தியுடன் இருந்துள்ளார்.
    • தி.மு.க. கவுன்சிலர் மகன் தற்கொலை செய்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு 10-வது வார்டு கவுன்சிலராக தி.மு.க.வை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் உள்ளார். இவரது மகன் ஜேக்கப் செல்வகுமார் (வயது 24).

    பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக ஜேக்கப் செல்வகுமார் விரக்தியுடன் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனி அறைக்கு சென்ற ஜேக்கப் செல்வகுமார் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார் விரைந்து வந்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    தி.மு.க. கவுன்சிலர் மகன் தற்கொலை செய்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வாலிபர்- தொழிலாளி தற்கொலை செய்துள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விருதுநகர்

    சிவகாசி, சாட்சியாபுரம் ஆசாரி காலனியை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மகன் முத்துகுமார் (வயது 19). இவர் 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவர் தனது பெற்றோர்களிடம் செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். இப்போது பணம் இல்லை. பின்னர் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் தனியாக இருந்த முத்துகுமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின்பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வத்திராயிருப்பு அருகே நெடுங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 42). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவரது இளைய மகன் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மகனை கண்டித்தும் அவன் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி அரளி விதையை அரைத்து குடித்துவிட்டார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சுந்தரமூர்த்தியன் மனைவி சீனியம்மாள், பூமாபட்டி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • வத்திராயிருப்பு அருகே மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் மாணவ-மாணவிகள் இதனால் கூடுதல் பள்ளி கட்டிடத்தை கட்டிதர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 150-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம், வத்தி ராயிருப்பு தாலுகா விற்கு உட்பட்ட கீழக் கோட்டையூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு நடுநிலை ப்பள்ளி கடந்த 2018-ம் ஆண்டு உயர்நிலை ப்பள்ளியாக தரம் உயர்த்தப்ப ட்டது. தற்போது 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 150-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த பள்ளியில் மேல கோட்டையூர், அக்கனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து எண்ணற்ற மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

    நடுநிலைப்ப ள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளி யாக தரம் உயர்த்தப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் கூடுதல் பள்ளிக்கட்டிடம் இல்லை. பள்ளியில் உள்ள ஒரு கட்டி டமும் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த கட்டிடமும் மூடப்பட்டு விட்ட தாலும் மாணவர்கள் வளாகத்தில் உள்ள மரத்தடி யில் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. மழை, வெயில் என்று பாராமல் தரையில் அமர்ந்து மாணவர்கள் கல்வி கற்கவேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஆதலால் இந்த பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் அமைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அகழாய்வில் பண்டையகால பொருட்கள் கிடைத்தன.
    • யானை தந்தம் உட்பட 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    25 ஏக்கர் பரப்பளவில் வைப்பாற்றின் கரையில் பண்டைய காலத்தில் மக்கள் வாழ்ந்த வரலாறு குறித்து அறிவதற்காக கீழடி போன்று அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 10 அகழாய்வு குழிகள் 10 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளன.

    இதில் ஏராளமான யானை தந்ததால் செய்யப்பட்ட அணிகலன்கள், விலை மதிப்பெற்ற சூது பவளம், பெண்கள் அணியும் தொங்கட்டான்கள், காதணிகள், கண்ணாடி பாசிமணிகள், சூடு மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள், யானை தந்தம் உட்பட 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

    9-வது அகழாய்வு குழுவில் ஏராளமான சுடுமண்னால் செய்யப்பட்ட மண்பாண்ட பாத்திரங்கள், முதுமக்கள் தாழி, 40-க்கும் மேற்பட்ட சிறிய வடிவிலான குடங்கள் மண்ணில் புதைந்துள்ளன. தொல்லியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் முதுமக்கள் தாழி மற்றும் இந்த குடங்களை சேதமடையாமல் எடுப்பதற்காக தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    முதுமக்கள் தாழி மற்றும் மண் குடங்களில் ஆராய்ச்சி செய்யும் போது எந்த காலத்தில் மக்கள் வசித்துள்ளார்கள் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் ஏராளமான விலை உயர்ந்த ஆபரணங்களும் கிடைத்துள்ளன. விரைவில் உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் எடுக்கப்பட்ட பொருட்களை அருங்காட்சியமாக வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரோட்டரி கிளப் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • 20 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பலசரக்கு பொருட்களும், 5 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. மாவட்ட ஆளுநர் முத்து சிறப்புரையாற்றினார்.

