search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயனாளிகளுக்கு மானியத்தில் ஆடுகள்
    X

    ஒரு பயனாளிக்கு ஆடுகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளனர்.

    பயனாளிகளுக்கு மானியத்தில் ஆடுகள்

    • சாத்தூர், பாலவநத்தத்தில் 100 பயனாளிகளுக்கு மானியத்தில் ஆடுகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
    • 100 பயனாளிகளுக்கு ஒட்டு மொத்தச் செலவினமாக தலா ரூ.19 லட்சத்து 4 ஆயிரத்து 75 வீதம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.2.09 கோடி மதிப்பில் தமிழக அரசு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் பாலவநத்தத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் செம்மறியாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மேக நாதரெட்டி தலைமை தாங்கினார். விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கினார்.பின்னர் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 1100 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு பயனாளிக்கு 4 பெட்டை ஆடுகள் மற்றும் 1 கிடா என மொத்தம் 5 ஆடுகள் என்ற விகித்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகளுக்கு 500 ஆடுகள் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1100 பயனாளிகளுக்கு மொத்தம் 5500 ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சாத்தூர் ஒன்றியத்தில் 100 பயனாளிகளும், அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 100 பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டு, ஒரு பயனாளிக்கு ஆடு ஒன்றுக்கு ரூ.3500/- வீதம் 5 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் (1 கிடா மற்றும் 4 பெட்டை ஆடுகள்) தலா ரூ.17 ஆயிரத்து 500 என்ற விகிதத்தில் மொத்தம் 200 பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆரம்ப கட்டச் செலவினமாக பயனாளிக்கு ஆடு 1க்கு ரூ.200 வீதம் 5 ஆடுகளுக்கு மொத்த தொகை ரூ.1000 பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு அரசால் வழங்கப்படும் 5 ஆடுகளுக்கு காது வில்லைகள் பொருத்தப்பட்டு, அரசு செலவில் 2 ஆண்டுகளுக்கு காப்பீட்டுத் தொகை ரூ.540.75 வீதம் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்படுகிறது.

    ஒரு ஒன்றியத்திற்கு இந்த திட்டத்திற்காக 100 பயனாளிகளுக்கு ஒட்டு மொத்தச் செலவினமாக தலா ரூ.19 லட்சத்து 4 ஆயிரத்து 75 வீதம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.2.09 கோடி மதிப்பில் தமிழக அரசு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன், துணை இயக்குநர் கோவில்ராஜா, சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×