    தலைவராக ஜெய கண்ணன், செயலாளராக ராம்குமார், துணைத் தலைவராக ரவி, இணைச் செயலாளராக கார்த்திக், பொருளாளராக ஸ்ரீராம், உடனடி முன்னாள் தலைவராக கண்ணன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். சிறப்பு அழைப்பாளராக லட்சுமி நாராயணன், துணை ஆளுநர் முத்துராமலிங்ககுமார் ஆகியோர் பங்கேற்று பேசினர். 20 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பலசரக்கு பொருட்களும், 5 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டது.

    மூத்த உறுப்பினர்கள் முத்து, லட்சுமணன், பெரியசாமி, கருமாரி முருகன், வெங்கடாசலம், அழகர்சாமி கிருஷ்ணன், முனிராஜ், சசி கண்ணன், நடராஜன் புதிய உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், ராம்குமார், வினோத் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கூடைப்பந்து போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பதின்ம மேல்நிலைப்பள்ளிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
    • தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் முத்துராஜையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பள்ளித் தாளாளர் வெங்கடாசலபதி, முதல்வர் முருகன் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகளும் வாழ்த்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்ட 13 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பதின்ம மேல்நிலைப்பள்ளிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

    இதில் அரிமா பள்ளி மாணவர்கள் கிஷோர் குமார், முகுந்தன், உதய் கமலேஷ், சிவ அக்‌சய குமார், அரவிந்த், அருண், குமரன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட கூடைப்பந்து குழுவில் சேர்ந்து விளையாட பயிற்சிக்கு தகுதிபெற்றுள்ளனர். மாணவிகள் சோஷ்லின், காவியா ஆகியோர் மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றனர்.

    தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் முத்துராஜையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பள்ளித் தாளாளர் வெங்கடாசலபதி, முதல்வர் முருகன் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகளும் வாழ்த்தினர். 

    • சத்யாவித்யாலயா சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • பள்ளி வளாகத்தில் சிறப்பு விருந்தினர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மரக்கன்று நட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யாவித்யாலயா சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளியில் மருத்துவர்கள் தினவிழா மற்றும் பட்டய கணக்காளர் தினவிழா, மரம்நடுவிழா என்ற முப்பெரும் விழாக்கள் நடந்தன.

    பள்ளி சேர்மன் குமரேசன், மருத்துவர் சித்ரா குமரேசன், முதன்மை செயல் அலுவலர் அரவிந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர். இண்ட்ராக்ட் கிளப் தலைவி வைஷ்ணவி வரவேற்றார்.

    துளி பவுண்டேசன் துணைத் தலைவர் ஸ்ரீராம், நிலத்தடி நீர் சேமிப்பு பற்றி பேசினார். செல்வராஜ், முத்து,

    சுப்பிரமணியன், அப்துல்காதர், முருகன், திருநாவுக்கரசு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டரி சங்கத்தலைவர் அங்குராஜ். செயலாளர் பால்சாமி, ராஜபாளையம் ரோட்டரி சங்கத்தலைவர் வைமாதிருப்பதி செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவி சுதர்சனா மருத்துவர்கள் பற்றி சிறப்புரையாற்றினார்.

    பள்ளி மாணவர்கள் ரெட்டியப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இண்டர்கிளப் செயலாளர் மாணவி ஹரிணி நன்றி கூறினார். பள்ளி வளாகத்தில் சிறப்பு விருந்தினர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மரக்கன்று நட்டனர்.

    • ஆதிதிராவிடர் பள்ளி, கல்லுரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
    • இதில் தங்கி பயில விரும்பும் மாணவர்கள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளை அணுகலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் கல்லுரி விடுதிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை புதியதாக இணைய வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் 2022-23-ம் கல்வியாண்டில் விருதுநகார் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்ற இணைய வழியில் விடுதி மேலாண்மை அமைப்பு Hostel Management System எனும் செயலியின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி விடுதிகளில் சேர வருகிற 20-ந் தேதி வரையும், கல்லூரி விடுதிகளில் வருகிற 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையும், விண்ணப்பிக்கலாம்.

    இதில் தங்கி பயில விரும்பும் மாணவர்கள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாத்தூர், பாலவநத்தத்தில் 100 பயனாளிகளுக்கு மானியத்தில் ஆடுகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
    • 100 பயனாளிகளுக்கு ஒட்டு மொத்தச் செலவினமாக தலா ரூ.19 லட்சத்து 4 ஆயிரத்து 75 வீதம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.2.09 கோடி மதிப்பில் தமிழக அரசு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் பாலவநத்தத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் செம்மறியாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மேக நாதரெட்டி தலைமை தாங்கினார். விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கினார்.பின்னர் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 1100 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு பயனாளிக்கு 4 பெட்டை ஆடுகள் மற்றும் 1 கிடா என மொத்தம் 5 ஆடுகள் என்ற விகித்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகளுக்கு 500 ஆடுகள் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1100 பயனாளிகளுக்கு மொத்தம் 5500 ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சாத்தூர் ஒன்றியத்தில் 100 பயனாளிகளும், அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 100 பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டு, ஒரு பயனாளிக்கு ஆடு ஒன்றுக்கு ரூ.3500/- வீதம் 5 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் (1 கிடா மற்றும் 4 பெட்டை ஆடுகள்) தலா ரூ.17 ஆயிரத்து 500 என்ற விகிதத்தில் மொத்தம் 200 பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆரம்ப கட்டச் செலவினமாக பயனாளிக்கு ஆடு 1க்கு ரூ.200 வீதம் 5 ஆடுகளுக்கு மொத்த தொகை ரூ.1000 பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு அரசால் வழங்கப்படும் 5 ஆடுகளுக்கு காது வில்லைகள் பொருத்தப்பட்டு, அரசு செலவில் 2 ஆண்டுகளுக்கு காப்பீட்டுத் தொகை ரூ.540.75 வீதம் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்படுகிறது.

    ஒரு ஒன்றியத்திற்கு இந்த திட்டத்திற்காக 100 பயனாளிகளுக்கு ஒட்டு மொத்தச் செலவினமாக தலா ரூ.19 லட்சத்து 4 ஆயிரத்து 75 வீதம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.2.09 கோடி மதிப்பில் தமிழக அரசு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன், துணை இயக்குநர் கோவில்ராஜா, சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த தொழிலாளி கிடந்தார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல் அருகே உள்ள தரகன் தோட்ட தெருவை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன்(வயது 23), கூலித்தொழிலாளி. இவரது மனைவி நந்தினி.இருவருக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது.

    கடந்த 6-ந் தேதி நந்தினி கடைக்கு சென்றார். அதன்பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து கணவர் நந்தினியிடம் கேட்ட போது, அவர் தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கார்த்தீஸ்வரனின் தந்தையிடம் நந்தினி கூறியுள்ளார். உடனடியாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கார்த்தீஸ்வரன் வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    அவர் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்தீஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கார்த்தீஸ்வரன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாயமான சிறுமியை அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
    • சிறுமியை கோவைபட்டனம்புதூரை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த பாலையம்பட்டி பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். பிளஸ்-1 படித்து முடித்துள்ள அவர் டைப்ரைட்டிங் வகுப்பிற்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று டைப்ரைட்டிங் வகுப்புக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவர் மாயமானது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மாயமான சிறுமியை அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சிறுமியை கோவைபட்டனம்புதூரை சேர்ந்த அருண்பாண்டியன் (வயது 22) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்துவரும் அருண்பாண்டியன், வேலை விஷயமாக பாலையம்பட்டி வந்திருந்தபோது அந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அந்த பழக்கத்தில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவை சென்றனர். அங்கு வாலிபர் அருண்பாண்டியன், சிறுமியை திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

    சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். சிறுமியை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

    ×